தீபாவளியும் சில இந்தியப் பழங்குடிகளின் வழக்கங்களும்...



தீபாவளி பண்டிகை என்றாலே எல்லோருக்கும் குதூகலம்தான். பலகாரங்கள் செய்வதும், பட்டாசு வெடிப்பதும், உறவினர்களைச் சந்திப்பதும் என இந்தியா முழுவதும் மக்கள் தீபாவளி திருநாளை அத்தனை மகிழ்ச்சியுடன் கொண்டாடித் தீர்ப்பார்கள். ஆனால், சில பழங்குடி சமூகங்களில் இந்தக் கொண்டாட்டம் முற்றிலுமாக மாறுபடுகிறது.

ஆம். ஒரு பழங்குடி சமூகம் தீபாவளியைக் கொண்டாடுவதே இல்லை. மாறாக அதை அனுசரிக்கின்றனர். அதாவது, தங்கள் முன்னோர்களை அந்நாளில் நினைவுகூர்கின்றனர்.
இன்னொரு பகுதியிலுள்ள பழங்குடி சமூகத்தினரோ ஒரு மாதம் கழித்து தீபாவளியைக் கொண்டாடி மகிழ்கின்றனர். யார் அவர்கள்? அதுகுறித்து கொஞ்சம் பார்க்கலாம்.      

*தாரு பழங்குடிகள்

ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், ஜார்க்கண்ட் ஆகிய இந்திய மாநிலங்களிலும், நேபாள நாட்டிலும் வாழும் ஒரு பழங்குடிகள் தாரு. ராஜஸ்தானின் தார் பாலைவனத்திலிருந்து இந்தப் பெயர்  வந்திருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் தாரு பழங்குடியினர் ராஜபுத்திரர்களின் வழித்தோன்றல்களாகக் கருதப்படுகின்றனர். இந்தியாவின் முக்கிய பழங்குடியினரான இவர்கள் பல தனித்துவமான மற்றும் விசித்திரமான நம்பிக்கைகளைக் கொண்டவர்கள்.

இவர்களிடமே தீபாவளிப் பண்டிகையை முன்னோர்களின் நினைவுகூரும் நாளாக கடைப்பிடிக்கும் போக்கு இருந்துவருகிறது. இதிலும் குறிப்பாக ராணா, கடோலியா, டாகவ்ரா உள்ளிட்ட இனக்குழுக்களில் இந்த அனுசரிப்பு நிகழ்வு கடைப்பிடிக்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது.

உலகமே தீபாவளியன்று மகிழ்ச்சியில் மூழ்கியிருக்கும் வேளையில், இந்தப் பழங்குடியினர் மட்டும் தங்கள் அன்புக்குரியவர்களின் இழப்பை நினைத்து வருந்துகின்றனர்.
அப்போது இறந்த குடும்ப உறுப்பினர்களை நினைவுகூர்ந்து அவர்களின் நினைவாக ஒரு பொம்மையைத் தயார் செய்து, அதனை எரித்துவிடுகின்றனர். பின்னர் அனைத்து குடும்ப உறுப்பினர்களும் ஒன்றாகச் சேர்ந்து சமைத்து உண்ணுகின்றனர்.

ஆனால், சமீப ஆண்டுகளாக இந்தப் பழக்கம் தாரு பழங்குடியினர் இடையே இருந்து போய்விட்டதாகச் சொல்கின்றனர் ஆய்வாளர்கள். அவர்கள் பொது நீரோட்டத்தில் கலந்து இந்துக்களின் சடங்குகளைப்  பின்பற்றுவதாகவும் தெரிவிக்கின்றனர். இருந்தும் வழிவழியாக வந்த பழக்கம் அவ்வளவு எளிதில் மாறாது. அப்படியாக இன்றும் தாரு பழங்குடிகளில் சிலரிடம் தீபாவளிப் பண்டிகை என்பது முன்னோர்களின் நினைவுகூரும் நாளாகவே இருந்து வருகிறது.  

*ஜான்சர் - பவார் பகுதிகள்

உத்தரகாண்ட் மாநிலத்தில் இமயமலையின் அடிவார மலைத்தொடர்களில் இருக்கிறது ஜான்சர் - பவார் பகுதிகள். இந்தப் பகுதிகளில் வாழும் பழங்குடி மக்கள்தான் தீபாவளிப் பண்டிகை முடிந்து ஒருமாதம் கழித்து தீபாவளியைக் கொண்டாடி மகிழ்கின்றனர். இதனை, ‘புதி தீபாவளி’ என்கின்றனர் அவர்கள். 

கார்த்திகை அமாவாசை அன்று இந்தத் தீபாவளியை அவர்கள் கொண்டாடுகின்றனர். இதற்கு ஒரு கதை இருக்கிறது. அதாவது வடஇந்தியாவின் சில பகுதிகளில், ராமர் 14 ஆண்டுகள் வனவாசம் முடித்து ராவணனை வெற்றி கொண்டு சீதையுடன் அயோத்தி திரும்பி வந்ததே தீபாவளியென நம்பப்படுகிறது.

அப்படியாக அவர் வந்த விஷயம் மலையில் வாழும் இந்த மக்களுக்கு ஒருமாதம் கழித்தே எட்டியிருக்கிறது. அதனால், ஒருமாதம் கழித்து அவர்கள் இந்தத் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடுவதாகச் சொல்லப்படுகிறது. அதுவே வழிவழியாக இன்று வரையில் தொடர்கிறது. அதுமட்டுமல்ல. இதில் இன்னொரு கதையும் உலவுகிறது. அதாவது மற்ற இடங்களில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும்போது இந்த மக்கள் விவசாய அறுவடைப் பணிகளில் இருப்பார்களாம்.

அந்தப் பணிகள் முடிவடைய ஒரு மாதமாகும் என்பதாலும், பிறகு விளைச்சல் தரும் வருமானத்தில் ‘புதி’ தீபாவளியைக் கொண்டாடுவதாகவும் சொல்லப்படுகிறது.   இவர்களின் இந்தத் தீபாவளி பண்டிகையில் பட்டாசுகள் வெடிக்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மாறாக, தேவதாரு மற்றும் பைன் மரங்களிலிருந்து வெட்டப்பட்ட விறகுகளைக் குவித்து தீ மூட்டி, அதன்முன் சங்கிலிபோல் இந்த பழங்குடி மக்கள் கைகோர்த்து தங்கள் நாட்டுப்புற இசையை இசைத்து நடனமாடுகின்றனர். அதுமட்டுமல்ல. இந்தப் பண்டிகையை ஐந்து நாட்கள் கொண்டாடுகின்றனர். அப்போது அவல், பருப்பு வகைகளில் ஒருவித பதார்த்தம் செய்து நண்பர்கள், உறவினர்கள், விருந்தினர்கள் என அனைவருக்கும் கொடுத்து மகிழ்கின்றனர்.

பேராச்சி கண்ணன்