பெண்ணுக்கு ஆதரவாக நிற்கும் ஆணும் ஃபெமினிஸ்ட்தான்!
கேரளாவில் பிறந்து வளர்ந்தவர் அனன்யா. வட்ட வடிவ முகத்துக்கு சொந்தக்காரர். நடிகைக்கான பந்தா இல்லாமல் நீண்ட நாள் பழகிய தோழிபோல் சகஜமாக பேசுபவர். கடந்த பதினைந்து வருடங்களாக சினிமாவில் இயங்கி வருகிறார். மலையாளம், தமிழ், தெலுங்கு மொழிகளில் பல ஹிட் கொடுத்தவர். ஸ்டேட் அவார்ட் வின்னர்.
தமிழில் ‘நாடோடிகள்’, ‘சீடன்’, ‘எங்கேயும் எப்போதும்’ போன்ற படங்களில் தன் திறமையை நிரூபித்தவர். இப்போது சமுத்திரக்கனி நடிக்கும் ‘திரு.மாணிக்கம்’ படத்தில் மீண்டும் தமிழ் பேச வந்துள்ளார்.பார்த்து ரொம்ப நாளாச்சு... குடும்ப வாழ்க்கை எப்படியிருக்கு?
ரொம்ப நல்லாயிருக்கேன். எல்லோரையும் போல் குடும்ப வாழ்க்கை என்பது பெர்சனல். கவனிக்க வேண்டிய விஷயம் கரியர்ல என்ன பண்ணப்போறேன் என்பதுதான். பெர்சனல் லைஃபை சினிமாவுடன் கனெக்ட் பண்ணக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன்.
‘திரு.மாணிக்கம்’ படத்தை எப்படி கமிட் செய்தீங்க?
சில வருஷங்களாக தமிழில் படங்கள் செய்யவில்லை. அதை சரி செய்யுமளவுக்கு மனசுக்கு சந்தோஷத்தைக் கொடுக்கும் படமாக ‘திரு.மாணிக்கம்’ வாய்ப்பு வந்துச்சு.
கிராமத்துல இருக்கும் குடும்ப வாழ்க்கைதான் படம். இயக்குநர் நந்தா பெரியசாமி சுமதி கேரக்டரைப் பற்றி சொல்லும்போது, ‘இந்தப் படத்துல நீங்க தான் வில்லி, அதேசமயம் நீங்கதான் ஹீரோயின். படம் பார்க்கும் ரசிகர்கள் உங்களை அப்படித்தான் பார்க்கப் போறாங்க’ன்னு சொன்னார்.எனக்கு கதை, என்னுடைய கேரக்டர் பிடிச்சிருந்தாலும் பண்ணலாமா, வேணாமா என்ற குழப்பம் இருந்துச்சு. காரணம், இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடிக்கணும். மலையாளத்திலும் சரி, தமிழிலும் சரி அம்மா ரோல் பண்ணியிருக்கிறேன். அது சின்ன குழந்தைகளின் அம்மா கேரக்டர். இதில் அப்படியில்லை. ஏனெனில், அம்மாவாக நடிக்கும்போது அந்த உடல் மொழி சரியாக இருக்கணும். முதலில் நடிகையாக எனக்கு கனெக்ட் ஆகணும். படம் பார்க்கும் ரசிகர்களுக்கும் கனெக்ட் ஆகணும். கேரக்டர் மீதான நம்பிக்கையை எப்படி ஏற்படுத்துவது என்ற குழப்பம் இருந்துச்சு.கனி சாரிடம் விஷயத்தைச் சொன்னேன். ‘உனக்குப் பிடிச்சிருந்தா பண்ணு, பிடிக்கலைன்னா விட்டுவிடு’ன்னு சொன்னார். அவர் சொன்னது ஆத்மார்த்தமான ஆலோசனையாக இருந்ததால் ஓகே பண்ணிட்டேன்.
செட்டுக்குள் போனதும் நானும் மாணிக்கம் குடும்பத்துல ஒருவராக மாறினேன். அப்படியொரு அட்மாஸ்பியரை இயக்குநர் நந்தா பெரியசாமி உருவாக்கியிருந்தார். சுமதி கேரக்டரின் வெற்றிக்கு காரணம் அவர்தான். அவர் சொன்ன வார்த்தைகள், ஊக்கம், உற்சாகத்தால்தான் என்னால டென்ஷன் இல்லாமல் வேலை பார்க்க முடிஞ்சது சமுத்திரக்கனி ஜோடியா நடிச்ச அனுபவம் எப்படி?
‘நாடோடிகள்’ படத்தில் அவர்தான் என்னை தமிழில் அறிமுகம் செய்தார். அவர் என்னுடைய வழிகாட்டி, காட்ஃபாதர் என எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். அவர் என்னை கண்டுபிடிக்கலைன்னா சினிமாவை என்னுடைய ப்ரொஃபஷனா செலக்ட் பண்ணியிருப்பேனா என்பது சந்தேகமே.ஏனெனில் ஆரம்பத்தில் சில படங்கள் பண்ணும்போது சினிமாவைப் பற்றிய எந்தவித புரிதலும் இல்லாமல் இருந்தேன். சினிமாதான் என்னுடைய ப்ரொஃபஷன் என்ற புரிதல் இல்லாமல் இருந்தேன்.
‘நாடோடிகள்’ பண்ண ஆரம்பிச்சதும் சினிமா என்ற உலகத்தைப் பற்றியும் அதுல ஒர்க் பண்ணும்போது சினிமா மூலம் வாழ்க்கையில் எவ்வளவு உயரத்துக்குப் போகலாம்னும் தெரிஞ்சுக்கிட்டேன். அப்போது எனக்கு இருபது வயசு இருந்திருக்கலாம்.அடுத்தடுத்து மேற்படிப்பு படிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தேன். கடவுள் எல்லோருக்கும் இதுதான் உன் வாழ்க்கைப் பாதைன்னு ஒரு கட்டத்துல சொல்வார். அப்படி எனக்கு வழிகாட்டியாக இருந்த படம் ‘நாடோடிகள்’.
ஒரு பேட்டியில், ‘பெரிய ஸ்டாராக வருவோம்னு எதிர்பார்த்தீங்களா’ன்னு கேட்டார்கள். கனி சார் என்னை அறிமுகப்படுத்துவார், அவருக்கு ஜோடியாக நானே நடிப்பேன் என்றெல்லாம் அப்போது நினைச்சுப் பார்த்ததில்லை. இப்போது அறுபது படங்களுக்கு மேல் நடிச்சிருக்கேன். எப்படி இவ்வளவு படங்கள் பண்ணினேன் என்று தெரியவில்லை.ஆரம்பத்திலிருந்து ஹோம்லி கேரக்டர் செய்துள்ளீர்கள்.
கிளாமர் ரோல் பண்ணியிருந்தால் உங்கள் வளர்ச்சி பிரம்மாண்டமாக இருந்திருக்கும் என்று நினைத்ததுண்டா?
அப்படியில்லை. அப்போது இருந்த கிளாமர், இப்போது இல்லை. ஒவ்வொருத்தர் பார்வையிலிருந்து கிளாமர் வித்தியாசப்படும். சிலருக்கு தாவணி கிளாமராக தோணும். சிலருக்கு குட்டைப் பாவாடை கிளாமராக தோணும். எனக்கு ஜீன்ஸ், டி-ஷர்ட் கிளாமர். ஓப்பனாகச் சொல்வதாக இருந்தால் எனக்கு கிளாமர் ரோல் வரவில்லை. அப்படி வந்திருந்தால் டிரை பண்ணியிருப்பேன்.
‘டீசல்’ எப்படி வந்திருக்கு?
ஹரீஷ் கல்யாண் நடிக்கும் படம். சண்முகம் முத்துசாமி டைரக்ஷன். அதுல விநய் ஜோடியாக வர்றேன். எனக்கு சக்திவாய்ந்த வேடம்.
திருமணத்துக்குப் பிறகு என்ன மாதிரி வேடங்கள் வருகின்றன..?
வித்தியாசமான கேரக்டர்ஸ் வருகின்றன. ‘அப்பன்’, ‘அந்தகன்’ ரீமேக் என எல்லாமே திருமணத்துக்குப் பிறகு செய்த படங்கள். அதில் எனக்கு கேர்ள் நெக்ஸ்ட் டோர் கேரக்டர் இல்லை. திருமணத்துக்குப் பிறகு எனக்கு இந்த மாதிரி ரோல்தான் கொடுக்கணும்னு யாரும் யோசிச்சதில்லை.கல்யாணம் பண்ணியிருந்தாலும், பண்ணாமல் இருந்தாலும் படத்துல நான் ஜோடியாக நடிக்கிறவருடன் கல்யாணக் காட்சி இருக்கும். ‘நாடோடிகள்’ படத்தில் கல்லூரிப் பெண் வேடம். அதில் கல்யாணம் நடந்துச்சு.
‘சீடன்’ படத்திலும் திருமணமான கேரக்டர்.சிங்கிளா இருந்தால்தான் படம் பண்ண முடியும் என்றில்லை. சினிமாவின் பார்வை மாறியிருக்கு. பாலிவுட்ல கல்யாணமாகி குழந்தை பிறந்த பிறகும் பிசியாக இருக்கிறார்கள். மீடியாதான் அப்படி பிரிச்சுப்பார்க்கிறது. இண்டஸ்ட்ரி அப்படி பிரிச்சுப் பார்க்கிறதில்லை. அதை எப்படிச் சொல்கிறேன் என்றால் ஒரு விஷயத்தை நல்லாயிருக்கு... நல்லாயிருக்கு...ன்னு சொல்லிட்டே இருந்தால் நல்லாயிருக்கும். கெட்டது... கெட்டது...ன்னு சொல்லிட்டே இருந்தால் அது கெட்டதாக மாறிடும்.பொய்யை திரும்பத் திரும்பச் சொல்லி மாய பிம்பத்தை ஏற்படுத்துவாங்க. ஒரு விஷயத்தை பாசிடிவ்வாக சொல்லிப்பார்த்தால் தப்பாகப் பார்க்க வாய்ப்பு இல்லை.
தெலுங்கில் ராகவேந்திரராவ் சார் டைரக்ஷன்ல ஒரு படம் பண்ணினேன். அது திருமணம் முடிந்த சமயம். அப்போது அவர், ‘எதுவரை உங்களை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் உறுதியாக வைத்துகொள்கிறீர்களோ அதுவரை உங்களுக்கு சக்சஸ் இருக்கும்’னு சொன்னார். அதுதான் சினிமாவுக்கு வேணும். கல்யாணம் ஒரு மேட்டர் இல்லை.
பெண்கள் பார்வை ஆண்கள் பார்க்கும் பார்வையிலிருந்து வேறுபட்டதா?
அது மாறவே மாறாது. உலகம் முடியப் போகிறது என்று சொல்லும் வரை அந்தப் பார்வை மாறாது. ஆதாம், ஏவாள் காலத்திலிருந்து அது தொடர்கிறது. ஆதாமுக்கு ஒரு பார்வை இருந்துச்சு. ஏவாளுக்கு ஒரு பார்வை இருந்துச்சு. 2025 ல் கேட்டாலும் அதுதான் பதில். ஒரு பெண் தன்னை ஃபெமினிஸ்ட்ன்னு சொன்னாலும் சரி, சொல்லவில்லை என்றாலும் சரி அவர் ஃபெமினிஸ்ட்.
அதாவது, என்னுடைய டீம்ல ஒரு பெண் இருக்கிறார். அவருக்கு ஒரு பிரச்னை என்றால் நான் சப்போர்ட் பண்ணாமல் இருந்தால் அது ஃபெமினிசம் இல்லை. அதைப் பக்கத்திலிருந்து பார்க்கும் ஓர் ஆண் உதவ வந்தால் அவருக்குள்ளும் ஃபெமினிசம் இருக்கும். ஒரு பெண் ஃபெமினிசம் சார்ந்து இருக்க வேண்டும் என்றில்லை. தேவையானது மனிதநேயம். அது இருந்தால் எல்லோருடைய பார்வையும் மாறிடும். உங்களுக்கு நீங்களே கொடுக்கும் அட்வைஸ் என்ன?
கொடுக்கும் வேலையை சரியாகப் பண்ணணும்னு நினைக்கிறேன். என் வேலையில் உண்மையாக இல்லைன்னா குடும்பம், சமூகம் என எதிலும் உண்மையாக இருக்க முடியாது.
|