3 நொடிகளில் ஒரு குறும்படம்!
ஆறு நொடிகள்... அதில் மூன்று நொடிகள் சென்சார் சான்றிதழ்... மீதி இருக்கும் மூன்று நொடிகள்தான் முழுப் படமும். இப்படி மூன்று நொடிகளில் குறும்படம் ஒன்றை தயாரித்து லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து உலக சாதனை புரிந்திருக்கிறார் மதுரையைச் சேர்ந்த இளைஞர் கார்த்திக் பாலன். ‘‘மதுரை பழங்காநத்தம்தான் என்னுடைய சொந்த ஊர். இன்ஜினியரிங் படித்துவிட்டு எம்பிஏ முடித்தேன். சமீபத்தில்தான் ஜர்னலிசம், மாஸ் கம்யூனிகேஷன் படிப்பு முடித்திருக்கிறேன்.
சின்ன வயதிலிருந்து சினிமா மீது ஆர்வம் அதிகம். எப்படியாவது சினிமா துறையில் சாதிக்க வேண்டும் என்பதே குறிக்கோள். 2015ல்தான் சின்னச் சின்ன குறும்படங்கள் மூலமா தொடர்ந்து பயணிக்க துவங்கினேன். அப்பா மாரியப்பன் போர்வெல் பிசினஸ் செய்கிறார். அப்பாவுடைய பிசினஸை ஒரு பக்கம் நானும் கவனித்து வருகிறேன். அம்மா ராமலட்சுமி. என் மனைவி பெயர் கயல்விழி. இரண்டு மகள்கள். மூத்தவர் விக்னவர்ஷினி, இரண்டாம் மகள் விஷ்ணுவர்த்தினி...’’ எனத் தன்னைப் பற்றி பகிர்ந்துகொண்ட கார்த்திக் பாலன் தொடர்ந்து உலக சாதனை வரை எப்படி சாத்தியப்பட்டது என மேலும் விவரித்தார்.
‘‘பொதுவாகவே சினிமா ஆர்வம் வந்துவிட்டாலே படிப்பில் நாட்டம் குறைந்து விடும். நானும் அந்தக் கட்டத்தை எல்லாம் சந்தித்தேன். ஆனால், எனக்கு இப்போது வரையிலும் பக்கபலமாக நிற்பது என்னுடைய நண்பர்கள்தான். நான் படித்து டிகிரி முடிப்பதற்கு அவர்கள்தான் காரணம். கல்லூரிக் கட்டணம் உட்பட அத்தனையும் அவர்கள் பார்த்துக் கொண்டார்கள். வெள்ளிக்கிழமையில் ஏதேனும் ஒரு தியேட்டரில்தான் நான் இருப்பேன்.
இன்னொரு உண்மையான சம்பவம் என்னவென்றால் சென்னையில் சென்று மேற்படிப்பை தொடர்ந்தால் அதன் மூலம் சினிமா வாய்ப்பையும் ஒரு பக்கம் பார்க்கலாம் என்னும் எண்ணத்தில்தான் எனது எம்பிஏ படிப்பை சென்னையில் படித்தேன். அதன் பிறகு வீட்டில் குடும்பத் தொழிலை கவனிக்கும்படி நெருக்கடி உண்டானது. அதனாலேயே மீண்டும் மதுரையில் அப்பாவின் தொழிலை அவருடன் சேர்ந்து செய்து கொண்டிருக்கிறேன். ஆனாலும் என் நண்பர்கள் என்னை சும்மா இருக்க விடவில்லை. இடையில் நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் ஏதாவது ஒரு குறும்படம் செய்து வெளியிட்டுக் கொண்டே இருந்தேன்.
அப்படிதான் ‘மாற்றம்’ என்கிற சுற்றுச்சூழல் சுத்தம் குறித்த குறும்படத்தை வெளியிட்டு பலரிடமும் பாராட்டுகளை பெற்றேன். நான் செய்கிற அத்தனை குறும்படங்களிலும் எனது நண்பர்களின் பங்குதான் அதிகமாக இருக்கும். அப்படி ஏதாவது ஒன்று இதன் மூலம் சாதிக்கலாமே என்னும் எண்ணமும் தோன்றவே ஒருமுறை டூர் ஒன்றுக்கு சென்று இருந்தேன். அங்கே ஒரு கண்ணாடியை பார்த்தபொழுது அதை மையமாகக் கொண்டு ‘அனிமல்’ என்கிற குறும்படத்தை 12 நொடிகளில் உருவாக்கி கின்னஸ் சாதனை புத்தகத்திற்கு அனுப்பி வைத்தேன்.
ஆனால், அதற்கு முன்பே ‘சோல்ஜர் பாய்’ என்கிற குறும்படம் வெறும் ஏழு நொடிகளில் முடித்து சாதனை படைத்திருப்பது தெரிய வந்தது. மேலும் லிம்கா சாதனை புத்தகத்திலும் கூட அந்த திரைப்படம் இடம் பிடித்திருந்தது...’’ என்னும் கார்த்திக் பாலன் தொடர்ந்து தனது எண்ணத்தின் ஓட்டங்களை வேறு பக்கமாக திசை திருப்பி இருக்கிறார். ‘‘இதை விடவும் குறைவான கால அளவில் ஒரு குறும்படத்தை உருவாக்கியே தீர வேண்டும் என்னும் உந்துதல் எனக்குள் அதிகமானது. அப்போதுதான் அதற்கெனவே ஒரு தனி கதை உருவாக்கி மூன்று நொடிகளில் ஒரு குறும்படத்தை அனுப்பினேன்.
ஆனால், அப்போதும் அது தேர்வாகவில்லை. பின்புதான் தெரிந்தது சென்சார் சான்றிதழ் இல்லாமல் படத்தை அங்கீகரிக்க மாட்டார்கள் என்பது. அதனால் முறைப்படி சென்சார் சான்றிதழும் பெற்று மீண்டும் லிம்கா புத்தகத்திற்கு அனுப்பி வைத்தேன்...’’ என்றவர், இப்படி பல கட்ட முயற்சிகளுக்குப் பிறகுதான் தனக்கு லிம்கா புத்தகத்தில் எப்படி இடம் பிடிப்பது என்னும் பாதை தெரிந்தது என்கிறார்.
‘‘உலகமே எதிர்காலத்தில் பயோ வாரை நோக்கித்தான் சென்று கொண்டிருக்கிறது. அதன் ஒரு கட்டம்தான் இந்த கொரோனா வைரஸ் தாக்குதல் கூட. இதையே எனது குறும்பட கான்செப்ட் ஆக எடுத்துக்கொண்டு ‘உயிரே’ என்னும் குறும்படத்தை உருவாக்கினேன். மூன்று நொடிகளில் குறும்படம்... மூன்று நொடிகளில் சென்சார் சான்றிதழ்... இரண்டையும் பெற்று துவக்கத்தில் இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பிடிக்கச் செய்தேன்.
தொடர்ந்து ஏதேனும் பொது இடத்தில் இந்த குறும்படத்தை திரையிட்டு நிகழ்ச்சி போல் நடத்தி அனுப்பி வைக்க வேண்டும் என்றார்கள். அதையும் செய்து அனுப்பிய பிறகு 2021ல் உருவான இந்த குறும்படத்திற்கு இப்போதுதான் லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் கிடைத்தது.
மணிகண்டன், கௌதம் சூர்யா, ரங்கநாதன், வினோத் குமார், ராம்குமார் மற்றும் கருப்பசாமி... இவங்கதான் என்னுடைய டீம் மற்றும் என்னுடைய நெருங்கிய நண்பர்களாக நான் இத்தனை தூரம் வருவதற்கு காரணம்...’’ நெகிழும் கார்த்திக் பாலன், ஆயுதத்தால் ஒரு தாக்குதல் நடந்தால் வெறும் தும்மலிலேயே இன்னொரு தாக்குதல் நடக்கும் என்பதை மையமாக வைத்துதான் இந்த ‘உயிரி’ குறும்படத்தை உருவாக்கி லிம்கா புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறார்.
இதற்கு முன்பு வெறும் ஐந்து நொடிகளில் ‘பி பிரிட்டி’ என்னும் குறும்படத்தை இயக்கி உலக சாதனை படைத்தவரும் தஞ்சாவூரைச் சேர்ந்த அன்பு ராஜசேகர் என்ற இளைஞர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கார்த்திக் பாலன் மூன்று நொடிகளில் குறும்படம் இயக்கி இன்னும் இந்தியர்களின் திறமையை கண்டு உலகமே ஆச்சரியப்படும்படி செய்துள்ளார். இருக்கும் இடம் எதுவானாலும் சாதிக்க வேண்டும் என்ற முயற்சி இருந்தால் யார் எங்கு வேண்டுமானாலும் சாதிக்க முடியும் என நிரூபித்துக் காட்டியிருக்கிறார் கார்த்திக் பாலன்.
ஷாலினி நியூட்டன்
|