நான் காலமாகிட்டதா கூட நியூஸ் வந்தது...
தென்னிந்திய சினிமாவில் டாப் நாயகி, மடமடவென படங்கள், பெரிய இடத்தில் திருமணம் இப்படி சென்று கொண்டிருந்த கிராஃப் திடீரென ஆரோக்கியத்தில் பிரச்னை, தொடர்ந்து திருமண வாழ்க்கையில் பிரச்னை, விவாகரத்து, ஏராளமான மன அழுத்தங்கள் என எத்தனை போராட்டங்கள் நிகழ்ந்தாலும் அத்தனையையும் தாங்கி நிற்கிறார் இரும்பு மனுஷி
சமந்தா ரூத் பிரபு. இதோ பான் இந்தியா எனச் சொல்வதை விட பான் வோர்ல்ட் ப்ராஜெக்ட்டான ‘சிட்டாடல்’ வெப் சீரிஸில் ஆக்ஷன் யுனிவர்சில் இப்போது இணைந்திருக்கிறார். எப்போதுமான கதாநாயகியாக இல்லாமல் வேறு ஒரு களத்தில் பயணிக்க ஆரம்பிச்சிட்டீங்களே?
என்னை நம்பி அப்படியான கதைகள் வருதுன்னு நினைக்கும்போது சந்தோஷமா இருக்கு. எல்லா கிரெடிட்சும் இயக்குநர்களுக்குதான். எத்தனையோ போராட்டங்கள்... எப்படி அவ்வளவு சுலபமாக கடந்து வர்றீங்க?
என்னுடைய இன்ஸ்டாகிராம் போஸ்டில் சொன்னதுதான். ஒரு சில நாட்கள் சிறப்பா இருக்கும்; ஒரு சில நாட்கள் நாம் நினைக்கிற மாதிரி இருக்காது. ஒவ்வொரு நாளும் நாம போராடிதான் வாழனும். ஏன்... என்னுடைய ஹெல்த் பிரச்னைகள் பார்த்துட்டு நான் சீக்கிரம் செத்துடுவேன்னு கூட நியூஸ் படிச்சேன். ஆனால், உண்மையை மீறி எந்த பொய்யும் ரொம்ப நாள் நிற்காது இல்லையா... எல்லாருடைய வாழ்க்கையிலும் ஏதோ ஒரு வகையில ஒரு போராட்டம் இருக்கும்; ஒரு ஃபைட் நிச்சயம் இருக்கும். எனக்கும் இருக்கு. அவ்வளவுதான்.
எல்லா முடிவுமே நாம நல்லதா அமையும்ன்னு நினைச்சு தான் எடுக்கறோம். ஒரு சில நேரங்களில் அந்த முடிவு நமக்கு தவறா மாறிடுது. ஆனால், அதையே நினைச்சுக்கிட்டு எத்தனை நாளைக்கு இருக்கறது!
நடிப்போ, வாழ்க்கையோ எல்லா இடங்களிலும் நான் 100% கொடுத்துட்டுதான் இருக்கேன். ஒரு சில நேரங்களில் அது வொர்க் அவுட் ஆகுது; ஒரு சில நேரங்களில் நெகட்டிவா மாறிடுது. ஆனால், நம்மைச் சுற்றி இருக்கற நெருங்கிய நண்பர்கள், நாம நல்லா இருக்கணும்னு நினைக்கிற மக்கள் இதெல்லாம் யோசிக்கும்போது தொடர்ந்து ஓட ஆரம்பிச்சிடுவோம். அதையேதான் நானும் செய்திட்டு இருக்கேன்.
உண்மையைச் சொன்னால் இத்தனை போராட்டங்களுக்கு இடையிலேயும் என்னை இன்னமும் நேசிக்கிற மக்கள், அவங்க கொடுக்கற அன்பு இருக்கறதால்தான் இப்போவரையிலும் நான் நிற்காமல் ஓடிக்கிட்டு இருக்கேன்.கதைகளை எப்படி தேர்வு செய்யறீங்க? சமீப காலமா நீங்கள் நடிக்கும் படங்கள் குறைஞ்சிடுச்சே?
எந்தக் கதை ஆனாலும் ஒரு நாள் முழுக்க யோசிச்சு இந்தக் கதை எனக்கு ஒர்க் அவுட் ஆகுமா... எப்போதுமான சமந்தாவைத் தாண்டி இதில் ஆடியன்ஸ் என்னை எப்படி பார்க்க போறாங்க... இதிலிருந்து என்ன எடுத்துக்க போறாங்க... இப்படி நிறைய யோசிச்சுதான் முடிவு எடுப்பேன். குவாலிட்டியா, குவான்டிட்டியா( எண்ணிக்கையா)? இப்படி பார்க்கும்போது குவாலிட்டியான படங்கள் நடிக்கிறதுதான் ஒரு நடிகையா என்னை நிலை நிறுத்திக்க உதவும். அதனால்தான் முந்தைய காலகட்டத்தில் படங்களை தேர்வு செய்தது மாதிரி வருஷத்துக்கு இத்தனை படங்கள் கொடுத்தாகணும் என்கிற டாஸ்க் எல்லாம் இல்லாம பொறுமையா கதைகளை தேர்வு செய்து நடிக்கறேன்.
சீக்ரெட் ஏஜென்ட் உலகத்தில் சமந்தா..?
சீக்ரெட் ஏஜென்ட் உலகத்தில் பெண்... இப்படிக்கூட சொல்லலாம். எப்பவுமே இந்த சீக்ரெட் ஏஜென்ட், ஆக்ஷன், அடிப்படையிலான கதைகள் என்றாலே ஆண்கள்தான் மாஸ் காண்பிச்சுட்டு இருந்தாங்க. இன்னைக்கு அந்த நிலை மாறிட்டு வருது. வெயிட் லிஃப்டிங், ஆக்ஷன், அதிரடி இதெல்லாம் ஏன் எப்பவுமே ஆண்களைச் சுற்றி நடக்கணும்? இதற்கான நல்ல மாற்றமாதான் நான் ‘சிட்டாடல்’ சீரிஸ்களை பார்க்கறேன்.
இந்த மாற்றத்தில் நானும் இருக்கேன்னு நினைக்கும்போது சந்தோஷமா இருக்கு. நடிப்புத் துறையில் இன்னைக்கு பெண்களுக்கான கேரக்டரில் நிறைய மாற்றங்கள் நடக்க ஆரம்பிச்சிருக்கு. வரவேற்கலாம். எப்பவுமே கேர்ள் நெக்ஸ்ட் டோர் கேரக்டர்லயே நடிச்சுக்கிட்டு இருந்த எனக்கு பக்கா ஆக்ஷன் கேரக்டர் கொடுத்த டைரக்டர்ஸ் ராஜ் - டிகே, ரெண்டு பேருக்கும்தான் நான் நன்றி சொல்லணும்.
நான் ஒரு நாளும் நினைச்சதே இல்ல... நான் ஆக்ஷன் பன்ச் கொடுப்பேன்னு. என்னுடைய கரியரில் இது பெஸ்ட் சேஞ்ச். ராஜ் - டி கே மாதிரியான டைரக்டர்கள் உங்க கிட்ட இருக்கற பெஸ்ட்டை எப்படியாவது வெளியே கொண்டு வந்துடுவாங்க. என்னுடைய பெயரை இந்தக் கதைக்கு பரிந்துரை செய்தது வருண் தவான்தான்.
அவர் செம கூல் கோ - ஸ்டார். அதே சமயம் நான் என்னுடைய ஹெல்த் பிரச்னை காரணமாக சிகிச்சையில் இருந்தேன். மேலும் ராஜ் - டிகே, சிகிச்சை காரணத்தால்தான் என் பெயரை யோசிக்கலைன்னு சொன்னாங்க.
நானும் ‘என்னால் இப்போதைக்கு முடியாது, வேறு ஒரு நடிகைய பாருங்க’ அப்படின்னு சொன்னேன். ஆனாலும் அவங்க விடலை.
இதோ ‘ஃபேமிலி மேன்’ சீரிஸ்க்குப் பிறகு திரும்பவும் ராஜ் - டிகே கூடவே இன்னொரு பெரிய ப்ராஜெக்ட். ஆனால், அடுத்தடுத்த ப்ராஜெக்ட்களை முடிவு செய்வதற்கு முன்னாடி நிறைய யோசிக்கணும். இப்போ ‘சிட்டாடல்: Honey Bunny’ ரிலீஸுக்காக காத்திருக்கேன்.
ஷாலினி நியூட்டன்
|