சிறுகதை-மேஸ்திரி



வீடு பிரம்மாண்டமாக இருந்தது.அலங்கார விளக்குகள், மாவிலைத் தோரணங்கள், சரம் சரமாகத் தொங்கும் பூச்சரங்கள் என்று கண்ணை ஈர்த்தது.
“இது நான் கட்டிய வீடு...” சுப்பையாவுக்குள் இயல்பாய் ஒரு பெருமிதம் எழுந்தது. மகிழ்வுடன் சுவர்களைத் தடவிப் பார்த்தார். அண்ணாந்து பார்த்து கூரைகளை கவனித்தார். அலங்கார விளக்குகள் மின்னின.

“எண்பது லட்சம்ல?” பிரமித்தது மனம்.“வாங்க, வாங்க மேஸ்திரி...” வீட்டு உரிமையாளர் முபின் சந்த்  வேகமாக வந்தார். மும்பையைச் சேர்ந்தவர். சென்னையில் தொழில்கள் இருந்தது குடும்பத்திற்கு. எனவே சென்னையோடு செட்டிலாக வந்ததால் இந்த வீடு.“முருகப்பன் வரலையா?” முருகப்பன்தான் பில்டர்.“வேற கட்டட வேலை ஆயிட்டு இருக்குங்க. 
அதைப் பாத்துட்டு வரேன்னாரு...”“சரி. முதல்ல போய் டிபன் சாப்பிடுங்க...” என்றவர் ஒருவரைக் கூப்பிட்டு சுப்பையாவை அழைத்துப் போகச் சொன்னார். பக்கத்து காலி மனையில் சாப்பாடு டேபிள்கள் போடப்பட்டிருந்தன. இட்லி, தோசை, பூரி, பணியாரம், கிச்சடி என்று ஏகப்பட்ட வெரைட்டி.

“அவங்க மருமகன் வெளிநாட்டில் இருக்கார். அவர்தான் இவருக்கு இந்த வீட்டைக் கட்டித் தரார். காசு தண்ணியா செலவாகுது...” அருகில் அமர்ந்து சாப்பிட்ட ஒரு சித்தாள்.

“நல்ல மனுஷன். நம்ம எல்லோரையும் கிருஹப்பிரவேசத்துக்கு கூப்பிட்டு மரியாதை செய்யறார் பாருங்க...” இன்னொரு கூலியாள் மகிழ்ச்சியோடு பேசினார்.

உண்மைதான். சுப்பையாவும் முப்பது வருஷமாக கட்டிட வேலைக்குப் போகிறார். ஓரிருவரைத் தவிர மற்றவர்கள் யாரும், வேலை முடிந்தபிறகு கண்டு கொள்ளமாட்டார்கள். கூலியாள்தானே என்ற அலட்சியம்.

ஆனால், இங்கு நல்ல மரியாதை.முழு வேலையும் முடிந்த பிறகுதான் கிருஹப்பிரவேசம் என்றதால் தீயாய் வேலை நடந்தது. முருகப்பன்தான் பில்டர். அவருடைய அலுவலகத்துக்கு அனைவரையும் வரச் சொல்லி சேட் பத்திரிகை கொடுத்தார்.“எல்லோரும் கண்டிப்பா வரணும். இது நீங்க கட்டிக் கொடுத்த வீடு...” என்று அழைத்தார்.“ஆமாம்பா. 

யாரும் போகாம இருந்துடாதீங்க. மேஸ்திரி உங்களுக்கு பட்டு வேஷ்டி, சட்டை, உங்க பொண்ணுக்கு ஒரு பட்டுப் புடவை எடுத்து வச்சிருக்கார். மத்த ஆளுங்களுக்கும் நல்ல பேன்ட், சர்ட்...”துணிக்காக இல்லை என்றாலும், தங்களை மதித்து அழைத்ததற்காக அனைவரும் வந்துவிட்டார்கள்.

சாப்பிட்டு வெளியில் வந்தார்கள். தனி வீடுதான். பெரிய காம்பவுண்டு. முன்னாடி கார் பார்க்கிங். மேலும் கீழும் நாலு வீடு.“எங்களுக்கு வயசானதால தனியா இருக்க வேண்டாம். மத்த மூணு வீட்டை வாடகைக்கு விட்டா, வாடகையும் ஆச்சு, கூப்பிட்ட குரலுக்கு ஆளும் ஆச்சுன்னு மாப்பிள்ளையின் ஏற்பாடு...” முபின் சந்த் பேசும் போதெல்லாம் மாப்பிள்ளை பற்றி பெருமை வழியும்.அவருக்கு ஒரே பெண். பிஈ படித்து அமெரிக்காவில் வேலை. உடன் வேலை பார்த்தவரையே மணந்து கொண்டாள்.

“பையனும் நல்லா படிச்சவன்தான். பெத்தவங்க இல்லையாம். எதோ ஒரு  தூரத்து சொந்தம் மூலமா படித்து வந்திருக்கார். அதனால அமெரிக்காவில் செட்டில் ஆகிட்டார். கல்யாணத்துக்கு எங்களை எல்லாம் அவரே பிளைட் டிக்கெட் வாங்கி கூட்டிட்டு போனார்...” சில சமயம் வேலைக்கு நடுவில் தொண தொணவென்று பெருமை பேசும்போது எரிச்சல் வந்தாலும் மௌனமாக இருப்பார்.

அறுபத்தி அஞ்சு வயசின் லாபம் எது, யார் பேசினாலும் மௌனமாக இருப்பது.மௌனம் சர்வரோக நிவாரணம்.‘‘எனக்கு ஒரு பேரன். அவன் பிறக்கும்போது நாங்க போய் ஆறு மாசம் இருந்துட்டு வந்தோம். இப்ப நாலு வயசு ஆகுது. வாயில் இங்கிலீஷ்தான். டெய்லி எங்க கூட வீடியோ கால்ல பேசியாகணும்...”பெருமை பொங்க சேட் பேசும்போதெல்லாம் சுப்பையாவுக்கும் ஆதங்கம் பொங்கும். ஆனால், பெருமை பேச தன்னிடம் என்ன இருக்கிறது.

வீடு கட்டும்போது அவருக்குள்ளும் கனவுகள், ஆசை எழும்பும்.“சொந்தமாய் ஒரு வீடு...”ஆனால், கனவு, கனவாகவே இருந்து விட்டது.அவருக்கும் இரண்டு சென்ட்டில் ஒரு வீடு இருந்தது.
அப்பாவும் மேஸ்திரிதான். அவரிடம் வேலை கற்றுக்கொண்டுதான் இவரும் தொழிலை ஆரம்பித்தார். தென்காசிக்கு அருகில் கிராமம். தெரிந்த என்ஜினீயர் ஒருவரிடம் சேர்ந்து கட்டட வேலைக்குப் போவார். 

அதிக வருமானம் இல்லை என்றாலும் குடும்பத்தைச் சமாளிக்க முடிந்தது.இரண்டு பெண், ஒரு பையன். மூத்தவளுக்குக் கல்யாணம் ஆகிவிட்டது. அடுத்த பெண் தம்பி படிக்க வேண்டும் என்றுதான் படிப்பை நிறுத்தி, அப்பாவுடன் கொல்லத்து வேலைக்கு வந்தாள். மகன் அருணாசலம் நன்றாகப் படித்தான். வீட்டை விற்றுத்தான் அவனைப் படிக்க வைத்தார். கல்யாணத்துக்கு என்று சேர்த்திருந்த நகைகளை அவனுக்குத் தந்தாள் சின்ன மகள்.

நான் படிச்சு வேலைக்கு வந்து உங்களுக்கு வீடு கட்டித் தருவேன், அக்காவுக்கு கல்யாணம் செய்வேன் என்று அடிக்கடி சொல்வான். பிஈ-தான் படித்தான்.மேலே படிக்க என்று சென்னை சென்றான். அங்கிருந்து புனே போகிறேன் என்றான். அவ்வளவுதான். அதன் பிறகு அவனைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை. 

கடிதம் திரும்பி வந்தது. எந்த போனும் நாட் ரீச்சபிள் என்றது.
“கொரோனாவில் செத்திருப்பான்...” உறவுகள், தெரிந்தவர்கள்.சுப்பையாவின் கனவு, நம்பிக்கை, வாழ்க்கை எல்லாம் அவன்தான். மனைவிக்கு சுவாசமே அவன்தான்.
இரண்டு வருடம் நடமாடும் கூடாகத் திரிந்தார்கள். தெரிந்தவர்களிடம் சொல்லி விசாரித்தார்கள். ஒரு தகவலும் இல்லை.

“இருக்கானா, செத்துட்டானான்னு தெரிஞ்சா கூடப் பரவாயில்லையே...” மனைவி நள்ளிரவில் எழுந்து உட்கார்ந்து அழுவாள். படுத்த படுக்கையானாள். இதயக் கோளாறு வந்து அவளும் ஒருநாள் மரணம் அடைந்தாள். அருணாசலம், அருணாசலம் என்று புலம்பிய படியே போய்ச் சேர்ந்தாள்.மூத்த பெண்ணும் அவள் கணவனும் கொரோனாவில் இறந்துவிட, அவர்களின் ஒரு வயதுப் பெண் குழந்தை இவர் பொறுப்பில் வந்தது. சின்ன மகளுக்கு வேலையின்போது விபத்து ஏற்பட்டு கால் உடைந்து விட, அவள் வீட்டோடு இருந்து, குழந்தையைப் பார்த்துக்
கொண்டாள்.

காலம் மெல்ல எழுப்பி உட்கார வைத்தது. எல்லாவற்றையும் அழித்துவிட்டு நினைவுகளை மட்டும் மிச்சம் வைத்தது. அதன் வேதனை தாங்காமல் அவர் வேலையில் தன்னை மூழ்கடித்துக்கொண்டார். சொந்தங்களின் நச்சரிப்பு தாளாமல் சொந்த ஊரிலிருந்து கிளம்பலாம் என்று முடிவு செய்தார்கள்.

அப்போதுதான் என்ஜினீயர் மூலம் முருகப்பன் பழக்கமானார். எல்லா விஷயமும் தெரிந்த அவர் தன்னுடன் சென்னைக்கு அவர்களைக் கூட்டி வந்து, வீடும் கொடுத்து, பேத்தியை நல்ல ஸ்கூலில் சேர்த்து படிக்க வைக்கிறார். கட்டிட வேலைக்கு இவரின் மேற்பார்வையில் ஆட்களை அனுப்புகிறார். நன்றாகத்தான் போகிறது வாழ்க்கை.

காலமும், இழப்பும் மனதை பக்குவப்படுத்தி விடுகிறது.“சுப்பையா கொஞ்சம் வாங்க...” சேட் அழைத்தார். அவருடன் டிப்டாப்பாக நின்றிருந்த ஒரு இளைஞனை பெருமையோடு அறிமுகப்படுத்தினார்.“இவர்தான் என் மாப்பிள்ளை அருண்...”“அப்படியா. வணக்கம்...” கை கூப்பினார் சுப்பையா.

“வணக்கம்...” அவன் தயங்கி கை கூப்பினான். “ரொம்ப அழகா கட்டியிருக்கீங்க. நான் கற்பனை செஞ்ச மாதிரியே இருக்கு...”“நன்றிங்க. நீங்க காசு தரீங்க. சொல்றதைச் செய்யற கூலியாள்தானே நாங்க...”“இருந்து சாப்டுட்டுப் போங்க. பரதநாட்டிய நிகழ்ச்சி இருக்கு. பாத்துட்டுப் போகலாம்...” அருண்.

“சரிங்க...” அவர் முன் வாசலுக்கு வந்தார். படபடப்பாய் இருந்தது. லேசாக தலை சுற்றல்.“இப்படி உட்காரு. சுகர் குறைஞ்சிருக்கும்...” சித்தாள் சேரை இழுத்துப் போட்டான்.
“நீ இங்கேயே இரு. நாங்க பரதநாட்டிய நிகழ்ச்சி பாத்துட்டு வரோம். சாப்டுட்டு போகலாம்...”“சரி...” அவர் கண்ணை மூடிக் கொண்டார். மனது எதை எதையோ நினைத்தது. லேசாகக் கண்ணீர் தளும்பியது. அருகில் சேரை இழுக்கும் சப்தம். அருண் அவர் அருகில் அமர்ந்து, “அப்பா...” என்றான்.

“சொல்லுங்க...”
“உங்களை இங்க எதிர்பார்க்கலை...”
“நானும்தான்...”
“நான்தான் இதைக் கட்றேன்னு தெரியாதா?”
“தெரியாது...”

அமைதியாக இருந்தான். அவனிடம் ஒரு அதிர்ச்சி தெரிந்தது. அப்பாவைப் பார்த்ததில் அதிர்ந்து விட்டான். அவனிடம் ஒரு படபடப்பு தெரிந்தது.“நான் புனேவில் படிக்கும்போது இவங்க அறிமுகம். பெரிய பணக்காரக் குடும்பம். டெக்ஸ்டைல் மில். இவர் பொண்ணும் நானும் விரும்பினோம். கல்யாணம் செஞ்சுகிட்டு அப்பவே அமெரிக்கா போயாச்சு. அவங்க லேசுல சம்மதிக்கலை. எனக்கு யாருமில்லைன்னு தெரிஞ்சு, அமெரிக்கால வேலைன்ன பிறகு சம்மதிச்சாங்க...”“ஓ...”
“வாழ்க்கைல சில வசதிகளுக்கு சில பொய்கள் சொல்லித்தான் ஆகணும்...”
“...’’

“அம்மா, அக்கா, எல்லாம் எப்படி இருக்காங்க? சின்னக்கா?”
அவர் பதில் சொல்லாமல் அவனை உறுத்துப் பார்த்தார்.
அவன் தடுமாற்றத்துடன் பேசினான்.“எனக்கு யாரும் இல்லைன்னுதான் இவங்ககிட்ட சொல்லியிருக்கேன். அதனால நான் ஊர்ப்பக்கமே வரலை. அப்போ  போய்ட்டு, இப்பதான் வரேன்...” என்றவன் தயங்கி “நீதான் என் அப்பான்னு இவங்ககிட்ட சொல்லிடாதீங்க. பிளீஸ்...” அவன் அவர் கையைப் பிடித்துக் கொண்டான்.சுப்பையா அவன் கையை மெல்ல விடுவித்துக் கொண்டார்.

அடைத்த குரலை கமறி சரிப் படுத்திக் கொண்டு பேசினார்.“அருண் சார். நான் மேஸ்திரி. ஒரு வீட்டை முன்னாடி நின்னு கட்டினாலும், அதுக்கு நான் சொந்தம் கொண்டாட முடியுமா? அப்படித்தான் பிள்ளைகளும். நீங்க இந்த உலகத்துக்கு வர நாங்க காரணம். அதனால் உங்க வாழ்க்கைக்கு ஒரு வழி காண்பிச்சோம். 

அதோட என் கடமை முடிஞ்சது. நான் மேஸ்திரி. நீங்க இந்த பங்களா ஓனர். உங்களுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. புரிஞ்சுதுங்களா?”அவர் எழுந்தார். “ஏதானும் வாய்  தவறி நான்தான் உங்க அப்பான்னு சொல்லிடாதீங்க. ஏன்னா, அது எனக்கு அசிங்கம்...”கையை உதறிக்கொண்டு படி இறங்கி செருப்பை மாட்டிக் கொண்டார்.வீட்டிலிருந்து வெளியில் வருகையில் மனதில் நிறைவும், நடையில் கம்பீரமும் இருந்தது.  

ஜி.ஏ.பிரபா