மூலிகை விவசாயி!



ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பொழுதுபோக்கு இருக்கும். சிலர் பழைய நாணயங்கள், ஸ்டாம்புகள், காமிக்ஸ் புத்தகங்கள் என தங்களுக்குப் பிடித்த விஷயங்களைச் சேகரிப்பார்கள். வேறு சிலர் கற்களில் சிலை வடிப்பது, களிமண்ணில் பொம்மைகள் செய்வது, ஓவியங்கள் வரைவது என படைப்பாற்றலில் ஈடுபடுவார்கள். சினிமா பார்ப்பது, விளையாடுவது, பாடல்களைக் கேட்பது போன்றவை பெரும்பாலானவர்களின் பொழுதுபோக்காக இருக்கும்.

இதிலிருந்தெல்லாம் வேறுபட்டது எசக்கியேல் பவுலோஸின் பொழுதுபோக்கு. ஆம்; விவசாயம்தான் அவரது பொழுதுபோக்கு; அதுவும் மூலிகை விவசாயம். இந்தியாவில் அரிய வகை மூலிகைகளை விவசாயம் செய்து வருபவர்களில் முதன்மையானவர் இவர். சுமார் ஏழாயிரம் வருடங்களுக்கு முன்பே ஆயிரக்கணக்கான மூலிகைகளின் பயன்பாட்டை மனிதன் அறிந்துவிட்டான் என்கிறது வரலாற்றுத் தகவல். அதில் குறிப்பிட்ட சதவீத மூலிகைகளை மட்டுமே இன்றைய நவீன மனிதன் பயன்படுத்தி வருகிறான். அவற்றில் முக்கியமான சிலவற்றை விவசாயம் செய்து வருகிறார் எசக்கியேல்.  

கேரளாவில் உள்ள எர்ணாகுளத்தில் பிறந்து, வளர்ந்தவர் எசக்கியேல். இவரது குடும்பம் மூன்று தலைமுறைகளாக விவசாயம் செய்து வருகிறது. அதனால் இயல்பாகவே எசக்கியேலுக்கு விவசாயத்தின் மீது ஆர்வம் அதிகம். இருந்தாலும் குடும்ப விவசாயத்தில் ஈடுபடாமல் படிப்பில் முழுக்கவனம் செலுத்தினார். படிப்பை முடித்தபிறகு பெங்களூருவில் எஞ்சினியராக வேலை பார்த்து வந்தார்.

எசக்கியேலின் தந்தை கேரள மண்ணில் விளைகின்ற சில வகை மூலிகைச் செடிகளையும் வளர்க்க ஆரம்பித்தார். தந்தை விவசாயம் செய்து வந்த மற்ற பயிர்களைவிட, மருத்துவ குணம் மிகுந்த மூலிகைச் செடிகளின் மீது எசக்கியேலுக்குத் தனிப்பட்ட ஈர்ப்பு உண்டானது. அந்த மூலிகைகளைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள, அதன்மீதான ஈர்ப்பு இன்னமும் அதிகமானது. விவசாயத்தில் தந்தைக்கு உதவி செய்ய ஆரம்பித்தார்.

வேலை, வீடு, குடும்பம் என்றிருந்த எசக்கியேலுக்கு 2007ம் வருடத்திலிருந்து புதிதாக ஒரு பொழுதுபோக்கு உருவானது. மூலிகைச் செடிகளைப் பற்றித் தெரிந்துகொள்வதும், புதிதான மூலிகைச் செடிகளைச் சேகரிப்பதும்தான் அந்தப் பொழுதுபோக்கு. மூலிகைச் செடிகளைச் சேகரிப்பதோடு மட்டுமல்லாமல், அதை விவசாயம் செய்யவும் ஆரம்பித்தார் எசக்கியேல்.

‘‘இந்த உலகில் எவ்வளவோ பொழுதுபோக்குகள் இருக்கின்றன. 

ஆனால், ஒவ்வொருவரும் தங்களது மனதை அமைதிப்படுத்துகிற ஒரு பொழுதுபோக்கை கண்டுபிடிக்க வேண்டும். எனக்கு விவசாயம்தான் அந்த பொழுதுபோக்கு...’’ என்கிற எசக்கியேல் பொழுதுபோக்காக மட்டுமே மூலிகை விவசாயத்தில் இறங்கினார். அதனால் தன்னை மூலிகை சேகரிப்பாளர் என்று அழைக்கவே விரும்புகிறார்.

முதன் முதலாக ஜாதிக்காயைப் பயிரிட்டார். விவசாயத்தைக் கண்காணிப்பதற்காக ஒவ்வொரு வார விடுமுறையின்போதும் பெங்களூருவிலிருந்து கேரளாவுக்கு வந்துவிடுவார் எசக்கியேல். ஜாதிக்காய் நல்ல விளைச்சலைக் கொடுக்க, மூலிகை விவசாயத்தின் மீது எசக்கியேலுக்கு நம்பிக்கை பிறந்தது.  மூலிகை விவசாயத்தைப் பெரிதாக்க வேண்டும் என்று முடிவு செய்தார்.
அத்துடன் தனது தோட்டத்தில் நம் நாட்டில் கிடைக்கும் அனைத்து விதமான  மூலிகைச் செடிகளையும் பயிர் செய்ய வேண்டும் என்று திட்டமிட்டார்.

ஆனால், மற்ற செடி வகைகளைப் போல மூலிகைச் செடிகள் கிடைப்பது சுலபமில்லை. அப்படியே கிடைத்தாலும் அவை எல்லா மண்ணிலும் விளையாது. இருந்தாலும் முழு நம்பிக்கையுடன் மூலிகைச் செடிகளைச் சேகரிப்பதையே தனது முதன்மையான பொழுதுபோக்காகவும், தேடலாகவும் மாற்றிக்கொண்டார் எசக்கியேல். 

அலுவலக வேலை சம்பந்தமாக அடிக்கடி வெளியூர்களுக்கும், வெளிநாடுகளுக்கும் பயணம் மேற்கொள்வார் எசக்கியேல். எந்த ஊரில் இறங்கினாலும் அங்கே ஏதாவது மூலிகைச் செடிகள் கிடைக்கிறதா என்றுதான் முதலில் தேடுவார். அந்த ஊர் மக்களிடம் மூலிகை சம்பந்தமான விவரங்களைத் திரட்டுவார்.

ஓய்வே எடுக்காமல் பல இடங்களில் தேடிப் பார்ப்பார். தனது தோட்டத்தில் இல்லாத மூலிகைச் செடிகள்  கிடைத்த பிறகுதான் தன்னுடைய அலுவலக வேலையைப் பார்ப்பது அவரது வழக்கம். அத்துடன் வட இந்தியா மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்த சில நண்பர்கள் அரிய வகை மூலிகைச் செடிகளை எசக்கியேலுக்கு அறிமுகப்படுத்தியிருக்கின்றனர்.

இதுபோக மூலிகைச் செடிகளைச் சேகரிப்பவர்கள் ஒரு குழுவாக இயங்கி வருகின்றனர். அவர்களுடன் சேர்ந்தும் பல வகையான மூலிகைச் செடிகளைச் சேகரித்திருக்கிறார்.
“ஆரம்பத்தில் வெறும் பொழுதுபோக்குக்காக மட்டுமே மூலிகைச் செடிகளைச் சேகரிக்க ஆரம்பித்தேன். 

அதனுடைய நன்மைகள் தெரிந்தபிறகு இதில் முழுமையாக ஈடுபடத் தொடங்கினேன். நமது உடல் ஆரோக்கியத்துக்குத் தேவையான அனைத்தும் இயற்கையிலேயே கிடைக்கின்றன. மூலிகைகளை சரியாகப் பயன்படுத்தத் தெரிந்தவர் கிடைத்தால் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய அவசியமே நமக்கு ஏற்படாது...” என்கிற எசக்கியேலின் மூலிகைத் தோட்டத்தைப் பற்றிக் கேள்விப்பட்ட நோயாளிகள் அவரைத் தேடி வருகின்றனர்.

நோயாளிகளுக்குத் தேவைப்படும் மூலிகைகளை இலவசமாகவே கொடுக்கிறார் எசக்கியேல். கொரோனா லாக் டவுனும், வீட்டிலிருந்தே வேலை செய்யக் கிடைத்த வாய்ப்பும் மூலிகைத் தோட்டத்தைப் பராமரிப்பதற்குத் தேவையான நேரத்தை எசக்கியேலுக்குத் தந்திருக்கிறது. கொரோனா காலத்தில் கிடைத்த நாட்களில் மூலிகைத் தோட்டத்தை பிரமாண்டமாக மாற்றிவிட்டார். மட்டுமல்ல, தென்னை, மாம்பழம், மீன் வளர்ப்பு போன்றவற்றிலும் அவருக்கு வருமானம் கிடைக்கிறது.

மூலிகைச் செடிகளை விவசாயம் செய்வதை அவர் வருமானமாகப் பார்ப்பதில்லை. அத்துடன் தன்னுடைய வாரிசுகளிடமும் மூலிகையின் மீதான ஆர்வத்தை ஏற்படுத்தி வருகிறார்.
இன்று சோட்டானிக்கரையில் உள்ள 4 ஏக்கர் தோட்டத்தில் சக்கரகோலி, அனலிவேகம், சிம்சபா, பாரிஜாதம், லட்சுமிதாரு உட்பட 500 விதமான அரிய வகை மூலிகைகளை வளர்த்து வருகிறார் எசக்கியேல். பதினைந்து வருடங்களுக்கு மேலாக பல ஊர்களுக்குப் பயணம் செய்து இந்த மூலிகைகளைச் சேகரித்திருக்கிறார். இது ஒவ்வொன்றும் ஒவ்வொரு மருத்துவ குணம் கொண்டது. 1000 விதமான மூலிகைகளை வளர்க்க வேண்டும் என்பது எசக்கியேலின் கனவு.

த.சக்திவேல்