வாவ் ஷா!



வேறு யார்..? சாட்சாத் த்ரிஷாதான்!‘‘இருபது வருஷம் நடிப்பது பெரிய விஷயம் இல்லை. இருபது வருஷமாக ஹீரோயினாக இருப்பதுதான் பெரிய விஷயம்...’’ என கெத்து ஷா ஆன த்ரிஷாவைப் பற்றி சினிமா வட்டாரம் வியக்கிறது. த்ரிஷா நடிக்க வந்து ஏறக்குறைய இருபது ஆண்டுகள் ஆகிவிட்டன. 
தமிழில் அநேகமாக பெரிய கமர்ஷியல் ஹீரோக்களுடன் நடித்துவிட்டார். பிறகென்ன... எல்லோரையும் போலவே இவருக்கும் பாலிவுட் ஆசை எழுந்தது. ‘கட்டா மீட்டா’ என்னும் இந்திப் படத்தில் அக்‌ஷய் குமாருக்கு ஜோடியாக அறிமுகமானார்.

ஆனால், படம் பப்படம். வசூல் ஜீரோ. இதனால் பாலிவுட்டுக்கு போன வேகத்திலேயே மீண்டும் தமிழ் சினிமாவுக்கு வந்துவிட்டார்.

இங்கே மீண்டும் தமிழில் கவனம் செலுத்த ஆரம்பித்த பிறகு, சரியான வெற்றிப்படங்கள் அமையவில்லை. இதனால் திரைப்பட விழாக்கள் எதிலும் தலைகாட்டாமல் மெளனமாக இருந்துவந்தார் த்ரிஷா.இந்நேரத்தில்தான் ‘96’ திரைப்படம் வெளியானது. யாரும் எதிர்பார்க்காத வெற்றியை அப்படம் பெற்றது. இதனால் ‘ஜானு’வாக த்ரிஷா கொண்டாடப்பட்டார்.
அடுத்த ஓர் இடைவெளியில், மணிரத்னத்தின் புண்ணியத்தில் ‘குந்தவை’ ஆக இன்று கொண்டாடப்பட்டு வருகிறார்.

‘பொன்னியின் செல்வன்’ வரிசைப் படங்களில் நடிக்க த்ரிஷா வெறும் இரண்டு கோடி ரூபாய் மட்டுமே வாங்கியதாக சொல்கிறார்கள்.ஆனால், அடுத்து விஜய்க்கு ஜோடியாக நடித்த ‘லியோ’ படத்துக்கு இரு மடங்காக தன் ஊதியத்தை உயர்த்தினாராம். இப்போது அஜித்துடன் ‘விடாமுயற்சி’, அடுத்து கமலுடன் ‘தக் லைஃப்’ என பிசியோ பிசியாக நடித்து vவருகிறார்.
போதாதா... இரு கை விரல்களையும் விரித்துக் காட்டும் அளவுக்கு சம்பளம் கேட்கிறாராம்.

இதனால் அறியப்படும் - உணரப்படும் நீதி ஒன்றே ஒன்றுதான். பொறுமை, விடாமுயற்சி, கிடைக்கும் வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்தல்... இவை இருந்தால் இறக்கமும் ஏற்றமாகும்... ஏற்றமும் மேலும் மேலும் ஏற்றமாகும்!

காம்ஸ் பாப்பா