பட்டையைக் கிளப்பிய பயோபிக் படங்கள்!
கற்பனைச் கதைகளைவிட, நிஜ மனிதர்களின் வாழ்க்கைக் கதைக்கு எப்போதுமே தனி மவுசு. அந்த வகையில் இந்தியாவில் வெளியான முக்கியமான பயோபிக் படங்களின் பட்டியல் இதோ...
பண்டிட் குயின்
பூலான் தேவியின் வாழ்க்கைக் கதைதான் ‘பண்டிட் குயின்’. 1994ல் வெளியான இந்த இந்திப்படம் தேசிய விருதை வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது. ‘India’s Bandit Queen: The True Story of Phoolan Devi’ என்ற புத்தகத்தை தழுவிய இப்படத்தை இயக்கியவர், சேகர் கபூர். முப்பது வருடங்களுக்கு முன்பே ரூ.3 கோடி செலவில் உருவாகி, ரூ.22 கோடியை அள்ளியது இந்தப் படம். பூலான் தேவியாக நடிப்பில் கலக்கியிருந்தார் சீமா பிஸ்வாஸ்.
பாக் மில்கா பாக்
இந்தியாவின் புகழ்பெற்ற ஓட்டப்பந்தய வீரர், மில்கா சிங். ஆசியன் கேம்ஸ் மற்றும் காமென்வெல்த் கேம்ஸில் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்ற ஒரே தடகள வீரர் மில்காதான்.
இவரது வாழ்க்கையைப் பற்றிய படம்தான் இது. மில்கா சிங்காக பர்ஹான் அக்தர் நடித்திருந்தார். தனது மகள் சோனியா சான்வால்காவுடன் சேர்ந்து மில்கா சிங் எழுதிய ‘த ரேஸ் ஆஃப் மை லைஃப்’ என்ற சுயசரிதை புத்தகத்தை தழுவி இப்படத்தை இயக்கினார், ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா.
தனது புத்தகம் படமாக்கப்படுவதற்கான காப்புரிமையை வெறும் ஒரு ரூபாய்க்குக் கொடுத்தார் மில்கா. ஆனால், படத்தின் மூலம் கிடைக்கும் லாபத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை தனது தொண்டு நிறுவனத்துக்குக் கொடுக்கும்படி வேண்டிக்கொண்டார். ஏழ்மையான விளையாட்டு வீரர்களுக்காக செயல்பட்டு வருகிறது மில்காவின் தொண்டு நிறுவனம். 2013ம் வருடம் வெளியான இப்படம், ரூ.41 கோடி பட்ஜெட்டில் உருவாகி, ரூ.210 கோடியை அள்ளியது குறிப்பிடத்தக்கது.
12த் பெயில்
சுமார் ரூ.20 கோடி பட்ஜெட்டில் உருவாகி, ரூ.70 கோடி அள்ளிய இந்தித் திரைப்படம் ‘12த் ஃபெயில்’. கொள்ளையர்களின் கூடாரமான சம்பல் பள்ளத்தாக்கில் பிறந்தவர் மனோஜ் குமார் சர்மா. அவருடைய தந்தை ஒரு நேர்மையான குமாஸ்தா. அதனால் ஊழல் செய்யும் அதிகாரிகளால் பல இன்னல்களுக்கு ஆளாகிறார் மனோஜின் தந்தை.
உள்ளூரில் இருக்கும் பள்ளியில் பிளஸ் 2 தேர்வு எழுதும் எல்லோரும் தேர்ச்சி பெறுவதற்காக மோசடி நடக்கிறது. இதை ஒரு காவல்துறை அதிகாரி கண்டுபிடிக்க, பிளஸ் 2 தேர்வு எழுதிய அனைவரும் ஃபெயிலாகின்றனர். அப்படி பெயிலானவர்களில் ஒருவர்தான் மனோஜ். எப்படி மனோஜ் ஐபிஎஸ் அதிகாரியாக தேர்ச்சி பெறுகிறார் என்பதே இன்ஸ்பிரேஷன் திரைக்கதை. கல்வியை அடிப்படையாக வைத்து சமீபத்தில் வெளியான படங்களில் முக்கியமான படமாக கொண்டாடப்படுகிறது ‘12த் ஃபெயில்’.
வறுமையான சூழலில் பிறந்து, ஐபிஎஸ் அதிகாரியாக உயர்ந்த மனோஜ் குமார் சர்மா என்பவரின் நிஜ வாழ்க்கைக் கதையை ‘12த் ஃபெயில்’ என்ற புத்தகமாக எழுதியிருந்தார் அனுராக் பதக். இந்தப் புத்தகத்தைத் தழுவி, திரைக்கதை அமைத்து படத்தை இயக்கியிருக்கிறார் விது வினோத் சோப்ரா.
ஆடு ஜீவிதம்
கேரளாவைச் சேர்ந்த நஜீப் என்பவரின் நிஜ வாழ்க்கைக் கதைதான் ‘ஆடு ஜீவிதம்’. நல்ல வருமானம் கிடைக்கும்; குடும்பம் செழிப்பாக இருக்கும் என்ற கனவில் சவுதி அரேபியாவுக்கு வேலைக்குச் செல்கிறார் நஜீப். ஆனால், மக்கள் நடமாட்டமே இல்லாத ஒரு பாலைவனத்தில் ஆடுகளை மேய்த்து, பராமரிக்கும் வேலைக்குத் தள்ளப்படுகிறார். தண்ணீருக்கு நடுவே வாழ்ந்த நஜீப்பிற்கு, குடிக்கக்கூட தண்ணீர் கிடைப்பதில்லை. நஜீப்பின் முதலாளி அவரை ஆடுகளில் ஒன்றாக நடத்துகிறான்.
நஜீப்பும் தன்னை ஓர் ஆடு போல உணர ஆரம்பிக்கிறார். வெளி உலகோடு அவரால் தொடர்பு கொள்ளவே முடியாது. அதே நேரத்தில் நஜீப்பால் தப்பித்துச் செல்லவும் முடியாது.
இப்படியான துயரச் சூழலிலிருந்து நஜீப் எப்படி மீள்கிறார் என்பதே திரைக்கதை.
வேலைக்காக வெளிநாடு செல்பவர்களின் துயரங்களை அடிக்கோடிட்டுக் காட்டும் இந்தப் படம், எவ்வளவு பெரிய கடினங்களிலிருந்தும் மனிதனால் மீண்டு வர முடியும் என்ற நம்பிக்கையையும் கொடுக்கிறது. பென்யாமின் எழுதிய புகழ்பெற்ற நாவலான ‘ஆடு ஜீவிதத்’தைத் தழுவி எடுக்கப்பட்டிருக்கிறது இந்த மலையாளப் படம். நஜீப்பாக கலக்கியிருக்கிறார் பிருத்விராஜ். படத்தின் இயக்குநர் பிளஸ்ஸி. மேரி கோம்
இந்தியாவின் முக்கியமான குத்துச்சண்டை வீராங்கனை, மேரி கோம். ஒலிம்பிக் வெண்கலப் பதக்கம், ஏழு முறை உலக சாம்பியன்ஷிப் பட்டம், ஆசியன் கேம்ஸில் தங்கப் பதக்கம், காமன்வெல்த் கேம்ஸில் தங்கப்பதக்கம் என பெண்களுக்கான முக்கியமான குத்துச்சண்டைப் போட்டிகளில் எல்லாம் பங்கேற்று பதக்கங்களைத் தன்வசமாக்கியிருக்கிறார். பல தடைகளைத் தகர்த்து குத்துச்சண்டை சாம்பியனாக வலம் வந்த மேரியின் கதைதான் இந்த இந்திப்படம். மேரி கோமாக பிரியங்கா சோப்ரா நடித்திருந்தார். படத்தை இயக்கியவர் ஓமங் குமார்.
சாந்த் கி ஆன்க்
பிரகாஷி டோமர் மற்றும் சந்த்ரோ டோமர் ஆகிய ஷார்ப் ஷூட்டர் வீராங்கனைகளைப் பற்றிய நிஜக்கதைதான் ‘சாந்த் கி ஆன்க்’. உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பிரகாஷி டோமர், தனது 62 வயதில்தான் ஷார்ப் ஷூட்டிங் பயிற்சியில் இறங்குகிறார். உலகிலேயே வயதான ஷார்ப் ஷூட்டர்களில் ஒருவராக வலம் வந்தவர் இவர். இவரது உறவினர்தான் சந்த்ரோ டோமர். இவரும் 65 வயதில்தான் ஷார்ப் ஷூட்டிங்கில் இறங்கினார்.
உலகிலேயே வயதான பெண் ஷார்ப் ஷூட்டராக வலம் வந்தவர் இவர். இந்த இரு வீராங்கனைகளின் வாழ்க்கையை அப்படியே திரையில் பதிவு செய்திருந்தது ‘சாந்த் கி ஆன்க்’. 2019ம் வருடம் வெளியான இந்த இந்திப்படத்தின் இயக்குநர் துஷார் ஹீராநந்தனி.
எம்.எஸ்.தோனி: த அன்டோல்டு ஸ்டோரி
இந்தியாவில் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியைப் பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அந்தளவுக்கு மக்கள் மத்தியில் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர். அவருடைய வாழ்க்கை கதைதான் இந்தப் படம். தோனியாக சுஷாந்த் சிங் ராஜ்புத் கலக்கியிருந்தார். நீரஜ் பாண்டே இயக்கத்தில், 2016ல் வெளியான இந்த இந்திப்படம் ரூ.216 கோடியை வசூலித்திருக்கிறது.
சூப்பர் 30
பீகாரைச் சேர்ந்த கணித மேதை ஆனந்த் குமார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படிப்பதற்காக தேர்வானார். ஆனால், பொருளாதாரச் சூழலால் அந்த வாய்ப்பை இழந்தார். தன்னைப் போலவே திறமை இருந்தும் பொருளாதாரம், குடும்பச் சூழலால் படிக்க முடியாமல் போன முப்பது பேரை தேர்வு செய்து அவர்களுக்கு இலவசமாக பயிற்சியும், இடமும் தந்தார். இந்தக் கல்வி நிகழ்வுக்குப் பெயர்தான் ‘சூப்பர் 30’. மட்டுமல்ல, அந்த மாணவர்களுக்கு உணவு சமைத்துப் போட்டது அவரின் அம்மாதான்.
2002ல் ஆரம்பிக்கப்பட்ட இப்பயிற்சி மையத்தில் வருடம் 30 பேர் என 2018ம் வருடம் வரை 510 பேர் பயிற்சி பெற்றிருக்கின்றனர். இதில் 422 பேருக்கு ஐஐடியில் படிக்க இடம் கிடைத்தது. அவர்களில் பலர் ‘கூகுள்’ போன்ற நிறுவனங்களில் முக்கிய பதவிகளில் இருக்கின்றனர். இந்தியாவில் உள்ள 23 ஐஐடிகளில் ஆனந்த் குமாரிடம் பயிற்சி பெற்ற ஒருவராவது இன்றும் படித்துக்கொண்டிருப்பார். ஆனந்த்குமாரின் வாழ்க்கைக் கதைதான் ‘சூப்பர் 30’. இதில் ஆனந்த் குமாராக சிறப்பான நடிப்பைக் கொடுத்திருந்தார் ஹிருத்திக் ரோஷன். 2019ல் வெளியான இந்த இந்திப்படத்தை இயக்கியவர் விகாஸ் பால்.
83
உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான கபில் தேவின் கதைதான் இப்படம். 1983ம் வருடம் இங்கிலாந்தில் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்தது. இதில் பங்கேற்க கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி சென்றது. முதல் சுற்றிலேயே தோற்றுவிடும் என்று பலரும் இந்திய அணியை கடுமையாக விமர்சித்தனர். ஆனால், இரண்டு முறை உலகக்கோப்பையை வென்ற வெஸ்ட் இண்டீஸைத் தோற்கடித்து முதல் முறையாக இந்திய அணி உலகக் கோப்பையை வென்றது.
இந்த வெற்றிக்கதையும், இதற்குப் பின்னால் இருக்கும் கபில்தேவின் வாழ்வும், அர்ப்பணிப்பும்தான் திரைக்கதை. கபில் தேவாகவே வாழ்ந்திருக்கிறார் ரன்வீர் சிங். பவுலிங், பேட்டிங் ஸ்டைல் முதற்கொண்டு கபில்தேவின் உடல்மொழியைக் கச்சிதமாகப் பிரதிபலிக்கிறார் ரன்வீர். இந்த இந்திப்படத்தின் இயக்குநர் கபீர் கான்.
ஜுண்ட்
விளையாட்டை மையப்படுத்திய சிறந்த இந்தியப் படங்களைப் பட்டியலிட்டால் ‘ஜுண்ட்’ எனும் இந்திப்படம் முதன்மையான இடத்தைப் பிடிக்கும். நாக்பூரைச் சேர்ந்த விஜய் பார்ஸே என்ற உன்னத மனிதரின் நிஜ வாழ்க்கைக் கதை இது. நாக்பூரில் உள்ள ஒரு கல்லூரியில் விளையாட்டுத்துறை பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர் விஜய்.
ஒரு நாள் மழை பெய்துகொண்டிருக்கும்போது நனையாமல் இருப்பதற்காக ஒரு குடிசைப்பகுதியில் ஒதுங்குகிறார். அப்போது அந்தப் பகுதியைச் சேர்ந்த சிறுவர்களும், இளைஞர்களும் தண்ணீர் கேனை கால்பந்தாக்கி விளையாடுவதைப் பார்க்கிறார்.
அந்த சிறுவர்களும், இளைஞர்களும் சின்னச் சின்ன குற்றச்செயல்களில் ஈடுபட்டு வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருப்பவர்கள். அவர்களுக்கு கால்பந்து விளையாட்டைக் கற்றுக்கொடுத்து, அவர்களின் வாழ்க்கையை எப்படி மீட்டெடுக்கிறார் விஜய் என்பதே இப்படத்தின் திரைக்கதை. விஜய பார்ஸேவின் வாழ்க்கையினூடாக விளையாட்டு ஒரு மனிதனுக்குள் என்னென்ன மாற்றங்களைக் கொண்டுவரும் என்பதை இப்படம் ஆழமாக சித்தரித்திருக்கிறது.
கால்பந்தின் மூலம் ஆயிரக்கணக்கானவர்களின் வாழ்க்கையை மீட்டெடுத்த விஜய்யின் செயல் போற்றுதலுக்கு உரியது. பேராசிரியர் விஜய்யாக வாழ்ந்திருக்கிறார் அமிதாப்பச்சன். இப்படத்தை இயக்கியவர் நாக்ராஜ் மஞ்சுளே.
த.சக்திவேல்
|