இந்த கைக்கடிகாரத்தின் விலை ரூ.5 கோடி!



உலகின் முன்னணி ஆடம்பர  ஃபேஷன் நிறுவனங்களில் ஒன்று, ‘பல்கேரி’. இத்தாலியைச் சேர்ந்த இந்த நிறுவனம், 140 வருடங்களுக்கு மேலாக இயங்கி வருகிறது. கைக்கடிகாரங்கள், வாசனைத் திரவியங்கள், தோல் பொருட்கள், நகைகள், ஆடைகள் என பல பொருட்கள் ‘பல்கேரி’ பிராண்டில் கிடைக்கின்றன.
சில வருடங்களுக்கு முன்பு ‘பல்கேரி’யைக் கையகப்படுத்திவிட்டது, ‘லூயி விட்டான்’ நிறுவனம். இந்நிலையில் சமீபத்தில் ‘ஆக்டோ ஃபினிசிமோ அல்ட்ரா சிஓஎஸ்இ’ என்ற கைக்கடிகாரத்தை அறிமுகப்படுத்தியது ‘பல்கேரி’. 

உலகிலேயே மெலிதான மெக்கானிக்கல் கைக்கடிகாரம் என்ற பெருமையைத் தட்டியிருக்கிறது இந்த கைக்கடிகாரம். ஆம்; இதன் டைட்டானியம் கேஸின் கனம் வெறும் 1.70 மில்லி மீட்டர்தான். அதாவது, இரண்டு கிரெடிட் கார்டுகளை ஒன்றன் மீது ஒன்றை அடுக்கி வைத்தால் வருகின்ற கனம் இது.

இதன் பிரேஸ்லெட்டின் கனம் 1.50 மில்லி மீட்டர்தான். ‘ஆக்டோ ஃபினிசிமோ அல்ட்ரா சிஓஎஸ்இ’ வகையில் வெறும் 20 கைக்கடிகாரங்களை மட்டுமே தயாரித்திருக்கிறது ‘பல்கேரி’. இதன் விலை 5 கோடி ரூபாய் என்பதுதான் இதில் ஹைலைட்.சமீபத்தில் வெளியான ஒரு இன்ஸ்டாகிராம் வீடியோவில் இந்தக் கைக்கடிகாரத்தைக் கட்டியிருந்தார், ‘ஃபேஸ்புக்’ நிறுவனரான மார்க் ஜுகர்பர்க். அன்றிலிருந்து சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது இந்த கைக்கடிகாரம்.

மிகத்துல்லியமாக நேரத்தைக் காட்டுவது இதன் தனிச்சிறப்பு. தினமும் 0.2 நொடிகள் என்ற அளவிலேயே இதன் இழப்பு உள்ளது. ஒவ்வொரு கைக்கடிகாரமும் தினமும் சில நொடிகளை இழக்கும். இந்த இழப்பு அதிகமாகும்போது கடிகாரத்தில் பழுது ஏற்படும். உலகிலேயே குறைந்த அளவு இழப்பு கொண்ட கைக்கடிகாரம் இதுதான். ஒவ்வொரு ‘ ஆக்டோ ஃபினிசியோ அல்ட்ரா சிஓஎஸ்இ’ கைக்கடிகாரத்தையும் வாடிக்கையாளர்களின் விருப்பத்துக்கு உகந்த மாதிரி வடிவமைத்துத் தருகின்றனர்.

இதனுடைய கேஸ் மிகவும் மெல்லியதாக இருந்தாலும் அதனுள் 170 நுண்ணிய கூறுகள் உள்ளன. இந்த அசாத்தியமான வேலைப்பாட்டுக்குத்தான் இவ்வளவு விலை. சுவிஸ் ஆபிசியல் க்ரோனாமீட்டர் டெஸ்ட்டிங் இன்ஸ்டிடியூட்டின் சான்றிழை இந்த கைக்கடிகாரம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இதனை சுவிட்சர்லாந்தில் தயாரித்திருக்கின்றனர்.

த.சக்திவேல்