பிரியங்கா காந்தியின் சொத்து மதிப்பு! ரூபாய் 12 கோடி!
ஆம். வயநாடு இடைத்தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி தாக்கல் செய்த வேட்பு மனுவில் தனது சொத்து மதிப்பு ரூ.12 கோடி எனக் குறிப்பிட்டுள்ளார். கேரளம் மாநிலம் வயநாடு தொகுதிக்கு நவம்பர் மாதம் 13ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதில் காங்கிரஸ் தரப்பில் இருந்து வயநாடு தொகுதி வேட்பாளராக பிரியங்கா காந்தி அறிவிக்கப்பட்டார்.
இவரை எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சத்யன் மோக்கேரியும், பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸும் போட்டியிடுகின்றனர்.ராபர்ட் வதேராவின் சொத்து மதிப்பு ரூ. 66 கோடி என்றும், தனக்கு எதிராக 3 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன என்றும் தன் வேட்பு மனுவில் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.தனது ரூ.12 கோடி சொத்தில், ரூ.4.24 கோடி மதிப்புள்ள அசையும் சொத்துகளும், ரூ.7.74 கோடி மதிப்புள்ள அசையா சொத்துகளும் அடங்கும் என குறிப்பிட்டுள்ளார். மேலும், ரூ.1.09 கோடி மதிப்பிலான சொத்தை வாங்கி அதன் கட்டுமானத்துக்கு ரூ.5.05 கோடி செலவு செய்ததாகவும்; தனக்கு ரூ.15.75 லட்சம் கடன் உள்ளது என்றும், 2023 - 24 நிதியாண்டில் தனது ஆண்டு வருமானம் ரூ.46.39 லட்சமாக இருந்தது என்றும் பிரியங்கா பிரமாணப் பத்திரத்தில் கூறியுள்ளார். கடந்த நிதியாண்டில் ரூ.47.21 லட்சம் சம்பாதித்த பிரியங்காவிடம் ரூ.8 லட்சம் மதிப்புள்ள ஹோண்டா சிஆர்வி கார் உள்ளது. இந்த கார் அவரது கணவர் ராபர்ட் பரிசாக அளித்ததாம். இதுதவிர ரூ.1.15 கோடி மதிப்புள்ள தங்கமும், ரூ.29 லட்சம் மதிப்புள்ள வெள்ளியும் பிரியங்கா வசம் உள்ளன. மேலும், தில்லியின் சுல்தான்பூர் மெஹ்ராலி கிராமத்தில் பிரியங்காவுக்கு ரூ.2.10 கோடி மதிப்புள்ள விவசாய நிலம் உள்ளது. ஆனால், இந்த நிலத்தில் ராகுல் காந்திக்கும் பங்கு உள்ளது என்று சொல்லப்பட்டுள்ளது.
இதுதவிர தனக்கு இமாச்சல் பிரதேச மாநிலம் சிம்லாவில் ரூ.5.63 கோடி மதிப்புள்ள வீடு உள்ளது என்றும் பிரியங்கா வெளிப்படுத்தியுள்ளார்.முதலீடுகளைப் பொறுத்தவரை, ரூ.2.24 கோடி மதிப்புள்ள மியூச்சுவல் பண்டு முதலீடுகள், எஸ்பிஐ வங்கியில் ரூ.17.38 லட்சம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக பிரியங்கா குறிப்பிட்டுள்ளார். மேலும், தற்போதைய நிலையில் தனது வங்கிக் கணக்கில் சுமார் 3.60 லட்சம் ரூபாய் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
என்.ஆனந்தி
|