அந்தமானைப் பாருங்கள் அழகு அசிங்கம்!
‘அந்தமானைப் பாருங்கள் அழகு... இளம் பாவை என்னோடு உறவு...’ ஒருகாலத்தில் தமிழகத்தில் சக்கைபோடு போட்ட இந்தப் பாடல் ‘அந்தமான் காதலி’ படத்தில் இடம்பெற்றிருந்தது.
அக்கால நடிகை சுஜாதாவும், நடிகர் திலகம் சிவாஜியும் நிஜமான அந்தமான், நிகோபார் தீவின் இயற்கை கொஞ்சும் அழகில் டூயட் பாடியிருப்பார்கள். ஆனால் இன்று, ‘அந்தமானைப் பாருங்கள் அசிங்கம்...’ என்ற ரீதியில் விரைவில் பாடவேண்டிய சூழல் ஏற்படலாம் என்று எச்சரிக்கிறார்கள் சுற்றுச்சூழல் நிபுணர்கள். காரணம், ஒன்றிய அரசு 3 ஆண்டுகளுக்கு முன் கொண்டுவந்த ‘கிரேட் நிகோபார் ப்ராஜெக்ட்’ எனும் வளர்ச்சித் திட்டம்.
அந்தமான், நிகோபார் தீவுகள் இந்தியாவின் மிக முக்கியமான ஒரு யூனியன் பிரதேசம். இந்தப் பிரதேசத்தில் சுமார் 836 சிறு சிறு தீவுகள் இருக்கின்றன. ஆனால், மக்கள் வசிப்பது என்னவோ 31 தீவுகளில்தான். மீதமுள்ளவை எல்லாமே இயற்கையின் கொடைகள். உதாரணமாக மழைக்காடுகள், மலைகள், ஆறுகள், குளங்கள், குட்டைகள். காடுகள் என்பதால் அரிய வகை விலங்கினங்களும் இங்கு உண்டு. அதிகமான பழங்குடிகள் வசிக்கும் பிரதேசம். மக்கள்தொகையை எடுத்துக்கொண்டால் சுமார் 4 ½ லட்சம் பேர் இருப்பார்கள். இந்தப் பிரதேசத்தில் அந்தமானைவிட நிகோபார் தீவுகளில்தான் மழைக்காடுகள், ஆறு, குளங்களின் எண்ணிக்கை அதிகம். இந்த நிகோபார் தீவுகளில்தான் ஒன்றிய அரசு சில நவீன திட்டங்களுக்காக 2022ம் ஆண்டு ‘கிரேட்டர் நிகோபார் ப்ராஜெக்ட்’ எனும் திட்டத்தைக் கொண்டு வந்தது.
இதன்படி உலகத் தரத்தில் துறைமுகம், ஏர்போர்ட், சோலார் மின் திட்டங்களுக்கான ப்ராஜெக்ட் மற்றும் ஒரு புதிய நகரத்துக்கான நிர்மாணத் திட்டத்தை எல்லாம் கொண்டுவந்தது.
இந்தத் திட்டங்கள் கொண்டுவந்தால் நிகோபாரின் இயற்கையில் என்ன மாற்றம் வரும் என்று அரசும் ஒரு அறிக்கையைக் கொடுத்தது. ஆனால், அரசு சொல்லும் எண்ணிக்கையைக் காட்டிலும் இயற்கை அழிவு மலைக்க வைக்கும் என்று நிபுணர்கள் சொல்கிறார்கள்.
முதலில் அரசு அறிக்கை என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.‘நிகோபார் தீவுகளில் அரசு இந்தத் திட்டங்களுக்காக நிலத்தை கையகப்படுத்துவதற்கான அனுமதியை சுமார் 13,075 ஹெக்டேருக்குக் கொடுத்திருக்கிறது.
ஆனால், இதில் பாதியான, அதாவது 130 சதுர கிலோமீட்டரில் பரந்திருக்கும் 6,500 ஹெக்டேரில் இருக்கும் 8.5 லட்சம்மரங்களை இந்தத் திட்டங்களுக்காக அப்புறப்படுத்தவேண்டியிருக்கும்’ என்று சொல்கிறது அரசு. இந்தக் கணக்கில்தான் கோளாறு இருப்பதாக ஆதாரம் காண்பிக்கிறார்கள் பழம் தின்று கொட்டை போட்டிருக்கும் சுற்றுச்சூழல் நிபுணர்கள். அவர்கள் என்ன சொல்கிறார்கள்? ‘அரசு 130 சதுர கிலோ மீட்டர் சுற்றளவில் இருக்கும் 6,500 ஹெக்டேர் நிலத்தில் 8.5 லட்சம் மரங்களை மட்டுமே வெட்டும் என்று சொன்னால் ஒரு ஹெக்டேருக்கு 130 மரங்கள்தான் இருக்கும் என்று கணக்கு வருகிறது. உண்மையில் நிகோபார் தீவைப் பொறுத்தளவில் மரங்களின் நெருக்கம் அதிகம். உதாரணமாக பல சுற்றுச்சூழல் ஆய்வாளர்களின் ஆய்வை கணக்கில் எடுத்துக்கொண்டால் நிகோபார் தீவில் ஒரு ஹெக்டேருக்கு 500 லிருந்து 900 மரங்களாவது இருக்கும்.
வெட்டப்பட இருக்கும் காடுகளின் அளவான 6500 ஹெக்டேரை கணக்கில் கொண்டாலும் இந்தத் தனியார் ஆய்வுகளின்படி சுமார் 32 லிருந்து 58 லட்சம் மரங்கள் வெட்டப்படும். ஒருவேளை அரசு அனுமதி கொடுத்திருக்கும் மொத்த ஏரியாவான 13 ஆயிரத்து சொச்சம் ஹெக்டேர் காடுகளை அழித்தால் சுமார் ஒரு கோடி மரங்கள் வெட்டப்படும்...’ என்ற அணுகுண்டைப் போடுகிறார்கள் சுற்றுச்சூழல்வாதிகள்.
அரசின் கணக்கின்படி ஒரு மரத்தின் சுற்றளவை அதிகமாகக் கொண்டு இந்தக் கணக்குகள் கணக்கிடப்பட்டிருக்கலாம் என்று சொல்லும் ஆய்வாளர்கள் அதைப் பற்றியும் பேசுகிறார்கள். ஒரு காட்டில் பல அளவுள்ள மரங்கள் இருக்கலாம். சூழல்வாதிகளைப் பொறுத்தளவில் ஒரு மரம் 15 அல்லது 30 சென்டி மீட்டர் சுற்றளவைக் கொண்டாலே அது மழைக்காடுகளுக்கு அவசியமான மரம்தான்.
ஆனால், அரசு இதை எல்லாம் கணக்கில் கொள்ளாமல் இதற்கும் மேலான பெரிய மரங்களைத்தான் வெட்டப்போவதாக ஒரு மதிப்பீடு செய்து, அதில் சுமார் 8 லட்சம் மரங்களைத்தான் வெட்டப்போவதாக வெளியில் சொல்கிறது. பெரிய மரங்களை மட்டும் வெட்டிவிட்டு இடையில் இருக்கும் நடுத்தர மற்றும் சிறிய மரங்களை அப்படியே விட்டுவிட்டு இந்த நவீன திட்டங்களை அரசு செயல்படுத்த முடியுமா என்றும் கேட்கிறார்கள் சூழல்வாதிகள்.
ஓர் ஆய்வின்படி குறைந்தபட்சம் 15 சென்டிமீட்டர் மரங்களையும் கணக்கில் கொண்டு எல்லா அளவு மரங்களையும் நிகோபார் தீவில் வெட்டினால்கூட அங்கே சுமார் 65 லட்சம் மரங்கள் சாக நேரும் என்று கணக்கிட்டிருக்கிறார்கள் சூழல்வாதிகள்.
இந்த ஆய்வின்படி எல்லா மரங்களையும் சேர்த்தாலும் நிகோபார் தீவில் ஒரு ஹெக்டேருக்கு சுமார் 996 மரங்களாவது தேறும் என்கிறார்கள் ஆர்வலர்கள்.நிகோபார் தீவு சுற்றுச்சூழல் ரீதியில் பல்லுயிர் பன்மையுடையது. கடல், கடற்கரை, லெதர் ஆமை, பறவைகள், விலங்குகள், பவளப் பாறைகள் மற்றும் மழைக்காடுகளுக்கு முக்கியத்துவமான பிரதேசம் இது. சுனாமி வந்தபோது இந்தப் பிரதேசத்தில் கடலின் அலை சுமார் 15 அடிக்கு மேல் சென்றது. இருந்தாலும் அந்தச் சுனாமியில்கூட நீந்திக் கரை சேர்ந்தவர்கள் நிகோபார் மக்கள். காரணம் இந்தக் காடுகள்தான் அலைகளைத் தடுத்து நிறுத்தின. நிகோபாரின் கடலில் இந்த நவீன திட்டம் 300 ஹெக்டேரை காவு வாங்கிடும் என்றும் சொல்கிறார்கள். நிகோபார் தீவின் நிலத்தில் 15 சதவீதத்தை களவாடப் போகும் இந்தத் திட்டத்துக்காக அரசு சுமார் 7500 கோடி ரூபாயை ஒதுக்கியிருப்பதாக சொல்கிறார்கள்.
காலநிலை மாற்றம் பற்றி சிந்திக்கிற இந்தக் காலத்தில் நிகோபார் தீவை அழிக்க வரும் இந்தத் திட்டத்துக்காக அரசு ‘இந்தியாவின் பாதுகாப்புக்காக இந்தத் திட்டம்’ என்று சொன்னாலும் இந்தத் திட்டத்தை இந்திய அரசு சொந்தக் காசில் சூனியம் வைக்கும் திட்டமாகவே பலரும் எண்ணுகிறார்கள்.
இச்சூழலில் நிகோபார் தொடர்பாக ‘பூவுலகின் நண்பர்கள்’ குழுவைச் சேர்ந்த பிரபாகரனிடம் பேசினோம்.‘‘நிகோபாரின் வளர்ச்சித் திட்டங்கள் இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலகத்துக்கே அச்சுறுத்தலான ஒரு திட்டம். அந்தமான் நிகோபார் தீவுகள் உலகளவில் பல்லுயிருக்கான சுற்றுச்சூழலுக்கான் இடம்.
அண்மையில் ஐ.பி.சி.சி சுமார் 2600 பக்க அளவிலான ஓர் அறிக்கையை சமர்ப்பித்தது. இந்த அறிக்கை காலநிலை மாற்றம் தொடர்பாக உலக நாடுகள் என்ன எல்லாம் வருங்காலத்தில் செய்யவேண்டும் என்று பட்டியலிட்டிருந்தது.
உதாரணமாக இன்றைக்கு இருக்கும் காடுகளில் சுமார் 50 சதவீதத்தையாவது இன்னும் இரு வருடங்களில் காப்பாற்றினால்தான் காலநிலை மாற்றத்தால் எழும் பிரச்னைகளை ஓரளவுக்காவது சமாளிக்கமுடியும் என்று அந்த அறிக்கை எச்சரிக்கிறது...’’ என்று சொல்லும் பிரபாகரன், இந்தியா இந்த எச்சரிக்கையை பின்பற்றவில்லை என வருத்தப்படுகிறார். ‘‘உலகளவில் காடு அழிப்பில் டாப் ஒன் நாடாக பிரேசில் இருக்கிறது. டாப் இரண்டில் இருப்பது இந்தியா. உதாரணமாக 2009 மற்றும் 2013ல் ஆண்ட காங்கிரஸ் ஆட்சியைவிட 2014 மற்றும் 2018ல் ஆட்சி செய்த பாஜக காலத்தில் காடு அழிப்பு 36 சதவீதம் உயர்ந்திருப்பதாக சொல்கிறார்கள் ஆய்வாளர்கள். அதேபோல பாஜக ஆட்சியின் 2015 மற்றும் 2020க்கு இடைப்பட்ட காலத்தில் இந்தியாவில் சுமார் 6 லட்சத்து 68 ஆயிரத்து 400 ஹெக்டேர் காடுகள் அழிக்கப்பட்டிருப்பதாக ஓர் ஆய்வு சொல்கிறது.
இதேபோல அந்தமானிலும் 2001 மற்றும் 2023 காலங்களில் சுமார் 18,300 ஹெக்டேர் காடுகள் அழிக்கப்பட்டிருப்பதாக சொல்கிறார்கள். இந்தக் காடுகள் இருந்திருந்தால் சுமார் 10.8 மில்லியன் டன் கார்பன் உமிழ்வை மரங்கள் உறிஞ்சிருக்கும். போகிற போக்கைப் பார்த்தால் நிகோபார் காடு அழிப்பு என்பது பிரேசிலை பின்னுக்குத் தள்ளி இந்தியா டாப் ஒன் இடத்தை பிடிப்பதற்கான சண்டைபோல இருக்கிறது...’’ என வருத்தப்படுகிறார் பிரபாகரன்.
டி.ரஞ்சித்
|