சன் டிவி சீரியல் இல்லைனா இந்த ஹீரோயின் சான்ஸ் கிடைச்சிருக்காது!



கோலார் தங்க வயலின் தங்கப் பெண் ராதிகா ப்ரீத்தி. சந்தானத்தின் ‘80ஸ் பில்டப்’ நாயகி. தமிழ்நாடு பார்டர் என்பதால் காட்டாற்று வெள்ளம்போல் நாவில் தமிழ் விளையாடுகிறது. படத்துக்கு அமோக வரவேற்பு கிடைத்த மகிழ்ச்சியை ராதிகாவின் முகத்தில் பார்க்க முடிந்தது.

ராதிகா ப்ரீத்திக்கு ஓர் அறிமுகம் கொடுங்களேன்?

சொந்த ஊர் கோலார் தங்க வயல். நடுத்தரக் குடும்பம். அப்பா மிலிட்டரி. கண்டிப்பு அதிகம். சத்தமாக சிரித்தாலும் அடி விழுமளவுக்கு மிலிட்டரி டிசிப்பிளினுடன் வளர்த்தார்.
படிச்சது பி.காம். அடிப்படையில் நான் எறிபந்தாட்ட வீராங்கனை. தேசிய அளவிலான பல போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளை வென்றுள்ளேன். பேட்மின்டன் விளையாட்டிலும் மாநில அளவில் பங்கேற்று பல பரிசுகளை வாங்கியுள்ளேன்.

கல்லூரி படிக்கும்போது கன்னட சினிமாவுல வாய்ப்பு கிடைச்சது. இயக்குநர் நாராயணன், விஜய் ராகவேந்திரா என கன்னட சினிமா லெஜண்ட்ஸ் படங்களில் ஹீரோயின் வாய்ப்பு கிடைச்சது.

தமிழில் என்னுடைய முதல் படம் ‘எம்பிரான்’. பிரபல நடன இயக்குநர் ஸ்வர்ணா பாபு இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, ஒரியா மொழிகளில் நடித்துள்ளேன்.

பரபரப்பாக இருந்த என்னுடைய சினிமா வாழ்க்கையில் அம்மாவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் திடீர்னு பிரேக் வீழ்ந்துச்சு. அம்மாவை உடனிருந்து கவனித்துக்கொள்ளும் பொறுப்பு இருந்ததால் சினிமாவிலிருந்து தற்காலிக விடுப்பு எடுத்துக்கொண்டேன்.

அம்மா, அப்பாவுக்கு நான் செல்லம் என்றாலும் என்னை பொத்திப் பொத்திதான் வளர்த்தார்கள். தனியாக என்னை வெளியே அனுப்பத் தயாராக இல்லை. சினிமா என்னுடைய பேஷன் என்பதால் அவர்களிடம் கெஞ்சிக் கூத்தாடித்தான் சினிமாவுக்கு வந்தேன்.

உங்க ரீ-என்ட்ரி எப்படி நடந்துச்சு?

அதுக்கு சன் டிவிக்குதான் நன்றி சொல்லணும். சினிமாவுல மறுபடியும் நடிக்கலாம்னு முடிவானதும் போட்டோ ஷூட் எடுத்து அதை மீடியாவுக்கு கொடுத்தேன்.அப்படி ‘பூவே உனக்காக’ ஆடிஷன்ல கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைச்சது. அன்றைய தினமே என்னை செலக்ட் பண்ணி அடுத்த நாள் ஷூட்டுக்கும் வரச் சொல்லிட்டாங்க.

சன் டிவி சீரியல்கள் மூலம் எனக்கு மிகப் பெரிய புகழ் கிடைச்சது. ஏற்கனவே நான் ஆறேழு படங்கள் நடிச்சிருப்பேன். அதுல கிடைக்காத பேரும் புகழும் சன் டிவி சீரியல் மூலம் கிடைச்சது. எங்கே சென்றாலும் ‘பூவே உனக்காக’ல வர்ற என்னுடைய பூவரசி கேரக்டரை ஞாபகம் வெச்சுதான் கூப்பிட ஆரம்பிச்சாங்க. அந்த பாப்புலாரிட்டில சந்தானம் சாருடன் ‘80ஸ் பில்டப்’ பட வாய்ப்பு கிடைச்சது.

சீரியல் நடிகைகளுக்கு சினிமா வாய்ப்பு அவ்வளவு சீக்கிரத்துல கிடைக்காது. உங்களுக்கு எப்படி அந்த அதிசயம் நடந்துச்சு?

நீங்க சொல்றது உண்மைதான். நிறைய சினிமா கம்பெனியில் என்னை டிவி ஆர்ட்டிஸ்ட்னு ரிஜக்ட் பண்ணியிருக்காங்க. அப்படி பத்து, பதினைந்து படங்கள் கையைவிட்டு போயிருக்கும். எல்லாமே முன்னணி நிறுவனங்கள் படங்களாக இருந்தன. ஆடிஷன், மேக்கப் டெஸ்ட் எல்லாம் ஓகே ஆன பிறகு, சீரியல் ஆர்ட்டிஸ்ட்னு தெரிஞ்சதும் ரிஜக்ட் பண்ணிடுவாங்க.

இயக்குநர் கல்யாண் சார் என்மீது நம்பிக்கை வெச்சு இவ்வளவு பெரிய வாய்ப்பைக் கொடுத்தார். ‘எத்தனையோ பேர் சீரியலில் பண்ணிட்டு ஜெயிச்சிருக்காங்க. நீ நல்லா பண்ற. உன்னால ஜெயிக்க முடியும்’னு நம்பிக்கை கொடுத்தார். அதை ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் சார், சந்தானம் சார் ஏத்துக்கிட்டாங்க.

என்னுடைய ரீ-என்ட்ரி இந்தளவுக்கு பிரம்மாண்டமா இருக்கும்னு நினைக்கவில்லை. ஸ்டூடியோ க்ரீன் புரொடக்‌ஷன், இயக்குநர் கல்யாண், சந்தானம் என எல்லோருமே அவரவர் துறைகளில் பேர் எடுத்தவர்கள். ஏழெட்டு வருட போராட்டங்களுக்கு இப்போ நல்ல பலன் கிடைச்சிருக்கு.

சீனியரான சந்தானத்துடன் நடிச்சதில் என்ன கத்துக்கிட்டீங்க?

ஸ்கூல் டைமிலிருந்தே சந்தானம் சாருடைய தீவிர ரசிகை நான். அவருடைய டயலாக், உடல்மொழி என எல்லாத்திலும் மாஸ் பண்ணுவார். என்னுடைய ஃப்ரெண்ட்ஸ்கிட்ட பேசும்போது பலமுறை அவருடைய மேனரிசம், டயலாக்கை இமிட்டேட் பண்ணியிருக்கிறேன். அவருடைய ரசிகையான எனக்கு அவருடன் நடிக்கும் வாய்ப்பு என்பது பெரிய வாய்ப்பு.
சந்தானம் சார் எனக்கு மட்டுமல்ல, சினிமாவுக்கு வர நினைக்கும் பலரின் கவனத்தையும் ஈர்த்த நடிகர். காரணம், அவருடைய சினிமா பயணம் பல போராட்டங்களைக் கடந்துதான் இந்த இடத்தை அடைந்துள்ளது.

பழகுவதற்கு இனிமையானவர். நன்றி உணர்வு அதிகம் உள்ளவர். ஆரம்பத்தில் அவருடன் பயணித்த அனைவருக்கும் தன்னுடைய படங்களில் தொடர்ந்து வாய்ப்பு தருகிறார். அதெல்லாம் எனக்கு பெரிய இன்ஸ்பிரேஷன்.சினிமாவில் எனக்கு நடந்த ரிஜக்‌ஷன், டிஸ்கரேஜ் பத்தி சொல்லும்போதெல்லாம் ‘அதையெல்லாம் பெரிசா நினைக்க வேண்டாம். அது பொதுவா நடக்கக்கூடியதுதான். உன்னுடைய கடின உழைப்பு  மட்டுமே இங்கு பேசப்படும். நடப்பவைகள் எல்லாமே நன்மைக்குனு நெனைச்சுக்கோ, நல்லது நடக்கும்’னு உற்சாகப்படுத்தினார்.

சந்தானம் சாருடன் நடிக்கும்போது எந்த இடத்திலும் அழுத்தம் ஏற்படல. அவர் மட்டுமே பேர் வாங்காம, சக ஆர்ட்டிஸ்ட்டுக்கும் பேர் கிடைக்கணும்னு நிறைய ஸ்பேஸ் கொடுப்பார்.
சில காட்சிகளில் அவருக்கு மட்டுமே டயலாக் இருக்கும். பக்கத்துல இருக்கிறவங்களுக்கு டயலாக் இருக்காது. அந்த மாதிரி இடத்துல ‘நீ சும்மா நிக்காம, ஐடியலா எதாவது பேசு’னு சக நடிகரும் பேர் வாங்க காரணமா இருப்பார். பதட்டமில்லா நடிக்க வழி ஏற்படுத்தித் தருவார். படத்துல வெகுளியான கேரக்டர் என்பதால் என்னையே டப்பிங் பேசச் சொன்னார். சந்தானம் சார்கிட்ட நான் கத்துக்கிட்ட முக்கியமான அம்சம் அவருடைய  கடின உழைப்பு.

அடுத்து?

சசிகுமார் சாருடன் ‘எவிடன்ஸ்’. ரஞ்சித் இயக்குகிறார். ‘காவல்துறை உங்கள் நண்பன்’ இயக்கியவர். வித்தவுட் மேக்கப்ல வரக்கூடிய யதார்த்தமான ரோல். தெலுங்குல வெப் சீரிஸ் பண்றேன்.

அஜித், அர்ஜுன், விஜய்சேதுபதி, ஃபகத் ஃபாசில்னு நிறைய ஹீரோக்கள் வில்லனா நடிக்க ஆரம்பிச்சுட்டாங்க. உங்களுக்கு வில்லி வாய்ப்பு வந்தால் நடிப்பீங்களா?

எனக்கு வரும் வாய்ப்பை பொறுத்துதான் வில்லியா நடிக்கலாமா, வேணாமானு முடிவு செய்ய முடியும். ஆர்ட்டிஸ்ட்டைப் பொறுத்தவரை எந்தக் கேரக்டர் கொடுத்தாலும் பண்ணணும். ஆனா, அந்தக் கதையில் நான் வில்லியா நடிக்கிறதுக்கு எந்தளவுக்கு முக்கியத்துவம் இருக்குனு பார்க்கணும். இப்போது சினிமாவின் பார்வை மாறியுள்ள நிலையில் ஹீரோயின், வில்லினு பிரிச்சுப் பார்க்கத் தேவையில்லை.

டிஜிட்டல் உலகத்தில் ‘டீப் ஃபேக்’ பெண்களுக்கு பெரிய அச்சுறுத்தலா மாறியிருக்கே?

டெக்னாலஜில எது வேணுமானாலும் நடக்கலாம் என்பதற்கு உதாரணமா பல விரும்பத்தகாத நிகழ்வுகள் நடக்கின்றன. அதுல அதிகமா பாதிப்படுவது பெண்கள்.
டெக்னாலஜியில் பல நன்மைகள் இருக்கின்றன. இன்னொரு பக்கம் நெகடிவ்வான பல நிகழ்வுகளும் நடக்கின்றன. பாதிப்புக்குள்ளாகிறவர்கள் திட நம்பிக்கையுடன் இருந்தால் எதுவும் பிரச்னை இல்லை.

பொதுவெளியில் நம்மை அசிங்கப்படுத்திட்டாங்களேனு மனம் உடைய வேண்டிய அவசியமில்லை. ஏனெனில், பாதிக்கப்பட்டவர்கள், நான் அப்படி தப்பு பண்ணலைன்னு உலகத்துக்கு நிரூபிக்கணும்னு அவசியமில்லை. பாதிக்கப்பட்டவங்களுக்கு அவங்களைப்பத்தி தெரிஞ்சா போதும்.ஏஐ டெக்னாலஜி அந்தளவுக்கு ரியாலிட்டி இல்லைனும் சொல்லலாம். முதல் பார்வையிலேயே அது போலினு கண்டுபிடிச்சுடலாம். அதனால் அதை பெரிது படுத்திப் பேச வேண்டிய அவசியமில்லை.

அவரவருக்கு நிறைய வேலை இருக்கு. அதுல கவனத்தைச் செலுத்தி முன்னேறுவதற்கான வழியைத் தேடினாலே வாழ்க்கை நிம்மதியா இருக்கும்.மத்தவங்களை அசிங்கப்படுத்துவது வேலை இல்லாதவங்க பண்ற வேலை என்பதால் அதுக்கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்காம புறம்தள்ளிவிட்டு  நம்ம வேலையில் கவனம் செலுத்தினால் போதும்.இதுல இருந்து தப்பிக்க முடியாது. இதுக்கு தீர்வும் இல்லை. அரசாங்கமும் நடவடிக்கை எடுக்கிறார்கள். ஆனால், குற்றவாளியை நெருங்குவது சுலபம் அல்ல.

சின்னத்திரைக்கும், வெள்ளித்திரைக்கும் என்ன வித்தியாசம்?

வித்தியாசம் எதுவும் இல்லை. சீரியல் பண்ணும்போது ஆக்டிங் ஸ்கூல் போகவேண்டிய அவசியமில்லை. ஆக்டிங் கத்துக்க நிறைய சான்ஸ் கிடைக்கும். ஒரு நாளைக்கு பனிரெண்டு காட்சிகள் வரை எடுப்பார்கள். சிலவேளை தொடர்ச்சியாக இரண்டு நாட்களுக்கு ஷூட் போகும். அங்கு பல அனுபவம் கிடைக்கும். சினிமாவுல ஓய்வு அதிகம் கிடைக்கும்.

சினிமாவுல நீங்க கத்துக்கிட்டதா நினைக்கிற அம்சம் என்ன?

பொறுமை. பேஷனுடன் வேலை செய்தால் போதும். நெனைச்சது நடக்கும். மற்றவர்களின் வளர்ச்சியைப் பார்த்து பொறாமைப் பட வேண்டிய அவசியம் தேவையில்லாதது. நாம் எதுவாக நினைக்கிறோமோ அதை ஈடுபாட்டுடன் செய்தால் அது நம்மை வந்து சேரும்.

எஸ்.ராஜா