ஹாலிவுட் 2024 ஏன் வீழ்ச்சி..?
உலகம் முழுவதும் ரசிகர்களைக் கொண்ட ஒரேயொரு சினிமா துறை, ஹாலிவுட்தான். புதிதாக ஒரு ஹாலிவுட் படம் வெளியாகிறது என்றால், அப்படத்துக்கு அமெரிக்காவில் எந்தளவுக்கு எதிர்பார்ப்புகள் இருக்குமோ, அதேயளவுக்கு இந்தியா போன்ற நாடுகளிலும் இருக்கும். அதனால்தான் இன்றைக்கு ஹாலிவுட் படங்கள் ஒரே நேரத்தில் இந்தியாவிலும், அமெரிக்காவிலும் வெளியாகின்றன. சமீபத்தில் வெளியான ‘கிளாடியேட்டர் 2’ என்ற படம் அமெரிக்காவில் வெளிவருவதற்கு முன்பே, இந்தியாவில் வெளியாகிவிட்டது.
முன்பெல்லாம் ஹாலிவுட் படங்கள் அமெரிக்காவில் வெளியாகி, சில மாதங்கள் கழித்துதான் இந்தியா போன்ற நாடுகளில் வெளியாகும். இப்படி சினிமா துறையைத் தனது ராஜ்ஜியத்தின் கீழ் வைத்திருக்கிறது, ஹாலிவுட். மட்டுமல்ல, அதிக பட்ஜெட்டில் உருவாகி, அதிக திரையரங்குகளில் வெளியாகி, அதிகளவு வசூலைக் குவிக்கும் படங்களும் ஹாலிவுட் படங்கள்தான்.
தவிர, புதுப்புது சினிமா தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதும் ஹாலிவுட்தான். இத்தகைய ஹாலிவுட்டுக்கே 2024ம் வருடம் கொஞ்சம் சுமாராகத்தான் இருந்திருக்கிறது. அதுவும் உலகளவில் பெரிய ஹிட் அடிக்கும் என்று நம்பிக்கையுடன் வெளியிடப்பட்ட பல படங்கள் தோல்வியைச் சந்தித்திருக்கின்றன.
ஹாலிவுட் வீழ்ச்சியை நோக்கி செல்கிறதா போன்ற செய்திகள் கூட வெளிவரத் தொடங்கிவிட்டன. அங்கே தயாராகும் படங்களின் எண்ணிக்கையும் குறைந்துவிட்டது. ஆம்; கொரோனாவுக்கு முன்பு எல்லாம் குறைந்தபட்சம் 500 படங்களாவது ஹாலிவுட்டிலிருந்து வெளியாகும். இவற்றில் 50 படங்களாவது பெரிய அளவு ஹிட் அடிக்கும். சில வருடங்களில் 700 படங்களுக்கு மேல் வெளியாகியிருக்கின்றன.
ஆனால், 2024ல் 500 படங்களைக் கூட தொடவில்லை. இதில் இருபது படங்கள் கூட பெரும் வெற்றியடையவில்லை என்பதுதான் ஹாலிவுட் வீழ்ந்துவிட்டதா என்று பலரையும் நினைக்க வைத்திருக்கிறது.ஹாலிவுட்டின் நிலைக்கு முக்கிய காரணங்களாக சில நிகழ்வுகளைத் தொகுத்திருக்கின்றனர்.
முதன்மை காரணம் - ஹாலிவுட் படங்களிலும், அமெரிக்க தொலைக்காட்சி சேனல்களில் பணிபுரியும் திரைக்கதையாசிரியர்கள், நடிகர்கள், தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளுடன் மே 2, 2023லிருந்து, நவம்பர் 9, 2023 வரை போராட்டம் நடத்தினார்கள். சம்பள உயர்வு, செயற்கை நுண்ணறிவு காரணமாக வேலை பறிபோகாமல் இருப்பதற்கான வேலை பாதுகாப்பு, எழுதுவதற்கு செயற்கை நுண்ணறிவைக் குறைவாகப் பயன்
படுத்துதல், எழுத்தாளர்களுக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் அறையைப் பெரிதாக்குவது, செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி, நடிகர்களின் முகங்களை ஸ்கேன் செய்து டிஜிட்டல் முறையில் நடிக்க வைப்பதை தடுப்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர்.
இதற்கு ஹாலிவுட்டின் பல முன்னணி இயக்குநர்களும் ஆதரவு தந்தனர். ஆறு மாத காலத்துக்கும் மேலாக நீடித்த இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்தான் ஹாலிவுட்டின் முதுகெலும்பாக இருந்தனர். அதனால் ஹாலிவுட் சினிமாக்கள் வெகுவாக பாதிப்புக்குள்ளாகின. ஆம்; இந்தப் போராட்டத்தால் முக்கியமான திரைக்கதையாசிரியர்கள், கலைஞர்கள் எவரும் ஹாலிவுட் படங்களுக்கு வேலை செய்யவில்லை. அதனால்தான் ஹாலிவுட் படங்களுக்கு நல்ல திரைக்கதைகள் கிடைக்கவில்லை என்கின்றனர். தொழில்நுட்பம் மட்டுமல்லாமல், திரைக்கதையும் ஹாலிவுட் படங்களின் உலகளாவிய ஈர்ப்புக்கு முக்கியமான ஒரு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.
தவிர, இந்தப் போராட்டத்தால் 2023ல் வெளியாக வேண்டிய படங்கள் கூட, 2024க்குத் தள்ளிப்போனது. உதாரணத்துக்கு டெனிஸ் வில்னவ் இயக்கிய ‘டியூன் 2’ என்ற படம் 2023ம் வருடத்தின் இறுதியிலேயே வெளியாக வேண்டியது. ரிலீஸ் தேதி கூட முடிவு செய்து, சமூக வலைத்தளங்களில் விளம்பரம் செய்திருந்தனர். ஹாலிவுட் கலைஞர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக படத்தை 2024க்கு தள்ளி வைத்தார் டெனிஸ்.
2024-ல் வெளியான முக்கியமான ஹாலிவுட் படங்களில் ஒன்று, ‘டியூன் 2’. மட்டுமல்ல, 2024ம் வருடம் ஹாலிவுட்டிலிருந்து வெளியான முக்கிய படங்கள் எல்லாம் படுதோல்வியைச் சந்தித்தன. உதாரணத்துக்கு, ‘ஜோக்கர் 2’. இதன் முதல் பாகமான ‘ஜோக்கர்’ பெரும் வெற்றியைப் பெற்றிருந்தது. அதனால் எப்போது ‘ஜோக்கர் 2’ வெளிவரும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால், படத்தின் திரைக்கதை சொதப்பல் காரணமாக படுதோல்வியடைந்தது.
2024ல் மட்டும் ‘டியூன் 2’, ‘இன்சைட் அவுட் 2’, ‘ஜோக்கர் 2’, ‘கிளாடியேட்டர் 2’, ‘மோனா 2’ ‘முஃபாசா : த லயன் கிங்’, ‘டெஸ்பிகபிள் மீ 4’, ‘குங்க்ஃபூ பாண்டா 4’, ‘கிங்டம் ஆஃப் த பிளானட் ஆஃப் த ஏப்ஸ்’, ‘ஃப்யூரிஸா: ஏ மேட் மேக்ஸ் சாகா’, ‘பேட் பாய்ஸ்: ரைடு ஆர் டை’, ‘ஏ கொயட் பிளேஸ் : டே ஒன்’, ‘கில் எம் ஆல் 2’ ‘டெரிஃபையர் 3’, ‘ஸ்மைல் 2’, ‘ஏலியன்: ரோமுலஸ்’... என இரண்டாம் பாகம், மூன்றாம் பாகம், நான்காம் பாக படங்கள்தான் அதிகம் வெளியாகின.
இவற்றில் ஒருசில படங்களைத் தவிர, மற்ற படங்கள் எல்லாம் தோல்வியடைந்தன. குறிப்பாக ‘த காட்ஃபாதர்’ புகழ் ஃபிரான்சிஸ் ஃபோர்டு இயக்கிய ‘மெகாலோபோலிஸ்’ கூட படுதோல்வியையும், கடுமையான விமர்சனத்தையும் சந்தித்தது. இந்தப் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. படத்துக்கு வந்த நெகட்டிவ் விமர்சனங்கள் காரணமாக இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இப்படம் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதுபோக ‘டைட்டானிக்’, ‘அவதார்’, ‘இண்டர்ஸ்டெல்லர்’, ‘அவெஞ்சர்ஸ்’, ‘லார்ட் ஆஃப் த ரிங்ஸ்’, ‘டெர்மினேட்டர்’, ‘ஜுராசிக் பார்க்’, ‘ஸ்பைடர் மேன்’, ‘அபோகலிப்டோ’ போன்று வருடத்தில் ஒரு படமாவது ஹாலிவுட்டிலிருந்து வெளியாகி, ரசிகர்களின் மனதில் நீங்காத ஒரு இடத்தைப் பிடித்துவிடும்.
அப்படியான ஒரு படம் கூட 2024ல் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வுகள் எல்லாமே ஹாலிவுட்டின் வீழ்ச்சியைக் காட்டினாலும், ஹாலிவுட் மேலெழுந்து வரும். 2025ம் ஆண்டு ஹாலிவுட்டின் எழுச்சி ஆண்டாக இருக்கும் என்றே அனைவரும் நம்புகிறார்கள். பார்க்கலாம்.
த.சக்திவேல்
|