ஆக்ஸிடைஸ்ட் நகைகள் பலவிதம்; அதில் ஆப்கானிஸ்தான் வகைகள் ஒரு ரகம்!
அங்கு இவை ஆயுதங்கள்... இங்கு இவை ஃபேஷன்!
ஒரு சின்ன மூக்குத்தி வாங்க வேண்டுமானால் கூட ரூ.300 என்கிறார்கள் இதன் உற்பத்தியாளர்கள். நம் ஊரில் பண்டிகை கால பஜார் துவங்கி எங்கும் நீக்கமற நிறைந்திருக்கின்றன இந்த ஆக்ஸிடைஸ்ட் நகைகள். அவற்றில் தரமானவை, சிறப்பான தோற்றம் கொடுப்பவை, ராயல் லுக் கொடுப்பவை என பல ரகங்கள் உள்ளன. இதில் ஆப்கானிஸ்தான் மற்றும் காஷ்மீரி பெண்கள் அணியும் வகைகள்தான் இருப்பதிலேயே தரத்தாலும், ரகத்தாலும் டாப் என்பது ஃபேஷன் விரும்பிகள் வாக்கு.
உண்மையில் சாதாரண ஆக்ஸ்டிடைஸ்ட்களுக்கும் ஆப்கன் நகைகளுக்கும் வித்யாசம் காண்பது எப்படி, எங்கே கிடைக்கும், என்ன விலை, அதன் ஸ்டைலின் விபரங்கள் என அனைத்தையும் மாடல்கள் உதவியுடன் ஸ்டைலிங்கே செய்து காண்பித்தார்கள் ஸ்டைலிஸ்ட் மற்றும் மேக்கப் ஆர்ட்டிஸ்ட் இளங்கேஸ்வேரி மற்றும் ஆக்ஸிடைஸ்ட் நகைகளின் இறக்குமதி மற்றும் விற்பனையில் மூன்று வருடங்களாக அனுபவம் வாய்ந்த முபீன் ஆயிஷா.
‘‘இது வெறும் நகைகள் கிடையாது. கிட்டத்தட்ட 50% ஆயுதங்கள், 50% அணிகலன்கள்...’’ ஆரம்பமே ஆச்சரியம் கொடுத்தார் முபீன் ஆயிஷா. ‘‘உண்மைதான். நம்ம ஊர்லதான் இது அழகுக்காக பயன்படுத்தற நகைகள். இதே காஷ்மீர், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ராஜஸ்தான், ஜெய்ப்பூர், ஒருசில பழங்குடி, மலைவாழ் மக்கள், போர் யுத்தங்கள் அடிக்கடி நிகழும் ஈரான், ஈராக் போன்ற பிரதேசங்கள்ல இந்த நகைகளை 50% ஆயுதமாதான் பெண்கள் பயன்படுத்துவாங்க.
இதற்கு ரெண்டு காரணங்கள் இருக்கு. போர்க்களங்களில் தங்கம், வெள்ளி மாதிரி உயர் ரக விலை உயர்ந்த நகைகளை பயன்படுத்தவே முடியாது. எப்போ கும்பலா வீட்டுக்குள் வருவாங்க அல்லது பொது இடத்தில் எப்போ நம்ம கிட்ட இருக்கற பணம், நகைகள பிடுங்குவாங்கன்னு சொல்லவே முடியாது. அதனாலேயே பாதுகாப்பா எப்போதும் இந்த மாதிரியான ஆக்சிடைஸ்டு நகைகள்தான் பயன்பாட்டில் இருக்கும். இன்னொரு காரணம், என்னதான் மொபைல் டெக்னாலஜி வளர்ந்தாலும், நெட்வொர்க் கவரேஜ் எல்லா இடங்களிலும் இருந்தாலும் பாலைவனங்கள், மலைப்பிரதேசங்கள்ல போர்க் காலங்கள்ல எந்த தொடர்பும் கிடைக்காது. அதேசமயம் பாலைவனம், மலைகளில் இருக்கும் பெண்கள் பல கிலோ மீட்டர்களுக்கு நடந்து போய்தான் தண்ணீர் முதல் அத்தனை அத்தியாவசிய பொருட்களையும் கொண்டு வரணும். ஒரே சமயத்தில் வீட்டில் இருக்கும் அத்தனை பேரும் கிளம்பிப் போவதும் கஷ்டம். தனியாக பல மைல் தூரம் கூட சென்று தண்ணீர் கொண்டு வருவாங்க. அப்படி வருகிற பாதைகள்ல நிறைய ஆபத்துகள் வரும். மிருகங்கள், திருடர்கள், கயவர்கள் கிட்ட இருந்து தங்களை பாதுகாத்துக்கவே நகை + ஆயுதமா இந்த நகைகளை பயன்படுத்துவாங்க அங்கே இருக்கும் பெண்கள்.
போலவே அவ்வளவு சாதாரணமா நேரடியான ஆயுதங்களையும் அவங்க வச்சிருக்க முடியாது. ஒரு துப்பாக்கியோ அல்லது கத்தியாவோ வச்சிருந்தா சோதனைச் சாவடிகளில் இதே காரணம் காட்டி பிடிச்சிட்டு போகவும் வாய்ப்பிருக்கு. அதனாலயே இதை ஆயுதம் அப்படின்னு சொல்லாம நகைகளா அணிஞ்சிருப்பாங்க.
ஒரு சில நகைகளுக்குள்ள சின்ன ஊசிகள், கத்தி, தோடுகளுக்குள்ள விஷ ஊசிகள் கூட மலைவாழ் மக்கள் அந்தக் காலத்திலே பயன்படுத்தின வரலாறுகள் பல மியூசியங்கள்ல கூட இருக்கு...’’ என இதன் பின்னணியில் இருக்கும் வரலாற்றை ஆச்சர்யத்துடன் பகிர்ந்துகொண்ட முபீன் ஆயிஷா தொடர்ந்தார். ‘‘நம்மூரில் பாண்டி பஜார் மற்றும் பண்டிகை கால பஜாரில் கிடைக்கும் ஆக்சிடைஸ்ட் நகைகள் அனைத்தும் எவர்சில்வர் வகையறாக்கள். அவைகளும் எக்காலத்திலும் மங்காது. ஆனால், இவை தரம் குறைந்தவை அப்படின்னு ரொம்ப சாதாரணமாக காண்பிச்சுடும். பொதுவா ஆயுதங்களாக பயன்படுத்தும்போது அதன் தரமும் வலிமையும் ரொம்ப முக்கியம். அதனால் உண்மையான ஆயுதங்களில் பயன்படுத்தக்கூடிய பித்தளை, அலுமினியம், இவைகளை கலந்துதான் உண்மையான ஆக்ஸிடைஸ்டு நகைகளை உருவாக்குவாங்க.
உண்மையில் ஆயுதங்கள் தயாரிப்பில் இரும்பு பயன்படுத்துவது வழக்கம். ஆனால், இரும்பு துருப்பிடிக்கும்; மேலும் தோலில் அலர்ஜி உண்டாக்கும் என்கிற காரணத்தாலேயே அலுமினியமும் பித்தளையும் பயன்படுத்துவாங்க. பொதுவா பித்தளையிலான ஆக்சிடைஸ்ட் நகைகள் கொஞ்சம் கனமாகவும், அலுமினியம் வெரைட்டிகள் காற்று போல லேசாகவும் இருக்கும். பண்டிகைக் காலங்களில் பளிச்சென தெரியவும் மேலும் உடலை வருத்தாமல் இருக்கவும் அலுமினியம் நகைகளை பயன்படுத்துவாங்க. அதே நெடுந்தூரப் பயணம்... தினந்தோறும் பயன்பாடு என்னும்பொழுது பித்தளை நகைகளை பயன்படுத்துவதுண்டு.
பித்தளை கலப்பு நகைகள்தான் பெரும்பாலும் வலிமையா உண்மையான ஆயுதமா இருக்கும். அதனால்தான் இதனுடைய விலையும் அதிகம். நம்மூரில் இவற்றை ஆன்டிக் அல்லது இமிடெட் நகைகள்னு சொல்வோம். இந்த நகைகள் நம்மூருக்கு வரும்பொழுது நம்ம ஸ்டைல் கஜலட்சுமி, தாமரை, விநாயகர், அன்னம், மாங்காய், மயில் மாதிரி நகைகளுக்கே உரிய டிசைன்களில் தயாரிக்கிறோம்.
இதில் ஒரு சின்ன மூக்குத்தி வாங்கணும்னா கூட ரூ.300 முதல் அதிகமாக மூணு லட்சம் வரையிலும் கூட இதில் நகைகள் விற்பனைக்கு இருக்கு. லட்சக்கணக்கில் போகும்பொழுது இன்னும் ராயல் லுக் கொடுப்பதற்காக தங்கம், மற்றும் வெள்ளி கலந்தும் செய்யறதுண்டு. ஒரு சிலர் கஸ்டமைஸ்ட் நகைகளா தங்கம், வெள்ளியிலேயே ஆக்ஸிடைஸ்டு ஸ்டைலில் ஆன்டிக் நகைகளை இப்போ செய்து வாங்கிக்கிறாங்க. ஒரு சில நகைக்கடைகள் ஆன்டிக் கலெக்சனாகவும் கொண்டு வந்திருக்காங்க.
இதற்கெல்லாம் காரணம் ஆக்ஸிடைஸ்ட் நகைகளின் தாக்கம் அதிகமானதுதான். பளிச்சென எவர்சில்வர் மாதிரி இருந்தா ரூபாய் 30 முதல் கிடைக்கும். அதேசமயம் சீக்கிரத்தில் துருப்பிடிச்சிடும் அல்லது மங்கு விழுந்திடும். ஆனால், இந்த ஆப்கன் ஸ்டைல் ஆக்சிடைஸ்ட் நகைகள் பொதுவா மங்கு விழுக விழுக அதன் அழகு கூடிக்கிட்டே இருக்கும். இன்னும் அதீத பழமையான நகைகள் போடும்பொழுதே ஒரு தெய்வீக லுக் கிடைக்கிற மாதிரி இருக்கும். அதைத்தான் பழங்கால பெண்கள் பயன்படுத்து இருப்பாங்க.
இப்போ இந்த நகைக்கான மெட்டல், அதன் உருவாக்கம் இது எல்லாமே உற்பத்தி அடிப்படையில் செலவு அதிகம் என்கிறதால்தான் இதன் விலையும் அதிகம். நம்மூரில் இந்த நகைகளின் மதிப்பு இப்போதான் தெரிய ஆரம்பிச்சிருக்கு. அதனால்தான் தங்கம், வெள்ளி அளவுக்கு இப்போ ஆக்ஸிடைஸ்ட் நகைகளையும் வாங்க ஆரம்பிச்சிருக்காங்க. இன்னமும் 40+ வயது பெண்கள் கிட்ட ரூ.1000 கொடுத்து இதை வாங்குறதுக்கு ஒரு வெள்ளியோ தங்கமோ வாங்கிடலாம் அப்படின்னு ஒரு நினைப்பு இருக்கு.
ஆனால், தங்கத்தின் விலை நெனச்சு பார்க்க முடியாத தூரத்துக்கு போன காரணம்தான் அவங்களுடைய பார்வையும் இப்போ ஆக்ஸிடைஸ்டு நகைகள் மேல விழுந்திருக்கு.
ரொம்ப முக்கியமான விஷயம்... இந்த நகைகளுக்கு பராமரிப்பு தேவையே இல்லை.
எங்க, எப்படி கிடப்பில் போட்டு வச்சாலும்... நாள் ஆக ஆக இது தனி அழகு கொடுக்கும்...’’ என முபீன் ஆயிஷா முடிக்க, ஃபேஷன் மற்றும் ஸ்டைலிங் அடிப்படையிலான வரலாற்றையும், எப்படி இதை பயன்படுத்தலாம் எனவும் தொடர்ந்தார் ஸ்டைலிஸ்ட் மற்றும் மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டான இளங்கேஸ்வரி. ‘‘உலக ஃபேஷன்கள் அத்தனைக்கும் பிறப்பிடம் ரெண்டு காலம்தான்; ஒண்ணு விக்டோரியன் காலம், இன்னொண்ணு எகிப்திய காலம். அதே மாதிரிதான் இந்த ஆக்சிடைஸ்ட் நகைகளுக்கும் பிறப்பிடம் அங்கேதான். விக்டோரியா மற்றும் எகிப்திய காலத்துல இந்த ஆக்ஸிடைஸ்ட் நகைகளை வெள்ளிகளில் உருவாக்கினாங்க. அப்பறம்தான் ஆயிஷா சொன்ன மாதிரி போர்க்களங்களிலும் யுத்த காலங்களிலும் செமி ஆயுதங்களாகவும் மாறிடுச்சு. அதிலும் மத்திய கிழக்காசிய நாடுகள்ல இந்த நகைகள்தான் ரொம்ப பிரதானம்.
அங்கே எப்போ போர் வரும், பொருளாதார தட்டுப்பாடு உருவாகும் இப்படி எதுவுமே கணிக்க முடியாது. அதனால் வீட்டிலேயும் தங்கம், வெள்ளி மாதிரியான விலை உயர்ந்த பொருட்களையும் வச்சுக்க முடியாது. அதனாலயே பெண்களும், ஆண்களும் கூட இந்த ஆக்சிடைஸ்டு நகைகளை அதிகம் பயன்படுத்தினாங்க.
நவோஜோ ஆக்ஸிடைஸ்ட் நகைகள்தான் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் உள்ளிட்ட நிறைய ஆசிய நாடுகள்ல இப்ப வரைக்கும் பயன்படுத்துறாங்க. இது பார்க்கவே போல்ட் லுக் கொடுக்கும். எகிப்து, விக்டோரியன் காலங்கள்ல இது வெள்ளி நகைகளாகத்தான் இருந்துச்சு. 19ம் நூற்றாண்டுக்கு அப்புறம்தான் நடக்கற போர்களுக்கு ஏத்த மாதிரி இந்த நகைகள் அலுமினியம் மற்றும் பித்தளை வகையறாக்களா மாறிடுச்சு. யாரும் எந்த ஸ்டைலிலும் இந்த நகையை பயன்படுத்தலாம். நாலு கலர்கள் ரொம்ப பொருத்தமா இருக்கும். வெள்ளை, கருப்பு, கிரே, நீலம். ஒருசில கலர்களில் மெரூன், டார்க் பச்சை நிறங்களும் கச்சிதமா பொருந்தும்.
இங்கே இரண்டு விதமான புடவை லுக் கொடுத்திருப்போம். ஒண்ணு முழுக்க பிளாக் புடவை லுக். இன்னொண்ணு நம்ம ஊர் ஸ்டைல் கலம்காரி புடவை லுக். அதிலும் கூட எந்த கலர்களும் இல்லாமல் ஹாஃப் வெள்ளை மற்றும் கருப்பு கலந்த நிறத்தில்தான் கொடுத்திருப்போம்.
அதிகம் கலர்களை விரும்பாத அல்லது ரொம்ப தன்னை கலர்ஃபுல்லா காண்பிக்காத இந்த ‘வெட்னஸ்டே’ சீரிஸ் ஸ்டைல் பெண்கள், அடுத்து தங்களை தனித்துவமா காண்பிக்க நினைக்கிற பெண்கள் இதை அதிகம் பயன்படுத்துவதுண்டு. இன்னொரு லுக் - ஒரு பொண்ணு ப்ளூ ஜீன் மேலே கருப்பு நிற கிராஃப்ட் டாப் , அதில் கழுத்து மற்றும் நெத்திச் சுட்டி மட்டும்தான் கொடுத்திருப்போம்.
நெத்திச்சுட்டியில் அதிக நகை கொடுக்கும்போது காதணி தேவைப்படாது. அதேபோல் கண்களுக்கும் ஸ்மோக்கி ஷேடோ கொடுத்திட்டு லிப்ஸ்டிக் நிறத்தை டம்மி செய்து நகைகளை ஹைலைட் செய்திருப்போம். இன்னொரு பொண்ணுக்கு கிட்டத்தட்ட ஜிப்ஸி லுக். அதாவது எது கிடைச்சாலும் எடுத்து மாட்டிக்கற ஸ்டைல்.
ஒரு கருப்பு ஸ்பெகிடி டாப், அதனுடன் இணைஞ்ச ஒரு கலம்காரி ராப் (சுற்றிக்கொள்ளும்) ஸ்கர்ட், முன் நெற்றி முழுக்க அப்படியே மறைத்துக் கொள்ளும் ஹெட் பேண்ட் ஸ்டைல் நகை, கழுத்தில் இரண்டு லாங் நெக்லஸ், கைகளில் பெரிய ஹேண்ட் கஃப் லுக் கொடுத்திருப்போம். கண்கள், தாடை பகுதிகள்ல ஐலைனர் வெச்சு சின்னச் சின்ன புள்ளிகள், மெஹந்தி ஸ்டைல் டிசைன்களில் கண்கள் கிட்ட சின்னதா வரைஞ்சிருப்போம். இதெல்லாம் ஜெய்ப்பூர் பெண்கள் கிட்ட பார்க்கலாம். தீபாவளின்னா பட்டு, பட்டாடை மட்டும் கிடையாது. இப்போதைய தலைமுறை ஆபீஸ் பெண்கள், காலேஜ் கேர்ள்ஸ் இப்படித்தான் அதிகம் விரும்பறாங்க.
ஹேர் ஸ்டைல் கூட ரொம்ப மெனக்கெடாத வகை பன், லூஸ் ஹேர், இப்படி எதையும் அசால்ட்டா ஹேண்டில் செய்கிற பெண்களுக்கான லுக் இது. ஆப்கன் நகை + நம்மூர் டிசைன் கலந்த ஃபியூஷன் ஸ்டைல்தான் இங்கே நாம கொடுத்திருக்கோம். ரொம்ப முக்கியம் இந்த நகைகள் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட ரீல்ஸ்களுக்கு ரொம்ப அழகா இருக்கும்.
இப்போதைய பெண்களுக்கு ஹேண்ட்மேட் நகைகள் பிடிக்கும். இந்த ஆப்கன் ஆக்ஸிடைஸ்ட் நகைகள் பெரும்பாலும் கைகளால் உருவாக்கப்பட்டதா இருக்கறதாலேயும் அதிகம் விரும்பறாங்க. சூழலுக்கும் பிரச்னை கொடுக்காது...’’ புன்னகைக்கிறார் இளங்கேஸ்வரி.
மாடல்கள்: மம்தா, மேகலா மாடல்கள் உதவி: சஃபி
செய்தி: ஷாலினி நியூட்டன்
படங்கள்: ஆ.வின்சென்ட் பால், அறம் கிரியேட்டிவ் ஸ்பேஸ்
|