நடிகரான மிஸ்டர் இந்தியா!
‘மிஸ் இந்தியாக்களுக்கு மட்டும்தான் சினிமா வாய்ப்பா’ என்ற கேள்விக்கு பதிலாக ‘வா வரலாம் வா’ படத்தின் மூலம் சினிமாவுக்கு வந்துள்ளார் ‘மிஸ்டர் இந்தியா’ பாலாஜி முருகதாஸ். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தேவா ரீ-என்ட்ரி கொடுத்துள்ள இந்தப் படத்தை எல்.ஜி.ரவிசந்தர் - எஸ்.பி.ஆர் இயக்கியுள்ளார்கள். ரிலீஸ் பரபரப்பில் இருந்த இயக்குநர்களிடம் பேசினோம். ‘வா வரலாம் வா’னு யாரை சொல்றீங்க?
காமெடிதான் படத்தோட அடித்தளம். திருடத் தெரியாத இரண்டு திருடர்கள். குழந்தைப் பருவத்தில் திருடி சீர்திருத்தப் பள்ளிக்குச் செல்கிறார்கள். குழந்தையாக உள்ளே சென்றவர்கள் இளைஞர்களாக வெளியே வரும்போது உலகமே அதி நவீனமாக மாறிடுச்சேனு வியந்துபோவதோடு, வாழ்ந்தால் வசதியாகத்தான் வாழணும்னு முடிவு பண்ணி குறுக்கு வழியைத் தேர்ந்தெடுக்கிறாங்க.
ஆனால், திருடப் போகும்போது எல்லாமே பெயிலரில் முடிகிறது. இவர்கள் திருடச் செல்வதற்கு முன்பே வேறு யாராவது திருடியிருப்பார்கள். அவர்களின் ஒவ்வொரு முயற்சியும் தோல்வியில் முடியும்போது, பள்ளி மாணவர்கள் பயணிக்கும் ஸ்கூல் பஸ்ஸை திருட திட்டமிடுகிறார்கள். பஸ்ஸை கடத்திய பிறகு அதிலிருக்கும் குழந்தைகள் ஆதரவற்றவர்கள் என்று தெரிஞ்சதும் மிரண்டு போகிறார்கள். இளைஞர்களின் பணம் சம்பாதிக்கும் ஆசை நிறைவேறியதா இல்லையா என்பதை காதல், காமெடி கலந்து சொல்லியுள்ளோம். கவலைகளை மறந்து சிரிக்க வரலாம் என்பதைத்தான் ‘வா வரலாம் வா’னு சொல்கிறோம்.
மிஸ்டர் பாலாஜி முருகதாஸ் என்ன சொல்கிறார்?
ஆரம்பத்தில் முன்னணி ஹீரோவை கமிட் பண்ணிவைத்திருந்தோம். ஒரே ஷெட்யூல் பிளான் பண்ணியதில் அந்த ஹீரோவால் கால்ஷீட் ஒதுக்க முடியவில்லை. மறுபடியும் ஹீரோ தேடும்போது பாலாஜி முருகதாஸ் பெஸ்ட் சாய்ஸாகத் தெரிந்தார். மிஸ்டர் இந்தியா, மிஸ்டர் தமிழ்நாடு என பல ஆணழகன் பட்டங்கள் வென்றவர் பாலாஜி. சினிமாவுக்கு இப்போதுதான் வந்துள்ளார். ஆக்டிங் ஸ்கூலில் டிரைனாகி வந்ததால் ஸ்பாட்ல அவரை வேலை வாங்குவது எளிதாக இருந்தது. சிங்கிள் டேக்கில் ஓகே பண்ணி ஆச்சர்யம் கொடுத்தார்.
ரெடின் கிங்ஸ்லி மெயின் லீட் பண்ணியிருக்கிறார். பிஸி நடிகர். கதை அவருக்கு பிடிச்சதால தொடர்ச்சியாக நான்கு வாரங்கள் கால்ஷீட் கொடுத்தார். அவர் வரும் போர்ஷனில் ‘பஞ்ச்’ டயலாக்கை தெறிக்கவிட்டிருப்பார். ‘கருமேகங்கள் கலைகின்றன’ படத்தில் கவனம் ஈர்த்த மஹானா சஞ்சீவி நாயகி. வில்லனாக ‘மைம்’ கோபி நடிக்கிறார். இவர்களுடன் காயத்ரி ரேமா, சரவண சுப்பையா, தீபா, வையாபுரி, வாசு விக்ரம், பயில்வான் ரங்கநாதன், பிரபாகரன், போண்டா மணி, மீசை ராஜேந்திரநாத், கிரேன் மனோகர், ரஞ்சன், திலீபன்,யோகி ராமசாமி, வடிவேல் பீட்டர் உட்பட பலர் இருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு கார்த்திக் ராஜா. முன்னணி ஹீரோ, இயக்குநர்களுடன் வேலை பார்த்தவர். கதையைச் சொன்னால் போதும். இயக்குநரின் எதிர்பார்ப்பை நூறு சதவீதம் நிறைவேற்றிக் கொடுப்பார். படத்தோட பெரிய பலமாக தேவா சார் மியூசிக்கை சொல்லலாம். பல வருடங்களுக்குப் பிறகு மியூசிக் பண்றார். கதை சொல்லும்போது அவர் சீன் பை சீன் சிரித்தார். ‘என் அனுபவத்துல பல கதைகள் கேட்டிருக்கிறேன். இந்தளவு சிரிச்சதில்ல’னு ஆர்வத்தோடு கம்போஸிங்ல உட்கார்ந்தார்.
தேவா சாருக்கு டூயட், கானா பாடல்கள் கை வந்த கலைனு தெரியும். படத்தில் ‘கடவுள் அமைத்து வைத்த மேடை...’ மாதிரி ஒரு சிச்சுவேஷன் வரும். அந்தப் பாடலுக்கு அனுபவம் இருந்தால் மட்டுமே டியூன் போட முடியும். அதை சிறப்பாகப் பண்ணினார். தயாரிப்பு சுரேஷ் பாபு.
சமூக வலைத்தளங்களில் டிரைலருக்கு வரும் நெகட்டிவ் கமெண்ட்ஸை படித்தீர்களா?
அது பார்வையாளர்களின் சுதந்திரம். டிரைலரைவிட படம் பலமடங்கு சுவாரஸ்யமாக இருக்கும். எத்தனையோ படங்களின் டிரைலர் கவனம் ஈர்த்திருக்கும். ஆனால், படம் எதிர்பார்த்தளவுக்கு இருக்காது. எதிர்பார்ப்பு இல்லாமல் வரும் ஆடியன்ஸுக்கு எங்கள் படம் திருப்தி கொடுக்கும்.
எஸ்.ராஜா
|