சீனாவில பரவும் புதிய நிமோனியா!



சீனாவில் கடந்த 2019ம் ஆண்டில் உருவான கொரோனா வைரஸ், உலகையே எப்படி ஆட்டிவைத்தது என்பது எல்லோருக்கும் தெரியும். கொடுமையான கொரோனாவின் பிடியில் இருந்து இப்போதுதான் உலகம் மெல்ல மெல்ல விடுபட்டு வருகிறது. இந்த நேரத்தில் சீனாவில் புதிதாக ஒரு நிமோனியா காய்ச்சல் பரவி வருகிறது.
இந்த புதிய காய்ச்சலால் குழந்தைகள்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்களாம். இதன் காரணமாக அங்குள்ள பல ஊர்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த நோயின் தாக்கம், பெய்ஜிங் மற்றும் லியோனிங் மாகாணம் போன்ற சீனாவின் முக்கியமான இடங்களில் மிகவும் மோசமாக பரவியுள்ளது.

நோயைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் சீன சுகாதாரத் துறை அதிகாரிகள் ஈடுபட கொரோனாவைப் போல் இந்த நிமோனியா காய்ச்சலும் உலகை உலுக்குமோ என்று பயத்துடன் பார்த்துக்கொண்டு இருக்கிறது உலக சுகாதார நிறுவனம்.காய்ச்சலால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு வருவதுபோல் இல்லாமல் அதிகப்படியான உடல் வெப்ப நிலை, நுரையீரல் வீக்கம் போன்ற பிரச்னைகளால் இந்த நிமோனியாவால் பாதிக்கப்படும் நோயாளிகள் அவதிப்படுகிறார்களாம்.

பொதுவாக நிமோனியாவால் பாதிக்கப்படுபவர்கள் அதிகம் இருமுவார்கள். ஆனால், இந்த நிமோனியாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இருமல் வருவதில்லையாம். இது அங்குள்ள மருத்துவர்களை குழப்பியிருக்கிறது.இது மைக்கோபிளாஸ்மா நிமோனியா என்கிற ஒருவகை நிமோனியாவாக இருக்கக்கூடும் என்று அங்குள்ள மருத்துவர்கள் கணித்துள்ளனர். மைக்கோபிளாஸ்மா நிமோனியாவை பொதுவாக ‘வாக்கிங் நிமோனியா’ (Walking Pneumonia) என்றும் அழைப்பர்.

இந்த வகையான நிமோனியா பொதுவாக இளைஞர்களைத் தாக்கும் திறன் பெற்றது என்கின்றனர். அக்டோபர் மாதத்திலிருந்தே இந்த மர்ம வகை நிமோனியாவால் அதிகப்படியான குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு இருக்கிறார்கள். 

அக்டோபர் மாதத்திலிருந்து தற்போது வரை இந்த நோயால் யாரும் உயிரிழக்கவில்லை என்பதுதான் ஒரே ஆறுதல்!புதிய வகை நிமோனியா பரவுவதைத் தொடர்ந்து, எத்தனை நபர்கள் சுவாசப் பிரச்னை, நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்கிற தகவல்களை கொடுக்க வேண்டும் என்று சீனாவிடம் உலக சுகாதார நிறுவனம் (WHO) கோரிக்கை விடுத்துள்ளது.

முன்னதாக தேசிய சுகாதார ஆணையத்தில் உள்ள சீன அதிகாரிகள், சீனாவில் சுவாச நோய்களின் தாக்கம் அதிகரித்து வருவதாக நவம்பர் 13ம் தேதி நடந்த செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளனர்.நோய்த் தொற்று அதிகமாக பரவி வரும் இந்தக் காலகட்டத்தில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று சீன மக்களுக்கு உலக சுகாதார நிறுவனம் ஆலோசனை கூறியுள்ளது.
முகக்கவசம் அணிவது, நோய்வாய்ப்பட்ட நபர்களிடம் இருந்து விலகியிருப்பது போன்றவைகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

இந்த நோயின் தீவிரத்தை அறிய, நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் மருத்துவ அறிக்கைகளை உலகளாவிய சுகாதார நிறுவனம் சீனாவிடம் கேட்டுக்கொண்டுள்ளது.சீனாவில் நடப்பதைக் கேள்விப்பட்ட பிறகு, எங்கே திரும்பவும் முகக் கவசத்தின் பின்னால் ஒளிந்துகொள்ள வேண்டியிருக்குமோ என்ற பயம் ஏற்படுகிறது.
 
ஜான்சி