சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறும் தமிழ்நாட்டு விளையாட்டுத்துறை..!
இது 2024ம் ஆண்டின் சாதனை
இன்னும் சில தினங்களில் 2024ம் ஆண்டு நம்மிடம் இருந்து விடைபெற்று 2025ம் ஆண்டு பிறக்கப் போகிறது. இத்தருணத்தில் 2024ம் ஆண்டு தமிழ்நாடு விளையாட்டுகளில் எப்படி ஜொலித்தது, என்னென்ன விஷயங்கள் கவனம் பெற்றன, வீரர்கள் பங்களிப்பு, பெற்ற வெற்றிகள் உள்ளிட்ட சிலவற்றை இங்கே தொகுப்பாகப் பார்ப்போம்.
கேலோ இந்தியா கேம்ஸ்...
இந்த ஆண்டு ஆரம்பமே கேலோ இந்தியா யூத் கேம்ஸில் இருந்து தொடங்கியது. தேசிய அளவிலான இந்த விளையாட்டுப் போட்டிகள் முதல்முறையாக தமிழகத்தில் நடத்தப்பட்டன.சென்னை, கோவை, திருச்சி, மதுரை என நான்கு நகரங்களில் மொத்தம் 13 நாட்கள் இந்தப் போட்டிகள் நடந்தன. இதில் தமிழ்நாடு 38 தங்கம், 21 வெள்ளி, 39 வெண்கலம் வென்று இரண்டாமிடம் பிடித்தது. அதுமட்டுமில்லாமல் இந்தமுறை தமிழர்களின் தற்காப்புக் கலையான சிலம்பம், ‘டெமோ’ விளையாட்டாக கேலோவில் அறிமுகப் படுத்தப்பட்டது.
டென்னிஸ்
இதன்பிறகு சென்னை ஓபன் சேலஞ்சர் டென்னிஸ் போட்டி பிப்ரவரி மாதம் நடந்தது. இதில் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சுமித் நாகல், இத்தாலியின் லூக்கா நார்டியை வென்று சாம்பியன் பட்டம் வென்றார். இதேபோல இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாகேத் மைனேனி, ராம்குமார் ராமநாதன் ஜோடி சாம்பியன் பட்டம் வென்று சாதித்தது.
ஒலிம்பிக்
தொடர்ந்து பாரிஸ் ஒலிம்பிக் ஜூலை மாதம் நடந்தது. இதில் தமிழகத்திலிருந்து ராஜேஷ் ரமேஷ், சந்தோஷ்குமார் தமிழரசன், சுபா வெங்கடேசன், வித்யா ராம்ராஜ், பிரவீன் சித்திரவேல், ஜெஸ்வின் ஆல்ட்ரின், இளவேனில் வாலறிவன், பிரித்விராஜ் தொண்டைமான், விஷ்ணு சரவணன், நேத்ரா குமணன், ஸ்ரீராம் பாலாஜி, சரத் கமல் என 12 பேர் கலந்துகொண்டனர். எல்லோருமே தங்களது சிறந்த திறனை வெளிப்படுத்தி தமிழகத்திற்குப் பெருமை சேர்த்தனர்.
ஃபார்முலா கார் ரேஸ்
சென்னையில் இரவு நேர ஃபார்முலா 4 கார் பந்தயப் போட்டிகள் ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1ம் தேதி என இரண்டு நாட்கள் நடத்தப்பட்டன. இந்தியாவின் முதல் ஆன் ஸ்ட்ரீட் நைட் ஃபார்முலா 4 பந்தய நிகழ்வு என்பதால் பெரும் கவனம் பெற்றது.
இதனை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தனியார் நிறுவனத்துடன் இணைந்து நடத்தியது. சென்னை தீவுத்திடல், போர் நினைவுச்சின்னம், நேப்பியர் பாலம், சுவாமி சிவானந்தா சாலை மற்றும் அண்ணா சாலை ஆகியவற்றை உள்ளடக்கி ஒரு சர்க்கியூட் அமைக்கப்பட்டு இந்தப் போட்டிகள் நடந்தன. விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் போட்டியைக் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.இரவு நேர கார் பந்தயம் என்பதால் தீவுத்திடல் மின்னொளியில் ஜொலித்தது அனைவரையும் கவர்ந்தது. அத்துடன் மின்னல் வேகத்தில் பறந்த கார்களைக் கண்டு ரசிகர்களும் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
செஸ் ஒலிம்பியாட்
செப்டம்பர் மாதம் ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் 45வது செஸ் ஒலிம்பியாட் தொடர் நடந்தது. இதற்கு முன்பு கடந்த ஆண்டு 44வது செஸ் ஒலிம்பியாட் சென்னையில் நடந்தது நினைவிருக்கலாம். அப்போது இந்தியா வெண்கலப் பதக்கம் வென்றது.
ஆனால், இந்தமுறை ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு அணியினரும் முதல்முறையாகத் தங்கப் பதக்கம் வென்று வரலாற்று சாதனையை நிகழ்த்தினர். இதில் ஆண்கள் அணியில் தமிழகத்தைச் சேர்ந்த குகேஷும், பிரக்ஞானந்தாவும், பெண்கள் அணியில் வைஷாலியும் சிறப்பாக விளையாடி பெருமை தேடித் தந்தனர். கேரம் வெற்றி
கடந்த நவம்பர் மாதம் அமெரிக்காவில் நடந்த ஆறாவது உலகக் கோப்பை கேரம் போட்டியில் கோப்பை வென்று தமிழகத்திற்குப் பெருமை சேர்த்தார் சென்னையைச் சேர்ந்த காசிமா. இதில் தனிநபர், இரட்டையர் பிரிவு, குழுப் போட்டி என மூன்றிலும் தங்கம் வென்று தனி முத்திரையே பதித்தார். அத்துடன் பதினேழு வயதாகும் காசிமா, இளம்வயதில் இந்த உலகக் கோப்பையை வென்ற இளம் வீராங்கனையாகவும் மிளிர்ந்தார்.
அவருடன் இரட்டையர் பிரிவு மற்றும் குழுப் போட்டியில் தலா ஒரு தங்கப் பதக்கம் வென்றார் மதுரையைச் சேர்ந்த மித்ரா. சென்னையைச் சேர்ந்த நாகஜோதி குழுப் போட்டியில் ஒரு தங்கமும், இரட்டையர் பிரிவில் ஒரு வெள்ளிப் பதக்கமும் வென்று அசத்தினார்.
இவர்கள் மூவருக்கும் சமீபத்தில் தமிழக அரசு சார்பில் பரிசுத் தொகை அளிக்கப்பட்டது. இதில் காசிமாவுக்கு ஒரு கோடி ரூபாயும், மித்ரா, நாகஜோதிக்கு தலா 50 லட்சம் ரூபாயும் அறிவிக்கப்பட்டு அதனை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் வழங்கினார். இளவழகிக்குப் பிறகு காசிமாவின் வெற்றி, மீண்டும் கேரம் விளையாட்டை பலரிடம் கவனப்படுத்தியது. குகேஷ்
சிங்கப்பூரில் நடந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்று இந்தியாவிற்கே பெருமையைச் சேர்த்தார் தமிழகத்தைச் சேர்ந்த டி.குகேஷ். தமிழகத்தின் விஸ்வநாதன் ஆனந்திற்குப் பிறகு இந்தப் பட்டத்தை வெல்லும் இரண்டாவது இந்தியர் டி.குகேஷ். அதுமட்டுமல்ல. ரஷ்யாவின் காஸ்பரோவ் 22 வயதில் இந்தப் பட்டத்தை வென்று இளம் வயது சாதனையாளராக இருந்தார்.
இப்போது 18 வயதில் இந்தப் பட்டத்தை வென்று அந்தச் சாதனையையும் தகர்த்துள்ளார் டி.குகேஷ். தமிழக அரசு அவருக்கு 5 கோடி ரூபாய் பரிசுத் தொகை அளித்து கௌரவப் படுத்தியது. விஸ்வநாதன் ஆனந்த்தைப் பார்த்து பல இளம் வீரர்கள், வீராங்கனைகள் உருவாகினர்.குகேஷும் அவரைப் பார்த்தே செஸ் உலகிற்குள் வந்தார். இப்போது குகேஷ் இளம் வீரர்-வீராங்கனைகளுக்கு ஒரு இன்ஸ்பிரேஷன் நபராக மாறியிருக்கிறார் என்றால் அது மிகையல்ல.
அஸ்வின் ஓய்வு
இந்த ஆண்டின் முடிவில் வந்த அதிர்ச்சியான விளையாட்டுச் செய்தி தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினின் திடீர் ஓய்வு அறிவிப்புதான். பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடந்துவரும் வேளையில், பிரிஸ்பேன் நகரில் மூன்றாவது டெஸ்ட் டிராவில் முடிந்த அன்று யாரும் எதிர்பாராத வேளையில் சட்டென தனது ஓய்வை அறிவித்தார் அஸ்வின்.
கடந்த 2010ம் ஆண்டு இந்திய அணியில் இடம்பிடித்த அஸ்வின் 14 ஆண்டுகளாக ஒரு நட்சத்திர வீரராக வலம்வந்தார். இதுவரை 106 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 537 விக்கெட்கள் எடுத்துள்ளார். அனில் கும்ப் ளேவிற்குப் பிறகு அதிக விக்கெட்கள் எடுத்த இரண்டாவது இந்திய வீரர் அஸ்வின்தான்.
தேபோல் டெஸ்ட்டில் 6 சதமும், 14 அரைசதமும் அடித்து ஆல்ரவுண்டராகவும் திகழ்ந்தார். இதுதவிர 116 ஒருநாள் போட்டிகளில் 156 விக்கெட்களும், டி20 கிரிக்கெட்டில் 72 விக்கெட்களும் சாய்த்துள்ளார். மொத்தமாக மூன்று ஃபார்மட்களிலும் 765 விக்கெட்கள் எடுத்துள்ளார்.
பேராச்சி கண்ணன்
|