அக்கா... பூமிகா!



பூமிகா மறக்க முடியாத முகம்! ‘ஆப்பிள் பெண்ணே நீ யாரோ...’ என்று தமிழ்நாட்டு இளைஞர்களை முணுமுணுக்க வைத்தவர். பழகுவதற்கு சுவாரஸ்யமானவர். ஒரே சமயத்தில் அமைதி, வசீகரத்தை வெளிப்படுத்துபவர்.பேசும்போது கண்களுக்குப் பின்னால் ஆயிரம் உணர்வுகள் ஒளிந்திருக்கும். 
கூர்மையான பார்வை மிரட்டுவது போல் தெரிந்தாலும், அடுத்த கணம் புன்னகையால் மகிழச் செய்வார். அவருடைய எண்ண ஓட்டம் எப்படி உள்ளது என்பதை யூகிக்க முடியவில்லையென்றாலும் வார்த்தைகள் தடையின்றி புறப்பட்டு வருகிறது.
ஒரு இடைவெளிக்குப் பிறகு ஜெயம் ரவியின் ‘பிரதர்’ படத்தில் நடித்துள்ளார். அவரிடம் பேசியதிலிருந்து...

அம்மா பூமிகா, இளவயது பூமிகாவிடம் சொல்ல நினைக்கும் முக்கியமான செய்தி என்ன?

என்னுடைய அப்பா, அம்மாவுக்கு அதிகமான அன்பு, மதிப்பு, மரியாதை கொடுக்கணும் என்று சொல்லத் தோன்றுகிறது. 30, 40, வயசாகும்போதுதான் அம்மா, அப்பாவின் அருமை, பெருமை தெரிய வரும். எனக்கும் அப்படித்தான். 
ஆனால், அதெல்லாம் நமக்கு பிரியமானவர்கள் இருக்கும்போது தெரிய வராது.கடந்த 6 வருஷத்துக்கு முன் என் அம்மாவை இழந்துவிட்டேன். அம்மா பூமிகா, இள வயது பூமிகாவிடம் சொல்லும் ஒரே செய்தி... ‘அம்மாவிடம் அதிக நேரம் செலவிடு. எவ்வளவு முடியுமோ அவ்வளவு நேசி. பெரிய மரியாதை செய்...’ ஒரு மகளாக என் அம்மாவுக்கு அதிகமான அன்பையும் மரியாதையையும் கொடுத்த திருப்தி எனக்கு உண்டு.

‘பிரதர்’ படம் செய்வதற்கு எது தூண்டியது?

ஒரு நடிகையாக வித்தியாசமான படங்கள் செய்ய வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம். என்னுடைய ஒவ்வொரு படத்தையும் வித்தியாசமாகத் தான் செய்துள்ளேன். ‘பிரதர்’ படத்தில் வர்ற மாதிரி அக்கா ரோல் இதுவரை பண்ணியதில்லை.‘எம்.எஸ்.தோனி’ படத்தில் அக்காவாக பண்ணியிருந்தாலும் அது வித்தியாசமான படம் என்பதோடு 2015ல் வெளியானது.
 அதன்பிறகு ‘யு டெர்ன்’, ‘மிடில் கிளாஸ் அப்பாயி’ என எல்லாமே வித்தியாசமான படங்கள். இப்போது இந்தியில் ‘கேசர்’ என்ற படம் செய்கிறேன். தம்பதி பற்றிய கதை.‘பிரதர்’ அக்கா, தம்பியைச் சுற்றி நடக்கும் கதை. எனக்கும், ஜெயம் ரவி சாருக்கும் அக்கா, தம்பியாக வாழ்ந்து பார்க்கக்கூடிய ரோல். எனக்கு ஓர் அண்ணன் இருக்கிறார். சகோதர பாசம் எப்படியிருக்கும்னு தெரியும். அந்த பாசப்பிணைப்புதான் இந்தப் படம் செய்யத் தூண்டுச்சு.

நீங்க சினிமாவுக்கு வந்து இருபது வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இதுவரை செய்யாத வேடங்கள் எதாவது இருக்கிறதா?

ஒரு நடிகையாக நான் செய்யாத, செய்ய வேண்டிய வேடங்கள் ஏராளமாக உள்ளது. அப்படி பல வேடங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். நடிப்பை பொறுத்தவரை வித்தியாசமாக நடிக்க ஏராளமான வேடங்கள் உள்ளன. பயோபிக் கதைகள் ஏராளமாக உள்ளன. நான் இதுவரை ஸ்போர்ட்ஸ் படம் பண்ணியதில்லை. 

முழுக்க, முழுக்க நகைச்சுவை படம் பண்ணியதில்லை. போலீஸ் படம் பண்ணியதில்லை. ஃபன்னி ரோல் பண்ணியதில்லை. சயின்ஸ்ஃபிக்‌ஷன் படம் செய்ததில்லை. ‘அறம்‘ நயன்தாரா மேடம் மாதிரி கலெக்டர் ரோல் பண்ணியதில்லை. பெண் இனத்துக்கு பெருமை சேர்க்கும் விதமாக வாழ்க்கையின் அர்த்தத்தை புரியவைக்கிற மாதிரியான அழுத்தமான வேடம் பண்ணியதில்லை. போதுமா இந்த லிஸ்ட்!

‘ஜெயம்’ ரவி, இயக்குநர் எம்.ராஜேஷ் ஆகியோருடன் பணிபுரிந்த அனுபவம் எப்படி?

எம்.ராஜேஷ் சார் ரொம்ப அமைதியானவர். அவருடன் வேலை செய்யும்போது நமக்கும் ஸ்ட்ரெஸ் வராது. அவரும் ஸ்ட்ரெஸ்ஸுடன் வேலை பார்க்க மாட்டார். ஒரு தயாரிப்பாளர் படம் எடுக்கிறார். அந்தப் படம் நன்றாக இருந்தால் மட்டுமே அவரால் லாபம் பார்க்க முடியும். அதுதான் அவருடைய எதிர்பார்ப்பும் கூட.

என்னுடைய சினிமா கரியரை பொறுத்தவரை யாருடன் ஒர்க் பண்ணினாலும் அது சந்தோஷமான அனுபவமாக இருக்க வேண்டும் என்று நினைப்பேன். அதுதான் உண்மையான வெற்றி. ‘கையில கிடைச்ச வாழ்க்கையை வாழ்ந்து பார்’ என்பது தான் என்னுடைய பாலிசி. அப்படிதான் நான் வாழ்கிறேன். இந்த தருணத்தில் உங்களுடன் நேர்காணலில் இருக்கிறேன். அது எனக்கு மகிழ்ச்சி.

‘ஜெயம்’ ரவி வெரி குட் ஆக்டர். அவருடன் வேலை செய்தது இனிமையான அனுபவம்.விஜய், பவன் கல்யாண், ஜூனியர் என்டிஆர் என பல ஹீரோக்களுடன் நடித்துள்ளீர்கள். அப்போது பெரிய ஹீரோக்களுடன் மட்டுமே நடிக்கணும் என்ற கட்டுப்பாடு வைத்திருந்தீர்களா?

இல்லை. இதுவரை நான் செய்த படங்கள் வித்தியாசமான கதைகள். சிறந்த நடிகர்களுடன் நடிக்க வேண்டும் என்பதற்கு முன்னுரிமை கொடுப்பேன். ஆனால், ஒரு படம் துவங்குவதற்கு முன்போ, அக்ரிமெண்ட்டில் கையெழுத்திடும் போதோ சிறந்த நடிகர்களுடன் நடிக்கிறோம் என்று சொல்லிவிட முடியாது. நல்ல கதை, நல்ல கேரக்டருக்கு மட்டுமே முன்னுரிமை தருகிறேன்.
தமிழில் அதிகம் இடைவெளி ஏன்?

தமிழில்தான் அப்படி. தெலுங்கில் அப்படியில்லை. அங்கு பிசியாக இருக்கிறேன். எனக்கு ஆச்சர்யமூட்டும் கதைகளில் மட்டுமே நடிக்கிறேன். அதுதான் இடைவெளிக்கான காரணம்.

தென்னிந்தியாவுக்கு வரும்போது சொந்த ஊரில் இருப்பதுபோன்ற சுதந்திரத்தை உணரமுடிகிறதா?

நான் பிறந்தது தில்லி. அப்பா ஆர்மி அதிகாரி என்பதால் செகந்திராபாத், கொல்கத்தா என இந்தியாவின் பல இடங்களில் வசித்துள்ளோம். அப்படி தென்னிந்தியாவுக்கு வரும்போது தனிமைப்படுத்தப்பட்டதாக எந்த உணர்வும் வந்ததில்லை.கடந்த 20 வருடங்களில் சினிமா உங்களுக்கு என்ன கற்றுக்கொடுத்துள்ளது?

சினிமா நல்ல மனிதர்களை உருவாக்குகிறது. இங்கு கடினமாக, நேர்மையாக, உண்மையாக உழைத்தால் எல்லாம் கிடைக்கும். அதுமட்டுமல்ல, வெற்றி, தோல்வி மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு வாழாமல் இருக்கும்போது சந்தோஷமாக இருக்க முடியும். அது மனரீதியான லெவல். ப்ரொஃபஷனல் லெவல்... ஒழுக்கம், கடின உழைப்பு, அர்ப்பணிப்பு. அது நமக்கான மரியாதையை வாங்கித்தரும்.

நீங்கள் நிராகரித்த அல்லது உங்களை நிராகரித்த படங்கள் உண்டா?

என்னை  இதுவரை யாரும் நிராகரித்ததில்லை. அத்துடன் நிராகரிப்பு என்ற வார்த்தையை பயன்படுத்தமாட்டேன். சில படங்கள் எனக்கு ஒர்க் அவுட்டாகியிருக்காது. ஒவ்வொரு படத்துக்கும் இலக்கு இருக்கும். அப்படி ஒரு படத்தில் யார் நடிக்கணுமோ அவங்க நடிப்பது உறுதி. அதுவும் நான் கற்றுக் கொண்டது.

நடிகையாக இருப்பதால் உடல் பராமரிப்பு அழுத்தம் தருகிறதா?

உடல் எடையை மெயிண்டெயின் பண்ணுவது நல்லது. இன்னொரு வகையில் தீங்கு. நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால் உடலைப் பராமரிக்கிறேன் என்ற பெயரில் ஆரோக்ய குறைபாடுடன் இருக்கக் கூடாது. மன நலமும், உடல் நலமும் சீராக இருக்க வேண்டும். அது அவசியம்.

பருமனாக இருக்கிறவர்கள் தினமும் சில கிலோமீட்டர் தூரமாவது நடைப் பயிற்சி செய்ய வேண்டும். இல்லையென்றால் அது நுரையீரல், இதயம் என உடலில் பாதிப்பை ஏற்படுத்தும். உடல் உள் உறுப்புகளின் பங்களிப்பு  முக்கியம். உடல் எடையை இஷ்டம்போல் வைத்துக்கொள்வது அவரவர் சுதந்திரம். ஆனால், அது உடலுக்கு தீங்கு.

பணம் உங்கள் வாழ்க்கையில் எந்த இடத்தைப் பிடித்துள்ளது?

பணம் முக்கியம். ஆனால், பணம் மட்டுமே எல்லாவற்றுக்கும் தீர்வு கிடையாது. பணம் மகிழ்ச்சியை கொடுக்காது. உங்களிடம் பணம் இருக்கும்போது கார், பங்களா, உடைகள், உணவுகள் என எல்லாத்தையும் அனுபவிக்கலாம். ஆனால், மனசுக்கு நிம்மதியும் சந்தோஷமும் இல்லையென்றால் அந்தப் பணம் இருந்தும் பயனில்லை.பணம் இல்லாமல் கல்வி, பயணம் போன்றவைகளின் தேவையை பூர்த்தி செய்ய முடியாது. மன நிம்மதியால் வரும் சந்தோஷம்தான் உண்மையான பணம்.

உங்கள் மன நிம்மதி பணத்தைவிட பெரியது. உங்களிடம் மன நிம்மதி, ஆரோக்யம் இருந்தால் அதுதான் சொத்து. எப்போது வேண்டுமானாலும் பணம் சம்பாதிக்கலாம். ஆரோக்யக் குறைபாடு இருந்தால் எதையும் செய்ய முடியாது.ரொம்ப அமைதியான முகமா இருக்கீங்க. உங்களுக்கு கோபம் வருமா?

எல்லா சமயத்திலும் வராது. சில விஷயங்கள் நம்மை மூட் அவுட்டாக்கும். நம்முடைய உணர்வுகளைக் கட்டுப்பாடாக வைத்திருப்பது முக்கியம்.  
தமிழில் வேறு என்ன படம் செய்கிறீர்கள்?

‘ஸ்கூல்’. மாணவர்கள் பற்றிய படம். இந்தியில் ஒரு படம். தெலுங்கில் குணசேகர் சார் இயக்கத்தில் ஒரு படம். 21 வருடங்களுக்குப் பிறகு அவருடன் ஒர்க் பண்ணுகிறேன்.

தமிழில் நீங்கள் மிஸ் பண்ணிய இயக்குநர்கள் இருக்கிறார்களா?

மணிரத்னம், பாலா, கெளதம் வாசுதேவ் மேனன் என சில இயக்குநர்கள் படம் செய்ய ஆசைப்பட்டேன். அவர்கள் இப்போதும் படம் செய்வது மகிழ்ச்சி. அப்போது நிறைவேறாத ஆசைக்கு இன்னொரு சான்ஸ் இருக்கு. பா.இரஞ்சித், லோகேஷ் கனகராஜ், நெல்சன் போன்ற இளம் இயக்குநர்கள் படங்கள் செய்யவும் ஆசை. l

எஸ்.ராஜா