சொந்த செலவில் குழந்தைகளின் கதைகளை புத்தகமாக வெளியிடும் ஆசிரியை!



பெரும்பாலும் சிறார் இலக்கிய நூல்கள் பெரியவர்களால் மட்டுமே எழுதப்பட்டு வருகின்றன. சிறார்களே கதைகள் எழுதுதல் என்பது ரொம்பவே குறைவு. ஏனெனில், வாசிக்கும் அளவிற்கு அவர்களுக்கு எழுத்து நடை கைகூடி வருவதில்லை!ஆனால், குழந்தைகளிடம் கதைகள் ஏராளம் இருக்கின்றன. அவை பெரியவர்களின் உலகத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டவை. 
தனித்துவமாக மிளிர்பவை. இருந்தும் அவை எழுத்தாக மாறுவதில்லை. அந்தக்குறையை இப்போது நிவர்த்தி செய்திருக்கிறார் அரசுப் பள்ளி ஆசிரியையான பூர்ணிமா பார்த்தசாரதி. இவர், தான் வகுப்பெடுக்கும் மூன்றாம் வகுப்பு குழந்தைகளின் கதைகளைத் தொகுத்து புத்தகங்களாக்கி நம்முன் கொண்டு வந்திருக்கிறார்.

‘கதைகள் - மூன்றாம் வகுப்பு மாணவர்கள், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கன்னிகாபுரம்’ என ஒவ்வொரு புத்தக அட்டையிலும் போட்டிருப்பது அத்தனை வியப்பைத் தருகிறது.
கடந்த 2022ம் ஆண்டிலிருந்து இந்தப் பணியைச் செய்துவரும் அவர் சமீபத்தில் ஐந்தாவது நூலை வெளியிட்டு ஆச்சரியப்படுத்தி உள்ளார். இதற்கு பள்ளியின் தலைமையாசிரியர் உள்பட அனைத்து ஆசிரியர்களும் அவருக்கு ஒத்துழைப்பு நல்குகின்றனர். 
 ‘‘எங்க மாணவ - மாணவிகளின் தனித்திறனை வெளிக்கொண்டு வரும் ஒரு முயற்சியாக மட்டுமே இதைச் செய்றேன். கூடவே, இதன்வழியாக அவங்களுக்கு சிந்திக்கும் ஆற்றலும், வாசிப்புப் பழக்கமும் உருவாகும்...’’ என நம்பிக்கையாகப் பேசும் ஆசிரியை பூர்ணிமாவுக்கு சொந்த ஊர் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டத்திலிருக்கும் களம்பூர்.

‘‘நான் படிச்சதெல்லாம் அரசுப் பள்ளியில்தான். ஆசிரியர் பயிற்சி முடிச்சிட்டு, 2004ம் ஆண்டிலிருந்து அரசுப் பள்ளி ஆசிரியராக இருக்கேன். கடந்த 2011ம் ஆண்டிலிருந்து இந்த கன்னிகாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராகப் பணியாற்றுறேன். இங்க மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்பெடுக்குறேன்.   முன்னாடி நான் படிக்கிறப்ப நன்னெறி வகுப்பு இருந்தது. அந்த வகுப்புல குழந்தைகளுக்குக் கதைகள் சொல்வாங்க. இப்ப அந்தப் பழக்கமே இல்லாமல் போயிடுச்சு.

வீட்டுல பெற்றோரும் வேலைக்குப் போறதால குழந்தைகளுக்கு கதைகள் சொல்ல நேரமில்ல. தாத்தா, பாட்டியுடன் இருக்கிற குழந்தைகளுக்குக் கதைகள் கேட்குற வாய்ப்பு கிடைக்கும். அப்படியில்லாத குழந்தைகளுக்கு அந்த வாய்ப்பு இருக்காது. 

ஆக, கதை சொல்லல் என்கிற விஷயம் குடும்பங்கள்ல இருந்து மறைஞ்சிட்டு வருது. அதனால், நான் இந்தக் குழந்தைகளுக்கு நிறைய கதைகள் சொல்றேன். என்னுடன் குழந்தைகள் ரொம்ப நெருக்கமானதற்குக் காரணமே கதைகள்தான். தினமும் ஒரு கதைனு மதியம் மூன்றரை மணிக்குமேல் குழந்தைகளை வட்டமாக உட்கார வச்சு சொல்வேன்.

நான் வாசிச்ச நூல்கள், சின்ன வயசுல என் தாத்தா, பாட்டி, அப்பா, அம்மாவிடம் கேட்டதுனு எல்லா கதைகளும் அதிலிருக்கும். இப்ப தமிழ்நாடு அரசு, ‘புத்தகப் பூங்கொத்து’னு ஒரு திட்டம் கொண்டு வந்திருக்காங்க. அதன்வழியாக நிறைய கதைப் புத்தகங்களைப் பள்ளிகளுக்குக் கொடுத்திருக்காங்க.தவிர, என் வகுப்பறையில் நான் சிறார் நூலகம் அமைச்சிருக்கேன். இதிலுள்ள புத்தகங்களில் இருந்து கதைகளை எடுத்து சொல்றேன். குழந்தைகளும் ரொம்ப ஆர்வமா கதை கேட்பாங்க.

அப்புறம், அவங்கள கதை சொல்ல வைப்பேன். அவங்க உலகம் அலாதியானது. நாம் யோசிக்க முடியாத விஷயங்கள்கூட அவங்க கற்பனையில் உதிக்கும்.   
இப்படி போயிட்டிருந்த நேரம்தான் புத்தகம் கொண்டு வர்ற ஐடியா உதயமாச்சு. அதுவும் குழந்தைகளே கேட்டாங்க...’’ என்கிற பூர்ணிமா புன்னகையோடு தொடர்ந்தார்.
‘‘பொதுவாக குழந்தைகள்ல சிலர் அதிபுத்திசாலியாக இருப்பாங்க. அப்படியாக சில குழந்தைகள் ஒருநாள் புத்தகத்திலுள்ள கதையை சொல்லி முடிச்சதும், ‘நாங்கெல்லாம் புத்தகம் எழுதக்கூடாதா டீச்சர்? இதுமாதிரி எங்கக் கதையும் வருமா டீச்சர்’னு கேட்டாங்க.

நான் தாராளமா எழுதலாம்னு சொன்னேன். உடனே அந்தக் குழந்தைகள், ‘இதை யார் போடுவாங்க. ரொம்ப செலவாகுமே’னு சொன்னாங்க. எப்படி இப்படியெல்லாம் கேட்குறாங்கனு எனக்கு ஆச்சரியமாக இருந்தது.‘எவ்வளவு செலவானாலும் பரவாயில்ல. நான் போடுறேன்’னு சொன்னேன். 

அதுக்கு அவங்க, ‘நிஜமாவா சொல்றீங்க டீச்சர்’னு ரொம்ப வியப்பா கேட்டது எனக்கு அவ்வளவு சந்தோஷத்தைத் தந்தது. நான் இந்தப் பள்ளிக்கு வந்ததிலிருந்து 13 ஆண்டுகளாக கதைகள் சொல்றேன். ஆனா, இந்தக் கேள்வியை இதுக்கு முன்னாடி படிச்ச குழந்தைகள் யாரும் என்கிட்ட கேட்கல. அப்படி கேட்டிருந்தால் முன்னாடியே பண்ணியிருப்பேன்.  

2022ல் படிச்ச அந்தக் குழந்தைகள்தான் கேட்டாங்க. அப்படியாக அவங்க சொன்ன கதைகளைத் தொகுத்து, ‘திராட்சை தோட்டம்’னு முதல் நூல் கொண்டு வந்தேன்.  
அடுத்து, ‘ஸ்கூல் போன யானைக்குட்டி’, ‘ஐஸ் வண்டி’னு 2023ல் ரெண்டு நூல்கள் வந்தன. இதிலுள்ள கதைகள் எல்லாமே என் மூன்றாம் வகுப்புக் குழந்தைகள் சொன்னதுதான். நூல்களின் அட்டையிலும், கதைகள் மூன்றாம் வகுப்பு மாணவர்கள்னே போட்டிருக்கிறேன்.  

குழந்தைகளுக்கு எழுத்து நடை வராது. அதனால், குழந்தைகளைச் சொல்லச் சொல்லி அதனை செல்போன்ல வாய்ஸ் ரிக்கார்டு செய்திடுவேன். பிறகு, வீட்டுக்கு வந்ததும் அதை எழுதுவேன். அவங்க எப்படி சொன்னாங்களோ அதே மொழியில் எழுதுவேன். அப்பதான் அது அவங்க சொன்ன கதைகளாக இருக்கும்...’’ என்கிற பூர்ணிமா ஒவ்வொரு கதையின் முடிவிலும் அந்தக் கதை சொன்ன குழந்தையின் பெயரையும், புகைப்படத்தையும் பதிவிடுகிறார்.

‘‘ஒவ்வொரு புத்தகத்திலும் 11 அல்லது 12 கதைகள் இருக்கிறமாதிரி பார்த்துக் கிறேன். கதையின் முடிவில் அவங்கபெயரையும், புகைப்படத்தையும் போடுறேன். இது அவங்களுக்கு இன்னும் ஆர்வத்தைக் கொடுக்குது. அதனால், ஆரம்பத்துல கதைகள் சொல்லாத குழந்தைகளும் இப்ப, ‘டீச்சர் நான் சொல்றேன்’னு முன்வர்றாங்க. 

இதிலுள்ள கதைகள் எல்லாம் ஒன்றிரண்டு பக்கங்கள்தான். ஏன்னா, அதிகம் எழுதினால் குழந்தைகள் படிக்க யோசிப்பாங்க. அப்புறம், ஆரம்பத்துல குழந்தைகள் கேட்டதும் புத்தகமாகப் போடலாமா... போட்டால் எப்படியிருக்கும்னு எல்லாம் எனக்கு நிறைய கேள்விகளும், குழப்பங்களும் மனசுல இருந்துச்சு. இருந்தும் முதல்ல முயற்சி செய்வோம். அப்புறம் பார்த்துக்கலாம்னு நம்பிக்கை ஏற்பட்டுச்சு.

பிறகு, தலைமையாசிரியர் உள்ளிட்ட அனைத்து ஆசிரியர்களிடமும் கேட்டேன். எல்லோரும் ஒத்துழைப்பு கொடுத்தாங்க. அப்புறம், சில பதிப்பகங்களிடம் பேசினேன். ஆனா, அவங்க பிராண்டை பயன்படுத்தும்போது பிரின்ட் பண்ற செலவு அதிகமாக இருந்தது. அதனால், நானே என் மகன்களின் பெயர்களை வச்சு மணிமோகன் பதிப்பகம்னு தொடங்கினேன். அதன்வழியாக இந்தப் புத்தகங்களை எடுத்திட்டு வர்றேன்.

இதனை லாப நோக்கத்துடன் ஆரம்பிக்கல. என் வகுப்பு குழந்தைகளின் கதைகளைப் புத்தகமாகப் போடணும். அதற்கு ஒரு பதிப்பகம் தேவை. அவ்வளவுதான். இப்ப இந்தப் பதிப்பகம் வழியாக ஐந்து புத்தகங்கள் கொண்டு வந்திருக்கேன். எல்லாமே என்னுடைய சொந்த செலவுதான். இதுல முதல் நூல், ‘திராட்சை தோட்டம்’ 300 புத்தகம் போட்டோம். எல்லாேம விற்பனையாகிடுச்சு. நான் ஐம்பது காப்பிகளை மட்டும் எடுத்திட்டு, மற்றதை ஆரணியிலுள்ள ‘ழ புத்தகக்கூடு’ கடைக்குக் கொடுத்திடுவேன்.   

அவங்க விற்பனையைப் பார்த்துப்பாங்க. அதனால், எனக்கும் விற்பனைக்கும் சம்பந்தம் கிடையாது. என்னுடைய ஐம்பது காப்பிகள்ல கதை எழுதின குழந்தைகள், ஆசிரியர்கள்னு எல்லோருக்கும் ஒரு காப்பி கொடுக்குறேன். 

எங்களின் முதல் புத்தகத்தை அப்போது திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக இருந்த கணேசமூர்த்தி சார் வெளியிட்டார். அவர்கிட்ட போய் சொன்னதும் ரொம்ப சந்தோஷப்பட்டு பாராட்டினார்...’’ என உற்சாகமாகச் சொல்பவர் இந்த ஆண்டு இரண்டு நூல்கள் கொண்டு வந்துள்ளார்.

‘‘இந்த ஆண்டு, ‘லெமன் ஜூஸ் குடிச்ச முயல்’, ‘பரிசு வாங்கிய பனிக்கரடி’னு ரெண்டு நூல்கள் கொண்டு வந்திருக்கேன். ஒரு பருவத்திற்கு ஒரு புத்தகம்னு செய்றேன். அப்படியாக ஓராண்டுக்கு மூணு அல்லது ஐந்து புத்தகம் வரை கொண்டு வர திட்டம். 

ஆனா, இது குழந்தைகளின் ஆற்றலைப் பொறுத்து அமையும்.அடுத்த புத்தகத்தை வருகிற நவம்பர் 14ம் தேதி குழந்தைகள் தினத்தன்று கொண்டு வரலாம்னு ப்ளான் பண்ணியிருக்கேன். டிசைனும், பிரின்ட்டிங்கும் அதை சாத்தியப்படுத்துமானு தெரியல...’’ என்கிற பூர்ணிமா எதிர்காலத் திட்டங்கள் நிறைய வைத்திருக்கிறார்.

‘‘அடுத்த ஆண்டு மே மாசம் கதைத் திருவிழானு ஒரு நிகழ்வு நடத்தணும்னு நினைச்சிருக்கேன். ஒரு நாள் பயிற்சி முகாம் மாதிரி. இதில் தமிழ்நாட்டில் உள்ள சிறார் எழுத்தாளர்களை அழைச்சிட்டு வந்து எப்படி கதை எழுதணும் என்பதை குழந்தைகளுக்கு எளிமையாக சொல்லித் தர்ற நிகழ்வாக பண்ற திட்டம்.இதுல என் வகுப்பு குழந்தைகள் மட்டுமில்லாமல் எங்க பள்ளியில் படிக்கிற எட்டாம் வகுப்பு வரை உள்ள அனைத்து குழந்தைகளும் கலந்துக்கிறமாதிரி செய்ய இருக்கேன்.

இதன்மூலம் குழந்தைகளிடம் வாசிப்பு மற்றும் எழுதுகிற பழக்கத்தை எழுச்சி பெற வைக்கலாம். பின்னாளில் இது அவங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். சிறந்த ஆளுமையாக வருவதற்கும் உதவும்.  அடுத்து, இந்தப் புத்தகங்களை ஆங்கிலத்துல மொழிபெயர்க்கணும்னு நினைச்சிருக்கேன். அப்புறம், தமிழ்ல எழுதி அதன்கீழ் ஆங்கிலத்திலும் கொடுக்கணும்னு இருக்கேன். ரொம்ப எளிதான சொற்றொடராக இருந்தாலும் அதனை மாணவர்களே செய்யணும் என்பதுதான் என் விருப்பம்.

இதனை ஐந்தாம் வகுப்பு, ஆறாம் வகுப்பு மாணவர்களைக் கொண்டு செய்யணும். பிறகு, ஒரு புத்தகம் முழுவதும் ஆங்கிலத்துல எழுதணும்னு ஆசையிருக்கு. ஏன்னா, மற்ற தனியார் பள்ளி மாணவர்களுக்கு சமமாக அரசுப் பள்ளி மாணவர்கள் இருக்காங்கனு சொல்லணும்.

அப்புறம், என் மூன்றாம் வகுப்பு குழந்தைகள் மட்டுமில்லாமல் எல்லா வகுப்பு குழந்தைகளையும் கதைகள் சொல்ல வச்சு நூல் கொண்டு வரும் திட்டமும் இருக்கு. ஏன்னா, என்னிடம் மூன்றாம் வகுப்பு படிச்சிட்டு போன குழந்தைகள் எட்டாம் வகுப்பு வரை இருக்காங்க. அவங்க, ‘டீச்சர் நாங்கெல்லாம் இதுல பங்குபெற முடியாதா’னு கேட்குறாங்க. அவங்களுக்காக செய்ய இருக்கேன்.

அப்ப ஒரு பருவத்திற்கு மூணு புத்தகங்கள்னு ஆண்டுக்கு 12  புத்தகங்கள் வரை கொண்டு வரலாம். இதுக்கான செலவை நான் பெரிசா நினைக்கல. குழந்தைகளுக்கு ஆசிரியராக இருப்பதன் மூலமாகத்தான் நான் சம்பாதிக்கிறேன். அதிலிருந்து கிடைக்கும் ஊதியத்தில் சிறு பங்கையே இதற்காகச் செலவழிக்கிறேன். எனக்கு என் பள்ளிக் குழந்தைகள்தான் உலகம். அதைத்தாண்டி வேறெதுவு மில்ல...’’ ஆத்மார்த்தமாகச் சொல்லி பூரிக்கிறார் ஆசிரியை பூர்ணிமா பார்த்தசாரதி.  

செய்தி: பேராச்சி கண்ணன்

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்