Must Watch



லெவல் கிராஸ்

சமூக வலைத்தளங்களில் பாராட்டுகளை அள்ளி வரும் மலையாளப் படம், ‘லெவல் கிராஸ்’. ‘அமேசான் ப்ரைமி’ல் காணக்கிடைக்கிறது.ஒரு வறண்ட பாலைவனம். அங்குள்ள ரயில்வேயின் லெவல் கிராஸிங்கில் கேட் கீப்பராக வேலை செய்து வருகிறான், விநோதமான ஒரு மனிதன். அவன் தனியாக வாழ்ந்து வருகிறான். ஒரு நாள் நினைவிழந்த ஒரு பெண்ணைத் தன்னுடைய வீட்டுக்கு அழைத்து வருகிறான். அந்தப் பெண்ணுக்கு நினைவு திரும்புகிறது. ரயிலில் இருந்து கீழே விழுந்துவிட்டேன் என்கிறாள்.

அந்த மனிதனுடன் இருப்பது தனக்குப் பாதுகாப்பில்லை என்று நினைத்து, அங்கிருந்து கிளம்புகிறாள். ஆனால், செல்லும் வழியிலே நிலைகுலைந்து போகிறாள். வேறு வழியில்லாமல் அன்றைய இரவு அந்த பாலைவனத்திலேயே தங்க வேண்டிய நிலை. 

உண்மையில் அந்தப் பெண் யார்? அவளுக்கு என்ன ஆனது? கேட் கீப்பராக வேலை செய்பவன் யார்... போன்ற கேள்விகளுக்கு சுவாரஸ்யமாக பதில் சொல்லியிருக்கிறது திரைக்கதை.தொடர்ந்து மலையாளப் படங்களைப் பார்த்து வரும் ரசிகர்கள் தவறவிடக்கூடாத படம் இது. படத்தின் இயக்குநர் அர்ஃபாஸ் அயூப்.

கார்வ்டு

ஒரு வித்தியாசமான திகில் படத்தைப் பார்க்க வேண்டுமா? உங்களுக்காகவே ‘ஹாட்ஸ்டாரி’ல் வெளியாகியிருக்கிறது, ‘கார்வ்டு’ எனும் ஆங்கிலப்படம். அமெரிக்காவில் பூசணிக்காய் திருவிழா, ஹாலோவீன் போன்றவை வெகு பிரபலம். 

இந்தக் கொண்டாட்டங்களை மையமாக வைத்து படத்தின் கதையை வடிவமைத்திருக்கின்றனர்.தொண்ணூறுகளில் படத்தின் கதை நடக்கிறது. ஹாலோவீன் இரவில் பூசணிக்காயை செதுக்கும் போட்டி நடக்கிறது.

ஒரு கிராமத்தில் நடக்கும் இந்தப் போட்டியில்  பதின்பருவத்தைச் சேர்ந்த ஆண்களும், பெண்களும் கலந்துகொள்கின்றனர். போட்டிக்கான மூலப்பொருளான பூசணிக்காய் ஒரு லாரியில் வருகிறது. 

அந்த பூசணிக்காய்களில் மர்மமான ஒரு பூசணிக்காயும் இருக்கிறது. போட்டியின் போது அந்த பூசணிக்காய் மக்களைத் தாக்கி, கொல்ல ஆரம்பிக்கிறது. ஊரே பரபரப்பாகிறது. எதனால் அந்த பூசணிக்காய் மக்களைத் தாக்குகிறது? எப்படி மக்கள் பூசணிக்காயின் தாக்குதலில் இருந்து தப்பிக்கின்றனர் என்பதே மீதிக்கதை.  

வழக்கமான திகில் கதைகளில் இருந்து வேறுபட்டு, அனைத்து தரப்பினரையும் கவர்கிற மாதிரி நகைச்சுவையுடன் திரைக்கதையை அமைத்திருக்கின்றனர். மனிதனுக்கு எதிராக இயற்கை செயல்பட ஆரம்பித்தால் எப்படியிருக்கும் என்பதையும் இப்படம் சுட்டிக்காட்டுகிறது. இதன் இயக்குநர் ஜஸ்டின் ஹார்டிங்.

டோன்ட் மூவ்

இருக்கை நுனியில் உட்கார வைக்கும் திரில்லிங் படம் பார்க்க வேண்டுமா? உங்களுக்காகவே ‘நெட்பிளிக்ஸி’ல் நேரடியாக வெளியாகியிருக்கிறது, ‘டோன்ட் மூவ்’ எனும் ஆங்கிலப்படம்.
ஐரிஸின் மகன் மடேயோ. ஒரு மலையேற்றத்தின்போது நடந்த விபத்தில் மடேயோ இறந்து விடுகிறான். மகன் இறந்த துக்கத்திலிருந்து விடுபட முடியாமல் தவிக்கிறாள் ஐரிஸ்.
இந்நிலையில் மகன் இறந்த இடத்துக்குச் செல்கிறாள். அந்த மலையிலிருந்து குதித்து இறந்து போக முடிவு செய்கிறாள்.

அப்போது அங்கே ரிச்சர்ட் என்ற மர்ம மனிதன் வருகிறான். ஐரிஸிடம் பேச்சுக்கொடுக்கிறான் ரிச்ச்ர்ட்.  ரிச்சர்டுடைய பேச்சில் மயங்கி, தனது முடிவை மாற்றிக்கொள்கிறாள் ஐரிஸ். ரிச்சர்டுடன் செல்கிறாள். திடீரென்று ஐரிஸைத் தாக்க ஆரம்பிக்கிறான் ரிச்சர்ட். 

உண்மையில் ரிச்சர்ட் யார்? ஐரிஸ் எப்படி ரிச்சர்டிடம் இருந்து தப்பிக்கிறாள் என்பதை
திரில்லிங்காக சொல்லியிருக்கிறது திரைக்கதை. ஆடம் சிண்ட்லர் மற்றும் பிரைய்ன் நெட்டோ இணைந்து இப்படத்தை இயக்கியிருக்கின்றனர். ‘த ஈவில் டெட்’ படத்தை இயக்கிய சாம் ரைமி இப்படத்தை தயாரித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தோ பட்டி

‘நெட்பிளிக்ஸி’ல் நேரடியாக வெளியாகி இருக்கும் இந்திப் படம் ‘தோ பட்டி’. தமிழ் டப்பிங்கிலும் காணக்கிடைக்கிறது. அமைச்சரின் மகன் துருவ். சொந்தமாக ஒரு நிறுவனத்தை நடத்தி வருகிறான். சௌம்யாவும், சைலியும் இரட்டைச் சகோதரிகள். துருவ்விற்கும், சௌம்யாவிற்கும் இடையில் காதல் மலர்கிறது. இந்நிலையில் தனது குடும்பத்தினரிடம் துருவ்வை அறிமுகப்படுத்துவதற்காக வீட்டுக்கு அழைத்து வருகிறாள் சௌம்யா. அப்போது துருவ்விற்கும் சைலிக்கும் இடையில் ஈர்ப்பு ஏற்படுகிறது.

சௌம்யாவுக்குத் தெரியாமல் சைலியும், துருவ்வும் சுற்றித் திரிகின்றனர். சைலியின் நடவடிக்கைகள் பிடிக்காமல், சௌம்யாவைத் திருமணம் செய்துகொள்கிறான் துருவ். இருந்தாலும் துருவ்வை விடாமல் துரத்துகிறாள் சைலி. இது சைலிக்கும், சௌம்யாவுக்கும் இடையில் பிரச்னையை உருவாக்குகிறது. 

சௌம்யா குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று துருவ்வை வற்புறுத்துகிறாள். ஆனால், துருவ்வோ சௌம்யாவின் மீது வன்முறையில் ஈடுபட ஆரம்பிக்கிறான். இந்த முக்கோண பிரச்னை எப்படி சரியாகிறது என்பதே கிளைமேக்ஸ்.சௌம்யா, கிரித்தி என்ற இரட்டை வேடங்களில் அசத்தலாக நடித்திருக்கிறார், கிரித்தி சனோன். இது கிரித்தி தயாரிக்கும் முதல் படம். இப்படத்தின் இயக்குநர் ஷஷாங்க் சதுர்வேதி.

தொகுப்பு:த.சக்திவேல்