மணிரதனம் - கமல் படத்தின் கதை இதுதானா..?
மணிரத்னம் இயக்கத்தில் ‘தக் லைஃப்’ படத்தில் கமலஹாசன் நடிக்கப் போகிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது.
கூடவே யார் இந்த தக்ஸ் என்ற தேடலும் அதிகரித்திருக்கிறது. இன்று மொக்கை கமெண்ட் அடிப்பவர்களின் முகத்தில் எல்லாம் கருப்புக் கண்ணாடியை மாட்டிவிட்டு அவர்கள்தான் ‘தக்’ (Thug) என்று தலையில் வைத்துக் கொண்டாடி வருகிறது சோஷியல் மீடியா. ஆனால், இந்தச் சொல்லைக் காதில் கேட்டாலே இந்தியாவில் கோலோச்சிய ஆங்கிலேய அதிகாரிகளும் இந்தியர்களும் தொடை நடுங்கிய காலம் ஒன்று இருந்தது. இத்தனைக்கும் இந்த தக் என்ற சொல் ஆங்கிலச் சொல் அல்ல.மத்திய கால இந்தியாவில் எழுதப்பட்ட ஜைன மத நூல்களில் தக்கா (thaka), தகா (thaga) என்ற சொற்கள் இருந்திருக்கின்றன. இந்தச் சொற்களுக்கு அர்த்தம் ஏமாற்று ( சீட்டிங்), மற்றும் மோசடி (ஸ்விண்டில்). இந்தச் சொற்களைத்தான் பிற்கால இந்தியர்கள் வடநாட்டில் தாங்கள் பேசிய இந்தி மற்றும் பிறமொழிகளில் சாதாரணமாகப் பயன்படுத்தியிருக்கின்றனர்.
ஆனால், 1800களில் இந்த இந்தியச் சொல் ஆங்கிலத்துக்கும் பரவியதற்குக் காரணம் ஆங்கிலேய அதிகாரிகள் இந்திய தக்குகள் (thugs) பற்றி கிளப்பிய மெகா சைஸ் கதை.
இந்த தக்குகள் வெறும் ஏமாற்று மற்றும் மோசடிப் பேர்வழிகள் அல்ல. அதையும் தாண்டிய கொடூரமான மாஃபியா கேங்குகள். 1800களில் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆங்கிலேய அதிகாரிகள்தான் இந்தியாவை ஆண்டுகொண்டிருந்தார்கள். அதுவும் 1799ம் ஆண்டு தங்களின் ஒன் அண்ட் ஒன்லி பரம எதிரியான மைசூர் புலி திப்பு கொல்லப்பட்டதும் ஆங்கிலேயர்களுக்கு ஒரு புதிய வில்லன் தேவைப்பட்டது. வில்லனின் பெயரைச் சொன்னால்தான் இந்தியாவில் தங்கள் அதிகாரத்தை நிலைத்திருக்கச் செய்யமுடியும் என்பது ஆங்கிலேயர்களுக்கு வெட்ட வெளிச்சமானது. இந்தநேரத்தில் 1780களில் அலக்ஸாண்டர் வாக்கர் - எட்வர்ட் மூர் என்ற ஆங்கிலேயர்கள் இருவருமாகச் சேர்ந்து முதன்முறையாக இந்தியச் சொல்லான தக்கா, தகா-வை கொஞ்சம் மாற்றி தக்ஸ் (thugs) என இந்தியாவில் புழங்கவிட்டார்கள். அவர்கள் இந்திய தக்குகளைப் பற்றிக் கூறும்போது, ‘அவர்கள் அசுரத்தனமானவர்கள்... காட்டுப் பகுதி, பாழ் நிலங்களில் பலநாட்கள் காத்திருந்து இரவில் வரும் நெடுந்தூரப் பயணிகளைக் குறிவைத்துத் தாக்குவார்கள்’ என்றனர்.
இந்தச் செய்தி காட்டுத் தீபோல பரவவே 1800ம் ஆண்டில்தான் இந்த இந்தியச் சொல் ஆங்கிலத்திலும் தக்ஸ் (thugs) என்ற சொல்லாக உருமாறி இந்தியாவிலும் பிரிட்டனிலும் பரவலாகப் பரிச்சயமானது. ஆனால், இந்த ஒற்றை வார்த்தையை ஒட்டியும் வெட்டியும் அதன்பிறகு எழுதப்பட்ட பல்வேறு புத்தகங்கள், ஆவணங்கள், அறிக்கைகள்தான் இந்தச் சொல்லையும் தாண்டி இந்திய தக்குகளைப் பற்றி மேலும் அச்சம் தரும் செய்திகளைப் பரப்பியது.
உதாரணமாக இதில் இரண்டு நபர்கள் முக்கியம்.இதில் பலருக்கும் தெரிந்த பெயர் பிலிப் மெடோவ்ஸ் டெய்லர். தெரியாத விஷயம் டபுள்யூ.எச். ஸ்லீமன். நிஜத்தில் ஸ்லீமன்தான் இந்திய தக்குகளைப் பற்றி பெரும் தேடலில் இருந்தவர். காரணம், அவர் கம்பெனி அதிகாரிகளில் ஒருவராக இருந்தவர். முதன்முதலில் இந்திய தக்குகள் பற்றி புத்தகம் எழுதியவரும் அவர்தான். அந்தப் புத்தகம் 1836ம் ஆண்டு வெளியானது. புத்தகத்தின் பெயர் ‘The Thugs or phansigars of India’.
இதுதான் இந்திய தக்குகள் குறித்து மேலும் விரிவாகவும் இன்னும் அச்சம் தரும்படியுமான செய்திகளைப் பரப்பியது. உதாரணமாக, ‘‘ஃபான்சிகார்ஸ் (Phansigars) எனும் இந்தத் தக்குகள் இஸ்லாமியர்கள் என்றாலும் காளி மாதாவை வணங்கி வேண்டிக்கொண்டு நல்ல நேரத்தில் ஒரு குழுவாக இந்த கொள்ளை, கொலைக்குச் செல்வார்கள். இவர்கள் கொள்ளை அடிப்பதும் கொலைக்குப் பிறகுதான். அந்தக் கொலையும் கத்தி இல்லாமல் இரத்தம் இல்லாமல் கழுத்தை நெரித்துக் கொல்வதாக இருக்கும்...’’ என்று சொல்லவே, ஆங்கிலேய அதிகாரிகளின் இந்தியக் கண்காணிப்பும், இராணுவ பலமும், ஆட்சிப் பொறுப்பும் மேலும் கூடியது.
ஸ்லீமன் அரசு அதிகாரி என்றால், மற்றவரான டெய்லர் ஹைதராபாத் நிஜாமின் சேவகர். அவர் எழுதிய நூல் ‘ஒரு தக்கின் ஒப்புதல் வாக்குமூலம்’ (A Confession of a Thug). நூல் வெளியான ஆண்டு1839. இந்த நூல் ஸ்லீமனைவிட பிரபலமாகியதற்கான காரணம் இது ஒரு நாவல் என்பதால்தான். மசாலாக்கள் தடவிய ரொமான்டிக் கதை. கைது செய்யப்பட்ட ஓர் இந்திய தக் ஒரு சக சிறைவாசியிடம் தன்னைப் பற்றியும் தன் கொலை, கொள்ளை பற்றியும் விவரிப்பதுதான் இந்த நாவல்.
இந்த இரண்டு புத்தகங்களும் வந்ததும் ஆங்கிலேய அதிகாரிகள் தக்குகளை வேட்டையாடுவதில் மும்முரம் காண்பித்தார்கள். உதாரணமாக இந்த இரு நூல்களும் பல கட்டுரைகளும் இந்திய தக்குகளைப் பற்றி மேலும் அச்சமூட்டும் கதைகளைப் பரப்பத் தொடங்கின.‘‘இந்தக் குடும்பத்தில் பிறந்த குழந்தைகளின் கண்களை 3 நாட்கள் துணியால் மூடியிருப்பர். அதேமாதிரி 40 நாட்கள் ஒரு சிறு வெளிச்சம் கூட கண்ணில் படாதபடி குழந்தையை இருட்டில் வளர்ப்பர்.
இவர்கள் பயணிகளின் கழுத்தை நெரிக்கும்போது கொலையாளிகள் இதற்கென்றே தங்கள் கையில் வைத்திருக்கும் ஒருவகை துணியால் (மஞ்சள் நிறமாக இருக்குமாம்) பயணிகளின் கழுத்தை நெரித்துக் கொல்வர். அந்தத் துணியிலும் நடுவில் ஒருவகை நாணயம் போன்ற ஒரு பொருள் இருக்கும். இந்த நாணய வடிவிலான பொருள்தான் குரல்வளையில் மூச்சை நெரிக்கும்...’’
இப்படி பலவாறான கதைகள் பரப்பப்பட்டன. இத்தோடு இந்த தக்ஸ் குழுக்கள் ஒருவகை இரகசிய மொழியை தொழிலில் பயன்படுத்தினர். சங்கேதம் நிறைந்த இந்த மொழியின் வழியாகத்தான் ஒரு குழுவாகச் செல்பவர்கள் தங்கள் காரியத்தை முடிப்பர் என்றும் கதைகள் புனையப்பட்டன.
இந்தக் கதைகளின் விளைவு - ஸ்லீமன் தலைமையிலான ஆங்கிலேயக் குழுவினர் இந்திய தக்குகளை வேட்டையாடி 1820 மற்றும் 30களுக்கு இடையே 4000 தக்குகளைத் தூக்கில் தொங்க விட்டனர். சுமார் 200 வருடங்களுக்கு முன் நடந்த இந்தக் கதைகளை ஆய்வு செய்து வெளியிட்ட பலர், பிரிட்டன் கிளப்பிய இந்த பூதக் கதையில் வெறும் ஒரு சதவீதம்தான் உண்மை... மற்றது எல்லாம் டுபாக்கூர் என்று ஆணித்தரமாகச் சொல்கிறார்கள்.
உதாரணமாக கிம் வேக்னர் (Kim Wagner).கிம் 2 புத்தகங்களை எழுதியிருக்கிறார். ஒன்று அவருடைய பிஎச்.டி ஆய்வேடு. மற்றது பலர் எழுதிய தொகுப்பு நூல். ஆய்வேட்டின் பெயர் ‘Thugee: Banditry and the British in Early 19th Century India’. தொகுப்பு நூலின் பெயர் ‘Stranglers and Banditry’. கிம் ஒரு இந்திய இலக்கிய விழாவில் தக்ஸ் குறித்து அளித்த யூடியூப் பேட்டியில் பல விஷயங்களைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார்.
‘‘இந்தியாவில் பிரிட்டிஷார் இதுகுறித்து எழுதிவைத்திருக்கும் பல ஆவணங்களில் இருந்தே என் ஆய்வைத் தொடங்கினேன். நிஜத்தில் சில உண்மைகள் இருக்கலாம். ஆனால், ஸ்லீமன், டெய்லர் அல்லது அதற்குப் பிந்தியவர்கள் கற்பனை செய்தது போல் எல்லாம் நிகழ்ந்ததா என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். உதாரணமாக, பிரிட்டிஷ் குறிப்பிடும் ஒரு தக் பிரதேசத்தை நான் அடையாளம் கண்டு நேரடியாகச் சென்று பார்த்தேன். அது பூலான் தேவி வசித்த சம்பல் பள்ளத்தாக்கு. அந்த இடத்தில் ஒரு புல் பூண்டுகூட முளைக்காது.
இந்த மாதிரியான இடங்களில் கொள்ளைக்காரர்களும் கொலையாளிகளும் உருவாவது சுலபம். ஆனால், ஒருகட்டத்தில் எல்லா இந்திய தக்குகளுமே முஸ்லிம்கள்தான் என்ற ஒரு கருத்தும் ‘பான்சிகார்’ என்ற ஒரு சொல்லால் ஏற்பட்டது. உண்மையில் ‘தக்’ என்பதும் ‘பான்சிகார்’ குழுவும் வேறு வேறானது. ஒருகட்டத்தில் இரண்டையுமே இணைத்துவிட்டார்கள். ‘பான்சிகார்’ என்பது முஸ்லிம் கொள்ளை மற்றும் கொலைக்கூட்டம். ‘தக்’ என்பது பழங்குடிகள் சார்ந்தது.
பிரிட்டிஷ் வருகைக்கு முன் மன்னர்கள், நிலவுைடமையாளர்கள் மற்றும் பெரிய இடத்து மனிதர்களுக்கு பாதுகாவலர்களாகச் செயல்பட்டவர்கள்தான் இந்த தக்குகள். காலப்போக்கில் இந்தியத் தெருக்கள் முழுவதிலும் ஆங்கிலேய இராணுவமும் போலீசும் நிறைந்துவிட்டதால் இந்த ‘காவலாளிகள்’ வேலை இழந்தனர். இப்படி வேலையிழந்த சில தக்குகள் சிறு சிறு குழுக்களாகச் சேர்ந்து கொள்ளை மற்றும் கொலையில் ஈடுபட்டிருக்கலாம்.
அதேபோல் இந்த தக்குகளை காளி மற்றும் பவானி கடவுள்களுடன் தொடர்புபடுத்தியதன், மூலம் ஒரு சமய சார்பையும் இந்தக் குழுக்களுக்கு ஏற்படுத்திவிட்டார்கள்.
தக் என முத்திரை குத்தி தங்களை எதிர்க்கும் கும்பலை எல்லாம் ஒருகட்டத்தில் பிரிட்டிஷ் அரசு வேட்டையாட ஆரம்பித்தது.
இந்த இந்திய தக் பற்றிய கதைதான் பிறகு 1870ல் இந்தியாவில் இயற்றப்பட்ட குற்றப் பரம்பரை சட்டத்துக்கும் காரணமாக மாறியது. இந்தச் சட்டம் இந்தியாவில் 1920 வரை நடைமுறையில் இருந்தது. சில சமூகக் குழுக்களின் பிரஜைகள் பிறக்கும்போதே குற்றவாளியாகப் பிறக்கிறார்கள் என்பதற்கான பிற்கால விளக்கங்களுக்கு இந்த இந்திய தக்குகள் பற்றிய கதைகள் உதவின. பிரிட்டிஷ் ஆவணங்களில்கூட சந்தேகத்தின் பெயரில் பிடிபட்ட குற்றவாளிகள், ஆங்கிலேயர் அல்லது பொதுமக்கள் என்ன நினைக்கிறார்களோ அதுமாதிரிதான் வாக்குமூலம் அளித்திருக்கிறார்கள்.எடுத்துக்காட்டாக, ஒரு காவல் அதிகாரி ஒரு குற்றவாளியிடம் ‘எப்படி நீ ஒரு ஆளை கழுத்தை நெரித்துக் கொல்வாய்?’ என்று கேட்க, ‘ஐயா நான் சொல்வதை நீங்கள் எழுதுவதற்குள்ளாகவே நான் அந்தக் காரியத்தை முடித்துவிடுவேன்’ என்றிருக்கிறான்.
ஆகவே, இந்திய தக்குகளைப் பற்றி நாம் ஆய்வு செய்வது என்பது ஒரு நெருப்புக் கம்பி மேல் நடப்பதற்கு சமம்...’’ என அழுத்தமாகக் குறிப்பிட்டிருக்கிறார் கிம். புனைவா நிஜமா என பிரித்தறிய முடியாத அளவுக்கு தக்ஸ் குறித்த விவரங்கள் கடந்த 200 ஆண்டுகளாக வலம் வந்து கொண்டிருக்கின்றன. இனியும் வலம் வரும். தக் லைஃப்! வேறென்ன சொல்ல?
டி.ரஞ்சித்
|