தலை தீபாவளி!
தீபாவளி என்றாலே புத்தாடை, பட்டாசு, பலகாரங்கள் உடன் புதுப்படங்கள். இதுதவிர புதிதாக திருமணமானவர்களுக்கு இந்த வருடம் தலை தீபாவளியாக இருக்கும். அப்படி இந்த வருடம் தலை தீபாவளி கொண்டாடும் இந்திய பிரபலங்கள் யார்... யார்..?
ரகுல் ப்ரீத் சிங் - ஜாக்கி பக்னானி
தமிழில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் கதாநாயகியாக நடித்த ‘தடையற தாக்க’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங். தொடர்ந்து ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘தேவ்’, ‘என்ஜிகே’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். இந்த வருடம் ‘அயலான்’ மற்றும் ‘இந்தியன் 2’ ஆகிய இரு படங்களும் ரகுல் ப்ரீத் சிங்குக்கு வெளியாகியிருக்கிறது.இந்நிலையில் ‘பெல்பாட்டம்’, ‘கணபத்’ படங்களின் தயாரிப்பாளர் ஜாக்கி பக்னானியும் இவரும் சென்ற பிப்ரவரி 22ம் தேதி கோவாவில் திருமணம் செய்துகொண்டனர். பீச் திருமணமாக நடந்த இவர்களது திருமண வைபோகம் இணையம் முழுக்க வைரலானது. சித்தார்த் - அதிதி ராவ் ஹைதரி
இயக்குநர் ஷங்கரிடம் துணை இயக்குநராக இருந்து தொடர்ந்து இயக்குநர் மணிரத்னத்தின் ‘ஆயுத எழுத்து’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் சித்தார்த். பின்னர் ஷங்கர் இயக்கத்தில் ‘பாய்ஸ்’ படத்தில் கதாநாயகனாக நடித்தவர் தனக்கென தனித்துவமான பாதை அமைத்துக்கொண்டு இந்தி, தெலுங்கு என பலமொழிகளில் நடிக்கத் தொடங்கினார். ‘சித்தா’ படம் சமீபத்தில் அவருக்கு நல்ல நடிகர் என்கிற அங்கீகாரத்தையும் பெற்றுக் கொடுத்தது.
2021ம் ஆண்டு சித்தார்த் - அதிதி ராவ் ஹைதரி ஆகிய இருவரும் நடித்து ‘மகா சமுத்திரம்’ என்னும் தெலுங்கு திரைப்படம் வெளியானது. அந்தப் படத்தின் படப்பிடிப்பு சமயத்தில்தான் இருவரும் நட்பாக பழகத் துவங்கினர். தொடர்ந்து சித்தார்த் மற்றும் நடிகை அதிதி ராவ் இருவரும் காதலிப்பதாக செய்திகள் வந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் இருவருக்கும் தெலுங்கானாவில் இருக்கும் கோயிலில் நிச்சயதார்த்தம் நடந்தது.
செப்டம்பர் மாதம் 16ம் தேதி திருமணமும் கோயிலில் எளிமையாக நெருக்கமான நண்பர்கள் மற்றும் குடும்ப உறவுகள் முன்னிலையில் நடந்து முடிந்தது. இருவருமே தங்களது முந்தைய திருமணத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தவர்கள். இவ்விருவரும் திருமணம் செய்துகொண்டதை ரசிகர்களும் வாழ்த்தி வரவேற்றனர்.
பிரேம்ஜி - இந்து
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் புகழ்பெற்ற முருகன் கோயில் வளாகத்தில் கடந்த ஜூன் 9ம் தேதி திரைப்பட இயக்குநர் கங்கை அமரன் மகனும் நடிகருமான பிரேம்ஜி - இந்து திருமணம் மிகவும் எளிமையான முறையில் நடைபெற்றது.கங்கை அமரன், அவரது மூத்த மகனும் திரைப்பட இயக்குநருமான வெங்கட் பிரபு ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற திருமணத்தில் மணமகன் மற்றும் மணமகள் ஆகியோரின் குடும்பத்தினர் மற்றும் திரைப்பட நடிகர்கள் சிவா, சந்தான பாரதி, ஜெய், கார்த்திக் ராஜா உட்பட திரைப்பட நட்சத்திரங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். பல நாள் பேச்சிலர் சட்டென ஃபேமிலி மேன் ஆனார் என 90ஸ் கிட்ஸ் வைரலாக்கியது இந்த வருட வரலாறு.
சோனாக்ஷி சின்ஹா - ஜாகீர் இக்பால்
பாலிவுட் நடிகையான சோனாக்ஷி சின்ஹா திருமணமும் இந்த வருடம்தான் நடந்து முடிந்தது. பாலிவுட்டில் ‘தபாங்’ படத்தின் மூலம் 2010ம் ஆண்டு நாயகியாக அறிமுகமானவர் சோனாக்ஷி சின்ஹா. தமிழில் ரஜினிக்கு ஜோடியாக ‘லிங்கா’ படத்தில் நடித்து பாராட்டுகளைப் பெற்றார். இதற்கிடையில் சோனாக்ஷி சின்ஹா தன் காதலரான நடிகர் ஜாகீர் இக்பாலை கடந்த ஏப்ரல் 22ம் தேதி திருமணம் செய்தார்.
மிகவும் எளிமையாக நண்பர்கள், நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்ட சோனாக்ஷி திருமண உடையாக தனது அம்மாவின் புடவையை பாந்தமான முறையில் அணிந்திருந்தது பலரின் பாராட்டுகளைப் பெற்றது. தொடர்ந்து சோனாக்ஷியின் அலங்காரம் அத்தனையும் தென்னிந்திய முறைப்படி இருந்ததும் கவனம் பெற்றது.
சிபி சக்கரவர்த்தி - ஸ்ரீவர்ஷினி
‘தெறி’, ‘மெர்சல்’ உள்ளிட்ட படங்களின் இயக்குநர் அட்லீயிடம் உதவியாளராகப் பணியாற்றியவர் சிபி சக்கரவர்த்தி. சிவகார்த்திகேயன் நடித்த ‘டான்’ படத்தின் மூலம் இயக்குநர் ஆனார்.
இந்தவருடம் இயக்குநர் சிபி சக்கரவர்த்திக்கும் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரியும் வர்ஷினிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களின் திருமணம் ஈரோடு ஆர்.என்.புதூரில் கடந்த செப்டம்பர் 5ம் தேதி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு புதுமணத் தம்பதிகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
நடிகர்கள் சிவகார்த்திகேயன், எஸ்.ஜே.சூர்யா, இயக்குநர் அட்லீ, தர்ஷன், இயக்குநர்கள் ரவிக்குமார், பாக்யராஜ் கண்ணன், பாடலாசிரியர் விவேக், தயாரிப்பாளர் சுதன், லைகா புரொடக்ஷன்ஸ் தலைவர் ஜி.கே.எம்.தமிழ்க்குமரன், எஸ்கே புரொடக்ஷன்ஸ் கலை, தயாரிப்பாளர் சாந்தி டாக்கீஸ் அருண், முனீஷ்காந்த், பிக்பாஸ் ராஜு, இயக்குநர் விக்னேஷ் ராஜா, இயக்குநர் விஷால் வெங்கட், பாலசரவணன், காளி வெங்கட், மிர்ச்சி விஜய், சிவாங்கி உட்பட பலர் திருமணத்தில் கலந்து கொண்டனர்.
வரலட்சுமி - நிக்கோலாய் சச்தேவ்
‘போடா போடி’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். நடிகர் சரத்குமாரின் மகளான வரலட்சுமி, நடித்தால் ஹீரோயின்தான் என்றில்லாமல் நல்ல கேரக்டர்களையும் தேர்வு செய்து நடிக்கத் தொடங்கினார். இப்போது தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பிசியான வில்லியாகவும் வலம் வருகிறார் வரலட்சுமி.
இதற்கிடையில் வரலட்சுமி, நிக்கோலாய் சச்தேவ் என்பவரைக் காதலித்து வந்தார். ஜூலை 2ம் தேதி தாய்லாந்தில் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. உறவினர்கள், நண்பர்களை தங்களது செலவில் தாய்லாந்து அழைத்துச் சென்று திருமணத்தை வெகு விமர்சையாக நடத்தினர்.சென்னையில் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள் நடைபெற்ற நிலையில் அதில் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு வாழ்த்திய வீடியோக்களும் ட்ரெண்டிங்கில் இருந்தன.
கிரித்தி கர்பந்தா - புல்கிட் சாம்ராட்
ஜிவி பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக, தமிழில் வெளியான ‘புரூஸ்லீ’ படத்தில் நடித்த நடிகை கிரித்தி கர்பந்தா. இவரும் நடிகர் புல்கிட் சாம்ராட்டும் காதலிப்பதாக பேசப்பட்டது. இந்நிலையில் அவர்களின் திருமணம் தில்லியில் இருக்கும் ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் மார்ச் 15ம் தேதி பிரமாண்டமாக நடந்தது. அந்தத் திருமணத்தில் இரு வீட்டாரும், நண்பர்களும் கலந்து கொண்டார்கள். சாம்ராட் முறைப்படி இவர்களது திருமணம் நடந்தது. இருவருக்குமே தில்லிதான் சொந்த ஊர் என்பதால் திருமணமும் அங்கேயே வெகு விமர்சையாக நடந்து முடிந்தது.
ரெடின் கிங்ஸ்லி - சங்கீதா
தமிழில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் ரெடின் கிங்ஸ்லி. நயன்தாரா நடித்த ‘கோலமாவு கோகிலா’, சிவகார்த்திகேயன் நடித்த ‘டாக்டர்’, ரஜினியின் ‘அண்ணாத்த’, ‘ஜெயிலர்’, விஜய் நடித்த ‘பீஸ்ட்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். ‘டாக்டர்’ படத்தில் இவரது நகைச்சுவை வசனங்கள் பெரும் பிரபலமாகின.இந்த நிலையில், சீரியல் நடிகையான சங்கீதாவுடன் ரெடின் கிங்ஸ்லிக்கு கடந்த டிசம்பர் 10ம் தேதி சென்னையில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர ஹோட்டலில் திருமணம் நடைபெற்றது.
எளிமையாக நடைபெற்ற இத்திருமணத்தில் உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். சங்கீதா ஒரு சில தொலைக்காட்சித் தொடர்களிலும், சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். சமூக வலைதளங்களிலும் இவருக்கு ஃபாலோயர்கள் அதிகம். 2023ம் ஆண்டு திருமணம் நடந்தாலும் இவர்களுக்கும் தலை தீபாவளி இந்த வருடம்தான்.
ஷாலினி நியூட்டன்
|