நாயின் கால்ஷீட்டை வாங்கிய இயக்குநர்!
உக்ரைன் நாட்டில் டாக்டருக்கு படிக்கச் சென்றவர், தெலுங்கில் இசையமைப்பாளராகி தமிழில் டைரக்டராகி இருக்கிறார்.
சினிமாவுக்காக எம்பிபிஎஸ் படிப்பை பாதியில் விட்டுவிட்டதாகச் சொல்கிறார் இயக்குநர் நித்தின் வேமுபதி. இவர் நாயை மையமாக வைத்து ஒரு படத்தை இயக்கியுள்ளார். படத்தின் பெயர் ‘கூரன்’. இதன் முதல் பார்வையை வெளியிட்ட இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், படக்குழுவை வெகுவாக பாராட்டியதில் உற்சாகத்தில் இருந்தார் நித்தின்.
எல்லோரும் ஹீரோவிடம் கதை சொல்வாங்க... நீங்க நாய்க்கு கதை ரெடி பண்ணியிருக்கீங்க?
படத்துல நான் சொல்ல வரும் கன்டன்ட் ரிஜினல் கன்டன்ட் அல்ல. யூனிவர்சல் கன்டன்ட். நாய் என்பது உலகத்துல உள்ள எந்தப் பகுதியிலும் வாழக்கூடியது. அப்படி உலகம் முழுவதும் பரிச்சயமான கன்டன்ட் என்னுடைய முதல் படமா இருக்கணும் என்பதற்காக நாயை கதைக்குள் கொண்டு வந்தேன்.முதல் பட இயக்குநர்கள் கமர்ஷியல் சினிமா செய்யத்தான் ஆசைப்படுவாங்க. இப்போதுள்ள இளைஞர்கள் முதல் படத்தை கமர்ஷியல் சினிமாவாக எடுத்து ஸ்டாராக வரணும்னு நினைக்கிறார்கள். அதிலிருந்து மாறுபட்டு ஏன் அனிமல் படம் எடுக்கக்கூடாது என்று நினைத்தேன். அனிமல் சினிமா நம் இந்திய சினிமாக்களில் மிகவும் குறைவு. என்னுடைய முதல் சினிமாவை வித்தியாசமாகப் பண்ண நெனைச்சேன். அனிமலை வெச்சு படம் எடுத்தால் அட்டென்ஷன் கிடைக்கும் என்பதோடு எனக்கு அனிமல் பிடிக்கும். எஸ்ஏ சந்திரசேகர், பாலாஜி சக்திவேல் என பிரபலங்களுடன் வேலை செய்த அனுபவம் எப்படி இருந்துச்சு?
மெயின் லீடாக ஜான்சி நாயை நடிக்க வைத்துள்ளேன். அந்த நாய்க்கு ஒரு லாயர் வேண்டும். அந்த கேரக்டருக்கு எஸ்.ஏ.சந்திரசேகர் சார் கரெக்ட்டான சாய்ஸாக இருந்தார்.
எஸ்ஏசி சார் லெஜண்ட் டைரக்டர். எனக்கு இதுதான் முதல் படம். அவர் இதுல எப்படி நடிக்கப் போகிறார் என்ற தயக்கம் இருந்துச்சு.
பைலட் காப்பியும், அதுல நான் சொல்லியிருந்த கன்டன்ட்டும் பிடிச்சுப் போய் நடிக்க வந்தார்.எஸ்ஏசி சாருடன் வேலை செய்த அனுபவம் பற்றி சொல்வதாக இருந்தால் அவர் ஆபீசுலதான் இயக்குநர். ஷூட்டிங் ஸ்பாட் வந்துட்டார்ன்னா அவர் ஒரு குழந்தை மாதிரி. நான் என்ன சொன்னாலும் அதை நோ சொல்லாம செய்வார். அதுவே எனக்குள் பயத்தையும், பதட்டத்தையும் ஏற்படுத்துச்சு. ஒய்.ஜி.மகேந்திரன், பாலாஜி சக்திவேல், சரவண சுப்பையா, ‘அயலி’ மதன் என இதுல ஒர்க் பண்ணிய எல்லோருமே பல படங்களை இயக்கியவர்கள்.ஜாம்பவான்களுடன் எப்படி ஒர்க் பண்ணப்போகிறோம் என்று நினைக்கும்போது நம்மையும் அறியாமல் பிரஷர் வரத்தான் செய்யும். என்னுடைய பதட்டத்தைப் பார்த்த எஸ்ஏசி சார், செட்டுக்குள் ஒரு இயக்குநர் எப்படி ஆர்ட்டிஸ்ட்டிடம் வேலை வாங்கணும் என்பதை டீச் பண்ணினார். அப்படி அவரிடம் சினிமாவை நிறைய கத்துக்கிட்டேன்.
இவர்களுடன் ஜார்ஜ் மரியன், சத்யன், இந்திரஜா ரோபோ இருக்கிறார்கள்.நாயுடன் வேலை செஞ்சதையும் சொல்லணும். ஆர்ட்டிஸ்ட்களிடம் ஒரு ஷாட் ஓகே பண்ணுவதற்கு நாலைஞ்சு டேக் ஆவது எடுக்கணும். சொன்னா நம்பமாட்டீங்க. எங்கள் நாய் சிங்கிள் டேக்ல ஓகே பண்ணிடுச்சு. அதற்கு நாய் டிரைனர் சந்துரு சாருக்கு தேங்க்ஸ் சொல்லணும். நாயோட நடிப்பை ஆடியன்ஸ் பாராட்டுவது நிச்சயம்.
கதை ப்ளீஸ்?
‘கூரன்’ என்பது பண்டைய தமிழ்ச் சொல். ஒரு நாய் தனக்கான நீதி தேடி நீதிமன்றம் போவதுதான் படத்தோட கதை. அந்த நாய்க்கு நியாயம் கிடைச்சதா, இல்லையா என்பதை விறுவிறு திரைக்கதையில் சொல்ல டிரை பண்ணியிருக்கிறேன்.
வரலாற்றில் இந்தப் படத்தில்தான் நாய், மனிதன் மீது குற்றம் சுமத்துவது போல் ஒரு படம் வெளியாகிறது.சித்தார்த் விபின் மியூசிக்ல பேக்ரவுண்ட் ஸ்கோர் அற்புதமா வந்திருக்கு. எனக்கு இது வேணும், இது வேணாம்னு எந்த இடத்திலும் சொல்லவில்லை. ஒரு ரீல் மட்டும் போட்டுக் காட்டினேன். எனக்கு நிறைய சொல்லணும்னு தோணுச்சு.
சமீப நாட்களில் இயக்குநர்கள் பல விஷயங்களைச் சொல்லி மியூசிக் டைரக்டரைக் குழப்புகிறார்களோ என்று தோன்றுகிறது. அடிப்படையில் நான் மியூசிக் டைரக்டர் என்பதால் மியூசிக் டைரக்டருக்கு முழு சுதந்திரம் கொடுத்தேன்.
அவரும் தன்னுடைய வேலையில் சமரசம் இல்லாமல் பண்ணினார்.ஒளிப்பதிவு மார்ட்டின் தன்ராஜ். ‘தலைக்கூத்தல்’ பண்ணியவர். என் மைண்ட்ல என்ன இருந்துச்சோ அதற்கு அருமையான விஷுவல்ஸ் கொடுத்தார். பல படங்களில் கொடைக்கானல் அழகைப் பார்த்து ரசித்திருப்போம். இதுல இன்னொரு கோணத்தில் அழகாகக் காட்டியிருக்கிறார். எடிட்டர் லெனின் சார் மேற்பார்வையில் மாருதி எடிட்டிங் பண்ணியுள்ளார். தயாரிப்பாளர் விக்கி சாரைப் பற்றி சொல்லணும். அவரும் ஓர் இயக்குநர். ஆனால், தயாரிப்பாளராக இந்தப் படத்துக்கு என்ன செய்யணுமோ அதை மட்டும் செய்தார். எந்த இடத்திலும் சின்ன கரெக்ஷன் சொன்னதில்லை.
படத்துல வேற என்ன ஹைலைட்ஸ்?
இந்தப் படத்தை எடுத்ததற்கான நோக்கம் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் நட்பு கலந்த சூழலை உருவாக்கணும். மனிதர்களின் உயிரும் விலங்குகளின் உயிரும் ஒன்றுதான் என்றும் இந்த உலகம் அனைத்து உயிரினங்களுக்கும் சொந்தம் என்பதை அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் சொல்லணும்னும் நெனைச்சோம்.
உங்களைப் பற்றி சொல்லுங்களேன்?
எனக்கு சொந்த ஊர் நெல்லூர். உக்ரைனில் டாக்டருக்கு படிச்சேன். என்னுடைய அம்மா வுக்கு நான் டாக்ராகணும் என்ற ஆசையும், அப்பாவுக்கு சினிமா டைரக்டராகணும் என்ற ஆசையும் இருந்துச்சு.அம்மா விருப்பத்துக்காக டாக்டருக்கு படித்தாலும் என மனசு முழுவதையும் சினிமாதான் ஆக்கிரமித்திருந்தது. அதற்காக டாக்டருக்கு படிக்கச் சென்ற இடத்துல ஃபிலிம் டைரக்ஷனையும் படிக்க ஆரம்பிச்சேன். ஒரு கட்டத்துல படிப்பை பாதியில விட்டுவிட்டு இந்தியாவுக்குத் திரும்பினேன்.
எனக்கு இசை கொஞ்சம் தெரியும் என்பதால் சில தெலுங்குப் படங்களில் மியூசிக் டைரக்டராக ஒர்க் பண்ணினேன். தமிழ் சினிமாவில் வேலை செய்ய வேண்டும் என்பதுதான் என்னுடைய லட்சியமா இருந்துச்சு.
தமிழ் சினிமாவில் புது கன்டன்ட்டுக்கு எப்போதும் வரவேற்பு கிடைக்கும். இது எனக்காக சொல்லவில்லை. இதுதான் வரலாறு.டைரக்ஷனை யாரிடமும் கத்துக்கல. நானே சில குறும்படங்களை இயக்கி டைரக்ஷன் கத்துக்கிட்டேன். அந்த தைரியத்துல ‘கூரன்’ படம் பண்ணினேன்.
எஸ்.ராஜா
|