சிறுகதை - பிரிக்கப் படாத மடல்
ரேவதி அலுவலகம் கிளம்பிக் கொண்டிருந்தாள். “டிபன் பாக்ஸ்லே சாப்பாடு வச்சிருக்கேன். மிச்சம் மீதி வைக்காமல் சரியா சாப்பிடு என்ன..?’’ அம்மாவின் பரிந்துரை. “ம்...’’ என்றபடி டிபன் பாக்ஸை ஷோல்டர் பேக்கில் அடைத்துக்கொண்ட ரேவதியிடம், “மளிகையே இல்ல... வரும் போது...” பேசவந்த தாயை தடுத்து “ஆபீஸ் போற அவசரத்துல இருக்கேன். சாயங்காலம் சொல்லு. இல்ல லிஸ்ட் எழுதி வை...” கிளம்பினாள்.
“என்னைக்கு நீ நிதானமா பேசி இருக்கே?” அம்மா சலித்துக் கொண்டாள். முணுமுணுத்தபடி தான். சமையல் சாம்ராஜ்யத்துள் நுழைந்தாள். அப்போதுதான் ராமு எதிரில் வந்தான். “அக்கா... நான் சொல்லி இருந்தேனே... வேலைக்கு செக்யூரிட்டி என்று...” தயங்கினான்.“ஞாபகம் இருக்கு. நானே சொல்றேன். நீ சும்மா என்ன ரிமைண்ட் பண்ண வேண்டாம்...’’ஈஸிசேரில் சாய்ந்தபடி அமர்ந்திருந்த அப்பா, நாலா பக்கமும் பார்த்தபடி மெதுவாகக் கேட்டார். “ரேவு... மூட்டு வலி தைலம் சொன்னேனே... குளிர்காலம் வேற ஆரம்பிச்சிடுச்சு. முடிஞ்சா...’’ நல்லவேளை. ஒரு தங்கை இல்லை. இருந்திருந்தால் அவளும் ஏதாவது காதல் கோரிக்கை வைத்து தன்னை திருமணத்திற்கு சம்மதம் கேட்க வைத்திருப்பாள்.
யார் இவளுக்கு ரேவதி என்று பெயரிட்டனர்? கடைசி நட்சத்திரம் ரேவதி. இவளும் வாழ்வின் கடைசியில் இருக்கிறாள். முதிர்கன்னி. மூத்த கன்னி. பேரிளம் பெண். எத்தனை அழகான வார்த்தைப் பிரயோகங்கள் தமிழில் இருக்கின்றன? மொத்தத்தில் ஒரே அர்த்தம்தான். துரதிர்ஷ்டம்.தனித்து விடப்பட்ட மனிதர்கள் எல்லா திக்குகளிலும் முட்டி மோதிக்கொள்ளும் மூர்க்கத்தனமான ஒரு காட்டெருமையைப்போல மாறிவிடுவார்களோ... இவளுக்கே தெரியும்.
கொன்றை மரத்தின்அடர் நிழலில் காதல் விண்ணப்பம் செய்யவும் உதிர்ந்த மலர்களின் மணத்தை ரசிக்கும் ஒரு பக்குவமும் தனக்கு இல்லையோ என்று ரேவதி பலதடவை யோசித்துப் பார்த்து இருக்கிறாள். ஆனால், எல்லா கேள்விகளுக்கும் முடிவு காண முடியாத கேள்வி அது. என்று பதில் கண்டுபிடிக்கப் போகிறாள்?
சிறகுகள் இருந்தும் பறக்காத பறவை இவள்.ரேவதியிடம் லிஸ்ட் கொடுத்த நிம்மதியில் அம்மா. சமையல் அறைக்குள் நுழைந்தாள். பாரத்தைச் சுமக்க ஒரு பொதி மாடு இருக்கும் போது என்ன கவலை?
மழை மெல்ல தூற ஆரம்பித்தது.வெளியே துணியைக் காயப்போட்டு இருப்பது நினைவுக்கு வர அம்மா கொல்லைப் புறம் ஓட... தந்தைக்கு ஒரே கவலை. இந்தக் குளிரில் மூட்டு வலி அதிகமாகும். அதற்குள் ரேவதி மருந்து வாங்கி வந்துவிடுவாளா?
கேட்கவும் முடியாது. இப்படி மழை பெய்தால் எப்படி வெளியே போவது?
ராமுவுக்குக் கவலை. மழை மெல்ல வலுக்க ஆரம்பித்தது.அப்போது போன் கூப்பிட்டது. ஒரே ஒரு லேண்ட்லைன் கனெக்ஷன்தான். பின்னே... ஆளாளுக்கு மொபைல் வாங்கித் தர முடியுமா என்ன?ரேவதிதான் பேசினாள்.“என்னம்மா ஆச்சு?” அம்மா பதறினாள்.“உஷ்... ஒண்ணும் இல்ல. காலைல சொல்ல மறந்துட்டேன்.
இன்னைக்கு என்னோட கலீகுக்கு தாம்பரத்துல கல்யாணம். நாங்க சில ஃப்ரெண்ட்ஸ் கேப் பிடிச்சு போறோம். அங்கேயே சாப்பிட்டு வர லேட்டாகும். எனக்காக காத்திருக்க வேண்டாம். நானே வந்துடுவேன். அப்பறம்...’’பேசப் பேச பலத்த இடி. போன் கனெக்ஷன் துண்டிக்கப்பட்டது. பாதி காய்ந்த துணிகளை எடுத்தபடி உள்ளே வந்த அம்மாவுக்கு ஒரு நிம்மதி.ரேவதி கல்யாண வீட்டிலேயே சாப்பிட்டுவிட்டு வந்துவிடுவாள். பாக்கி பேரைப் பத்தி கவலை இல்லை. அப்பா யோசித்தபடி அமர்ந்திருந்தார். விண்ணுக்கும் மண்ணுக்கும் உறவுப் பாடம் நடத்தும் மழைத்துளிகளை ரசித்தபடி அமர்ந்திருந்தார். பூமிக்கும், வானத்திற்குமான இடைவெளியில் சிறகு கட்டி பறக்கும் காலத்தின் பயணம்.
மழை எப்போது நிற்கும் என்று ஆகாயத்தைப் பார்த்தபடி தம்பி காத்திருந்தான். பூஜை அறையில் ஏதோ ஸ்லோக புத்தகங்களை எடுத்துப் படித்தாள் அம்மா. மழை வலுக்க ஆரம்பித்தது. சிறு சிறு துளிகள் முகத்தில் அறைவது போல் விஸ்வரூபம் எடுத்தன.
காற்று அனுமதி கேட்காமல் அறைக்குள் நுழைந்து புத்தகங்களின் பக்கங்களையும் சில மெல்லிய பொருட்களையும் புரட்டிப் போட்டது. வானம் இருட்டிக்கொண்டு வந்தது.ஏதோ ஒரு குகைக்குள் இருப்பது போல ஒரே இருட்டு. இன்று இயற்கைக்கு என்ன வந்து விட்டது? இப்படி ஊழிக்காலம் போல ருத்ரதாண்டவம் ஆடுகிறது. நேரம் போய்க்கொண்டிருந்தது. நேரம் ஆக ஆக பதற்றம் வந்தது. இருமுறை ரேவதியை செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது “நாட் ரீச்சபிள்...’’ என்று அந்த எந்திரம் பதில் சொன்னது. மின்சாரமும் விலக, ஏற்றிவைத்த மெழுகுவர்த்தி காற்றுக்கு அணைந்து அணைந்து உயிரை விட்டுக் கொண்டே இருந்தது.
ஹரிகேன் விளக்கு ஒளி தர, எமர்ஜன்ஸி விளக்கு மங்கலாக எரிய... இது என்ன பிரபஞ்ச காலத்தின் பிரளயமா?
வீட்டின் கதவுகள் அடித்துக் கொள்ள ரேவதியின் அறை ஜன்னல் திறந்திருந்தால் டேபிளில் இருக்கும் பொருட்கள் நனைந்துவிடும். அம்மா தட்டுத் தடுமாறி அறைக்குள் நுழைந்தாள். நல்ல வேளை ஜன்னல் சார்த்தி இருந்தது. உள்ளே நுழையாமலே அறைக் கதவை மட்டும் மூடிவைத்தாள்.இரவு மணி எட்டு ஆகிவிட்டது. இன்னும் ரேவதி வரவில்லை.பக்கத்து வீட்டுக்காரர் அந்த மழையிலே தட்டுத் தடுமாறி வந்தார்.
“ரேவதி வந்தாச்சா?”
அம்மாவுக்கு பகீரென்றது. “ஏன் என்னாச்சு? தாம்பரத்துக்கு ஏதோ கல்யாணத்துக்கு போறேன்னு சொன்னா...’’“நாங்களும் தாம்பரத்துக்கு ஒரு கல்யாணத்துக்கு போயிட்டுதான் வரோம். வர்ற வழியில மெயின் ரோடுலே ஏதோ ஆக்ஸிடென்ட். பயப்படாதீங்கமா... யாரோ நாலு பெண்கள் ஒரு டாக்ஸி எடுத்துட்டு வந்தாங்களாம். நடுவீதியில் கார் கவிழ்ந்து ஆக்ஸிடென்ட்டாம். ஏகக் கூட்டம். பக்கத்திலேயே போக முடியல.
யாருமே சரியா பதில் சொல்லல. வந்துட்டோம். பாடிகளை மார்ச்சுவரி எடுத்துட்டு போனதா சொன்னாங்க. வேற எதுவுமே தெரியல. அதான் உங்ககிட்ட கேக்கலாம்னு...”தாயார் அழுதபடி ராமுவிடம் வந்தாள்.
“ராமு... இப்பவே... இப்பவே... போலீசுக்கு தகவல் சொல்லு. ஒரு கார் எடுத்துட்டு தாம்பரம் போ...”நடந்தது ஏதும் தெரியாமல் “ரேவு வந்தாச்சா?” என்று கேள்வி கேட்ட கணவனுக்கு “வந்துருவா... வந்துருவா...’’ என்று அழுகையோடு பதில் சொன்னாள்.ராமு பார்க்கப் போனபோது பாடியை மார்ச்சுவரியில் வைத்திருப்பதாகச் சொன்னார்கள்.
ஓடியே போய் பார்த்தான். அங்கு வைக்கப்பட்ட சடலங்கள் ஒவ்வொன்றையும் முகம் திறந்து பார்த்தான். ரேவதி இல்லை.நிம்மதியாக வீடு திரும்பினான். ரேவதி வந்து விடுவாள்.“என்னாச்சுப்பா?” அழுதபடி அம்மா கேட்டாள். “இல்லமா... மூணு பேர் முகத்தைப் பார்த்துட்டேன். அதுல நம்ம ரேவதி இல்ல...’’
“அப்போ அந்த நாலாவது?”
“இல்லம்மா. போர்வை விலகி கால் வெளியிலிருந்தது. கால்ல கொலுசு இருந்தது. நிச்சயமாக நம்ப ரேவதி இல்ல. அதான் வந்துட்டேன். என்னால அங்க நிக்கவே முடியல. ஏகக் கூட்டம். அழுகை. கேள்விக்கு பதில் சொல்றவங்க யாரும் இல்ல. எங்கேயாவது டிராஃபிக்ல மாட்டிட்டு இருப்பா. வந்திடுவா...”தாய் வேதனைப்பட்டாள். “இருந்தாலும் நீ அந்த நாலாவது முகத்தையும் பார்த்திருக்கலாம்ப்பா...” அவர்கள் ரேவதிக்காகக் காத்திருந்தனர்.
மழை ஓய்ந்தபிறகும் ஈரம் உள்ளார்ந்த நிலத்தைப் போல நினைவுகளின் தடங்கள் எங்கெங்கோ தாறுமாறாக அலையத் தொடங்கின.அப்போது வாசலில் ஒரு ஆம்புலன்ஸ் வரும் சப்தம். அனைவரும் வாசலுக்கு ஓட ஒரு ஸ்ட்ரெச்சர். உடல் முழுவதும் மூடப்பட்ட நிலையில் ஒரு பிணம். உடன் வந்த அந்த வாலிபன் கலங்கிய கண்களுடன் சொன்னான்.“என் பேர் பரணி.
நானும் ரேவதியும் ஒரே ஆபீஸிலே வேலை பாக்கறோம். ரேவதியும் நானும் ரொம்ப வருஷமா காதலிக்கிறோம். ஆனா, ஒவ்வொரு முறையும் நான் சொல்லும் போது இப்ப வேண்டாம்... இப்ப வேண்டாம் என்று ரேவதி தடுத்துக்கொண்டே வந்தா. கடைசியில இன்னைக்கு எங்க ஆபீஸ் நண்பனோட கல்யாணத்துக்கு நாங்களும் போயிருந்தோம்.
இந்த முகூர்த்தத்துல நாமளும் கல்யாணம் பண்ணிக்கலாம்னு தீர்மானிச்சோம். காலைலதான் தாலி, கொலுசு, மெட்டி எல்லாம் வாங்கிட்டு வந்தேன்...‘வீட்டுல ரொம்பக் கண்டிப்பா இருந்து பழகிட்டேன். நேருக்கு நேர் அம்மா முகத்தைப் பாத்துக்கிட்டே பேசமுடியல்லை. அதான் ஒரு கடிதம் எழுதி வைச்சுட்டு அம்மாகிட்டே போன்லே சொல்லிடறேன்.
மாலையும் கழுத்துமாப் போனா அம்மா என்னை மன்னிச்சுடுவாங்க. ஆரத்தி எடுத்து வரவேற்பாங்க...’ அப்படின்னு சொன்னயே ரேவதி...உன்னோடு வரேன்னு சொன்னேனே ரேவதி... என்னைத் தடுத்து ‘கார்ல இடம் இல்லை. நீங்க தனியா வாங்க’ அப்படின்னு சொன்னியே... பாவி... நான் பாவி...’’ என்று தலையில் அடித்துக் கொண்டு பரணி அழ... தொலைந்த மின்சாரம் மீண்டும் வர... மின்விசிறி உயிர்பெற்று ஸ்ட்ரெச்சரில் முகத்தின் திரையை விலக்க... கழுத்தில் புத்தம்புது தாலியுடன் மஞ்சள் பூசிய முகத்துடன் தீர்க்கசுமங்கலியாக காலில் கொலுசு, மெட்டியுடன்... ரேவதி வந்துவிட்டாள்.இனிதான் பேரிளம்பெண்ணின் ஊர்வலம் ஆரம்பம். சமையல் அறையில் வைக்கப்பட்டிருந்த அந்தக் கடிதம் பிரிக்கப்படாமலேயே இறந்துபோனது.
விமலா ரமணி
|