தனியார் நூலகங்களில் இதுவே முக்கியமானது!
64 ஆண்டுகள்... ஒரு லட்சத்து 20 ஆயிரம் நூல்கள்... 3 மாடி கட்டடம்... ஏசி வசதி... தங்குவதற்கு அறை...
புதுக்கோட்டையின் அடையாளங்களில் ஒன்று ‘ஞானாலயா’ நூலகம். ஆய்வாளர்களுக்கும், புத்தக ஆர்வலர்களுக்கும் பொக்கிஷமாகத் திகழும் இந்நூலகம் 1959ல் உருவாக்கப்பட்டது. அதுமட்டுமல்ல. இது தமிழ்நாட்டின் தனியார் நூலகங்களில் அதிமுக்கியமான நூலகமும்கூட.ஏனெனில், இங்குள்ள சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் நூல்களில் பெரும்பாலானவை முதல் பதிப்பு கொண்டவை. தவிர, அந்தக் கால இலக்கிய இதழ்கள், வெகுஜன இதழ்கள், அரிய தமிழ் நூல்கள், புகைப்படங்கள் உள்ளிட்டவையும் இந்நூலகத்தில் இருக்கின்றன.
இதனை உருவாக்கி பராமரித்து வருபவர்கள் ‘ஞானாலயா’ பா.கிருஷ்ணமூர்த்தி - டோரதி தம்பதியினர். தற்போதும் முதல் பதிப்பு நூல்களையும், இதழ்களையும் அத்தனை ஆர்வமாகச் சேகரித்து வருகின்றனர். ‘‘இந்த நூலகம் உருவாகி 64 ஆண்டுகளாச்சு. ஆனா, 1970களில்தான் ‘மீனாட்சி நூல் நிலையம்’னு எங்க அம்மா பெயர்ல நூல்கள்ல முத்திரை குத்த ஆரம்பிச்சேன். அப்புறம் தனி நூலகக் கட்டடமாக உருவான நேரம் ரோஜா முத்தையாவும், என் துணைவியாரும், என் பொண்ணுங்களும் சேர்ந்து பொதுவான ஒரு பெயராக வைக்கணும்னு சொன்னாங்க. அப்படியாக 90கள்ல ‘ஞானாலயா’னு நூலகத்திற்குப் பெயர் வச்சேன்...’’ எனப் புன்னகையுடன் பேசத் தொடங்கிய கிருஷ்ணமூர்த்திக்கு இப்போது வயது 82. ‘‘பூர்வீகம் திருவாரூருக்குப் பக்கத்தில் உள்ள காவாலக்குடி. எங்கப்பா வேலை நிமித்தமா 1928ல் திருச்சி மாவட்டம் வந்திட்டார். நான் உடையார்பாளையத்துல 1941ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி பிறந்தேன். அப்ப, எங்கப்பா அந்த ஊர் பள்ளியில் தலைமையாசிரியராக இருந்தார். பிறகு, அப்பா கல்வித்துறையில் டி.ஓ.வாக எல்லாம் இருந்தாங்க.
அப்பா, வேலை மாறுதலாகிப் போகும் ஊர்களிலெல்லாம் படிச்சேன். பள்ளியில் படிக்கிறப்ப பாரதிதாசனின் பள்ளித் தோழரான முருகேச முதலியார் எனக்கு தமிழாசிரியராக இருந்தார். பிறகு, திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் பி.எஸ்சி கணிதம் படிச்சேன். அடுத்து எம்ஏ தமிழ், எம்.எட் எல்லாம் முடிச்சேன். பள்ளியில் படிக்கிறப்பவே வாசிப்புப் பழக்கம் இருந்தது. அப்ப தமிழ் உணர்வுகளை ஊட்டக்கூடிய ஆசிரியர்கள் அதிகமாக இருந்தாங்க.
ஆண்டுக்கு 12 புத்தகம் படிக்கணும்னு கட்டாயம் இருந்தது. ஹால் டிக்கெட் வாங்கணும்னா நூலகரிடம் நோ டியூ சான்றிதழ் வாங்கணும். அப்ப அவர் 12 புத்தகம் படித்தார்னு ஒரு சான்றிதழ் தருவார். ஆசிரியர்களும் வாசிக்கணும்னு வலியுறுத்துவாங்க. என் அப்பாவும் எல்லாவற்றையும் படிக்கணும் என்கிற எண்ணத்தை ஊட்டினார். பள்ளியில் படிக்கிறப்பவே கி.வா.ஜ, கி.ஆ.பெ.விஸ்வநாதன், அண்ணா, நாவலர் நெடுஞ்செழியன், பேராசிரியர் அன்பழகன்னு எல்லோர் பேச்சையும் கேட்டிருக்கேன். இவங்க பள்ளி விழா, இலக்கிய விழாக்களுக்கு எல்லாம் வந்து பேசுவாங்க...’’ என்ற கிருஷ்ணமூர்த்தி, புத்தக சேகரிப்பு பழக்கம் வந்தது பற்றித் தொடர்ந்தார்.
‘‘அது 1959ல் திருச்சியில் ஆரம்பிச்சது. இங்க சென்னையில் மூர்மார்க்கெட் எப்படியோ அதேபோல திருச்சியில் டவுன்ஹாலை ஒட்டி பழைய புத்தகக் கடைகள் நிறைய இருக்கும். பெரிய கடை வீதியில் ரெண்டு மூணு நூலகங்களும் இருந்துச்சு. சுதந்திரம் பெற்றபிறகு இந்த நூலகங்களை எல்லாம் மூடிட்டாங்க. அங்கிருந்த நூல்கள் எல்லாம் பழைய புத்தகக் கடைகளுக்கு வருது. அதேமாதிரி சக்தி வை.கோவிந்தன் உள்ளிட்ட பதிப்பாளர்களும் மூடினாங்க. செல்லம்மா பாரதி எழுதிய ‘பாரதி சரித்திரம்’ நூறு காப்பி அப்படியே கிடந்தது. இது மாதிரி நூல்கள் எதை எடுத்தாலும் எட்டணா.
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகப் பேராசிரியர் முத்துசிவன், ‘அமரகவி பாரதி’னு எழுதினார். அதெல்லாம் ஓரணா. ஞாயிற்றுக்கிழமையில் மலையடிவாரத்தில் இருந்து காந்தி மார்க்கெட் வரைக்கும் தார்ப்பாய் விரிக்கப்பட்டு புத்தகங்கள் குவிந்து கிடக்கும். அதனால படிக்க, சேகரிக்கனு ரெண்டுமே செய்தேன். இப்பவும் லேட்டஸ்ட்டாக வர்ற புத்தகங்களின் முதல் பதிப்பை சேகரிக்கிறேன். 1835ல்தான் இந்தியர்களும், தமிழர்களும் அச்சு அலுவலகம் வைத்துக்கொள்ளவும், புத்தகங்கள் வெளியிடவும் அனுமதி தந்தாங்க. அதற்கு முன்னால் நமக்கு அச்சகங்கள் வைத்துக்கொள்ளவோ, புத்தகங்கள் வெளியிடவோ உரிமை கிடையாது. நம் மக்களும் ஓலைச்சுவடியைப் பயன்படுத்திக்கொண்டிருந்த காலம் அது.
கிறிஸ்துவ மதப் பிரசாரத்திற்காக பைபிளை வெளியிடும் நோக்கில் இங்கே அச்சகங்களை நிறுவினாங்க. அன்றிலிருந்து இன்றுவரை கணக்கு எடுத்தால் 185 ஆண்டுகள்தான் ஆகுது. இந்த ஆண்டுகளுக்குள் வந்த புத்தகங்களையோ, நாளிதழ்களையோ, இதழ்களையோ கொண்ட நூலகம் தமிழகத்தில் இருக்கானு கேட்டால் இல்ல.
அதை ஓரளவுக்கு பூர்த்தி செய்வதே எங்க நோக்கம்...’’ என்றவரிடம், முதல் பதிப்பை சேகரிப்பது குறித்துக் கேட்டோம். ‘‘பெற்ற குழந்தையை முதன்முதலாக கையில் எடுத்து கொஞ்சுகிற சுகமே தனிதானே. அதுமாதிரி இந்த முதல் பதிப்பு மற்றும் புது புத்தகங்களை வாங்கும்போது இருக்கும்.
பாரதியின் முதல் பதிப்பு நூலான ‘சுதேச கீதங்கள்’ 1908ல் வெளியானது. அந்தப் பதிப்புல 13ம் பக்கம் முதல் 17ம் பக்கம் வரை ‘என் மகனே’ என்கிற தலைப்பில் முத்துக்குமார பிள்ளை பாடியதுனு இருக்கும். பாரதியின் கவிதைகள் எப்படி இன்னொருவர் பெயரில் இருக்குனு எனக்கு ஆச்சரியம்.
உடனே, எங்க அப்பாவிடம் கேட்டேன். அப்போது அப்பா, ‘பாரதி தன் கவிதைகளை வெளியிடுவதற்கு முன்னால் நாட்டுப்பற்றையும், மொழிப்பற்றையும் ஊட்டக்கூடிய கவிதைகள் யாராவது எழுதியிருந்தால் அனுப்புங்கள். அதை என்னுடைய கவிதையுடன் சேர்த்துப் போடுகிறேன்’னு சொன்னதாகச் சொன்னார். இதை பாரதியின் நூற்றாண்டு வரைகூட யாரும் சொல்லல.
அந்தப் புத்தகம் 1960களில் கிடைச்சது. அப்பதான் எனக்கு முதல் பதிப்புல ஏதோ விஷயங்கள் இருக்குனு தெரிஞ்சது. அன்றிலிருந்து முதல் பதிப்புகளைத் தேடித் தேடிச் சேகரிக்க ஆரம்பிச்சேன்.
இதுமட்டுமல்ல. பாரதியார் எழுதின முதல் பாடல் தனிமை இரக்கம். அதை ஆங்கிலக் கவியில் சானட்ஸ்னு சொல்வாங்க. 16 வரி பாடல்கள். அதில், அவரே அடிக்குறிப்புகள் தந்திருப்பார். இது ‘விவேகபாநு’ என்கிற பத்திரிகையில் 1904ல் வந்தது.
அந்தப் பத்திரிகையும் நான் வச்சிருக்கேன். முதல் பதிப்புக்கு மேல்நாட்டவர் தரும் முக்கியத்துவம் போல் நாம் கொடுக்கிறதில்ல. நம்மவர்கள் நவீன தொழில்நுட்பம் வந்த காரணத்தினால் எல்லாம் இணையதளத்துல இருந்து டவுன்லோடு செய்துக்கலாம் அல்லது வெளியில் வாங்கிக்கலாம்னு நினைக்கிறாங்க. நான் முதல் பதிப்பு சேகரிக்கக் காரணமான இன்னும் சில விஷயங்களைச் சொல்றேன். பாரதிதாசன் கவிதைகளை குத்தூசி குருசாமி வெளியிட்டார். குத்தூசி குருசாமியின் குழந்தை ரஷ்யா(குழந்தையின் பெயர்)வைப்பார்க்க பாரதிதாசன் போறார். குழந்தைக்கு அரைபவுன் செயின் போடுறார். அப்ப குத்தூசி குருசாமியின் மனைவி குஞ்சிதம், ‘என் பொண்ணுக்கு இந்த பொன்னகை எல்லாம் வேண்டாம். தமிழ் உணர்வை ஊட்டக்கூடிய தாலாட்டுப் பாடல் வேணும்’னு கேட்கறாங்க.
அங்கே உட்கார்ந்து எழுதினதுதான் பெண் குழந்தைத் தாலாட்டு, ஆண் குழந்தைத் தாலாட்டுப் பாடல்கள். அப்ப குஞ்சிதம் ‘இதைத் தொகுத்து போடட்டுமா’னு கேட்கறாங்க. ‘போட்டுக்கோ’னு அனுமதி தர்றார். அதைத் தொகுத்துதான் 212 பக்கங்களில் வந்தது பாரதிதாசன் கவிதைகளின் முதல் தொகுதி. அதற்கு பாரதிதாசனிடம் முன்னுரை எழுதச் சொல்லிக் கேட்குறாங்க. அவருக்கு ஆச்சரியம். 212 பக்கம் அப்போது பிரிண்ட் பண்ணுவது அவ்வளவு எளிதானதல்ல.
‘உனக்கு ஏது இவ்வளவு பணம்’னு கேட்கறார். அவங்க ‘கடலூர்ல சைவ சித்தாந்த சமாஜ்யத்தின் செயலாளரான நாராயணசாமி நாயுடுகிட்ட போய் சொன்னேன். அவர், ‘அவசியம் போடணும். பாரதிதாசன் கவிதைகள் தமிழ் உணர்வைத் தூண்டக்கூடியவை’னு 200 ரூபாய் தந்தார். அதில்தான் போட்டேன்’னு சொல்றாங்க.உடனே சமர்ப்பணம்னு ஒரு பாடல் எழுதுறார். அதனுடன் பெரியாரின் முன்னுரையும், ஜஸ்டிஸ் ராமநாதனின் அணிந்துரையும், வ.ராவின் அணிந்துரையும் இருக்கும். இதெல்லாம் முதல் இரண்டு பதிப்புகள்ல இருந்தது. மூன்றாவது பதிப்புல எடுத்திட்டாங்க.
அடுத்து, ‘தமிழகம் தந்த மகாகவி’னு சீனி.விஸ்வநாதன் 1962ல் ஒரு புத்தகம் போட்டார். அதில் முதல் கட்டுரை எழுதியவர் ராஜாஜி. அதில் ராஜாஜியும், அவருடைய நண்பரும் பாரதியைப் பார்க்க பாண்டிச்சேரி போறாங்க. ரெண்டு பேருக்குள்ளும் பாரதி என்ன கோத்திரம்னு ஒரு விவாதம் நடக்குது. பாரதி பூணூல் போடல. அதை அவர்கிட்டேயே கேட்கறாங்க. அதற்கு பாரதி, ‘அது எங்கு போயிற்றோ யாருக்குத் தெரியும். வந்த வேலையைச் சொல்லும்’ என்கிறார். இதை அந்தக் கட்டுரையில் ராஜாஜி பதிவு செய்றார். இந்தச் செய்தி ரெண்டாவது பதிப்பில் எடுக்கப்பட்டுவிட்டது.
இதுதான் இங்குள்ள நிலைமை. இங்க முதல் பதிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்குறதில்ல. அதனாேலயே நான் முதல் பதிப்பை முக்கியமானதாகப் பார்க்கிறேன். அப்புறம், இந்த நூலகத்தை இங்கே ஏன் தொடங்கினேன் என்றால், நாகர்கோவில்ல இருப்பவர் மெட்ராஸ் வரை போய் இதுபோன்ற அரிய நூல்களைப் பார்க்கமுடியாது இல்லையா? அதனாலேயே தமிழகத்தின் மத்தியப் பகுதியாக இருக்கிற புதுக்கோட்டை திருக்கோகர்ணத்துல இந்நூலகத்தை உருவாக்கினேன்.
ஆரம்பத்தில் நான் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியராக இருந்தேன். பிறகு, புதுக்கோட்டை ஆசிரியர் பயிற்சி நிறுவனத்துல மூத்த விரிவுரையாளராகப் பணியாற்றினேன். நாம் படித்ததை யாரிடமாவது சொல்லிக் கொண்டே இருந்தால் மறக்காமல் இருக்கும் என்பதாலேயே நான் இந்த ஆசிரியர் பணியை விரும்பி ஏற்றுக்கிட்டேன்.
முதல்ல மண்ணச்சநல்லூர், நாமக்கல்ல எல்லாம் பணிகள் செய்தேன். 1979ல்தான் புதுக்கோட்டைக்கு வந்தேன். 90கள்ல இந்த நூலகத்திற்காக தனியொரு கட்டடம் அமைச்சேன். ஆரம்பத்துல வீட்டின் மாடியில் நூலகம் இருந்தது. பிறகு, புத்தகங்கள் வைக்க இடம் போதல. ஏற்கனவே நான் ரெண்டு பிளாட் வாங்கி ஒண்ணுல வீடு கட்டியிருந்தேன். அதனால, பக்கத்துல உள்ள பிளாட்ல நூலகத்தை அமைச்சேன்.
இப்ப முதல் தளம், இரண்டாவது தளம், மூன்றாம் தளம்னு மூன்று தளங்களிலும் புத்தகங்கள் வச்சிருக்கேன். ஒவ்வொரு தளத்திலும் முன்பகுதியில் பாத்ரூம், ஏசி வசதிகளுடன் ஓர் அறையும் உருவாக்கியிருக்கேன் - வெளிநாட்டினர் வந்தால் தங்குவதற்காக. இப்ப நிறைய வெளிநாட்டினரும் வர்றாங்க. தவிர, ஆராய்ச்சி மாணவ - மாணவிகள் வந்து படிக்கிறாங்க. இதுவரை சுமார் 200 பேர் வரை எம்.எஃபில் மற்றும் பிஹெச்,டி வாங்கியிருப்பாங்க.
யார்கிட்டயும் எந்த பணமும் வாங்குறதில்ல. எல்லாமே இலவசம்தான். அப்புறம், நான்காயிரம் புத்தங்கள் வரை மறுபதிப்பும் கண்டிருக்கு. நானே சில பதிப்பாளர்களிடம் கொடுத்து இதெல்லாம் புத்தகமாகப் போடுங்கனு சொல்லி செய்திருக்காங்க. இதேபோல என் வீட்டுக்கு வராத எழுத்தாளர்களே கிடையாது. ‘மணிக்கொடி’ எழுத்தாளர்கள் சி.சு.செல்லப்பா, எம்.வி.வெங்கட்ராம், கரிச்சான் குஞ்சு, கு.ப.ராஜகோபாலன் மகன் கல்யாணராமன் எல்லாம் வந்திருக்காங்க. அப்புறம் அசோகமித்திரன், சிலம்பொலி செல்லப்பன் எனப் பலரும் வந்திருக்காங்க.
அடுத்து, வி.ஆர்.எம். செட்டியார், உலகம் சுற்றிய தமிழன் ஏ.கே.செட்டியார், சாமிநாத சர்மா நூல்களை எல்லாம் வெளியிட்ட பிரபஞ்ச ஜோதி பிரசுராலயத்தின் உரிமையாளர் முறையூர் சொக்கலிங்கம் செட்டியார் இவங்களும் எனக்கு ரொம்ப நெருக்கம். வீட்டுக்கும் வந்திருக்காங்க.ஏ.கே.செட்டியார் என் நூலகத்தைப் பார்த்திட்டு, ‘அரிய புத்தகங்களை எக்காரணத்தைக் கொண்டும் யாரிடமும் கொடுக்காதே’னு சொன்னார். ஒருமுறை ரோஜா முத்தையா வீட்டிற்கு அழைத்துப்போய் கிருஷ்ணமூர்த்தியை நல்லா பயன்படுத்திக்கனு சொன்னார். பிறகு, ரோஜா முத்தையா அவர் குடும்பத்தில் ஒருவர் போலவே என்னைப் பாவித்தார்.
எனக்கு எல்லாவற்றுக்கும் உறுதுணையாக இருப்பவர் என் மனைவி டோரதிதான்...’’ என்றவர் மனைவி பற்றித் தொடர்ந்தார். ‘‘என் துணைவியார் டோரதி, தாவரவியல் பேராசிரியராக இருந்தவர். கடைசியாக புதுக்கோட்டை பெண்கள் கல்லூரியில் பொறுப்பு முதல்வராக இருந்து 2002ல் ஓய்வுபெற்றாங்க. நான் 1999ல் ஓய்வுபெற்றேன். அவங்க என்னுடன் மண்ணச்சநல்லூர் பள்ளியில் வேலை செய்தாங்க.
1965 - 66னு நினைக்கறேன். அப்ப நான் பாரதி விழாவில் பேசினேன். அதைக் கேட்டுட்டு இந்தக் கருத்துகள் எல்லாம் எதுல இருக்குனு கேட்டாங்க. அப்ப நான் மகாகவி பாரதி பற்றி வ.ரா எழுதின புத்தகம் உள்ளிட்டவை கொடுத்தேன். தாகூரின் ‘கீதாஞ்சலி’யைப் படிங்கனு சொன்னேன். தாகூரின், ‘த கிரசென்ட் மூன்’ குழந்தைப் பாடல்கள் புகழ்பெற்றது. அதைப் படிச்சிட்டு அன்றிரவே அதை மொழிபெயர்த்து என்னிடம் வந்து தந்தாங்க. எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
அதை நான் வி.ஆர்.எம் செட்டியாருக்கு அனுப்பினேன். அவர் அதை நூலாகக் கொண்டு வந்தார். பிறகு, அவரை நேரில் சந்திச்சோம். எங்களை ஊக்கப்படுத்தினார். அப்புறம், தாகூரின் ‘Stray Birds’, ‘The Fugitive’ எல்லாம் மொழியாக்கம் செய்தாங்க. 1966ல் இருந்து 71ம் ஆண்டு வரை சேர்ந்து பணிகள் செய்தோம். அப்பவே ஒன்றாக இருப்பதுனு முடிவெடுத்தோம். எங்களுக்கு 1971ல் திருமணமாச்சு. அன்றிலிருந்து இன்றுவரை எனக்கு எல்லாமுமாக இருப்பவர் அவர்தான்.
எங்களுக்கு நிவேதிதா பாரதி, ஞானதீபம்னு ரெண்டு பெண் குழந்தைகள். மூத்த பொண்ணு சென்னையில் டாக்டராக இருக்கார். ரெண்டாவது பொண்ணு நியூசிலாந்தில் உள்ளார்...’’ என்றவர் தற்போது ‘ஞானாலயா’ நூலகம் தொடர்ந்து செயல்பட அறக்கட்டளை ஒன்றை உருவாக்கி இருக்கிறார். ‘‘எனக்குப் பிறகு தொடர்ந்து இந்த நூலகம் இயங்கணும் என்பதுதான் என் ஆசை. இதுக்காக ‘ஞானாலயா டிரஸ்ட்’னு ஒரு அறக்கட்டளை ஏற்படுத்தியிருக்கேன். அதன்வழியாக தொடர்ந்து இந்த நூலகம் இயங்கும்.
அப்புறம், புதுக்கோட்டையில் எனக்கு நிறைய நண்பர்கள் வட்டம் இருக்கு. அதுல ஐந்தாறு பேர் என் தூண்டுதல் பெயர்ல நூலகம் வச்சிருக்காங்க. ‘டோரா மூர்த்தி’னு எங்க பெயர்லயும் ஒருவர் நூலகம் வச்சிருக்கார். அப்புறம், சில அரிய நூல்களை மட்டும் டிஜிட்டல் செய்யணும்னு 17 லட்சம் பக்கங்கள் ஸ்கேன் பண்ணி வச்சிருக்கோம். 2017 முதல் 2019 வரை செய்தோம். அடுத்த நிலைக்குப் போவதற்குள் கொரோனா வந்திடுச்சு.
என்னால் அண்ணாமலைச் செட்டியார், அழகப்பச் செட்டியார் போல பெரிய பல்கலைக்கழகங்கள் உருவாக்க முடியல. ஆனா, நல்லதொரு நூலகம் உருவாக்கியிருக்கேன் என்கிற ஆத்மதிருப்தி இருக்கு...’’ என்கிறார் ‘ஞானாலயா’ பா.கிருஷ்ணமூர்த்தி.
செய்தி: பேராச்சி கண்ணன்
படங்கள்: ஆ.வின்சென்ட் பால்
|