உலகை அச்சுறுத்தும் தனிமை!
தனிமையில் இருப்பவர்கள் ஏற்கனவே ‘Mentally disturbed’ என்ற மனநிலைக்கு ஆளாகியிருப்பார்கள்...
தனிமையிலே இனிமை காண முடியுமா என அன்றே ஒரு கவிஞன் துக்கத்துடன் கேட்டான்.இன்று உலக சுகாதார அமைப்பும் அதையேதான் சொல்கிறது. அதுவும் அழுத்தமாக. ஆம். தனிமை ஒரு உலகப் பிரச்னையாக மாறிவருகிறது. உலகில் தனிமையில் வாடுபவர்கள் அதிகமாகிக் கொண்டிருக்கிறார்கள் என்கிறது உலக சுகாதார அமைப்பு.தனிமையில் வாழ்வது என்பது ஒரு நாளைக்கு 15 சிகரெட்டுகள் பிடிப்பதனால் ஏற்படும் பாதிப்புக்கு சமமானது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
WHO சொல்வதென்ன?
உலக சுகாதார நிறுவனம், தனிமையை உலகளாவிய பிரச்னையாக அறிவித்துள்ளது. இந்தப் பிரச்னையை சரி செய்வதற்கு சமூகத் தொடர்புக்கான ஆணையத்தை அமைத்துள்ளது. சிலர் தனிமையை தேடுவதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. இதய நோய், நினைவாற்றலை இழப்பது, சிறு சிறு செயல்களுக்கு எல்லாம் பதற்றமடைவது போன்று பல நோய்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்வதுதான் காரணம் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது மாதிரியான சிக்கல்களைத் தடுக்க உலக சுகாதார நிறுவனம் ‘The WHO Commission on Social Connection (2024 - 2026)’ என்ற வெப்சைட் ஒன்றை ஆரம்பித்துள்ளது.
தனிமையில் இருப்பதால் என்ன? அவரவர் விருப்பப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்! அதனால் என்ன... என்று நினைக்கலாம். ஆனால், அப்படியல்ல. தனிமை பல்வேறு மனம் மற்றும் உடல்ரீதியான பிரச்னைகளைக் கொண்டு வருகிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.
ஒருவர் தனிமையைத் தேடிக்கொள்வதற்கான காரணங்கள் என்ன?
தனிமைதான் சிறந்த துணை என்று தேடிக் கொள்பவர்களுக்கான காரணங்கள் பெரும்பாலும் ‘சோஷியலைஸ்’ ஆக விரும்பாதவர்கள் என்பது மட்டும் காரணமாக இருக்காது என்கின்றனர். தனக்கு மிகவும் பிடித்த ஒருவரின் இழப்பு, தொடர்ந்து தோல்வியை அனுபவிப்பவர், சகஜமாக எளிதாக எல்லோரிடமும் பழகும் தன்மையில் இல்லாதவர் போன்ற காரணப் பட்டியலில் தற்போது கொரோனாவும் நிறைய மனிதர்களைத் தனிமைப்படுத்தியுள்ளது என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
தனிமையில் இருப்பதால் ஏற்படும் பாதிப்புகள்:
தனிமையில் இருப்பவர்கள் ஏற்கனவே ‘Mentally disturbed’ என்ற மனநிலைக்கு ஆளாகியிருப்பார்கள். மனதளவில் மட்டுமில்லாது உடலளவிலும் பாதிப்புகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் ஏராளம். பக்கவாதம், பதற்றம், நினைவாற்றலை இழப்பது, மனச்சோர்வு, முக்கியமாக தற்கொலை எண்ணங்கள் வருவது மற்றும் பல ஆபத்துகளை எதிர்கொள்ள வேண்டியதாக இருக்கும் என்று WHO அறிவுறுத்துகிறது.
தனிமையைத் துரத்த என்ன வழி?
தனிமையில் வாழ்ந்து கொண்டிருக்கும் நபர் நினைத்தவுடனே சோஷியலைஸ் ஆகவேண்டும் என்பது எளிதல்ல. தொடர்ச்சியான முயற்சிகள்தான் தனிமையிலிருந்து வெளியே வரவேண்டும் என்று நினைப்பவர்களுக்கு கைகொடுக்கும். தொடர்ந்து சமூக நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது, புதிய மனிதர்களிடம் பேசுவது, நண்பர்களுடன் அதிக நேரம் செலவிடுவது, செல்ஃப் கேர் எடுத்துக் கொள்வது, புத்தகம் வாசிப்பது, தனிமையில் இருக்கும்போது தேவையில்லாத சிந்தனைகள் வரும் சமயங்களில் தனக்குப் பிடித்த நபரை தொலைபேசியில் அழைத்துப் பேசுவது... இதுபோன்ற தொடர்ச்சியான முயற்சிகள் மூலம்தான் தனிமையிலிருந்து வெளியே வர முடியும்.தனிமையிலிருந்து வெளியே வாருங்கள். துணைகளைத் தேடுங்கள். மகிழ்ச்சியாய் வாழுங்கள்.
ஜான்சி
|