நீருக்கடியில் மேஜிக்
அமெரிக்காவைச் சேர்ந்த சிறுமி அவேரியைப் பற்றித்தான் சமூக வலைத்தளங்களில் ஹாட் டாக். ஆறு வயதாக இருந்தபோதே மேஜிக் செய்யக் கற்றுக்கொண்டார் அவேரி. அவ்வப்போது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் மேஜிக் நிகழ்வுகளை அரங்கேற்றி வந்தார். கொரோனா லாக்டவுன் வந்தது. வீட்டிலேயே அடைபட்டுக் கிடந்த அவேரிக்கு புதிதாக ஏதாவது ஒன்றைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் பிறந்தது. அப்போது நீருக்கடியில் டைவிங் அடிக்கும் சாகச விளையாட்டான ஸ்கூபா டைவிங்கைக் கற்றுக்கொடுக்கும் பயிற்சி வகுப்புகள் மட்டுமே நடந்துகொண்டிருந்தன. லாக்டவுன் நாட்களில் ஸ்கூபா டைவிங்கைக் கற்றுக்கொண்டார் அவேரி. அப்போது அவருக்கு வயது 10. தனக்குத் தெரிந்த மேஜிக்கையும், ஸ்கூபாவையும் இணைத்து புதிதாக ஒன்றைச் செய்ய முயற்சிக்கும்படி அவரது தந்தை சொல்லியிருக்கிறார். தந்தையின் சொல்லை வேதவாக்காக எடுத்துக்கொண்டு நீருக்கடியில் மேஜிக் செய்ய இரண்டு வருடங்கள் பயிற்சி மேற்கொண்டார்.
கடந்த வாரம் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள ஒரு மீன் தொட்டிக்குள் ஸ்கூபா டைவிங் செய்துகொண்டே 38 விதமான மேஜிக் நிகழ்வுகளை வெறும் 3 நிமிடங்களில் அரங்கேற்றியிருக்கிறார் அவேரி. குறைந்த நிமிடங்களில் நீருக்கடியில் அதிக மேஜிக் நிகழ்வுகளைச் செய்தவர் என்ற கின்னஸ் சாதனையையும் தன்வசமாக்கிவிட்டார் அவேரி.
த.சக்திவேல்
|