பான் இந்தியா என்ற வார்த்தையை வெறுக்கிறேன்!
துல்கர் சல்மான் Exclusive!
மும்பை நகரின் பின்னணி, ஃபார்மல் லுக், மேல் பங்க் ஹேர் ஸ்டைல்... பணமும் பத்திரங்களும் ஒரு பக்கம் பறக்க மர்ம சிரிப்பும் மாஸ் என்ட்ரியுமாக கவனம் ஈர்க்கிறார் துல்கர் சல்மான். தனுஷ் நடிப்பில் ‘வாத்தி’ படத்தை இயக்கிய வெங்கி அட்லுரியின் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிக்கும் நேரடி தெலுங்கு மற்றும் தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாக இருக்கிறது; தீபாவளி ரேஸிலும் இணைந்திருக்கிறது ‘லக்கி பாஸ்கர்’.
‘‘திஸ் இஸ் இந்தியா... பொருள் வேணும்ன்னா பணம் கொடுத்து வாங்கணும்... ரெஸ்பெக்ட் வேணும்ன்னா நம்ம உடம்பு மேல பணம் தெரியணும்...’ என டிரெய்லர்லயே இப்படி ஒரு ஸ்ட்ராங் மெசேஜ்...’ கேட்டவுடன் கணீர் குரலில் சிரிக்கிறார் துல்கர் சல்மான். ‘‘மனுஷங்க வாழ்க்கையில பணம் இன்னைக்கு மட்டும் இல்ல எப்பவுமே ஒரு கேம் ஆடும். அந்த கேம் அடிப்படையிலேதான் இந்தப் படம் உருவாகியிருக்கு...’’ புன்னகைக்கிறார் துல்கர் சல்மான்.
‘லக்கி பாஸ்கர்’ ஏன் லக்கி?
அதுதான் கதை. 80கள்ல மும்பையிலே ஒரு இளைஞன்... பேங்க்ல கம்மியா மாத சம்பளம் வாங்கிட்டு வறுமையிலே வேலை செய்கிறான். என்னதான் வறுமை ஒரு பக்கம் இருந்தாலும், இவனால என்ன முடியும்ன்னு உலகமே நினைச்சாலும் அவனுக்கு மிகப்பெரிய லக்கா ஒரு காதல். அந்தப் பெண்ணே மனைவியாக... அழகான குழந்தை இதெல்லாம் கிடைக்குது. அந்த வாழ்க்கைக்கு எதாவது செய்யணுமே... அப்போ ஒரே வழி பணம்தான். அந்தப் பணத்தை சம்பாதிக்க அவன் எந்த எல்லை வரை போறான்... அதனால் என்ன விளைவு... இதுதான் கதை. உங்க அப்பா மம்முட்டிக்கு ‘பாஸ்கர் த ராஸ்கல்’... உங்களுக்கு ‘லக்கி பாஸ்கரா’?
ஹாஹா..! ஆக்சுவலி எனக்கு அந்த பாஸ்கர் பெயர்தான் முதல்ல ஆர்வம் கொடுத்துச்சு. வெங்கி என்கிட்ட இந்தத் தலைப்பு சொல்லும்போதே ‘நான் லக்கியா’ன்னு கேட்டேன். அடுத்து ‘ஏன் பாஸ்கர் லக்கி’ன்னு கேட்டேன். அப்பாவுடைய ‘பாஸ்கர் த ராஸ்கல்’ கமர்சியலா கலக்கின படம். தமிழில் ரீமேக் கூட செய்தாங்க. அது பக்கா ஹீரோயிஸம் படம். இந்த பாஸ்கர் ஒரு கிரே ஷேட் ஹீரோ. ஆனால், வில்லன் இல்லை. ஒரு சாதாரண மனுஷன். ஆனால், அவனுக்குள்ள இருக்க இன்னொரு டார்க் பக்கம், அது இந்த பாஸ்கர என்னவா மாத்துது என்கிறதுதான் கதை. இயக்குநர் வெங்கி அட்லுரி கூட வேலை செய்த அனுபவம் பற்றி சொல்லுங்க..?
சின்சியர்; அதே சமயம் ரொம்ப நாளைக்கு அப்பறம் ஃப்ரண்ட்ஸா சேர்ந்து ஒரு படம் செய்த ஃபீல். கொஞ்சம் ரிலாக்ஸா இருந்துச்சு. ஏன்னா மணி சார், அனுராக் கஷ்யப் சார் செட்லல்லாம் அவ்ளோ ரிலாக்ஸா இருக்க முடியாது. ஏதோ ஒரு ஸ்கூல் ஃபீல் இருக்கும். அவங்க கூல்தான். ஆனால், நமக்கு தானாகவே ஒரு பயம் வரும்.
பட், இந்தப் படம்தான் சீரியஸ்; நாங்க செம கூலாக வேலை செய்தோம். அதுக்கு வெங்கிதான் காரணம். அவருடைய லுக் கிரியேஷன்லயே நான் சரண்டர் ஆகிட்டேன். ஒவ்வொரு டீடெயிலும் பார்த்து பார்த்து உருவாக்கினார்.
முதலில் என்.ஆர்.ஐ, அடுத்து காதல், இப்போ பீரியாடிக் படங்களா?
என்னமோ தெரியல... ஒவ்வொரு மூணு வருஷத்துக்கும் எனக்கு ஒரு சீசன் மாதிரி அமைஞ்சிடுது. ‘மகாநடி’ (தமிழில் ‘நடிகையர் திலகம்’) மாதிரி படம் வரும்போது எனக்கே அதிர்ச்சியா இருந்துச்சு. நான் ஜெமினிகணேசன் சார் மாதிரி இருக்கேனா, அவ்ளோ பெரிய பட்ஜெட் படம், அதில் என்னை வைத்து ரிஸ்க் எடுக்காதீங்க அப்படின்னு அப்போ நானே பின்வாங்கினேன்.
ஆனால், இயக்குநர் நாக் அஸ்வின் விடலை. அங்கே ஆரம்பித்தது இந்த பீரியாடிக் பட சீசன். தொடர்ந்து ‘சீதா ராமன்’, ‘குரூப்’, ‘கிங் ஆஃப் கொத்தா’... இப்படி வரிசையா பீரியாடிக் படங்கள்தான். நீங்க இப்ப கேட்கறீங்களே... இந்தக் கேள்வியே வந்துடுச்சு. இனிமே தவிர்க்கணும். ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொரு நடிகரும் ஆக்டரா வித்தி யாசமான விஷயங்கள் முயற்சி செய்துகிட்டே இருப்போம். அதிலே லுக் சேஞ்ஜ் ஒரு சீசன்.
இப்படி இதில் பெரும்பாலும் எல்லா நடிகர்களுமே இந்த பீரியாடிக் சீசனுக்குள்ள மாட்டிதான் வெளியே வந்திருப்பாங்க. ஆனா, இனிமே நோ. இப்போ என் ஒயிஃபே ‘என் ஹஸ்பண்ட் எங்கே... எப்போ பார்த்தாலும் எதாவது ஒரு லுக்ல இருக்கே’ன்னு கேட்கறாங்க!
நாயகி மீனாட்சி சௌத்ரி... மற்ற நடிகர்கள் பற்றி சொல்லுங்க..?
ஆறு வயது குழந்தைக்கு அம்மா! இதைக் கேட்டதும் நிறைய பேர் பின்வாங்கிட்டாங்க. ஆனால், ஓகே சொல்லி கதைக்குள் வந்தது மீனாட்சிதான். அப்போ மீனாட்சி ‘குண்டூர் காரம்’ படத்தில் நடிச்சிருந்தாங்க. இப்போ ‘கோட்’. தொடர்ந்து நிறைய பெரிய படங்களில் நடிச்சிட்டு இருக்கற டாப் ஹீரோயின். அடுத்து ராம்கி சார். ‘லக்கி பாஸ்கர்’ கதையை துவங்கி வைக்கிற நபரே அவர்தான். சின்ன வயதிலேயே ராம்கி சாரை எங்க வீட்டில் பார்த்திருக்கேன். அவருடைய படங்கள் எல்லாம் எனக்குப் பிடிக்கும். அவர் கூட சேர்ந்து நடிச்சது ரொம்ப சந்தோஷமா இருக்கு.
அடுத்து சின்ன பையன் ரித்து. எங்க செட்டுலயே ரீடேக் வாங்காத ஒரே ஆர்ட்டிஸ்ட் அவன்தான். ஒருமுறை ஒரு சின்ன மிஸ்டேக் விட்டுட்டான். மொத்த ஷூட்டிங் ஸ்பாட்டும் கொண்டாட்டமா கைதட்டினோம். ‘அப்பாடா அவனும் நம்மளை மாதிரி ஒரு நார்மல் மனுஷன்’தான் என்கிற ஃபீல் வந்துடுச்சு. இவங்கதான் மெயின் கேரக்டர்ஸ்.
எல்லா மொழிகளிலும் உங்களை ஏத்துக்கற ரகசியம் என்ன?
அதுதான் லக் என நினைக்கிறேன். நான் பிறந்த வீட்டிலிருந்தே எனக்கு லக் ஆரம்பிச்சுடுச்சு. அப்போ நான் பணத்துக்காக நடிக்கக் கூடாது... நடிச்சாலும் என் குடும்ப பின்னணியை அது பாதிக்கும். ‘இவன்கிட்ட இல்லாத பணமா... ஏன் இப்படி எல்லாம் கதை தேர்வு செய்கிறான்...’ அப்படின்னு கை நீட்டி சொல்லிடுவாங்க. அந்த காரணத்தாலேயே மொழி எனக்கு ரெண்டாம் பட்சம்தான்.
நல்ல கதை, நல்ல கேரக்டர்... இதைத்தான் நான் தேடி நடிக்கறேன். அதிலும் இந்த பான் இந்தியா வார்த்தைக்கும் நான் மயங்க மாட்டேன். ஐ ஹேட் பான் இந்தியா வார்த்தை. இன்னைக்கு எந்த மொழியில் எப்படிப் படம் எடுத்தாலும் தானாகவே ஓடிடியில் உலகம் முழுக்க பார்க்கலாம். அதேபோல ஒரு படம் நேஷனல் வெற்றி என்கிறது ஆடியன்ஸ் கையில் விட்டுடணும். நாமளா அந்த பான் இந்தியா டாக் பயன்படுத்திக்கிட்டு வர்றது சரியா படலை. எந்த மொழியானாலும் யோசிச்சு கதை தேர்வு செய்யறேன். அவ்வளவுதான்.
‘ஓகே கண்மணி’, ‘சீதா ராமம்’... போன்ற காதல் கதைகளை தவிர்க்கிறீர்களாமே?
இன்னும் கொஞ்ச நாட்கள்ல எனக்கு 40 வயசு. இனியும் நான் லவ் பண்ணிட்டு டூயட் பாடினா நல்லா இருக்குமா? நிறைய இளைஞர்கள் வந்துட்டாங்க. அவங்க லவ் பண்ணுவாங்க. இது வித்தியாசமான கதைகள், கேரக்டர்கள் செய்ய வேண்டிய காலகட்டமா எனக்கு நான் பார்க்கறேன். அதிலும் ‘ஓகே கண்மணி’ படம் மணி சார் + ரஹ்மான் சார் மேஜிக். ‘சீதா ராமம்’ கதையா கேட்கும் போது பாசிட்டிவா இருந்துச்சு.
ஆனால், இந்தக் காலத்தில் லெட்டர் கான்செப்ட் ஒர்க் அவுட் ஆகி இவ்வளவு பெரிய ஹிட் கொடுக்கும்ன்னு நாங்க எதிர்பார்க்கவே இல்லை.
எங்கே எப்படி அந்த மேஜிக் நடந்துச்சுன்னு தெரியல. அதே மாதிரி ஒரு கதையில் ஸ்பார்க் வந்தால் என்னுடைய லுக்குக்கு அந்த காதல் செட்டானா நிச்சயமா நடிப்பேன்.
ஏன் எப்பவுமே பெரிய சைஸ் சட்டைகள்... பேகி பேன்ட் சகிதமாக வலம் வரீங்க?
அப்பா (மம்முட்டி) வீட்டிலும் சரி, வெளியிலும் சரி கிட்டத்தட்ட நான் அண்ணாந்து பார்க்கக்கூடிய உயரத்தில் இருந்ததா எனக்கு தோணுச்சு. பெரிய ஸ்டார் அவருக்கு பையனா என்னை நான் காண்பிச்சுக்க அப்போ இருந்து சின்ன பசங்க மாதிரி நான் டிரஸ் போட்டுக்கவே மாட்டேன். பெரிய பெரிய சட்டை, டிஷர்ட் ...இந்த கான்செப்ட் எனக்கு பிடிக்கும்.
தொடர்ந்து இப்போது ட்ரெண்டும் ஓவர் சைஸ் உடைகள்தான். அந்த ட்ரெண்ட் ஒரு பக்கம், இன்னொரு பக்கம் பெரும்பாலும் ஷூட்டிங் ஸ்பாட் போனவுடன் உடனடியாக டிரஸ்ஸ கழட்டி அடுத்த லுக்குக்கு நான் தயாராகணும். இதை மனதில் வச்சிக்கிட்டுதான் இந்த மாதிரி டிரஸ் பயன்படுத்துறது உண்டு. அதிலும் சில நேரம் ஹேர் ஸ்டைல் மேக்கப் எல்லாம் நான் எந்த டிரஸ் போட்டுட்டு போறேனோ அதில்தான் நடக்கும். அவசரப்பட்டு கழட்டும்போது லுக்கு கலைஞ்சிடக் கூடாது; அதையும் மனதில் வைச்சிட்டுதான் இந்த லூசான டிரஸ் பயன்படுத்துவேன். ‘காந்தா’..?
‘அட அந்தப் படமும் ஒரு பீரியாடிக் சப்ஜெக்ட்தான்! கிட்டத்தட்ட நூறு வருடங்களுக்கு எல்லா பீரியடிலும் நான் நடிச்சிட்டேன்னு நினைக்கிறேன்!‘காந்தா’ 1950களில் நடக்கற கதை. நானும் ராணா டகுபதியும் சேர்ந்துதான் தயாரிச்சிருக்கோம். இப்பதான் படத்துக்கான பூஜை நடந்துச்சு. படப்பிடிப்பும் நடந்துகிட்டு இருக்கு. ஒரு வரலாற்றுச் சம்பவம்... அதில் நடக்கும் சமூக மாற்றம்... ரிலேஷன்ஷிப்... இப்படி எல்லாம் கலந்த ஒரு படமாக இருக்கும்.
ஷாலினி நியூட்டன்
|