2024ல் ஆண், பெண் உறவு...
மணமுறிவுக்குப் பிறகும் தவிர்க்க இயலாத காரணங்களால் ஒரே கூரையின்கீழ் வாழும் இணையர்கள் குறித்து ‘த கார்டியன்’ ஆங்கிலப் பத்திரிகையில் கட்டுரை வெளியாகி யிருக்கிறது. அதிலுள்ள செய்திகள், நிஜக் கதைகள் சுவாரசியமானவை மட்டுமல்ல... இக்கால ஆண், பெண் உறவுநிலை குறித்த பல வினாக்களையும் எழுப்புகின்றன. ஒரே கூரையின் கீழ் ஆணும் பெண்ணும் வாழ ‘தவிர்க்க முடியாத காரணம்’ குழந்தைகளும் பொருளாதாரச் சிக்கல்களும்தான். ஒரு தம்பதியினருக்குப் பதின் வயதில் மகள் இருக்கிறாள். இருவரும் சேர்ந்து வாங்கிய வீடு அடமானத்தில் உள்ளது. அதற்கு வட்டி கட்டவேண்டும். மணமான புதிதில் அவர்களது புலனின்ப வேட்கைகளும் ஆர்வங்களும் தீவிரமாக இருந்திருந்தாலும் மகள் பிறந்த பிறகு கணவனுக்கு ஆண்மைக்குறைவு ஏற்படுகிறது. இது இணையரிடையே சச்சரவுக்கும் வாக்குவாதங்களுக்கும் வழிவகுக்கிறது. கலவியில் திருப்தி இல்லாததால் மனைவி விவாகரத்து கோருகிறாள். ஆனால், இருவருக்குமே போதிய வருமானம் இல்லாத நிலையில் நீதிமன்றத் தீர்ப்பு கிடைத்த பிறகும் வீட்டைவிட்டு வெளியேற முடிவதில்லை.
வட்டி, தனிவீட்டுக்குக் குடியேற முடியாத பொருளாதார நலிவு, மகளுக்கான படிப்புச் செலவு என எல்லாம் சேர்ந்து முன்னாள் கணவனும் மனைவியும் ஒரே வீட்டில் வாழ வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இருவரும் செலவுகளைப் பகிர்ந்துகொண்டு நண்பர்களைப்போல அந்த வீட்டில் வாழ்வதற்கு உடன்படிக்கை செய்துகொள்கிறார்கள். தன்னுடைய இயலாமையால் கணவனுக்கு வேறு பெண்கள்மீது நாட்டம் இல்லை.
ஆனால், சில மாதங்களுக்குப் பிறகு மனைவிக்குப் புதிய காதலன் அமைகிறான். அந்தக் காதலனுக்கு வயதான தாய் இருக்கிறார். அவரைப் பராமரிக்கும் செலவுகள் இருக்கின்றன.
ஒரு சாதாரண வேலையில் இருந்துகொண்டு சிறிய வீட்டில் வசிப்பதால் காதலியுடன் கொஞ்சிக் குலாவுவதற்கு இடமில்லை.
அந்தரங்கமாக உரையாடுவதற்கோ இரவு தங்குவதற்கோ தனியறை இல்லாததால் அவளைத் தன் வீட்டுக்கு அழைத்துக்கொண்டு வர முடிவதில்லை. ஆகையால் வாரம் இருமுறை காதலியின் வீட்டுக்கே சென்றுவிடுகிறான். புதிய காதலன் வீட்டுக்கு வரும்போதெல்லாம் முன்னாள் கணவன் தனது மெக்கானிக் ஷெட்டுக்குச் சென்று இரவு படுத்துக்கொள்ள வேண்டிய சூழல்.
சிலமுறை வரவேற்பறை சோஃபாவில் கணவன் உறங்க முயன்றிருக்கிறான். ஆனால், புதிய காதலர்களுக்கு அவனது இருப்பு இடைஞ்சலாக இருப்பதால் அந்த இரவுகளில் மட்டும் அவனை வெளியேறும்படி மனைவி உத்தரவிட்டிருக்கிறாள். இது மிகுந்த சங்கடத்தையும் அவமானத்தையும் அவனுக்கு உண்டாக்குகிறது.
நாகரீகமாகவும் கண்ணியத்துடனும் நடந்துகொள்ள வேண்டும் என்பதால் அவர்கள் டேட் செய்யும் இரவுகளில் காதலனுக்கு முகமன் கூறி அவனை வரவேற்கிறான். பின்னர் பொறாமையால் மனம் கூசி, தனது கையாலாகாத்தனத்தால் நிலைகுலைந்து, தனிமையில் வெந்து புழுங்குகிறான். இது கணவனது ஆளுமையை மெல்ல மெல்லச் சிதைக்கிறது. அவனது அகந்தை காயப்படுகிறது. இந்த அவமானகரமான நிலை மென்மேலும் பிளவுகளுக்கும் உறவுச்சிக்கல்களுக்கும் வழிவகுக்கிறது.இரண்டாவது கதையில், பொருளாதாரத்தில் தன்னிறைவற்ற கணவன் இருக்கிறான். சரியான வேலை அமையவில்லை. வீட்டுச் செலவுகளை 40/60 விழுக்காட்டில் கணவனும் மனைவியும் பகிர்ந்துகொள்கின்றனர். வங்கிக் கடன் உள்ளது.
காலப்போக்கில் உறவு கசந்து சட்டரீதியில் இணையர் பிரிகின்றனர். ஆனால், மேற்சொன்ன பண வசதியின்மையால் ஒரே வீட்டில் வசிக்கின்றனர். மணமுறிவுக்குப் பிறகு கணவனுக்கு வேறொரு பெண்ணுடன் காதல் மலர்கிறது. அவள் அதே தெருவில் வசிக்கிறவள். இந்தக் காதலை முன்னாள் மனைவி விரும்புவதில்லை.
‘வேறு எதாவது ஊரிலோ நகரத்திலோ புதிய பெண்ணைத் தேடிக்கொள். இதே தெருவில் இன்னொரு பெண்ணுடன் நீ ஜாலியாகச் சுற்றினால் எனது நட்பு வட்டத்தில் அது எனக்கு அவமானம்’ என்கிறாள். புதிய காதலை முறித்துக்கொள்ளும்படி அழுத்தம் தருகிறாள். ஆனால், நகரத்தில் ஊர் சுற்றும் அளவுக்கோ, விதவிதமான டேட் சென்று தேர்வுசெய்யும் அளவுக்கோ, கணவனிடம் காசில்லை. அவனது தகுதிக்குக் கிடைத்தது அதே தெருப்பெண். வேறு போக்கிடமின்றி முன்னாள் மனைவியின் பேச்சுக்குக் கட்டுப்பட்டு தனது காதலைக் கைவிடுகிறான். இருவரும் பகிரங்கமாகச் சுட்டிக்காட்டிப் பேசுவதில்லை என்றாலும் அந்த வீடு மனைவி பெயரில் இருக்கிறது என்பதுதான் காரணம்!
மூன்றாவது கதையில், தன்னுடன் வாழ்ந்தபோதே கணவனுக்கு மற்றொரு பெண்ணுடன் பிறழ் உறவு ஏற்பட்டதால் மணமுறிவு பெற்றுக்கொள்கிறாள் மனைவி. ‘அவள் என்னைச் சரியாகக் கவனிக்காததே நான் புதிய பெண்ணை நாடுவதற்குக் காரணம்’ என்பது கணவனின் குற்றச்சாட்டு. அதே பொருளாதாரப் பிரச்னைகளால் முன்னாள் கணவனும் மனைவியும் ஒரே வீட்டில் வாழ்கின்றனர். சில நாள்களில், கணவன் தனது புதிய காதலியை வீட்டுக்கே அழைத்து வந்துவிடுகிறான். இது மூவருக்கும் இடையே புகைச்சலை உண்டாக்குகிறது.
இந்தப் புதிய காதலி அவனது பள்ளிப் பருவத்துத் தோழி. இருபது ஆண்டுகாலப் பழக்கம். அதனால் அவள் கொஞ்சம் சகிப்புத்தன்மையுடன் நடந்துகொள்கிறாள். இந்தச் சூழலில் முன்னாள் மனைவி வளர்த்த நாய் செத்துவிடுகிறது.
நாய் மாண்ட சோகத்தில் அவள் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளானதால் கணவன் அவளுக்குப் புதிய நாயைப் பரிசளிக்கிறான். அவன் செய்த பிழை என்னவென்றால் தனது காதலிக்கும் ஒரு நாயை வாங்கித் தந்ததுதான். நாய் வளர்ப்பில் இரு பெண்களும் ராசியாகி விடுகிறார்கள். நாயைக் குளிப்பாட்டுகிறார்கள், ஒன்றாக நடைசெல்கிறார்கள், உல்லாசப் பயணம்கூட மேற்கொள்கிறார்கள். தற்போது முன்னாள் மனைவி இவனைச் சகோதரனைப்போலப் பாவிக்கத் தொடங்குகிறாள். ஆனாலும் இருவருக்கும் இடையே சண்டை ஓய்வதில்லை. இவ்விருவருக்கும் நடுவே அல்லாடுவது காதலிதான். அவர்களது பூசல்களுக்குச் சமாதானத் தூது செல்கிறாள், ஒரு சண்டையில் யார் பக்கம் நியாயம் எனத் தீர்ப்பு வழங்குகிறாள், அவர்களை இணைக்கும் பாலமாகச் செயல்படுகிறாள். காதலியின் இருப்பே அவர்கள் இருவரும் சுமுகமாக வாழ்வதற்கு உதவுகிறது. கிட்டத்தட்ட Vicky Cristina Barcelona கதை!
இம்மூன்று கதைகளிலும் பொதுவான அம்சம் என்னவென்றால் ‘எக்ஸ்’ ஆன பிறகே தங்களது கணவர்கள் முன்னைவிட நல்ல மனிதர்களாகத் தென்படுகிறார்கள் என எல்லாப் பெண்களும் ஒருமனதாக ஒப்புக்கொள்கிறார்கள்.
ஆனால், கணவர்களது கண்ணோட்டத்தில் மனைவியின் குணாதிசயத்தில் எந்த மாற்றமும் இருப்பதில்லை. ஒவ்வாமையும் வெறுப்பும் வளரவே செய்கிறது. இம்மூன்று கதைகளையும் இணைக்கும் மற்றொரு கண்ணி, ஆண்களின் incompetency. அது ஆளுமையாகவோ வருமானமாகவோ, கற்பொழுக்கமாகவோ இருக்கிறது. இத்தகைய ஆண்களைப் பொதுவாகவே பெண்கள் ஏற்பதில்லை. ஒரு வெற்றிகரமான உறவில் ஆண்களின் தகுதி முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதே சமகாலத்திலும் நடைமுறை யதார்த்தம். மேலை நாடுகளில்கூட இதுவே கதி. இவ்வாறான மேலைநாட்டு உறவுச்சிக்கல்களை வாசிக்கும்போது ஒரு விஷயம் புலனாகிறது. ஆண் பெண் உறவிலுள்ள சிடுக்கான படிநிலைகளின் நுனியைக்கூட இந்தியா இன்னும் தீண்டவில்லை!
கோகுல் பிரசாத்
|