பொங்கிய ரைட்டர்ஸ்... சரிகிறதா ஹாலிவுட்டும் ஓடிடியும்..?



ஹாலிவுட் திரைப்படங்களுக்கு என்று தனியாக அறிமுகம் தேவையில்லை. அந்தளவுக்குத் திரைப்பட ரசிகர்களின் மத்தியில் ஹாலிவுட்டுக்குத் தனி மவுசு. திரையரங்குகள் இருக்கின்ற எல்லா நாடுகளிலும் ஹாலிவுட் படங்கள் வெளியாகின்றன என்பது அதன் தனிச்சிறப்பு. அதிக பொருட்செலவில் படங்களைத் தயாரிப்பதோடு மட்டுமல்லாமல், அதிக வசூலைக் குவிக்கும் திரைப்படங்களும் ஹாலிவுட்டில் இருந்துதான் வெளிவருகின்றன்.

தங்களின் ஊர்களில் முன்னணியில் இருக்கும் நடிகர்களுக்குக்கூட, எப்படியாவது ஹாலிவுட் படங்களில் தலையைக் காட்டி விட வேண்டும் என்ற ஆசையிருக்கும்.
அந்தளவுக்குப் புகழ்பெற்ற நடிகர்களுக்குக்கூட ஹாலிவுட் என்பது பெருங்கனவு. இப்படிப்பட்ட ஹாலிவுட் வீழ்ச்சியை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது என்பதுதான் சினிமா உலகில்

ஹாட் டாக்.
ஆம்; கொரோனோ லாக்டவுனால் ஏற்பட்ட பாதிப்புகள்... மாதக்கணக்காக நீண்ட ஹாலிவுட் எழுத்தாளர்களின் வேலை நிறுத்தம்... முன்பைவிட மிகக்குறைந்த எண்ணிக்கையில் தயாராகும் ஹாலிவுட் படங்கள்... தவிர, அறிவிப்பு கொடுக்கப்பட்ட பல படங்கள் அறிவிப்புடனே நின்றிருக்கும் சோகம்... அந்தப் படங்களைப் பற்றிய தகவல்கள் கூட கிடைப்பதில்லை. என்ற நிலை...

இன்னொரு பக்கம் சமீப நாட்களில் திரையரங்குகளில் வெளியாகும் ஹாலிவுட் படங்கள் தரமாக இருப்பதில்லை; கதைகள் சுவாரஸ்யமற்று இருக்கின்றன; கடமைக்கு என்று படங்களை எடுத்திருப்பது போல இருக்கின்றன என்ற ரசிகர்களின் விமர்சனங்கள்...

இதுபோக பெரும்பாலான ஹாலிவுட் படங்களின் வசூல், தயாரிப்புச் செலவைக்கூட நெருங்குவதில்லை. இதையெல்லாம் வைத்து, ஆராய்ந்துதான் ஹாலிவுட் வீழ்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்கின்றனர் நிபுணர்கள். மட்டுமல்ல, முன்பு போல ஹாலிவுட் மேலே எழுந்து வருவதும் சிரமம் என்று அதிர்ச்சியளிக்கின்றனர். இதற்கு உதாரணமாக ஹாலிவுட்டில் பணிபுரியும் பலரது கதைகளைச் சொல்லலாம். அதில் ஒன்று இதோ:

‘நெட்பிளிக்ஸ்’, ‘அமேசான்’, ‘டிஸ்னி’ போன்ற ஓடிடி தளங்களில் வெளியாகும் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கான வான்வழிக் காட்சிகளை ட்ரோன் மூலமாக நேர்த்தியாக எடுத்து தருவதற்காக ஒரு ஒளிப்பதிவாளர் இருந்தார். இதற்காகவே பிரத்யேகமான ஒரு ட்ரோன் நிறுவனத்தை நடத்தி வந்தார். இதில் பத்துக்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்து வந்தனர்.

அவரது ட்ரோன் நிறுவனம் ஓடிடிகள் மட்டுமல்லாமல், ஹாலிவுட் படங்களிலும் வேலை செய்து வந்தது. தனித்துவமான அவருக்குப் பெரிதாக போட்டிகளே இல்லை.
2010களில் அவரது காட்டில் பண மழை பொழிந்தது. அவரது கால்ஷீட் கிடைப்பதே சிரமம். அந்தளவுக்கு பிஸியாக இருந்தார். தினமும் குறைந்தபட்சம் பத்து மணி நேரமாவது அவருக்கு வேலை இருந்தது. ஒருவிதமான பொற்காலத்தில் இருந்தார் அந்த ஒளிப்பதிவாளர்.

ஒரு ஹோட்டலுக்குக் குடும்பத்துடன் சாப்பிடச் சென்றாலே பத்தாயிரம் ரூபாயை செலவழிக்கும் அளவுக்கு அவரிடம் பணம் இருந்தது. ஆனால், இன்று 200 ரூபாய் கொடுத்து ஒரு பர்கர் வாங்குவதற்குக் கூட யோசிக்கும் அளவுக்கு அவரது பொருளாதாரம் சரிந்துவிட்டது. இப்போது சொந்தமாக வீடு கூட இல்லாமல், குறைவான வாடகை கொடுத்து சிறிய வீட்டில் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

குறைவான வாடகைக்கு இடம் தேடி அடிக்கடி தனது இருப்பிடத்தை மாற்றுகின்ற சூழலில் வாழ்ந்து வருகிறார். காரணம், 2023ம் வருடம் மே மாதம் ஹாலிவுட்டின் எழுத்தாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதன் பொருட்டு பல படங்களின் தயாரிப்பு வேலைகள் பாதிக்கப்பட்டன. கதைகள் இல்லாமல் படத்தயாரிப்பு வேலையும் நலிவடைந்தது.

ஹாலிவுட்டுக்கு மட்டுமல்லாமல், ஓடிடிகளிலும் அந்த எழுத்தாளர்கள் முக்கியமான பங்களிப்பைச் செய்து வந்தனர். அதனால் ஓடிடிகளும் பாதிக்கப்பட்டன. எழுத்தாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து டெனிஸ் வில்னவ் போன்ற பல இயக்குநர்கள் தங்களின் படங்களை வெளியிடாமல் நிறுத்தி வைத்தனர். 

ஹாலிவுட்டே சத்தமில்லாமல் மௌனமானது.
இந்த வேலை நிறுத்தத்துக்கு முன்பு ஓடிடி தளங்களுடன் போட்டி போட்டுக்கொண்டு ஹாலிவுட்டும் பல படங்களைத் தயாரித்து, வசூலை அள்ளியது. ஆனால், எழுத்தாளர்களின் வேலை நிறுத்தத்தால் ஹாலிவுட்டின் வளர்ச்சி அப்படியே நின்றுவிட்டது.

ஹாலிவுட் என்றாலே தொழில்நுட்பம் என்று நினைத்துக்கொண்டிருந்த மக்களுக்கு, அதன் முதுகெலும்பே எழுத்தாளர்கள்தான் என்பது தெரியவந்தது. புதிதாக படத்தை வெளியிடாததால் வணிக ரீதியாக ஹாலிவுட் சரிவைச் சந்திக்கத் தொடங்கியது. 

இந்த வேலை நிறுத்தம் சில நாட்களில் முடிவடையாமல், பல மாதங்களுக்கு நீடித்துச் சென்றது. அதனால் ஓடிடி தளங்களுக்குக்கூட நல்ல படைப்புகள் கிடைக்கவில்லை. பல ஓடிடி நிறுவனங்கள் பழைய படங்களின் உரிமைகளை வாங்கி வெளியிட ஆரம்பித்தன. திரையரங்குகளிலும் பழைய ஹாலிவுட் படங்கள் மறு வெளியீடு செய்யப்பட்டன.

இந்த வேலை நிறுத்தத்தால் அந்த ஒளிப்பதிவாளருக்கு வேலையே இல்லை. அதாவது 2023ம் வருடத்தில் வெறும் 22 நாட்கள் மட்டுமே அவருக்கு வேலை இருந்தது.
வருமானத்துக்காக துணை நடிகராக நடித்தார். இந்த வேலையும் பத்து நாட்களுக்கு மேல் கிடைக்கவில்லை. 22 நாட்கள் கிடைத்த வருமானத்தை வைத்துத்தான் 2023ம் வருடத்தையே அவர் ஓட்ட வேண்டியிருந்தது. 

வருமானத்துக்காக வேறு சில வேலைகளையும் அவர் செய்ய வேண்டியிருந்தது. அந்த ஒளிப்பதிவாளரைப் போலவே ஹாலிவுட்டில் பணிபுரிந்த ஆயிரக்கணக்கானவர்கள் வேலை இல்லாமல், வருமானம் இழந்து தவித்தனர். தவிர, எடுக்கப்பட்ட படங்களும் வெளியாகாமல் அப்படியே கிடந்தன.

இதுபோக ஹாலிவுட்டில் வீற்றிருக்கும் பல ஸ்டூடியோக்களில் வேலை இல்லாத ஒரு நிலை உருவானது. தயாரிப்பதற்காக திட்டமிடப்பட்ட படங்களும் நின்று போயின.
இந்தப் படங்களில் வேலை செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான தொழில்நுட்பக் கலைஞர்களும், நடிகர், நடிகைகளும் பாதிக்கப்பட்டனர். 

தவிர, முக்கிய ஸ்டூடியோக்களில் ஊழியர்களை பணி நீக்கம் செய்தனர். பலருக்கு சம்பளமே தரப்படவில்லை. ஆயிரக்கணக்கான தொழில்நுட்பக் கலைஞர்கள் சம்பளம் வேண்டி ஸ்டூடியோக்களின் முன்பு போராட்டம் நடத்தினர்.

உண்மையில் ஹாலிவுட்டின் வீழ்ச்சி திரைப்பட ரசிகர்களை மட்டுமல்லாமல், ஹாலிவுட்டில் பணிபுரிந்து வரும் ஆயிரக்கணக்கானவர்களின் வாழ்க்கையையும், அவர்களின் பொருளாதாரத்தையும் வெகுவாக பாதித்திருக்கிறது. அதனால் ஹாலிவுட்டை எப்படியாவது பழைய பன்னீர்செல்வமாக மாற்றுவதற்கு உண்டான வேலைகளும் நடக்க ஆரம்பித்திருக்கிறது. விரைவில் ஹாலிவுட் மேலே எழும் என்பதுதான் திரைப்பட ரசிகர்களின் நம்பிக்கை.

த.சக்திவேல்