சுய திருமணம் செய்து கொண்ட பாப் இளவரசி!



இருபத்தியொன்றாம் நூற்றாண்டில் பிரபலமாகி வரும் ஒரு நிகழ்வு, சுய திருமணம். மண்டபம் பிடித்து, விருந்தினர்களை அழைத்து, சுவையான விருந்து வைத்து, பலரின் முன்னணியில் தன்னைத் தானே திருமணம் செய்துகொள்வதுதான் இந்த சுய திருமணம். ஆண்களைவிட, பெண்கள்தான் அதிகமாக சுய திருமணம் செய்துகொள்வதாக ஆய்வுகள் சொல்கின்றன. அதுவும் வசதிபடைத்த பெண்கள்தான் இதில் ஈடுபடுகின்றனர்.

கடந்த 2014ம் வருடம் இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி சுய திருமணம் செய்துகொண்டார். இதுதான் இணையத்தில் வைரலான முதல் சுய திருமணம்.
இதற்குப் பிறகு 2017ம் வருடம் இத்தாலியைச் சேர்ந்த ஒரு பெண் சுய திருமணம் செய்துகொண்டதோடு, தேன் நிலவுக்கும் சென்று வைரலானார். இதனையொட்டி சுய திருமணம் செய்துகொண்டவர்களுக்கான டிராவல் பேக்கேஜிங்குகளைக் கூட அறிமுகம் செய்தன டிராவல்  நிறுவனங்கள்.

2021ம் வருடம் ஃபிரான்ஸைச் சேர்ந்த ஒரு பெண் சுய திருமணம் செய்த சில நாட்களிலேயே, சுய விவாகரத்தும் செய்துகொண்டது பெரும் வைரலானது!

கடந்த 2022ம் வருடம் இந்து மதத்தின் அனைத்து சடங்குகளுடன், குஜராத்தைச் சேர்ந்த பிந்து என்ற பெண் சுய திருமணம் செய்துகொண்டார். இதுதான் இந்தியாவில் நடந்த முதல் சுய திருமணம். இப்படி நிறைய சுய திருமணங்கள் நடந்திருந்தாலும், கடந்த வாரம் நடந்த ஒரு சுய திருமணம் உலகையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.

ஆம்: கடந்த வாரம் தன்னையே திருமணம் செய்துகொண்டார்  பாப் இசையுலகின் இளவரசியான பிரிட்னி ஸ்பியர்ஸ்!

இவருக்குத் தனியாக அறிமுகம் தேவையில்லை. பிரிட்னியின் சுய திருமணம் ஆச்சர்யத்தைக் கிளப்பிருந்தாலும், இன்னொரு பக்கம் அதிர்ச்சியையும் கிளப்பியிருக்கிறது.
‘‘இது உங்களுக்கு சங்கடத்தைத் தரலாம் அல்லது முட்டாள்தனமாகத் தெரியலாம். 

ஆனால், என்னையே நான் திருமணம் செய்துகொண்டதுதான் என் வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய புத்திசாலித்தனமான செயல்...’’ என்று சுய திருமணத்தையொட்டி சமூக வலைத்தளத்தில் பிரிட்னி ஸ்பியர்ஸ் இட்ட இந்தப் பதிவுதான் இப்போது செம வைரல்.

மூன்று திருமணங்களில் கிடைத்த ஏமாற்றத்துக்குப் பிறகுதான் பிரிட்னி இந்த முடிவுக்கு வந்திருக்கிறார். ஆம்; கடந்த 2004ம் வருடம் ஜனவரி மாதம் 3ம் தேதியன்று தனது குழந்தைப்பருவ நண்பரான ஜேஸன் அலெக்சாண்டரைத் திருமணம் செய்தார் பிரிட்னி. இதுதான் அவரது முதல் திருமணம்.  

இரண்டு பேரும் ஜாலியாக ஒரு பயணம் சென்றனர்; விருந்து நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர். திருமணம் முடிந்த 55வது மணி நேரத்திலேயே பிரிந்துவிட்டனர்!யெஸ். பிரிட்னி - ஜேஸனின் திருமணம் மூன்றாவது நாளிலேயே ரத்து செய்யப்பட்டது. திருமணம் முடிந்த சில மணி நேரங்களிலேயே, பிரிவையும் சந்தித்த உலகப் பிரபலம் பிரிட்னியாகத்தான் இருக்க வேண்டும்.

அடுத்து 2004ம் வருடம், செப்டம்பர் மாதத்தில் அமெரிக்காவின் நடனக் கலைஞர் மற்றும் நடிகரான கெவின் ஃபெடர்லைனைத் திருமணம் செய்தார் பிரிட்னி. இந்தத் திருமணம் 2007ம் வருடம் வரைதான் நீடித்தது. இந்த ஜோடிக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். கெவினுக்குப் பிறகு யாரையும் திருமணம் செய்ய வேண்டாம் என்ற முடிவுக்கு வந்தார் பிரிட்னி. 

பல பிரபலங்களுடன் காதல் உறவில் இருந்தாலும், அந்த உறவை அவர் திருமணம் வரை கொண்டு போகவில்லை. ஈரானிய மாடல், நடிகர், ஃபிட்னஸ் பயிற்சியாளர் என பன்முகம் கொண்ட சாம் அஸ்காரியுடன் டேட்டிங் செய்ய ஆரம்பித்தார். பிரிட்னியைவிட 12 வயது இளையவர் சாம் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2022ம் வருடம், ஜூன் மாதத்தில் தனது வீட்டில் பிரமாண்ட கொண்டாட்டத்துடன் சாமைத் திருமணம் செய்துகொண்டார் பிரிட்னி. அப்போது சாமின் வயது 28; பிரிட்னிக்கு 40.
பிரிட்னியின் மூன்றாவது திருமணம் பரபரப்பான ஒரு செய்தியாக மாறியது. இத்திருமணம் முடிந்த ஒரு வருடத்திலேயே, அதாவது 2023ம் வருடம், ஆகஸ்ட் மாதத்தில், ‘‘இருவருக்கும் இடையில் சமரசம் செய்ய முடியாத ஏராளமான வேறுபாடுகள் இருக்கின்றன...’’ என்று  விவாகரத்துக்கு விண்ணப்பித்தார் சாம். செப்டம்பர், 2023-லேயே இருவரும் பிரிந்துவிட்டனர்.

‘‘ஆண்களுடனான திருமண வாழ்க்கை மிக மோசமான அனுபவங்களைக் கொடுத்திருக்கலாம். அதனாலேயே பிரிட்னி தன்னையே திருமணம் செய்யும் முடிவுக்கு வந்திருக்கிறார்...’’ என்கின்றனர் அவரது ரசிகர்கள். சமூக வலைத்தளங்களில் பிரிட்னியின் சுய திருமணத்துக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

த.சக்திவேல்