வீட்டுக்கு ஒரு முதலுதவி செய்பவரை உருவாக்கணும்..!



அசத்தல் அலர்ட் தன்னார்வ நிறுவனம்

‘‘இன்னைக்கு உலக அளவில் சாலை விபத்தில் இந்தியா இரண்டாவது இடத்துல இருக்குது. இதில் தமிழ்நாடு டாப்ல உள்ளது. அதேபோல் திடீர் மாரடைப்பை எடுத்துக்கிட்டாலும் தமிழ்நாடு முன்னணியில் இருக்கு. முன்னாடி 60, 70 வயசுல வந்த மாரடைப்பு இப்ப 30, 40 வயசுேலயே வருது. அதனால், இன்னைக்கு எமர்ஜென்சினு பார்த்தால் காலையில் தொடங்கி இரவு வீடு திரும்புகிற வரை யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம்.

இப்படி எமர்ஜென்ஸி நடக்கும்போது அருகிலேயே ஒரு மருத்துவர் இருப்பாரானு கேட்டால் அதற்கு சாத்தியம் இல்ல. எமர்ஜென்ஸி நடக்கிற இடத்தில் எல்லாம் ஒரு மருத்துவர் இருக்கவும் முடியாது. ஆனா, ஃபர்ஸ்ட் ரெஸ்பாண்டர்னு சொல்லப்படுகிற முதலுதவி செய்கிறவர் இருக்க சாத்தியம். அப்படி அனைவருக்கும் முதலுதவி பயிற்சி அளிச்சு வீட்டுக்கு ஒரு ஃபர்ஸ்ட் ரெஸ்பாண்டரை உருவாக்கும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டதுதான் இந்த ‘அலர்ட்’ தன்னார்வ அமைப்பு...’’ அத்தனை விளக்கமாகவும் உற்சாகமாகவும் சொல்கிறார் கலா பாலசுந்தரம்.

கடந்த 2006ம் ஆண்டு இந்த அலர்ட் அமைப்பைத் தனியொரு பெண்ணாக உருவாக்கியவர். தற்போது 18 ஆண்டுகளைக் கடந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது இந்த அமைப்பு. இதன்வழியே இந்தியா முழுவதும் சுமார் 4 லட்சம் பேர் முதலுதவி பயிற்சி பெற்றுள்ளனர். ‘‘நான் 25 ஆண்டுக்கும் மேலாக ஐடி துறையில் வேலை செய்தேன். 
அப்ப 2005ம் ஆண்டு நான் வேலை செய்த நிறுவனம் சிறுசேரியில் இருந்தது. இன்னைக்கு ஓஎம்ஆர் ஐடிக்கான ஹைவே ஆகிடுச்சு. ஆனா, அன்னைக்கு அப்படியிருக்கல. ஆடு, மாடு எல்லாம் குறுக்கே போகும். நாங்க பெருங்குடியிலிருந்து சிறுசேரிக்குக் கம்பெனி பஸ்ல போவோம்.

அப்ப நிறைய விபத்துகளைப் பார்த்தேன். ஒவ்வொரு முறையும் விபத்துகளை பஸ்ல இருந்தோ, கார்ல இருந்தோ பார்க்கும்போது மனசு அலறும். அப்ப மக்களும் உடனே கூடிடுவாங்க. ஆனா, ஒண்ணும் பண்ணமாட்டாங்க.

ஏன் ஒண்ணுமே பண்ணாமல் இப்படி நிற்கிறாங்கனு மனசுல தோணும். ஒருமுறை இப்படி பார்க்கிறப்ப நீ என்ன செய்றேன்னு என்னை நோக்கியே ஒரு கேள்வி வந்தது. உண்மையில் நானும் அவங்களபோல ஒண்ணும் பண்ணாமல் சும்மாதானே இவ்வளவு நாட்கள் கடந்திருக்கேன்னு வேதனையாக இருந்துச்சு.

அந்த நொடி... நான் முதலுதவி சிகிச்சையை கத்துக்கிட்டு இந்தமாதிரி விபத்து நடந்தால் முடிஞ்ச உதவியை முதல் நபராக இறங்கி செய்யணும்னு ஒரு தீர்மானம் எடுத்தேன்...’’ என்கிற கலா, உடனடியாக முதலுதவி பயிற்சியை கற்றுக்கொள்ள சென்றுள்ளார். ‘‘ஒரு இன்ஸ்டிடியூட்ல முதலுதவி பயிற்சி எடுத்தேன். அப்பதான் இது ரொம்ப எளிதான ஒரு விஷயம்னு தெரிஞ்சது.

ஒரு சினிமாவுக்கோ, வெளியில் டின்னருக்கோ மூணு மணி நேரம் செலவு பண்றோம். அந்த நேரத்தை வாழ்க்கையில் ஒருமுறை நாம் ஒதுக்கினாலே போதும். பலரின் வாழ்க்கையை காப்பாற்ற முடியும்னு புரிஞ்சுக்கிட்டேன்.

குறிப்பா, அந்த மூணு மணி நேரத்தில் முதலுதவியின் அடிப்படை அறிவினை கத்துக்கலாம். இதற்குப் பெரிய படிப்பும் தேவையில்ல. இப்ப பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகள்ல ஐந்தாவது படிக்கும்போதே முதலுதவி பத்திக் கத்துக்கொடுக்குறாங்க.  நம்மூர்ல டூவீலர்ல, ஃபோர் வீலர்ல போறவங்க நிறுத்தி உதவ மாட்டாங்க. ஆனா, விபத்து நடக்கிற இடத்துல நிற்கிற ஆட்டோ டிரைவர்கள், டீக்கடை வச்சிருப்பவர்கள் ஓடி வந்து உதவி செய்யலாம். ஆனா, அவங்க மூணு மணி நேரம் ஒதுக்கி இந்த பயிற்சியைக் கத்துக்க மாட்டாங்க.

ஐந்து நிமிஷம் போனாலும் அவங்க பிசினஸ் போயிடும். அப்புறம், பணம் கொடுத்து கத்துக்கத் தயங்குவாங்க. அப்ப இந்த அறிவு எல்லோருக்கும் போய்ச் சேரணும். பணம் என்பதால் இதை யாரும் படிக்காமல் இருந்திடக்கூடாதுனு நினைச்சேன். அப்படியாக 2006ல் இந்த அலர்ட் அமைப்பை உருவாக்கினேன். 

அப்ப என்னுடன் நண்பர் ராஜேஷ் உள்பட பலரும் இணைஞ்சாங்க. இதுக்கு முன்னாடி நாங்க ஒரு சர்வேயும் எடுத்தோம். ‘பொது இடத்துல அவசரநிலை ஏற்பட்டால் நீங்க போய் உதவி செய்வீங்களா, மாட்டீங்களா’னு எல்லோர்கிட்டயும் கேள்வி கேட்டோம். முக்கால்வாசிப் பேர் மாட்டோம்னுதான் பதிலளிச்சாங்க.

இதுக்கு முக்கியமான மூன்று காரணங்கள் இருப்பதைப் பார்த்தோம். நான் உதவி பண்ணப்போய் அது மோசமாகிடுச்சுனா... அதோடு, எனக்கு என்ன பண்ணணும்னு தெரியாதுனு முதல்ல சொன்னாங்க. ரெண்டாவது... நான் உதவி பண்ணணும்னு இருக்கு. ஆனா, போலீஸ், கோர்ட் இதுக்கு அலையவேண்டி வந்தால் முடியாது. 

அதனால், மாட்டோம்னு சொன்னாங்க. மூன்றாவது... எனக்கு நேரமில்லனு குறிப்பிட்டாங்க.அதனால், முதலிரண்டு காரணங்களைச் சொன்னவங்களுக்குப் பயிற்சி அளிச்சால் எமர்ஜென்ஸி அப்ப உதவ முன் வருவாங்கனு தோணுச்சு.

எனக்கு மெடிக்கல் பின்புலம் கிடையாது. பத்தாம் வகுப்புக்குப் பிறகு அறிவியல் படிக்கல. ஆர்ட்ஸ்தான் முழுவதும் படிச்சு வந்தேன். அதனால், முதல்ல மருத்துவ அறிவை வளர்த்துக்கிட்டேன். பிறகு ஒரு டீமாக சேர்ந்து வேலையை செய்ய ஆரம்பிச்சோம்.

முதல்ல எங்க அலுவலக வேலை முடிஞ்சதும் நேராக கண், மகப்பேறு, இதயம் உள்ளிட்ட துறைகள்ல உள்ள மருத்துவர்களைச் சந்திச்சு கேள்விகள் கேட்டோம். அதாவது ‘இதயம் சார்ந்த அவசர நிலைனா என்ன? ஒருவர் அவசர நிலைக்குப் போறார்னா என்ன அறிகுறி இருக்கும்? ஒரு சாதாரண மனிதனாக என்ன செய்யணும்? செய்யக்கூடாது?’ இந்தமாதிரி ஒவ்வொரு துறையைச் சேர்ந்த மருத்துவர்களிடமும் கேட்டுத் தகவல்களைத் திரட்டினோம். பிறகு, ஐஎம்ஏனு சொல்லப் படுற இந்திய மருத்துவர் சங்கத்திடம் கொண்டு போய் எங்க மாடலைக் காட்டி அவங்களுடன் சேர்ந்து ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டோம்.

இன்னைக்கு யூடியூப்ல முதலுதவி சம்பந்தமாக நிறைய கன்டென்ட் இருக்கு. ஆனா, அன்னைக்கு இந்தியச் சூழலுக்கு எந்த கன்டென்ட்டும் இல்ல. அமெரிக்காவின் கன்டென்ட்தான் இருந்தது. அங்க 911 க்கு போன் பண்ணினால் ரெண்டு நிமிடத்துல ஆம்புலன்ஸ் வந்திடும்.அதுவரை நீங்க என்ன பண்ணணும்னு அங்க முதலுதவி பாடமாகவே இருக்கு. ஆனா, 2006ம் ஆண்டு வரை இங்க ஆம்புலன்ஸ் சிஸ்டமே கிடையாது. 108 என்பதே 2009ம் ஆண்டுதான் வந்தது.

அப்ப தனியார் ஆம்புலன்ஸ் மட்டும்தான். அதுவும் இரண்டு நிமிடத்தில் நம்மூர்ல வருவதற்கு சாத்தியமும் இல்ல. அதனால், இந்திய சூழலுக்கு ஏற்ற ஒருதிட்டத்தை உருவாக்கினோம். இந்நேரத்துல சென்னைக்கு வந்திருந்த ஜனாதிபதி அப்துல் கலாம் சார்கிட்ட எங்களைப் பத்தி யாரோ சொல்லியிருக்காங்க. உடனே எங்களைப் பார்க்கணும்னு கவர்னர் மாளிகைக்கு வரச்சொல்லி நாங்க போய் பார்த்தோம்.

எங்களிடம் நிறைய கேட்டார். இதுவரை யாரும் இதை எடுத்து பண்ணல. நீங்க பண்றீங்கனு பாராட்டினார். அப்புறம், உங்க எதிர்காலத் திட்டம் என்னனு கேட்டார். அப்ப நாங்க ஆம்புலன்ஸ் கொண்டுட்டு வரலாம்னு இருக்கோம். அதுக்கு அலர்ட் ஆன் வீல்ஸ்னு பெயர் வச்சிருக்கோம்னு சொன்னோம். அப்ப அவர், நீங்க 108 பத்தி கேள்விப்பட்டு இருக்கீங்களானு கேட்டார்.

இல்லனு சொன்னோம். ஆந்திராவுல ராமலிங்க ராஜுனு ஒருவர் 108னு ஆம்புலன்ஸ் சேவை ஆரம்பிச்சிருக்கார். அதுக்கு நான் கௌரவ தலைவராக இருக்கேன். நீங்க அங்க போய் பாருங்க. அப்புறம் நீங்க ஆம்புலன்ஸ் எடுத்து பண்ணணுமானு சொல்லுங்கனு சொன்னார். அவர் எதுக்கு சொன்னார்னு அங்க போனபிறகுதான் புரிஞ்சது. 

108 பெரிய அளவில் இருந்தது. நாங்க சிறிய தன்னார்வ அமைப்பு. அதனால் அவர், வீட்டுக்கு ஒருவருக்காவது முதலுதவி பயிற்சி கொடுங்கனு சொன்னார். அந்த வார்த்தைகள் எங்க ஃபோக்கஸை மாத்துச்சு. அவர் சொன்னதை இலக்காக மாத்தி செயல்பட ஆரம்பிச்சோம்.

அப்புறம் இந்திய மருத்துவ சங்கத்திடம் சேர்ந்து கல்லூரிகள், நிறுவனங்களுக்குச் சென்று, ‘நீங்கெல்லாம் கத்துக்கோங்க; இது ரொம்ப முக்கியம்’னு வலியுறுத்தினோம். சென்னையில்தான் முதலில் ஆரம்பிச்சோம். ஐடியில் இருந்ததால் ஐ.டி நிறுவனங்களை டார்கெட் பண்ணினோம். அப்புறம், கல்லூரிகள்னு விரிவுபடுத்தினோம். 

அப்ப இந்திய மருத்துவ சங்க மருத்துவர்கள் நேரடியாக வந்து சொல்லிக் கொடுத்தாங்க. அவங்கள அழைச்சிட்டு ஐடி நிறுவனங்களுக்குப் போகும்போது சிலர், ‘அவர் டாக்டர். அதனால் செய்றார். எல்லாராலும் முடியுமா’னு கேட்டாங்க.

அதனால், மருத்துவர்கள், ‘உங்களுக்குப் பயிற்சி கொடுக்குறோம். நீங்க போய் சொல்லிக் கொடுங்க’னு சொன்னாங்க. பிறகு, நாங்களே நேரடியாக களத்தில் இறங்கினோம்.
எங்களால் முடியும்னா உங்களாலும் முடியும்னு மற்றவங்களுக்கு நம்பிக்கை அளிச்சோம். அதுல நிறைய பேர் ஆர்வமாகி கத்துக்க முன்வந்தாங்க. 

ஆரம்பத்துல ஒன்பது ஆண்டுகள் இலவசமாகவே கத்துக்கொடுத்திட்டு இருந்தோம். பிறகு மாணவர்கள் உள்ளிட்ட சிலருக்கு இலவசமாகக் கொடுப்போம். பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்குக் கட்டணம் வசூலிப்போம்னு முடிவெடுத்து செயல்பட ஆரம்பிச்சோம்...’’ என்றவர், அமைப்பின் செயல்பாடுகள் குறித்து பகிர்ந்தார்.  

‘‘நாங்க விதவிதமாக ப்ரோகிராம் வச்சிருக்கோம். முதல் ப்ரோகிராம் PEERனு பெயர். அதாவது Personal Empowerment and Emergency Response. இது 90 நிமிட ப்ரோகிராம். இதைக் கத்துக்கிட்டால் ஒருவரால் எந்த அவசரநிலையையும் எளிதாகக் கையாள முடியும்.இப்ப ஒரு விபத்து நடக்குதுனா எப்படி ரத்தத்தை அரெஸ்ட் பண்ணணும், எப்படி கூட்டத்தை கட்டுப்படுத்தணும், எப்படி ஆம்புலன்ஸை கூப்பிடணும், உயிர் காப்பது என்றால் என்னனு எல்லாமே சொல்லிக் கொடுப்போம்.

அடுத்து, பியர் அட்வான்ஸ்னு 8 மணி நேர ப்ரோகிராம் இருக்கு. அப்புறம் பியர் இன்டென்ஸ் 2 நாட்கள் ப்ரோகிராம் வச்சிருக்கோம். இதனுடன் Volunteers in case of Emergencyனு இரண்டு நாட்கள் கொண்ட ஒரு ப்ரோகிராமும் செய்றோம்.

இதுதான் எங்களின் சிக்னேச்சர் ப்ரோ கிராம். இதுல ப்ரோகிராம் முடிஞ்சதும் அரைநாள் மருத்துவமனைக்கு அழைச்சிட்டுப் போய் மதிப்பீடு நடத்துவோம். அதாவது எமர்ஜென்ஸி டாக்டர்களைக் கொண்டு இவங்க தகுதியுடன் இருக்காங்களானு மதிப்பீடு செய்யச் சொல்வோம். அப்புறம்தான் சான்றிதழ் வழங்குவோம்.

இதுதவிர, அலர்ட் கோல்டன் ஆர்மினு ஆரம்பிச்சிருக்கோம். எப்படி ராணுவத்தில் ஒரு வீரரைத் தயார் பண்ணுவாங்களோ அதுமாதிரி ஃபர்ஸ்ட் ரெஸ்பாண்டரை தயார் செய்றோம். இப்ப இதுல சென்னை, கோவையில் உள்ள பல கல்லூரிகள் எங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டிருக்காங்க. 

மாணவர்கள் பலரும் ஆர்வத்துடன் கத்துக்கிறாங்க. சென்னையைத் தவிர்த்து எங்க அமைப்பு கோவை, புதுச்சேரி, பெங்களூர்ல இருக்குது. இதுதவிர நாங்க இந்தியா முழுவதும் போய் பயிற்சி அளிக்கிறோம். அசாம், பீகார், உத்தரப்பிரதேசம், டில்லி, மகாராஷ்டிரானு பல இடங்கள்ல செய்றோம். இங்கெல்லாம் பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்கள் கேட்குறாங்க.

அப்புறம் மருத்துவமனைகள்ல நர்ஸ்களுக்கும், மருத்துவ மாணவர்களுக்கும் கத்துக்கொடுக்குறோம். இதனுடன் மற்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் பார்ட்னர்ஷிப் போட்டும் பணியாற்றுறோம்...’’ என்றவர், தங்களின் குறிக்கோளைப் பகிர்ந்தார்.‘‘இப்ப நாங்க அனைத்து தொண்டு நிறுவனங்களுடன் இணைந்துபணியாற்ற நினைச்சிருக்கோம். 

 தவிர, லைசென்ஸ் வாங்கும்போதும், புதுப்பிக்கும்போதும் ஆர்டிஓ அலுவலகத்தில் கண்டிப்பாக முதலுதவி கத்துக்கணும்னு ஒரு சட்டம் கொண்டு வந்தால் நல்லதுனு வலியுறுத்துறோம்.

ஏற்கனவே இப்ப நாங்க சென்னை, கோவையில் ஆர்டிஓ அலுவலகம் போய் அனுமதி பெற்று அங்க லைசென்ஸ் வாங்க, புதுப்பிக்க வருபவர்களுக்கு காத்திருக்கிற நேரத்துல பயிற்சி அளிக்கிறோம். எங்களின் ஒட்டுெமாத்த குறிக்கோள் என்பது இந்தியாவை எமர்ஜென்ஸிக்கு ஒரு ரோல் மாடல் நாடாக மாத்தணும் என்பதே...’’ என நம்பிக்கை மிளிரச் சொல்கிறார் கலா பாலசுந்தரம்.

செய்தி: பேராச்சி கண்ணன்

படங்கள்:ஆ.வின்சென்ட் பால்