சிறுகதை - மாய வலை



ராகவனின் போன் ஒலித்தது. எடுத்து நம்பர் பார்த்தார். புது நம்பராக இருந்தது. யாராக இருக்கும் என்கிற யோசனையுடன் ஆன் பண்ணி காதில் வைத்து “ஹலோ...’’ என்றார்.
“அங்கிள் நா ரேவதி சன் பேசுறேன்...’’
“எந்த ரேவதி..?’’

“உங்களுக்கு எத்தனை ரேவதிய தெரியும்..?’’
அவருக்கு கோபம் வந்தது. “எனக்கு எந்த ரேவதியையும் தெரியாது...’’ என போனை கட் பண்ணப் போனார்.“அங்கிள் கட் பண்ணிடாதிங்க... உங்க சிஸ்டர் ரேவதியோட சன்தான் பேசுறேன்...’’அவர் ஒரு நிமிடம் தடுமாறிப் போனார். ரேவதியைப் பிரிந்து எத்தனை ஆண்டுகள் ஆகிறது? அவள் உயிரோடு இருக்கிறாளா இல்லையா என்பது கூடத் தெரியாமல் இருந்ததே. தயக்கத்துடன் “சொல்லுப்பா... என்ன விஷயம்..?’’ என்றார்.

“மம்மியும் டாடியும் உங்கள பாக்குறதுக்கு வர்றதா இருக்காங்க. எப்ப வந்தா உங்களுக்கு சௌகரியமா இருக்கும்ன்னு சொன்னிங்கன்னா, அந்த தேதில அனுப்பி வைப்பேன்...’’
அவருக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. ஆத்திரப்படுவதா அல்லது சந்தோஷப்படுவதா என்றும் தெரியவில்லை.“என்ன அங்கிள் அமைதியா இருக்கிங்க..?’’“ஒண்ணுமில்ல... அவங்களுக்கு எப்ப சௌகரியப்படுதோ அப்ப வரச்சொல்...’’“ஓகே அங்கிள்... தேங்க்ஸ்...’’

போன் கட் ஆனது. இது எதிர்பாராத தாக்குதல். வேறு என்ன பதில் சொல்ல முடியும்? முப்பது ஆண்டுகள் கழித்து ஒரு உறவு முளைவிடத் தொடங்கி இருக்கிறது. பழைய கோபத்தை மனதில் வைத்துக் கொண்டு, என்ன பதில் சொன்னாலும் அது மீண்டும் பகையில்தான் போய் முடியும். வரட்டும். எதற்காக வருகிறாள், என்ன பேசப் போகிறாள் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்ப்போமே.அவரால் அந்த சம்பவத்தை நம்ப முடியவில்லை. 

இது கனவா அல்லது நிஜமா என நிதானமாக யோசித்துப் பார்த்தார். நிஜம்தான்.அப்போது, அதாவது முப்பது ஆண்டுகளுக்கு முன், அவர்கள் திருச்சியில் ஒரு ஒண்டுக் குடித்தனத்தில் குடியிருந்தார்கள். அவர்கள் என்பது ராகவன், ரேவதி, அவர்களுடைய அப்பா ஆறுமுகம், அம்மா மீனாட்சி.

ஆறுமுகம் ஒரு ஹோட்டலில் சப்ளையராக வேலை பார்த்தார். சம்பளம் குறைவு. பகலில் கஞ்சியோ கூழோ குடித்தாலும், இரவு அவர் வேலை முடிந்து வீடு திரும்பும் போது, ஹோட்டலில் மீந்ததை பொட்டலம் கட்டி எடுத்து வருவார். அதுதான் அவர்களுக்கு ஸ்பெஷல் உணவு. வகை வகையாக இருக்கும். ஆனால், ஆறிப் போய், நேரம் கடந்ததால் சுவை குன்றிய உணவாக இருக்கும்.

படித்து முடித்து ஒரு நல்ல வேலைக்குப் போனதும், ஒரு பெரிய ஹோட்டலில் உட்கார்ந்து, வேண்டியதை ஆர்டர் கொடுத்து, சுடச்சுட சாப்பிட வேண்டும்  என அடிக்கடி நினைத்துக் கொள்வான் ராகவன்.  ஆறுமுகத்தின் சம்பளத்தில்தான் ராகவன், ரேவதி இருவரும் காலேஜ் படித்து முடித்தார்கள். ராகவனுக்கு, எப்படியாவது தானும், தங்கை ரேவதியும் ஒரு நல்ல வேலைக்குப் போய்விட வேண்டும் என்கிற ஆசை ஒவ்வொரு நாளும் உதித்துக் கொண்டிருந்தது.

அப்பா படும் கஷ்டத்தை, தான் படக்கூடாது என்பதில் அவன் தெளிவாக இருந்தான். அதை மனதில் வைத்துக் கொண்டுதான் நன்றாகப் படித்தான். ரேவதியையும் படிக்க வைத்தான். படித்து முடித்ததும் வேலை தேடும் படலம் வந்தது. இருவரும் பல கம்பெனிகளுக்கு அப்ளை பண்ணி இண்டர்வியூ அட்டண்ட் பண்ணிக் கொண்டிருந்தார்கள்.அந்த நேரத்தில்தான், ரேவதிக்கு சாமிநாதனுடன் பழக்கம் ஏற்பட்டது. சாமிநாதன், பெண்களுக்கு உடைகள் தைக்கும் ஒரு டைலர் கடை வைத்திருந்தான். கடை என்றால் பெரிய கடை இல்லை. ஒரு வீட்டுத் திண்ணையை குறைந்த வாடகைக்கு எடுத்து, அதில் மிஷின் போட்டு தைத்துக் கொண்டிருந்தான்.

ரேவதி ஜாக்கெட், சுடிதார் எதுவாக இருந்தாலும் அவனிடம்தான் தைக்கக் கொடுப்பாள். அவன் தைத்தால் அவ்வளவு கச்சிதமாக இருக்கும். அவன், பார்ப்பதற்கு கொஞ்சம் சுமாராகவும் இருப்பான். என்ன பேசினானோ, எப்படி பேசினானோ தெரியவில்லை, அவன் விரித்த மாய வலையில் அவள் விழுந்து விட்டாள். ஆறுமுகமும் மீனாட்சியும் மனசு ஒடிந்து போனார்கள். ரேவதியின் மேல் எவ்வளவோ நம்பிக்கை வைத்தவர்கள் அவர்கள். இப்படி பாழுங்கிணற்றில் விழுந்துவிட்டாளே... ராகவனுக்கு பயங்கர கோபம் வந்தது. லவ் பண்ணுகிற சூழ்நிலையிலா நாம் இருக்கிறோம்?

“உனக்கு என்ன பைத்தியமா புடிச்சிருக்கு..?’’
“ஆமாம், பைத்தியம்தான் புடிச்சிருக்கு...’’“கொஞ்சம் யோசனை பண்ணிப்பாரு. நீ படிச்ச படிப்புக்கு, உனக்கு ஒரு நல்ல வேலை கிடைச்சா உன் லெவலே வேற. கல்யாணம்ன்னு வரும்போது நல்ல மாப்பிள்ளையே வந்து நிப்பான். ஒரு டைலர கட்டிக்கணும்னு உனக்கு என்ன தலையெழுத்தா..?’’“ஸாரி... இந்த விஷயத்துல யாரும் தலையிடாதிங்க...’’ராகவன் அவளை ஓங்கி ஒரு அறை விட்டான். அவள் கதி கலங்கிப் போய் நின்றாள்.

“எப்படி தலையிடாம இருக்க முடியும்? நீ ஒண்ணும் சுயமா பொறந்து வளந்துடலியே... உன்னை பெத்து வளத்து ஆளாக்கினது அப்பா, அம்மா ரெண்டு பேரும். அப்பா, கால்ல  ஒரு நல்ல செருப்பு கூட வாங்கி போட்டுக்கிட்டது இல்ல. கிடைக்கிற பணத்த சீட்டு கட்டி சீட்டு கட்டி நம்பள படிக்க வச்சார். இப்ப ஒரு சந்தர்ப்பம்  கிடைக்கும்போது, நாம அவங்கள சந்தோஷமா வச்சுக்க வேண்டாமா..?’’

“அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்? அவங்களுக்கு என்ன தேவையோ அதை நா செய்வேன்...’’“எனக்கு இதுல இஷ்டம் இல்ல. அவனை நீ மறந்துடு. இனிமே நீ அவனை பாக்குறதோ பேசுறதோ இருக்கக் கூடாது...’’அப்போதைக்கு அவள் அமைதியாக இருந்தாள். ஆனால், தொடர்ந்து அப்படி இருக்க முடியவில்லை. மனசு சாமிநாதனைப் பார்க்கத் துடித்தது. தினம் ஒரு பொய் சொல்லிவிட்டு, சாமிநாதனைச் சந்தித்துப் பேச ஆரம்பித்தாள்.

ராகவனின் கணக்கில் சாமிநாதன் படிப்பு குறைவானவனாக இருக்கலாம். ஆனால், திறமைசாலி. அவனிடம் ஏராளமான பெண்கள் உடை தைக்கக் கொடுத்தார்கள். எப்போதும் அவன் கடை கூட்டமாக இருக்கும். அத்துடன் அவன் நல்லவன். யாரிடமும் அநாவசியமாக ஒரு வார்த்தை பேசமாட்டான். யாரையும் ஏறெடுத்தும் பார்க்கமாட்டான். 

அப்படி கட்டுப்பாடாக இருந்த அவனுக்கு, என்னவோ தெரியவில்லை, ரேவதியின் மேல் ஒரு ஈர்ப்பு வந்து விட்டது. அதற்கு ஒரு வகையில் ரேவதிதான் காரணம் என்று சொல்லலாம். உடை தைக்க வருபவள், அளவு கொடுத்துவிட்டுப் போகவேண்டியதுதானே... அவனிடம் வேறு சில விஷயங்களை அநாவசியமாகப் பேசிக்கொண்டு நிற்பாள்.

அப்படிப் பேசியதன் விளைவு, அவர்களுக்குள் ஒரு நெருக்கத்தை ஏற்படுத்தியது. முதலில் காதலைச் சொன்னதும் ரேவதிதான். சாமிநாதன் தனது நிலை அறிந்து தயங்கினான். ரேவதி தைரியம் கொடுத்து அவனைச் சம்மதிக்க வைத்தாள். காதல், வேகமாக வளர்ந்தது.ரேவதி, சாமிநாதனின் ரகசிய சந்திப்பு, ராகவனுக்கு மீண்டும் தெரிய வந்தது. வீட்டில் சண்டை வலுத்தது.
“அவனைப் பாக்காதன்னு சொன்னா நீ கேக்க மாட்டியா?’’“என்னால அவரை மறக்க முடியல...’’ராகவனுக்கு கோபம் பொங்கி வந்தது.

கோபத்தில் என்ன பண்ணுவது எனத் தெரியாமல் “இவ்வளவு தூரம் சொல்றேன்... புரிஞ்சுக்காம பதில் பேசிட்டு இருக்க...’’ என, தனது கால் செருப்பைக் கழற்றி அவள் மீது வீசினான்.
அவள் அதை எதிர்பார்க்கவில்லை. நிலைகுலைந்து போனாள். “இது என் வாழ்க்கை. அதை முடிவு செய்றதுக்கு எனக்கு எல்லா உரிமையும் இருக்கு. இதுக்கு மேலயும் நீ ஃபோர்ஸ் பண்ணின, எனக்கு போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்றத தவிர வேற வழியில்ல...’’ என்றாள்.

ராகவன் அமைதியானான். ஆறுமுகம், மீனாட்சி இருவரும் செயலற்று நின்றார்கள்.ரேவதி சாமிநாதனை ரெஜிஸ்டர் மேரேஜ் செய்துகொண்டு, அந்த ஊரைவிட்டு ஓடிப்
போனாள்.அவ்வளவுதான். அதற்குப் பிறகு அவளுடன் எந்தத் தொடர்பும் இல்லை.ராகவன், வேலை கிடைத்து சென்னைக்கு வந்து விட்டான். 

இரண்டு வருடத்தில் மாலதியை பெண் பார்த்து கல்யாணம் செய்து கொண்டான். ஒரு பெண் குழந்தையும், ஆண் குழந்தையும் பிறந்தனர். அவர்களை நன்றாகப் படிக்க வைத்து நல்ல இடத்தில் கல்யாணம் செய்து கொடுத்தான். அவனது சம்பாத்தியத்தில் அதுதான் முடிந்தது. இடையில், வயது முதிர்வின் காரணமாக ஆறுமுகம், மீனாட்சி இருவரும் இறந்து போனார்கள்.

ரேவதிக்குச் சொல்ல வேண்டும் என்றுகூட அவனுக்குத் தோன்றவில்லை. அவனுக்கு சொந்தமாக ஒரு வீடு கட்டிப்பார்க்க வேண்டும் என்பது ஆசை. ஆனால், இயலவில்லை. இன்று வரை வாடகை வீட்டில்தான் வசிக்க நேர்கிறது. இப்போது கூட, பையன் மாதாமாதம் அனுப்பும் பணத்தில்தான் வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது.இந்தச் சூழலில்தான் ரேவதியின் மகனிடமிருந்து போன். மாலதியிடம் விஷயத்தைச் சொன்னார். அவள் “அப்படியா..?’’ என ஆச்சரியப்பட்டாள்.

“நா ரொம்பதான் அவள கஷ்டப்படுத்திட்டேன்...’’“ஒண்ணும் தப்பு இல்லிங்க. அன்னிக்கு நீங்க இருந்த சூழ்நிலை அப்படி...’’
“சரி வரட்டும். ஒரு சொந்தம் இல்லாமப் போயிடுச்சுன்னு நினைச்சுட்டு இருந்தேன்... தேடி வருது. வரட்டும்...’’
ஒரு வாரம் கழித்து, ரேவதியின் மகன் மீண்டும் போன் பண்ணினான்.

“நாளைக்கு காலைல மம்மி டாடி ரெண்டு பேரும் உங்க வீட்டுக்கு வராங்க...’’
“டிரெயின்ல வராங்களா இல்ல பஸ்லயா..?’’“ஃபிளைட்ல வராங்க. மார்னிங் ஃபிளைட். செவன் தர்ட்டிக்கெல்லாம் சென்னை ஏர்போர்ட்ல லேண்ட் ஆயிடும்...’’
அவர் வாயடைத்துப் போனார்.“சரிப்பா...’’ என்று மட்டும் சொல்லி வைத்தார்.போன் கட் ஆனது.ராகவன், மாலதியிடம் வீட்டை சுத்தம் செய்யச் சொன்னார். அத்தியாவசியப் பொருட்களை வாங்கி வந்து கொடுத்தார். மனம் பரபரப்பாக இருந்தது.

இத்தனை நாள் ரேவதியைத் தேடாத மனசு இப்போது எதிர்பார்க்க ஆரம்பித்தது. அவள் எப்படி இருப்பாளோ என்றும், அவளது தோற்றம் எப்படி இருக்குமோ என்றும், அவளைப் பார்த்ததும் முதல் வார்த்தை என்ன பேசலாம் என்றும், சாமிநாதன் இப்போது பெரிய டைலர் கடையாக வைத்திருப்பானோ என்றும், மனதில் ஆயிரம் கேள்விகள் எழுந்தன.  
எல்லா காயங்களையும் ஆற்றி விடும் சக்தி கால இடைவெளிக்கு உண்டு.

மறுநாள் காலை, வீட்டு வாசலில் ஒரு ஆடி கார் வந்து நின்றது. அதிலிருந்து சாமிநாதனும் ரேவதியும் இறங்கினார்கள். இருவரது தோற்றத்திலும் பணக்காரத்தனம் திமிறிக்கொண்டு தெரிந்தது. ராகவனும் மாலதியும் வாசலுக்கு ஓடி வந்து அவர்களை வரவேற்றார்கள்.“எப்படிண்ணா இருக்க..?’’ ரேவதி பகையை மறந்து கேட்டாள்.

“நல்லாருக்கேன்ம்மா...’’
“அண்ணி எப்படி இருக்கிங்க..?’’
“நல்லா இருக்கேன்ம்மா... நீங்க எப்படி இருக்கிங்க..?’’
“ம்... நல்லா இருக்கோம்...’’
வீட்டிற்கு உள்ளே வந்தார்கள். அங்கு துடைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு சேரில், இருவரும் உட்கார்ந்தார்கள்.“காலம் எவ்வளவு வேகமா ஓடுது இல்ல...’’ என்றாள் ரேவதி.ராகவன் “ஆமாம்...’’ என்றான்.

“இப்ப எந்த ஊர்ல இருக்கிங்க..?’’ மாலதி கேட்டாள்.“ஐதராபாத்ல...’’ராகவன் நிமிர்ந்து பார்த்தார்.“கல்யாணம் பண்ணிக்கிட்டதும், திருச்சில இனி இருக்க வேண்டாம்னு முடிவு பண்ணி, அவரோட ஃபிரெண்ட் ஒருத்தர் மூலமா ஐதராபாத் புறப்பட்டுப் போனோம். ஆரம்பத்துல கஷ்டமாதான் இருந்துது. கஷ்டம்ன்னா சாதாரண கஷ்டமில்ல... சமயத்துல சாப்பாட்டுக்கே வழி இருக்காது. எத்தனையோ நாள் ரெண்டு பேரும் பட்டினி கிடந்து இருக்கோம்.

அதுக்கப்புறமாதான் எனக்கு ஒரு கம்பெனில வேலை கிடைச்சுது. கொஞ்சம் கொஞ்சமா பணம் சேர்த்து அவருக்கு ஒரு டைலர் கடை வச்சு கொடுத்தேன். நல்ல ஓட்டம். அதுக்கப்புறம் அங்கயே கொஞ்சம் துணிகள வாங்கி வச்சு விக்க ஆரம்பிச்சோம். அதுவும் பிக்கப் ஆனது. அதுக்கப்புறம், பக்கத்துலயே ஒரு பெரிய இடமா பாத்து, ‘ரேவதி டெக்ஸ்டைல்ஸ்’னு ஒரு கடைய ஆரம்பிச்சோம். அங்க மாறிச்சு எங்க தலையெழுத்து. 

கடைல நல்ல வியாபாரம். பணம் சேர ஆரம்பிச்சுது. நானும் என் வேலைய விட்டுட்டு அவருக்கு துணையா நிக்க ஆரம்பிச்சேன். இப்ப ஒரு கடை நாலு கடையா மாறி ஐதராபாத்ல ‘ரேவதி டெக்ஸ்டைல்ஸ்’தான் நம்பர் ஒன் ஜவுளிக்கடைன்னு மக்கள் மத்தில பிரபலம் ஆயிடுச்சு...’’ராகவனும், மாலதியும் வாயடைத்துப் போய் நின்றார்கள்.

“எங்களுக்கு ஒரே பையன். ஆறுமுகம்னு அப்பா பேரைத்தான் வச்சுருக்கேன். அப்பா அம்மாவுக்கு எதுவும் செய்ய முடியலையேங்குற வருத்தம் இந்த நிமிஷம் வரைக்கும் உண்டு. அதனால, அவங்க பேர்ல ஒரு டிரஸ்ட்  ஃபார்ம் பண்ணி, நிறைய ஏழைக் குழந்தைகள படிக்க வச்சுட்டு இருக்கோம். ஆறுமுகம்தான் உன்கிட்ட போன்ல பேசினது. மெயின் பிராஞ்ச இவர் பாத்துக்குறார். மத்த பிராஞ்ச அவன் பாத்துக்குறான்.

அவனுக்குதான் கல்யாணம் ஃபிக்ஸ் பண்ணி இருக்கோம். உன்னை எப்படியாவது கல்யாணத்துக்குக் கூப்பிடணும்னு ரெண்டு பேரு மனசுலயும்
இருந்துகிட்டே இருந்துது. அதுக்கான நேரம் இப்ப வரவே புறப்பட்டு வந்துட்டோம்...’’“ரொம்ப சந்தோஷம்மா...’’“நடந்த எதையும் நீங்க மனசுல வச்சுக்கக் கூடாது. அதுக்காக நாங்க உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்குறோம்...’’ என்றார் சாமிநாதன்.“அய்யோ என்ன நீங்க... மன்னிப்பெல்லாம் கேட்டுகிட்டு...’’  என இடை மறைத்தார் ராகவன்.

“என்ன சாப்பிடுறீங்க..?’’ மாலதி கேட்டாள்.
“காபி...’’மாலதி காபி போட்டு எடுத்து வந்து கொடுத்தாள். இருவரும் அதைச் சாப்பிட்டார்கள். அதன் பிறகு, ரேவதி, ஒரு வெள்ளித் தட்டில் பூ பழம் வைத்து, அத்துடன் பத்திரிக்கையை வைத்து, சாமிநாதனுடன் எழுந்து நின்றாள். ராகவனும் மாலதியும் எழுந்து நின்றார்கள். அவர்கள் அந்த வெள்ளித் தட்டை ராகவன் மாலதியிடம் நீட்டினார்கள். அவர்கள் அதைப் பெற்றுக் கொண்டார்கள்.

“ஒரு வாரத்துக்கு முன்னாலயே ரெண்டு பேரும் வந்துடணும். ரெண்டு பேருக்கும் ஃபிளைட் டிக்கெட் போட்டு அனுப்பிடுறேன்...’’“சரிம்மா...’’அவரது மகன், மகள் அட்ரஸைக் கேட்டு வாங்கிக் கொண்டார்கள். “அவங்களுக்கும் பத்திரிக்கை அனுப்பி விட்டுடுறேன்...’’“சரிம்மா...’’சாமிநாதன் டயத்தைப் பார்த்தார். “புறப்படலாமா..?’’ என்றார்.ராகவன் “சாப்பிட்டுப் போகலாமே...’’ என்றார்.

ரேவதி, “இங்க சில டீலர்ஸ் இருக்காங்க. அவங்களுக்கும் பத்திரிக்கை வைக்கணும். வச்சுட்டு நைட் எட்டு மணிக்கு ரிட்டர்ன் ஃபிளைட். அதுல புறப்பட்டுப் போகணும். நிறைய வேலை இருக்கு. அதோட கடைய விட்டு எங்களால ஒரு நிமிஷம்கூட பிரிஞ்சு இருக்க முடியாது...’’ என்றாள்.“சரிம்மா... உன் விருப்பம்...’’அவர்கள் மீண்டும் காரில் ஏறிப் புறப்பட்டார்கள். ராகவனும் மாலதியும் அவர்களை வாசலுக்கு வந்து வழி அனுப்பினார்கள்.

ராகவன், கார் போன திசையைப் பார்த்து பெருமூச்சு விட்டார்.  நாம், யாரால் அவமானப்படுத்தப் படுகிறோமோ, அவர்கள் முன்னால் வாழ்ந்து காட்டுவதே, அவர்களுக்கான பதில்.
ரேவதி வாழ்ந்து காட்டி விட்டாள். இன்று அவமானப்பட்டு கூனிக் குறுகி நிற்பது நாம்தான். அவளது காதலைத் தவறாகப் புரிந்துகொண்டு, அன்று அவள் மீது செருப்பைக் கழற்றி வீசினோம். நான் வீசியது செருப்பல்ல. இன்று அவள் வீசி விட்டுப் போகிறாளே, இதுதான் உண்மையான செருப்படி.

- இயக்குநர் மணிபாரதி