30 நொடிக்கு ரூ.4 கோடி!
தென்னிந்திய சினிமாவில் பெரும் ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் நயன்தாரா, சமந்தா, கீர்த்தி சுரேஷ், தமன்னா, காஜல் அகர்வால் எல்லோரையும் பின்னுக்குத் தள்ளி முன்னணியில் நிற்கிறார் ராஷ்மிகா மந்தனா. எதில் தெரியுமா? விளம்பரத் துறையில்.இன்றைய நிலவரப்படி, உலகப் புகழ் பெற்ற ப்ராண்ட்கள், இந்திய அளவில் முன்னணியில் இருக்கும் ப்ராண்ட்களுக்கு விளம்பரத்தூதராக இருப்பவர்களில் தீபிகா படுகோன், அலியா பட், காத்ரீனா கைஃப், ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் இவர்களுக்குள்ளே கடும்போட்டி நிலவுகிறது. தென்னிந்திய சினிமாவைச் சேர்ந்த நடிகைகளில் நயன்தாரா விளம்பரங்களில் நடிக்க இதுவரையில் அதிக சம்பளம் வாங்கி வந்தார். ஆனால், இப்போது தனக்கு கிடைத்திருக்கும் இந்திய அளவிலான மார்க்கெட்டை வைத்து தனது சம்பளத்தை கணிசமாக உயர்த்தி இருக்கிறாராம் ராஷ்மிகா. உபயம் ‘அனிமல்’ இந்திப் படம்!
10 விநாடிகள் முதல் 30 விநாடிகள் வரை ஓடும் விளம்பரங்களில் நடிக்க வைக்கலாமென்று ராஷ்மிகா வீட்டு காலிங் பெல்லை அழுத்தினால், உடனடியாக தொடர்பு கொள்ளும் அவரது மேனேஜரும் ஏஜென்சியும், நான்கு விரல்களைக் காட்டுகிறார்களாம். 4 என்றதும் லட்சம் என்று நினைத்து உற்சாகமானவர்களுக்கு, ‘சின்ன நாலு இல்ல... பெரிய நாலு...’ என்று மயக்க மடையச் செய்கிறார்களாம்.
அதாவது ராஷ்மிகா உங்களது ப்ராண்ட் விளம்பரத் தூதராக நடிக்க வேண்டுமென்றால் ஜஸ்ட் ரூ.4 கோடி சம்பளம் கொடுத்தால் போதும். பெரிய ப்ராண்ட் எதுவும் இல்லை; சொந்தமாகத் தொடங்கவிருக்கும் கடையை ராஷ்மிகா திறந்தால் சென்டிமென்ட்டாக நன்றாக இருக்கும் என்று நீங்கள் நினைத்தீர்கள் என்றால், ரூ.25 லட்சம் கொடுத்தால் போதும், ரிப்பனை வெட்டிவிட்டு விற்பனையைத் தொடங்கி வைப்பார்.
ஆனால், ரூ.15 லட்சம் கொடுத்தால் மேற்கூறிய பட்டியலில் இருக்கும் மற்ற நடிகைகள் கடையைத் திறந்து வைக்க வருவார்கள்... என்ன, அழைக்கத்தான் ஆளில்லை என்கிறார்கள். ம்... ம்... ராஷ்மிகா காட்டில் மழைதான்!
காம்ஸ் பாப்பா
|