டபுள் சூர்யா + டபுள் ட்ரீட்... மாஸ் கிளாஸ் கங்குவா



இந்தியாவே எதிர்பார்க்கும் திரைப்படம், பலகோடி ரூபாய் பட்ஜெட், இதுவரை இல்லாத வகையில் வித்தியாசமான கெட்டப்களில் சூர்யா, ரூபாய் ஆயிரம் கோடி வசூல் என்னும் எதிர்பார்ப்புடன் களமிறங்க காத்திருக்கிறார் ‘கங்குவா’. 
இந்த வருடத்திற்கான தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட படைப்பு என்றாலும் மிகை ஆகாது. எனினும் அந்தப் பரபரப்போ, டென்ஷனோ எதுவும் முகத்தில் காட்டிக்கொள்ளாமல் எப்போதுமான எளிமையான மனிதராகவே முகம் மலர உபசரிப்புடன் நம்மை வரவேற்கிறார் இயக்குநர் சிவா.

‘‘இந்தப் படம் முழுமையானதுக்கு பின்னாடி நான் ஒருத்தன் மட்டும் கிடையாது; ஆயிரம் பேருக்கு மேல இருக்காங்க. ஒவ்வொரு கடைசி டெக்னீஷியனும், ஆர்டிஸ்ட், அவங்க குடும்பமும் இதில் அடக்கம். காரணம் படப்பிடிப்பு நடந்த அத்தனை நாட்களும் அசாதாரணமான சூழல். எங்கே பார்த்தாலும் கொரோனா பேரலை. அதற்கிடையிலே இப்படி ஒரு பிரம்மாண்ட படைப்பை உருவாக்கணும்.

ஒரு வருஷம், ரெண்டு வருஷம் இல்ல, முழுமையா நாலு வருஷம்... இந்தப் படத்துக்காக எல்லாருமே கொடுத்திருக்கோம்...’’‘சிவா & டீம்’ என டிரெய்லரில் பதிவிட்டதற்கு நியாயம் சேர்க்கும் விதமாக பேசத் துவங்கினார் இயக்குநர் சிவா.

‘கங்குவா’... இந்தப் பிரம்மாண்ட பெயரின் பின்னணி என்ன?

‘கேம் ஆஃப் த்ரான்ஸ்’, ‘வைக்கிங்ஸ்’... இப்படி ஓர் உலகத்தை உருவாக்கி அதில் கதை சொல்லும் படங்கள், சீரிஸ்... நிறைய ஹாலிவுட்டில் பார்த்திருக்கோம்.அப்படி ஒரு எக்ஸ்பீரியன்ஸ் தமிழ் ஆடியன்ஸ்க்கு கொடுக்கணும்னு ரொம்ப நாள் ஆசை. அதுதான் ‘கங்குவா’. 

பொதுவா ஆதிகாலத்தில் கூட்டம் கூட்டமாதான் வாழ்வாங்க. ஏதாவது ஓர் இயற்கையை கூட்டத்துக்கு குலதெய்வமாகவோஅல்லது அடையாளமாகவோ வச்சுக்குவாங்க.   அதில் ஒரு குழு நெருப்பை கடவுளா வணங்குறாங்க. இன்னொரு குழு ரத்தத்தை அடையாளமாக வச்சு வாழ்றாங்க.

நெருப்பு கூட்டத்தை சேர்ந்த மக்கள் அத்தனை பேருக்கும் பெயர் கூட ‘செம்பி’, ‘அக்னி’, ‘தீப்பொறி’, ‘தனலா’... இப்படி ஏதோ ஒரு நெருப்பு சார்ந்த பெயராதான் இருக்கும்.
அதிலே தலைவனுக்கு பெயர், கேட்கும்போது பளிச்சுன்னு இருக்கணும், அதேசமயம் ஹீரோயிசமாவும் இருக்கணும். அப்படி யோசிச்சப்போ மதன் கார்க்கி சொன்ன பெயர் ‘கங்குவன்’.

அவர்தான் படத்துக்கு வசனம் எழுதியிருக்கார். ஆனாலும் கொஞ்சம் அந்நியமாக இருந்தது. பிறகு ஞானவேல் சார். ‘படத்துக்கு என்ன பெயர் வைக்கலாம்’ அப்படின்னு அவர்கிட்டயே ஒரு சாய்ஸ் கேட்டோம்.

அவருக்குக் கதை தெரியும், ஆனால், நாங்க ‘கங்குவன்’ பெயர் யோசிச்சது தெரியாது. ஏற்கனவே ‘சிறுத்தை’ என்கிற தலைப்பு ஞானவேல் சார் கொடுத்ததுதான். இன்னைக்கு என்னுடைய அடையாளமே அந்தப் பெயர்தான். ஆச்சர்யமா அவரும் ‘கங்குவா’ என்கிற பெயரைச் சொன்னார்.மேலும் இந்தப் பெயரை ‘கங்கா’ அப்படின்னு சுருக்கியும் கூப்பிடலாம். ‘கங்கு + வா’ என்கிற அர்த்தமும் கொடுக்கும். அப்படி உருவானதுதான் இந்தப் பெயர்.

டபுள் லுக், டபுள் சூர்யா... ரெண்டுமே படு வித்தியாசமா இருக்கே?

ஒரு கெட்டப் பெயர் ‘கங்குவா’, இன்னொரு சூர்யா சார் கெட்டப் ‘ஃபிரான்சிஸ் தியோடோர்’. கங்குவா கேரக்டர் பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னாடி நடக்குது. கிட்டத்தட்ட நெருப்பு மாதிரி ஒரு கேரக்டர். அவன் ஒரு காட்டாறு. ஃபிரான்சிஸ் இப்போ இந்த ஜெனரேஷன் இளைஞர். மேலும் காசுக்காக எதையும் செய்யும் ஒரு கேரக்டர்.  இந்த ரெண்டு பேருக்கும் நடுவில் ஒரு கனெக்‌ஷன். ஏன் அந்த கனெக்‌ஷன் நடக்குது... இதுதான் கதை.

இந்த ரெண்டு கேரக்டர்களுக்கும் இடையிலே ‘உதிரன்’ என்கிற அரக்கத்தனமான ஒரு தலைவன். ரத்தத்தை அடையாளமாகக் கொண்ட மக்கள். கருணைக்கு அர்த்தமே தெரியாத கூட்டம். அவனுடைய கூட்டத்தில் எல்லாருக்குமே பெயர் கூட ரத்தத்தை அடையாளமாகக் கொண்டுதான் இருக்கும். இந்த மூணு கேரக்டரும் எப்படி எங்கே கனெக்ட் ஆகுறாங்க அப்படிங்கறதுதான் கதை. 

சூர்யா சார் டெடிகேஷன் எல்லாம் வார்த்தைகளில் சொல்ல முடியாது. கங்குவா கேரக்டரில் அவர் தயாராகி முதல் முறையா நிற்கும்போது ‘கிடைச்சுட்டாருடா என் கங்குவா’ அப்படின்னுதான் தோணுச்சு. இந்தியாவின் ஃபைனஸ்ட் ஆர்டிஸ்ட்களில் சூர்யா சாரும் ஒருத்தர்.

தமிழில் முதல் முறையாக பாபி தியோல்..?

இந்த கேரக்டருக்கு இதுவரையிலும் இல்லாத ஒரு புது வில்லனைத்தான் யோசிச்சு வச்சிருந்தேன். யாரு இந்தக் கேரக்டருக்கு செட்டாவாங்கன்னு யோசிச்சப்போ பாபி தியோல் சாருடைய சமீபத்திய படங்களைத் தாண்டி சோஷியல் மீடியாவில் ஒரு வீடியோ... ஏர்போர்ட்டில் அவர் நடந்து வந்த விதமும் சுற்றி இருந்தவங்க கிட்ட அவர் காட்டிய தோரணையும்தான் எனக்கு ரொம்ப புதுசா, குறிப்பா இந்த உதிரன் கேரக்டருக்கு பொருந்துற மாதிரியும் இருந்துச்சு.

அவர்கிட்ட கதை சொல்லி லுக் புக் காண்பிச்சேன். ‘என்னை எப்படி இந்த கேரக்டருக்கு யோசிச்சீங்க’ன்னு கேட்டார். ‘ரொம்ப நல்லா இருக்கு’ அப்படின்னு சொல்லிட்டார். அதன்
பிறகு சைலன்ட். பிறகு நாங்களும் அடுத்தடுத்த கேரக்டர் சாய்ஸில் பிஸியாகிட்டோம். பிறகு அவரே ஒரு நாள் கூப்பிட்டு ‘நான் இந்தப் படம் நடிக்கறேன்’னு ஒப்புக்கொண்டார். அவர் இந்தக் கதைக்குள் வந்தபிறகு படம் இன்னொரு பெரிய களத்துக்கு பயணிக்க ஆரம்பிச்சிடுச்சு.

இந்தப் படத்தில் அத்தனை பேரும் முக்கியமான நடிகர்கள்தான். கடைசி நடிகர் வரையிலும் ஸ்பெஷல் மேக்கப் நடந்திருக்கு. போஸ் வெங்கட் சார், நட்டி சார், யோகி பாபு, கருணாஸ், கே.எஸ்.ரவிக்குமார் சார், கோவை சரளா மேடம், வசுந்தரா... இப்படி நிறைய கேரக்டர் நடிச்சிருக்காங்க. இதுல போஸ் வெங்கட் சார் கேரக்டருக்காக மொட்டை அடிச்சுகிட்டார். ஆங்... உங்க டீம் ‘தினகரன்’ ரிப்போட்டர் தேவராஜ் சார், பாபி தியோல் சார் கூட்டத்தில் முக்கியமான கேரக்டரில் நடிச்சிருக்கார்.

இப்படி ஒவ்வொருத்தரும் அவ்வளவு டெடிகேஷனா வேலை செய்திருக்காங்க. எந்தெந்த இடங்களில் படப்பிடிப்பு நடந்தது? அடர்ந்த காட்டுக்குள்ள ஷூட்டிங் எல்லாம் சவாலா இருந்ததா?  

சவாலா இருந்துச்சு. ஆனால், கஷ்டமா இல்ல. காரணம் எனக்கு அமைஞ்ச டீம் அப்படி. படம் அறிவிச்சு ஆரம்பிக்கவே ஒரு சில தடைகளையும், சவால்களையும் சந்திக்க வேண்டி இருந்தது. பெரிய கூட்டம்... நிறைய தொழில்நுட்பக் கலைஞர்கள்... அத்தனை பேரையும் அடர்ந்த காட்டுக்குள்ள கூட்டிக்கிட்டு போய் படப்பிடிப்பு நடத்தணும். 

ஆனால், எப்பவுமே நான் தயங்கி நின்னது கிடையாது. அப்படியான பலமான டீம்.  சூரிய வெளிச்சமே நுழையாத காடா இருக்கணும்னு தேடியதில் தாய்லாந்து ஷாவ்ங்மே காட்டைத் தேர்ந்தெடுத்தோம். இதுவரையிலும் தாய்லாந்தின் அடர் காடுகளை அதிகம் படத்தில் காட்டி இருக்க மாட்டாங்கன்னு நினைக்கிறேன்.

இந்தியாவில் கோவா, கொடைக்கானல், சென்னையில் ஹார்பர் பகுதிகள், பாண்டிச்சேரி, இலங்கை, பேங்காக், ராஜமுந்திரி... இப்படி நிறைய லொகேஷன்ஸ். அதிக பனி, அதிக வெயில், மழை... இப்படி எல்லா சீசன்களும் லேயர்களா படம் முழுக்க இருக்கும். அத்தனையிலும் எல்லா டெக்னீஷியன்களையும் கடந்து ஒருத்தர் தனித்துவமா தெரிவார். அவர் ஆர்ட் டைரக்டர் மிலன் சார். அவர் இப்போ  நம்ம கூட இல்லைன்னு நினைக்கும் போது பேச்சு வர மாட்டேங்குது. நிறைய உழைப்பு கொடுத்தாகணும் இந்தப் படத்துக்கு.

ஈட்டிகள், வேல் கம்பு, 500க்கும் மேலான மாஸ்க்குகள், கவசங்கள்... இப்படி நிறைய. சேலஞ்சான உழைப்பைக் கொடுத்தாங்க அவருடைய டீம்.  சினிமோட்டோகிராபி வெற்றி. என்னுடைய முந்தைய படங்களிலிருந்து என்கூடவே பல வருடங்களாக பயணிச்சிட்டு இருக்கார். ரெண்டு விதமான உலகம்... அதை ரொம்ப அற்புதமா காண்பிச்சிருக்கார். 

எடிட்டர் நிஷாத் யூசுப், ‘தள்ளுமாலா’ (மலையாளம்) படத்தில் அவருடைய வொர்க் ரொம்ப பிடிச்சிருந்தது. அதைப் பார்த்துதான் இந்தப் படத்தில் ஒப்பந்தம் செய்தேன்.
ரஞ்சித் அம்பாடி, மேக்கப். அவருடைய டீம் 30 பேர் அவங்க உழைப்பெல்லாம் நானே பார்த்து மிரண்டுட்டேன்.

அப்பறம் தேவி ஸ்ரீபிரசாத்... என்ன சொல்ல... ‘வீரம்’ படத்தின் ‘ரத கஜ...’ டீஸர் ஷாட்டில் ஆரம்பிச்ச பயணம்... இதோ இன்னைக்கு எங்கே பார்த்தாலும் ‘ஆதி நெருப்பே...’ வைரல் மோட்.
சமீபத்திய ‘யோலோ...’ பாடல் டிரெண்டிங். இது இல்லாம தீம் பாடல், டைட்டில் டிராக், மன்னிப்பு பாடல், ‘தலைவனே’... முழு ஆல்பமா சூப்பரா வந்திருக்கு. பேக்ரவுண்ட் மியூசிக் படத்தின் பிரம்மாண்டத்தை இன்னும் கிராண்டா காட்டும்.

தொழில்நுட்ப ரீதியாக பிரம்மாண்ட படைப்புகள் உருவாக்கும்போது அதற்குரிய நவீன தியேட்டர்கள் இங்கே இல்லையேன்னு யோசிச்சதுண்டா?

முன்பிருந்ததை விட இப்போ எவ்வளவோ மாறி இருக்கு. ஐமேக்ஸ், 3டி ஐமேக்ஸ், டால்ஃபி அட்மாஸ் சவுண்ட்... இப்படி கொஞ்சம் கொஞ்சமா முன்னேறிக்கிட்டு இருக்கோம்.
ஆடியன்ஸ் வரவேற்பு, அவங்க கொடுக்கற ஆதரவு, மார்க்கெட் இதைப் பொறுத்துதான் தியேட்டர்கள் வளர்ச்சியும் இருக்கும்.

உதாரணத்துக்கு தெலுங்கு ஆடியன்ஸ் மத்த மொழி ஆடியன்ஸை விட சினிமாவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கறவங்க. ஹைதராபாத்தில் தியேட்டரின் எண்ணிக்கையும் சரி... அதன் வளர்ச்சியும் சரி... நாளுக்கு நாள் அதிகரிச்சிட்டேதான் இருக்கும். அப்படி இங்கேயும் மார்க்கெட் அதிகரிக்கும்போது நிச்சயமா அதற்கான வளர்ச்சியும் அதிகரிக்கும். ஆனால், எனக்கும் தோணியிருக்கு. இப்போ ‘கங்குவா’ படம் 22 மொழிகளில் எல்லா டெக்னாலஜியிலும் வெளியாகுது.

ஒரு 4டிஎக்ஸ் ஸ்க்ரீன், துபாய், கனடா ஸ்டைல் டி- பாக்ஸ்... இதெல்லாம் இருந்தால் இன்னும் பிரம்மாண்ட எக்ஸ்பீரியன்ஸ் கிடைக்குமேன்னு நானும் யோசிச்சிருக்கேன். கூடிய சீக்கிரம் இந்த டெக்னாலஜி எல்லாம் நம்ம ஊருக்கும் கிடைக்கும். உங்க படங்களில் எமோஷன்ஸ்க்கு அதிக முக்கியத்துவம் இருக்கும்... இந்தப் படத்தில் எப்படி? ‘கங்குவா பாகம் 2’ வேலைகள் ஆரம்பிச்சாச்சா?  

முந்தைய படங்கள்ல குடும்ப எமோஷன் இருக்கும். இந்தப் படத்தில் மனிதம் என்கிற எமோஷன்ஸ்தான் கதைக்கரு. நிறைய உழைப்பைக் கொடுத்திருக்கோம். அத்தனையும் ஹாலிவுட்டில் மட்டுமே இருந்த உலகத்தை நம்ம தமிழ்ல, நம்ம ஆடியன்ஸ்கிட்ட காட்டணும் என்கிற ஆசைக்கான உழைப்பு. 

2.35 மணி நேரம் நல்ல விஷுவல் ட்ரீட் கிடைக்கும்.கதை எழுத ஆரம்பிக்கும் போதே இந்தப் படம் ஒரு பாகமாக சொல்லக்கூடிய கதை கிடையாது என முடிவு செய்துதான் ஆரம்பிச்சேன். இந்தப் படத்தின் ரிலீஸ்க்குப் பிறகு கூடிய சீக்கிரம் அடுத்த பாகத்தை ஆரம்பிச்சிடுவோம். இன்னும் பிரம்மாண்டமா 2ம் பாகம் எதிர்பார்க்கலாம்.

ஷாலினி நியூட்டன்