Decoding இந்தியா 2024...



தமிழ் சினிமா ரசிகர்கள் விஜய், அஜித் படங்களில் என்ன குறியீடு இருக்கிறது என்று டார்ச் லைட் அடித்துத் தேடிக் கொண்டிருக்கையில் உலக நாடுகள் பலவும் இன்னொரு குறியீட்டை மெகா வாட் வெளிச்சம் அடித்துப் பார்த்துக்கொண்டிருக்கும். 
அதுதான் மனித வளர்ச்சிக் குறீயீடுகள். காரணம், இந்த மனித வளர்ச்சிக் குறியீடுகள்தான் ஒரு நாடு சுபிட்சமாக இருக்கிறதா இல்லை மண்ணை கவ்விக்கொண்டிருக்கிறதா என்று துல்லியமாக சொல்லும். 2024ம் ஆண்டு முடிவுக்கு வரும் தருவாயில் உலக நாடுகளுடன் இந்த மனித வளர்ச்சிக் குறியீடுகளில் இந்தியா எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்.

இந்த குறியீடுகள் எல்லாமே உலகளவில் இயங்கும் பிரபலமான நம்பத்தகுந்த நிறுவனங்களால் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 2014 முதல் 2024 வரையிலானவை இந்த ரேங்க் பட்டியல். 2014ல்தான் மோடியும் ஆட்சிக்கு வந்தார் என்று நினைவில் வைத்தால் இந்தக் குறியீடுகளின் முக்கியத்துவம் புரியும்.
ஐநா சபையின் ‘மனித வளர்ச்சிக் குறியீடு’ எனும் பட்டியல் ஒரு நாட்டு குடிமக்களின் ஆயூட் காலம், கல்வி ஆகியவற்றை தேசிய வருமானத்தின் அடிப்படையில் வைத்து அந்தந்த நாடுகளை பிரித்து மேய்கிறது. இதில் இந்தியா 2014ல் 130வது இடத்தில் இருந்தது. இப்பொழுது 134வது இடத்துக்கு - அதாவது 4 புள்ளிகள் சரிந்திருக்கிறது.

‘எக்கானமிஸ்ட் இன்டெலிஜன்ஸ் யூனிட்’ எனும் அமைப்பு ஒரு நாட்டின் மக்களாட்சியைப் பற்றி கணக்கெடுக்கிறது. இதில் சிவில் உரிமை, பன்மைத்தன்மை, அரசியல் கலாசாரம், அரசியல் பங்கெடுப்பு, தேர்தல் நடைமுறைகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்கிறது. இதில் இந்தியா 2014ல் 27 வது இடத்தில் இருந்தது. இன்று 47வது இடத்துக்கு சரிந்திருக்கிறது.
‘சிவிக்கஸ்’ எனும்  அமைப்பு சுதந்திரமான வெளிகள் எனும் அடிப்படையில் ஆய்வு செய்கிறது. இதில் மக்கள் கூடுவதற்கான வெளி, அமைதியாக கூடுவது மற்றும் அமைதியை வெளிப்படுத்துவது பற்றி ஆய்வு செய்கிறது.

இதில் இந்தியா 2017ம் ஆண்டு இதற்கு எல்லாம் தடை இருக்கிறது என்று பெயரை வாங்கியது. இன்று அப்படியே மக்கள் கூடுவதற்கான வெளிகள் இருந்தாலும் அது ஒடுக்கப்படுகிறது என்ற பட்டத்தை வாங்கியிருக்கிறது.

‘ஃப்ரீடம் ஹவுஸ்’ என்ற அமைப்பு சட்டத்தின் ஆட்சி, அரசியல் பன்மைத்தன்மை, தேர்தல், அரசாட்சி, சிவில் உரிமை, பேச்சு சுதந்திரம், அசோசியேஷன், அமைப்பாகத் திரளுதல் பற்றி ஆய்கிறது. இவற்றுக்கெல்லாம் நூற்றுக்கு இத்தனை மதிப்பெண்கள் என்பதுபோல் புள்ளிகளை வழங்குவார்கள். இதில் இந்தியாவின் மார்க்? 2014ல் 77. இன்று 66.

‘வேர்ல்ட் ஜஸ்டிஸ் ப்ராஜக்ட்’ என்ற அமைப்பு சட்டத்தின் ஆட்சி, குற்றம், சிவில் உரிமை, அரசு அதிகாரத்தில் உள்ள தடைகள், ஊழல், அரசின் வெளிப்படைத்தன்மை, சட்டம் ஒழுங்கு மற்றும் செக்யூரிட்டி பற்றி கணக்கெடுக்கிறது.

இதில் இந்தியா 2014ல் 66வது இடம். 2020ல் 77வது இடம். இன்று 79வது இடம்.ஐநா-வின் ‘வேர்ல்ட் ஹேப்பினஸ் ரிப்போர்ட்’ ஒரு நாட்டின் மகிழ்ச்சியின் நிலையை ஆராய்கிறது. 2014 முதல் இந்தியா 126 நாடுகளில் 111வது இடத்திலேயே இருந்து உம்மணா மூஞ்சி பட்டத்தைப் பெறுகிறது. ‘ரிப்போர்ட்டர்ஸ் வித்தவுட் பார்டர்ஸ்’ என்பது மீடியா சுதந்திரம் பற்றி ஆராயும் அமைப்பு. இந்தியா 2014ல் 140வது இடத்தில் இருந்ததாகவும் இன்று 159வது இடத்துக்கு தள்ளப்பட்டதாகவும் சொல்கிறது.

பெண்களின் வணிகம், சட்டம், நகர்வு, வேலை செய்யும் இடம், சம்பளம், திருமணம், தொழில் பற்றி ஆராயும் ‘வேர்ல்ட் பேங்க்’ 2014ல் இந்தியாவுக்கு 111வது இடத்தையும், இன்று 113வது இடத்தையும் கொடுத்திருக்கிறது.சிறந்த பொருளாதாரத்தை ஆய்வு செய்யும் ‘ஹெரிடேஜ் ஃபவுண்டேஷன்’, 10 ஆண்டுகளுக்கு முன் 120வது இடத்தையும் இன்று 126வது இடத்தையும் இந்தியாவுக்கு கொடுத்திருக்கிறது.

‘இன்டர்நேஷனல் ஃபுட் பாலிசி ரிசர்ச் இன்ஸ்டிடியூட்’ என்ற அமைப்பு பட்டினிக் குறியீட்டில் கடந்த 10 ஆண்டுகளில் மிகப்பெரிய சரிவை இந்தியா சந்திருப்பதாக கவலையை தெரிவிக்கிறது.
அதாவது 2014ம் ஆண்டு 76 நாடுகளில் 55வது இடத்தில் இருந்த இந்தியா, 2024ல் 127 நாடுகளில் 105 வது இடத்துக்கு சென்றிருப்பதாக சுட்டிக் காட்டுகிறது.இச்சூழலில்தான் 2024ம் ஆண்டை நிறைவு செய்து 2025ம் ஆண்டுக்குகள் நுழையப்போகிறோம். வரும் ஆண்டிலாவது இந்தியாவின் நிலை உயருமா?

டி.ரஞ்சித்