குகேஷின் வெற்றிக்கு வித்திட்ட பேடி அப்டன் யார்?



கடந்த வாரம் இளம் வயதில் உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்று உலகையே திரும்பிப் பார்க்க வைத்தார் தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ்.அவரின் வெற்றியை அனைவரும் கொண்டாடித் தீர்த்த அதேவேளையில் அந்த வெற்றிக்குப் பின்னால் உறுதுணையாக இருந்த பெற்றோர், பயிற்சியாளர்கள் ஆகியோரின் அர்ப்பணிப்பும் வழிகாட்டுதல்களும் பரவலாகப் பேசப்பட்டன. அத்துடன் அவர்களுக்கு பாராட்டுகளும் குவிந்தன.

இதில் குகேஷின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தவர் பேடி அப்டன். காரணம், குகேஷின் மனநலப் பயிற்சியாளராக இருந்தார் பேடி. அதுமட்டுமல்ல. பேடி அப்டனின் பின்புலத்தைக் கொஞ்சம் பின்னோக்கிப் பார்த்தால் இதற்கும் இவரின் பங்களிப்புதான் காரணமா என நம் எல்லோருக்கும் ஆச்சரியமளிக்கும். ஏனெனில், பேடி அப்டனுக்கும் இந்திய விளையாட்டு அணிகளுக்கும் அத்தனை தொடர்பு உள்ளது.  

யார் இந்த பேடி அப்டன்..?

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்ஸ்பெர்க்கில் 1968ம் ஆண்டு பிறந்தவர் பேடி அப்டன். தன் 15 வயதிலேயே முதன்முதலாக மேற்கு மாகாண பள்ளிகளுக்கான அண்டர் 19 கிரிக்கெட் அணியில் பங்கெடுத்தார். பின்னர் கேப்டனாகவும் செயல்பட்டார்.தொடர்ந்து மேற்கு மாகாண அண்டர் 23 கிரிக்கெட் அணியின் கேப்டனாகவும் இருந்தார். மேற்கு மாகாண சீனியர் கிரிக்கெட் அணியிலும் விளையாடி முதல்தர கிரிக்கெட்டில் சதம் அடித்தார். இதற்கிடையே ரக்பி விளையாட்டிலும் பல்கலைக் கழக அளவில் பங்கெடுத்தார்.

இந்நிலையில் தன் 25வது வயதில் கேப்டவுன் பல்கலைக்கழகத்தில் ஸ்போர்ட்ஸ் சயின்ஸில் மாஸ்டர் டிகிரி முடித்தார். இதேநேரம் கிரிக்கெட் மற்றும் ரக்பி வீரராக விளையாடுவதற்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டு 1994ம் ஆண்டு தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணிக்கு உடல் செயல்திறன் பயிற்சியாளராக ஆனார்.

அப்போதைய கேப்டன் ஹன்ஸி குரோனியே மற்றும் தலைமைப் பயிற்சியாளர் பாப் உல்மர் ஆகியோருடன் இணைந்து நான்கு ஆண்டுகள் பணியாற்றினார். தென்னாப்பிரிக்க அணியின் வெற்றிக்கு உறுதுணையாக நின்றார். இந்நிலையில் 1999ம் ஆண்டு மேற்கு மாகாண ரக்பி அணியின் உடல் செயல்திறன் பயிற்சியாளராக ஓராண்டு பணிசெய்தார். பின்னர் கேப்டவுன் நகர தெருவோரக் குழந்தைகளுக்காக ஸ்ட்ரீட் யுனிவர்ஸ் என்ற அமைப்பை உருவாக்கி விளையாட்டுகளில் அவர்களைத் தயார்படுத்தினார்.

இதிலிருந்து 2002ம் ஆண்டு வெளியேறி, விளையாட்டு உளவியல் ஆலோசகர் சம்பந்தமான படிப்பை படித்தார். அத்துடன் வணிகத்தில் நிர்வாகப் பயிற்சிக்கான படிப்பையும் முடித்து, தன் கேரியரை உயர்த்திக் கொண்டார். இதன்பிறகே அவர் உலக அளவில் பிரகாசிக்க ஆரம்பித்தார்.

இந்திய கிரிக்கெட் அணியில்...

ஆம். 2008ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் கேரி கிறிஸ்டன் நியமிக்கப்பட்டார். அப்போது பேடி அப்டனும் இந்திய கிரிக்கெட் அணிக்கு முதன்முதலாக ஒரு மனநலப் பயிற்சியாளராக வந்து சேர்ந்தார். அவரைக் கொண்டு வந்தது கேரி கிறிஸ்டன்தான்.

ஏனெனில், கேரி கிறிஸ்டன் தென்னாப்பிரிக்க அணியில் விளையாடும் போது அவர் சிறப்பாக விளையாடுவதற்கு உதவியவர் பேடி அப்டன். அவர் மட்டுமல்ல. தென்னாப்பிரிக்கா அணியின் சிறந்த வீரரான ஜாக் காலிஸின் வளர்ச்சியிலும் முக்கிய பங்கு வகித்தார் பேடி. இதனாலேயே பேடி இந்திய அணியின் மனநலப் பயிற்சி யாளராக நியமிக்கப்பட்டார்.

கேரி கிறிஸ்டனும் பேடி அப்டனும் இணைந்த கூட்டணி 2009ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியை ஐசிசியின் டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடிக்க வைத்தது. பின்னர் 2011ம் ஆண்டு உலகக் கோப்பையை வெல்ல வைத்தது. இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பை வெல்ல பேடியும் ஒரு காரணம் என்பதால், உடனே தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி அவரை செயல்
திறன் இயக்குனராக நியமித்தது. 2011ம் ஆண்டிலிருந்து 2014ம் ஆண்டு வரை அந்தப் பணியைச் சிறப்பாகச் செய்தார் பேடி.

அப்போது தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று ஃபார்மட் கிரிக்கெட் போட்டிகளிலும் ஐசிசியின் சர்வதேச தர வரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்து திகழ்ந்தது.இதற்கிடையே 12 புரொஃபஷனல் டி20 கிரிக்கெட் கிளப்களுக்கு தலைமைப் பயிற்சியாளராகவும் இருந்தார். குறிப்பாக ஐபிஎல்லில் 2012ம் ஆண்டு புனே வாரியர்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராகவும், 2013ம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளராகவும் செயல்பட்டார்.

ராஜஸ்தான் அணிக்கு வந்ததும், ஐபிஎல் புள்ளிப் பட்டியலில் இறுதியில் இடம்பிடித்திருந்த அந்த அணியை ஃபைனல் வரை முன்னேற வைத்தார். தொடர்ந்து 2016ம் ஆண்டு டில்லி அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.2022ம் ஆண்டு மீண்டும் ராஜஸ்தான் அணிக்குத் திரும்பினார். இதேபோல ஆஸ்திரேலியன் பிக் பாஸ் லீக், பாகிஸ்தான் சூப்பர் லீக் எனப் பல டி20 கிரிக்கெட்டில் அங்குள்ள அணிகளுக்காக பணியாற்றினார். 

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட் 2022ம் ஆண்டு நடந்த டி20 உலகக் கோப்பை போட்டிக்காக பேடியை அழைத்துக் கொண்டார். அப்போது இந்திய அணி அரையிறுதி வரை சென்றது.   

இதுதவிர, சமீபத்தில் பாரிஸில் கோடைகால ஒலிம்பிக் போட்டிகள் நடந்தது நினைவிருக்கலாம். இதில் இந்திய ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்றது. அப்போது இந்திய ஹாக்கி அணியின் பயிற்சியாளராக இருந்தவர் கிரேக் ஃபுல்டன். இவர் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த ஹாக்கி வீரர். 

இதனால், கிரேக் ஃபுல்டன் இந்திய ஹாக்கி அணிக்கு பேடி அப்டன் உதவி தேவையென அவரை அழைத்து வந்தார். இந்திய அணி வெண்கலப் பதக்கம் வெல்ல பேடியும் ஒரு காரணமாக அமைந்தார்.

பேடி, கிரிக்கெட், ஹாக்கி மட்டுமல்ல... தடகளம், கால்பந்து, டென்னிஸ், நீச்சல் எனப் பல்வேறு விளையாட்டுகளுக்கு மனநலப் பயிற்சியாளராகவும் உளவியல் ஆலோசகராகவும் இருந்து வருகிறார். இதற்கிடையேதான் அவர் குகேஷிற்கும் உதவி செய்தார்.

குகேஷிற்கு உதவி...

பேடி அப்டன் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் குகேஷிற்கு உதவி செய்ய அழைக்கப்பட்டார். இந்த சாம்பியன்ஷிப்பிற்கு ஆறு மாதங்கள் முன்னதாக குகேஷிற்கு வாரம் 90
நிமிடங்கள் என 40 மணி நேரம் வீடியோ காலில் அவருடன் செலவிட்டுள்ளார் பேடி. பின்னர் இந்த சாம்பியன்ஷிப் ஆரம்பித்து 12 போட்டிகள் முடிந்தபிறகே பேடி சிங்கப்பூர் வந்துள்ளார். அப்போது குகேஷும், டிங் லிரனும் சம புள்ளிகளைப் பெற்றிருந்தனர்.   

‘‘நான் குகேஷின் வெற்றியைப் பார்க்க போகிறேன் என என் உள்ளுணர்வு சொன்னதாலேயே சிங்கப்பூர் செல்ல முடிவெடுத்தேன். அது கடைசி நேர முடிவு. கண்டிப்பாக குகேஷ் வெல்லப் போகிறார் என எனக்குத் தோன்றியது...’’ என அழுத்தமாகச் சொல்லும் பேடி, குகேஷை அங்குதான் முதல் தடவையாக சந்தித்துள்ளார். 

‘‘அந்த 18 வயதான இளைஞனை முதல்முறையாக நேரில் சந்தித்தேன். எங்கள் இருவர் கண்களிலும் நீர்த்துளிகள். அவன் கண்களைப் பார்த்து, ‘நீதான் உலக சாம்பியன். அதற்கு நீ
தகுதியானவன்’ என்றேன்.

இரண்டு நாட்களுக்குப் பிறகு அந்த வார்த்தைகள் நிஜமாகின. அதுவும் 22 வயதில் ரஷ்யாவின் கேரி காஸ்பரோவ்  செய்த அந்த வரலாற்றுச் சாதனையை 18 வயதான குகேஷ் முறியடித்தது மனதிற்கு அத்தனை மகிழ்ச்சியாகவும் நிறைவாகவும் இருந்தது...’’ என முத்தாய்ப்பாகச் சொல்கிறார் பேடி அப்டன்.    

பேராச்சி கண்ணன்