பிரதமர் பாராட்டிய மூலிகை ஆசிரியர்!



‘‘பதிமுகம், வாதநாராயணன், கல்தாமரை, மாகாளிக் கிழங்கு, கருநொச்சி, கருமருது, கருஇஞ்சி, தான்றிக்காய், அஸ்வகந்தா, எலும்பொட்டி, தொழுகண்ணி, சதாவாரி, நறுமுன்னை, கருஊமத்தை, தழுதாழை, சிறு தேக்கு, சர்ப்பகந்தா, நேத்திரம் பூண்டு, கருஞ்செம்பை, அந்தரத்தாமரை, இலைப் பிரண்டை, முட்சங்கன், வெள்ளை கல்யாண முருங்கை, சிவப்பு அகத்தி, வெண் தூதுவளை, சிவப்பு மருதாணி, ஆடையொட்டி, புத்திரஜீவி, சங்க நாராயண சஞ்சீவி, கருட கால் சஞ்சீவி, மிருக சஞ்சீவி சர்க்கரை, சஞ்சீவி, நாகமல்லி, நாகதந்தி, நஞ்சுமுறிச்சான்...’’ என நம்மை ஆச்சரியப்படுத்தும் அளவிற்கு அடுக்கிக் கொண்டே போகிறார் மதுரையைச் சேர்ந்த தமிழ் ஆசிரியை சுபஸ்ரீ.

அவர் சொல்வதற்கு இன்னும் நிறைய இருக்கிறது. ஆனால், அவை அனைத்தையும் எழுதுவதற்கு பக்கங்கள்தான் போதாது. ஏனெனில், அவை ஒன்றோ இரண்டோ அல்ல. 500க்கும் மேற்பட்ட மூலிகை செடிகள். இதில் பலவும் அரிதான வகையைச் சேர்ந்தவை. மீட்டெடுக்க வேண்டிய நிலையில் இருப்பவை. இதற்காகவே வீடு கட்டுவதற்காக வைத்திருந்த தன் சொந்த நிலத்தில் ஒரு மூலிகை வனத்தையே உருவாக்கி அதில் இந்த அரிய மூலிகைச் செடிகளை வளர்த்து வருகிறார்.

இப்படி ஒரு நல்ல விஷயம் இந்திய பிரதமர் மோடியின் பார்வைக்குச் செல்ல, சமீபத்தில் அவர் மான்கி பாத் நிகழ்ச்சியில் ஆசிரியை சுபஸ்ரீயை வியந்து பாராட்டிப் பேசினார். அதில் இன்னும் வைரலாகிவிட்டார் ஆசிரியை சுபஸ்ரீ. ‘‘பிரதமர் எங்களைப் பாராட்டிப் பேசியது ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. 
நிறைய உத்வேகத்தையும் உற்சாகத்தையும் தந்திருக்கு. அதேநேரம் இன்னும் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்ற எண்ணத்தையும் ஏற்படுத்தியிருக்கு...’’ சந்தோஷமாகச் சொல்லும் ஆசிரியை சுபஸ்ரீக்கு, எப்படி மூலிகை மேல் ஆர்வம் வந்தது?

‘‘எனக்கு சொந்த ஊர் கிருஷ்ணகிரி அருகே பெரிய கோட்டை பள்ளி என்ற ஒரு குக்கிராமம். நாங்கள் கிராமத்தில் இருந்து வெளியே எங்கள் தோட்டத்தில் வீடு கட்டி வாழ்ந்தோம்.
அப்படியான சூழ்நிலையில் 1980ம் ஆண்டு ஒருநாள் என் அப்பாவை பாம்பு கடித்துவிட்டது. அப்போது எனக்கு பத்து வயது. அந்நேரத்தில் என் அண்ணன்கள் மூன்று பேரும் வெளியூர்களில் இருந்தனர். இதனால் நானும், அம்மாவும், என் இரண்டு அக்காக்களும் செய்வதறியாது திகைத்தோம்.  

அப்போது ஊரில் பஸ் வசதி இல்லை. பஸ் பிடிக்க மூன்று கிலோமீட்டர் தூரம் நடக்க வேண்டும். சாலை வசதியும் கிடையாது. இந்நிலையில் எங்கள் தோட்டத்தில் வேலை செய்தவர்கள் உடனே மூலிகைகளைக் கொண்டு வந்து என் அப்பாவின் உயிரைக் காப்பாற்றினார்கள். இல்லையென்றால் நாங்கள் மிகப்பெரிய இழப்பைச் சந்தித்து இருப்போம். அந்தச் சம்பவமே எனக்கு மூலிகையின் மேல் மிகப்பெரிய ஆர்வத்தையும் வியப்பையும் உண்டாக்கியது.

இயற்கையாகவே நாங்கள் விவசாயக் குடும்பம். அதனால், மூலிகைகள் தானாகவே எங்கள் தோட்டத்தில் வளரும். வேலை செய்கிறவர்களும் வளர்த்துக் கொடுப்பார்கள். அப்படியாக நான் ஒவ்வொரு மூலிகை பற்றியும் கொஞ்சம் கொஞ்சமாக தெரிந்து கொள்ள ஆரம்பித்தேன். வீட்டுத் தோட்டத்தில் நிறைய மூலிகை செடிகள் வளர்த்தேன். எம்.ஏ, பி.எட் முடித்தேன். அப்புறம், திருமணமாகி மதுரைக்கு வந்தேன். இங்கே கணவர் வீட்டில் இடம் இல்லாததால் மாடித் தோட்டம் அமைத்து அதில் மூலிகைச் செடிகளை வளர்க்க ஆரம்பித்தேன்.  

என் ஆர்வத்தைத் தெரிந்துகொண்ட கணவர் பாபுவும், மாமியாரும் என்னை மிகவும் ஊக்கப்படுத்தினர். என் கணவர் மண், இயற்கை உரம் என்று எல்லாம் வாங்கித் தந்தார். அப்படியாக இன்றுவரை நான் இயற்கை உரங்கள் மட்டுமே பயன்படுத்துகிறேன்.இப்பொழுது வரிச்சியூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் பட்டதாரி தமிழ் ஆசிரியையாக இருக்கிறேன். இங்கு வரிச்சியூர் அருகே வீடு கட்டுவதற்காக நானும் என் கணவரும் இடம் வாங்கி இருந்தோம். அதில்தான் இந்த மூலிகை வனத்தை அமைத்துள்ளோம்...’’ உற்சாகமாகச் சொன்னவர் மூலிகை வனம் குறித்துத் தொடர்ந்தார்.  

‘‘கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னதாக இந்த மூலிகை வனத்தை உருவாக்கினோம். கொரோனா நேரம், வீட்டு மாடியில் இருந்த  மூலிகைகள்தான் அதிகம் பயன்பட்டன. அது கற்றுக்கொடுத்த பாடமே இதை பெரிய அளவில் கொண்டுவர வேண்டும் என்ற உந்துதலை எங்களுக்குள் ஏற்படுத்தியது.  ஏனெனில், அப்போது மூலிகைகள்தான் பலருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி கொடுத்தன. அதனால் வீடு கட்ட இருந்த இடத்தை மூலிகை வனமாக மாற்றினோம். எனக்காக என் கணவரும் மத்திய அரசு பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றார்.

அவர் தொழிலாளர் சேம நல நிதி அலுவலகத்தில் வேலை செய்தார். நானும் அரசு பணியில் இருப்பதால் என் பணி பாதிக்கப்படக் கூடாது என அவர் விருப்ப ஓய்வு வாங்கினார். நான் பணிக்கு செல்கின்ற நேரங்களில் என் கணவர் தோட்டத்தை பார்த்துக் கொள்வார்.இதற்கிடையில் நான் மதுரை பல்கலைக்கழக மாலை நேர கல்லூரியில் மூலிகை சார்ந்து, ‘சித்தர்களின் மருந்தும் மருத்துவமும்’ என்ற தலைப்பில் எம்.ஃபில் படித்தேன்.

இதன்வழியாக நிறைய மூலிகைகளைத் தேடிப் பயணிக்க ஆரம்பித்தேன். ஆனால், ஒவ்வொரு மூலிகையும் தேட சிரமமாக இருந்தது. அப்படியே கிடைத்தாலும் அதனை அடையாளம் காண கஷ்டப்பட வேண்டியிருந்தது. அந்நேரம், ஏன் ஒரே இடத்தில் இந்த மூலிகைச் செடிகளை சேகரித்து வைக்கக்கூடாது; அதனால் என்னைபோல் படிப்பவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்குமே என்ற எண்ணம் தோன்றியது. இந்த மூலிகை வனம் அமைப்பதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம்.

இப்போது மூலிகைகளின் தாவரவியல் பெயர்களையும், சித்தர்களின் நூல்களை அடிப்படையாகக் கொண்டு இதன் பயன்பாடுகளையும் எழுதிக் கொண்டு இருக்கிறேன்...’’ என்ற சுபஸ்ரீ, மூலிகைகளைத் தேடி பல இடங்களுக்குப் பயணித்துள்ளார்.‘‘இதற்காக தமிழ்நாட்டில் நிறைய இடங்களுக்குப் பயணித்து இருக்கிறேன். இதில் பயணிப்பதைவிட ரொம்ப சிரமம் மூலிகைகளை கண்டுபிடிப்பதுதான். இந்த மூலிகை என நான் நினைத்து எடுத்துக் கொண்டு வருவேன். வீட்டுக்கு வந்து பார்த்தால் அதுவாக இருக்காது.

எனக்கு ‘தேவதாரு மரம்’ என்று ஒருவர் கொடுத்தார். வீட்டிற்கு வந்து அதைப்பற்றி தெரிந்து கொள்ளும் பொழுது அது தேவதாரு இல்லை என்பதை புரிந்துகொண்டேன். அதேபோல், ஆயிரக்கணக்கில் பணம் செலவழித்து நீண்டதூரம் பயணம் செய்து ஒரே ஒரு மூலிகையை மட்டும் சேகரித்து வந்த அனுபவங்களும் இருக்கிறது.சிலநேரம் ஒரு மூலிகையும் கிடைக்காமல் வெறுங்கையுடன்கூட வீட்டிற்கு வந்திருக்கிறேன். அப்புறம், மூலிகைகளை உறுதிப்படுத்தவும் நிறைய நாட்கள் எடுத்துக்கொள்வேன். அதன்பிறகே அதை என் தோட்டத்திற்கு கொண்டு வந்து காட்சிப்படுத்துவேன்.

இந்த மூலிகைகளைக் கண்டறிய எனக்கு அமெரிக்கன் கல்லூரி தாவரவியல் துறை பேராசிரியர் ஸ்டீபன் சார், காமராசர் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை ஆசிரியர் த.பரமசிவன், வாடிப்பட்டி குமரன் நர்சரி மேலாளர் பார்த்தசாரதி சார், நித்யா நர்சரி சிதம்பரம் நித்யா மேடம் எனப் பலர் உதவியிருக்கின்றனர். இப்படியாக இப்போது எங்கள் தோட்டத்தில் 500க்கும் மேற்பட்ட மூலிகைகள் இருக்கின்றன. இதில் தண்ணீர் நிறைய இருக்க வேண்டிய செடிகள், தண்ணீர் குறைவாக இருக்க வேண்டிய செடிகள் என பேலன்ஸ் பண்ணியே வளர்க்கிறோம்.

அதேபோல் சில மூலிகைகள் அந்தந்த தட்பவெட்பத்திற்கு ஏற்பவே வளரும். அதற்கான சூழ்நிலையையும் ஏற்படுத்தி இருக்கிேறாம். குறிப்பாக சங்கு நாராயண சஞ்சீவி, கருட கால் சஞ்சீவி, அழுகண்ணி, தொழுகண்ணி மூலிகைகளுக்கு ஏற்ற சூழலை இங்கே உருவாக்கி உள்ளோம். இதுதவிர மதுரை கிரீன் மற்றும் தானம் அறக்கட்டளை திட்ட ஒருங்கிணைப்பாளர் சிதம்பரம் சார் தலைமையில் மரங்கள் அறியும் பயணத்திற்கும், அவர்கள் நடத்திய பயிற்சி வகுப்பிற்கும் போனேன்.

அங்கே மரங்களை மியாவாக்கி முறையில் நடைமுறைப்படுத்தும் முறை பற்றிக் கூறினார்கள்.உடனே, மூலிகை மரங்களை மியாவாக்கி முறையில் செய்யலாமே என எனக்குத் தோன்றியது. அப்படியாக பயன் தரக்கூடிய செங்கருங்காளி, மருதம், மகிழம், கருமருது, முள் இலவம், ருத்ராட்சம், திருவோடு, தான்றிக்காய், கடுக்காய், பெரிய நெல்லி, ரோமவிருட்சம், வெப்பாலை, கருவாகை உள்ளிட்ட பல்வேறு மரங்கள் ஒருபுறம் வைத்தோம்.

இன்னொரு புறம் மூலிகைச் செடி, கொடிகளை மியாவாக்கி முறையில்  நட்டோம். அதனால்தான் எங்களால் இவ்வளவு மூலிகைகளை குறைந்த இடத்தில் நட முடிந்தது.
இங்கு மூலிகைகள் இருப்பதை அறிந்தும், அதன் பயன்பாட்டினைத் தெரிந்தும் எங்களிடம் அதன் இலைகளைக் கேட்டு பலர் வருகின்றனர். அவர்களுக்குக் கொடுக்கிறோம். அப்புறம் பொதுமக்கள் தவிர்த்து ஆய்வு மாணவர்கள் நிறைய பேர் வந்து ஆய்வு செய்கின்றனர்.

இதுதவிர சிலர் எங்கள் மூலிகைத் தோட்டத்தையும் அதன் பயன்களையும் அறிந்து, அவர்களும் மூலிகைத் தோட்டம் அமைக்க வேண்டும் என நினைக்கின்றனர். அவர்களுக்கும் வழிகாட்டுகிறோம். அடுத்து நாங்கள் அரிதான கிழங்கு வகைகளைச் சேகரித்து வருகிறோம். அதேபோல் மஞ்சள் வகைகள், குறிப்பாக கருமஞ்சள் அதிக அளவில் நட்டு உள்ளோம். 

அதாவது எவையெல்லாம் அழிவின் விளிம்பில் இருக்கிறதோ அதனை தேடித்தேடி சேகரிக்கிறோம். எல்லா மூலிகைகளும் எங்கள் வனத்தில் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பயணிக்கிறோம். எங்களுடைய தாரக மந்திரமே ‘மூலிகை வாசம் நோயற்ற சுவாசம்’ என்பதுதான்...’’ என முத்தாய்ப்பாகச் சொல்லி விடைகொடுத்தார் ஆசிரியை சுபஸ்ரீ.

செய்தி: பேராச்சி கண்ணன்

படங்கள்: வெற்றி