பேரன் ஹீரோ... பேத்தி + பேரன் தயாரிப்பாளர்கள்!
திரைத்துறைக்குள் நுழைகிறார்கள் டாக்டர் ராமதாஸின் குடும்பத்தினர்
‘உறுமீன்’, ‘பயணிகள் கவனிக்கவும்’ படங்கள் வழியாக கவனம் ஈர்த்தவர் இயக்குநர் எஸ்.பி.சக்திவேல். இப்போது புதுமுகம் குணாநிதி நடிக்கும் ‘அலங்கு’ செய்துள்ளார். ரிலீஸ் வேலையில் பிசியாக இருந்தவரிடம் பேசினோம்.
 டைட்டில் புதுசா இருக்கே?
‘அலங்கு’ன்னா நாய். சங்க காலத்துல பயன்படுத்தப்பட்ட வார்த்தை. ராஜராஜ சோழன் படையில் அவ்வகை நாய்கள் இருந்ததாக கல்வெட்டு ஆதாரங்களுடன் சொல்
கிறார்கள். ஆனால், அந்த இனம் அழிந்துவிட்டது. காலம் கடந்து பேசப்படணும்னு இந்த டைட்டில் வெச்சோம்.  இனிமேல் நாய் படம் என்றால் ‘அலங்கு’ன்னு சொல்வாங்க. ‘கோ’ என்றால் அரசன் என்ற அர்த்தத்தில் கே.வி.ஆனந்த் சார் படம் எடுத்தார். அந்தமாதிரி ‘அலங்கு’. நம் நாட்டின் நாய் வகை என்பதாலும் இந்த டைட்டில்.இன்னொரு அர்த்தத்தில் ‘ஓடுதல்’ என்றாலும் ‘அலங்கு’தான். அந்தவகையில் கதைக்கு பொருத்தமான டைட்டில் ‘அலங்கு’. இது பழங்குடிகள் கதைன்னு சொல்றாங்களே?
சமீபத்தில் நடந்த உண்மைச் சம்பவத்தை மையமா வெச்சு உருவான கதை இது. நாய்களை மையப்படுத்தி என்ன மாதிரி கதைகள் ஆர்வத்தை ஏற்படுத்தும்னு தேடினேன்.
கேரளாவில் பல காரணங்களுக்காக நாய்களை அழித்தார்கள். அதுதான் படத்தோட ஐடியா. எனக்கு சொந்த ஊர் கோயமுத்தூர்.
தமிழ்நாடு எல்லை பகுதியில் உள்ள பலர் கேரளாவுக்கு வேலைக்கு செல்வார்கள். அப்படி தமிழ்நாட்டிலிருந்து கேரளாவுக்கு வேலைக்காக சென்ற பழங்குடி இளைஞர்கள் நாய்கள் கொல்லப்படும் சம்பவத்தில் எப்படி கனெக்ட் ஆகிறார்கள் என்பதை உண்மைச் சம்பவத்தோடு சினிமாவுக்கான கதையாகவும் எழுதியிருக்கிறேன்.
நம்முடைய சமூகம் எல்லா உயிர்களையும் ஒரே மாதிரி பார்ப்பதில்லை. சமூகத்தில் இரண்டு விதமான கருத்து இருக்கு. நாயை நேசிக்கும் சமூகமும் இருக்கு. நாயை வெறுக்கும் சமூகமும் இருக்கு.
நாய்கள் உணவுச் சங்கிலியில் முக்கியமான இடத்தில் இருக்கிறது. நாய்களைக் கொல்வது மட்டுமே தீர்வாக இருக்க முடியாது. ஆக்கபூர்வமான தீர்வை நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும். எல்லா ஜீவன்களுக்கும் இங்கு இடம் உண்டு. நாய்களை அழிப்பதால் எந்த பயனும் இல்லை.
மக்கள் குப்பைகளை சரியான முறையில் தரம் பிரித்தால் நாய்கள் தேவையில்லாத கழிவுகளை சாப்பிடாது. ஊசி, இரத்தம் கலந்த பஞ்சு என மெடிக்கல் கழிவுகளுடன், இறைச்சி கழிவுகளையும் சேர்த்து குப்பைகளில் கொட்டுகிறார்கள்.அதைச் சாப்பிடும்போது நாய்க்கு வெறி பிடிக்கிறது. எல்லாவற்றுக்கும் ஒரு காரணம் இருக்கும். நாய்க்கு மட்டுமல்ல, மற்ற ஜீவராசிகளுக்கும் மனிதர்களிடமிருந்துதான் உணவு செல்கிறது. இந்த விஷயங்கள் கதையின் தேவைக்கு ஏற்ப இருக்கும். இந்த உலகம் அனைத்து உயிரினங்களுக்குமானது என்பதுதான் படம் சொல்லும் செய்தி.
இந்த மாதிரி கதையில் தெரிஞ்ச முகம் முக்கியமாச்சே?
நான் அப்படி பார்க்கவில்லை. வலுவான கதையில் ரசிகர்கள் முகத்தை தேடமாட்டார்கள். அதுமட்டுமல்ல, புதுமுகத்துக்கான கதை என்றும் சொல்லலாம்.
முதன்மை கதாபாத்திரத்தில் குணாநிதி நடிக்கிறார். டிப்ளமோ படிக்கும் பழங்குடி இளைஞன் கதாபாத்திரம். அதற்கு குணாநிதி சரியா இருந்தார்.
டிராமா, குறும் படம் என தன்னை நடிகனாக பட்டைதீட்டிக் கொண்டவர்.‘செல்ஃபி’ படத்துல முக்கியமான வேடம் பண்ணியிருந்தார். படம் முழுவதும் ரிஸ்க் எடுக்க வேண்டிய கேரக்டர். படம் முழுவதும் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். அப்படி கதாபாத்திரத்துக்குரிய அத்தனை நியாயத்தையும் குறை வைக்காம செய்தார்.
காளி வெங்கட் முக்கியமான வேடத்துல வர்றார். வழக்கம்போல் அட்டகாசமா பண்ணினார். படத்துல மோனோ லாக் சீன் இருக்கு. சிங்கிள் ஷாட்ல எடுத்தோம். ஒரு நிமிஷம் பேசணும். அவர் வாழ்க்கையில் நடந்த விஷயத்தை சொல்லி கதையோடு கனெக்ட் ஆவார். சமீபத்துல வந்த மோனோ லாக் சீன் இதுவாகத்தான் இருக்கும்.செம்பன் விநோத் இருக்கிறார். மலையாளத்துல முக்கியமான நடிகர்.
கதை கேட்டதும் பண்றேன்னு சொன்னார். டயலாக் மலையாளத்துல இருக்கும். அந்த ஊர்ல என்ன தன்மையோடு இருப்பாரோ அதே தன்மையுடன் இதுல இருப்பார். ‘விக்ரம்’ படத்துக்குப் பிறகு இந்தப் படம் செய்துள்ளார்.‘அங்கமாலி டைரீஸ்’ பண்ணிய அப்பானி சரத் இருக்கிறார். அவருக்கும் முக்கியமான ரோல். ஸ்ரீ ரேகா அம்மாவாக வர்றார். பல கேரள விருதுகள் வாங்கியவர். எல்லாம் சரி. படத்துல ஹீரோயின் யார்?
கதை சொல்லும்போது ஹீரோயின் கிடையாது என்பதுதான் என்னுடைய முதல் கண்டிஷன். அதுக்கு சரின்னா படம் பண்ணலாம்னு சொன்னேன். தயாரிப்பு நிறுவனமும் சரின்னு சொல்லிட்டாங்க.
முழுக்க முழுக்க வனப் பகுதியில் படப்பிடிப்பு நடத்தினீர்களாமே?
95 சதவீத படப்பிடிப்பு காட்டுக்குள்ளதான் நடந்துச்சு. வழக்கமான கருவிகளைத் தவிர்த்துவிட்டு படக் கருவிகளை மட்டும் எடுத்துட்டு போனோம். சோர்ஸ் லைட்ஸ்ல எடுத்தோம். பெரியளவில் சேலஞ்ச் இருந்துச்சு.5 மணிக்கு மேல லைட் இருக்காதுன்னு நினைப்போம். இரண்டு மணிக்கே லைட் போயிடும். திடீர்ன்னு மழை பெய்யும். எலக்ட்ரிக் ஃபென்சிங் இருக்கும்.
ஹெலிகேமை உயரத்துக்கு பறக்க விட முடியாது. குறிப்பிட்ட உயரத்துக்கு மேல் படப்பிடிப்பு கருவிகளை யூஸ் பண்ண முடியாது. சிக்னல் இருக்காது. எதாவது தவறு நடந்தால் தீ பிடிக்கும் அபாயம் இருந்துச்சு.
கேரளாவில் ஷூட் பண்ணிய இடங்கள் எல்லாமே யானைகள் செல்லும் பாதை. படப்பிடிப்புக்கு அனுமதி மறுக்கப்பட்டது. கிடைச்ச பர்மிஷனில் எல்லாத்தையும் அழகா மேனேஜ் பண்ணினார் கேமராமேன் பாண்டிகுமார்.
‘பாம்புசட்டை’, ‘விலங்கு’ செய்த அஜீஷ் மியூசிக் செய்துள்ளார். கதையில் பேக்ரவுண்டுக்கு ஸ்பேஸ் இருப்பதால் அவரை செலக்ட் பண்ணினோம். நான்கு பாடல்கள். கிடாகுழி மாரியம்மன் பாடிய ‘கொங்கு நாடு...’ பாடல் இன்ஸ் டாவுல ரீல்ஸ் போடுமளவுக்கு பெரியளவில் வைரலாச்சு. ‘காளியம்மா...’ என்ற நாய் பாடல்தான் டிரெண்ட் ஆகும்னு நெனைச்சோம்.
ஆனால், ‘கொங்கு...’ பாடல் ஹிட்டாச்சு.‘செல்ஃபி’ படத்தை தயாரித்த சபரிஷ், சங்கமித்ரா தயாரித்துள்ளார்கள். இது பெரிய பட்ஜெட் படம். சின்ன பட்ஜெட் படம் கிடையாது. படம் பார்த்தவர்கள் அப்படித்தான் சொன்னார்கள். படத்தை வெளியிடும் சக்தி ஃபிலிம் சக்திவேலன் சாரும் அதைத்தான் சொன்னார். பொதுவா ஒரு படத்துல ஆக்ஷன் சீக்வென்ஸ் இருந்தாலே படத்தோட பட்ஜெட் அதிகமாகிவிடும். அப்படி என்னுடைய தயாரிப்பாளர்கள் புதுமுகம் என்று பார்க்காமல் கதைக்காக செலவு செய்தார்கள்.
ஆடியன்ஸுக்கு என்ன சொல்லப் போறீங்க?
இந்தப் படத்தை ஏன் தியேட்டருக்கு வந்து பார்க்கணும்னா 120 ரூபாய் தருவது என்பது சாதாரண விஷயம் கிடையாது. அந்தப் பணத்துக்கு என்ன எக்ஸ்பீரியன்ஸ் கிடைக்கும் என்றால் இதன் காட்சியமைப்புகளில் 70 சதவீதம் இதுவரை பார்த்திருக்கமாட்டீர்கள். புது அனுபவமா இருக்கும். விஷுவலா புது லொகேஷன்ஸ் பார்வையாளர்களுக்கு பரவச அனுபவத்தைக் கொடுக்கும். நாய் நடிக்காது. நடிச்ச மாதிரியான தருணம் இருக்கும். அது ஆடியன்ஸ் ரசிக்கும் படியா இருக்கும். மொத்தத்தில் காட்டுக்குள்ள டிரிப் போன அனுபவம் கிடைக்கும்.
அரசியல் தலைவரின் மகள் எப்படி படம் தயாரிக்க முன் வந்தார்?
தயாரிப்பாளர் சங்கமித்ரா, பிரபல அரசியல் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் சாரின் மகள். படத்தின் நாயகன் குணாநிதி, தயாரிப்பாளர் சபரிஷ் ஆகிய இருவரும் பிரபல அரசியல் கட்சித் தலைவர் டாக்டர் ராமதாஸ் ஐயாவின் மகள் வழி பேரன்கள்.விலங்குகள் மீது அக்கறை, கலை ஆர்வம் ஆகியவைதான் சங்கமித்ரா மேடம் இந்தப் படத்தை தயாரிக்க காரணமாக இருந்தது.
தயாரிப்பாளர் சபரிஷ் ‘செல்ஃபி’ படத்துக்குப் பிறகு தன் சகோதரருக்காக நல்ல கதை கேட்டுக் கொண்டிருந்தார். நான் சொன்ன கதை பிடித்திருந்ததால் படம் தயாரிக்க முன் வந்தார். அந்த வகையில் என்னுடைய தயாரிப்பாளர்கள் வணிக நோக்கத்தை முக்கியமாகக் கருதாமல் சமூகப் பார்வையோடு இந்தப் படத்தை அனைத்து தரப்பு மக்களும் ரசிக்கும் படியாக மிக பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார்கள்.
எஸ்.ராஜா
|