வயது 97... முன்னாள் மாநில அமைச்சர்... கம்ப ராமாயணத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்... மருத்துவ சேவையிலோ 70 ஆண்டுகள்...
சென்னை ஷெனாய் நகரில் ஹண்டே மருத்துவமனையை தெரியாதவர்களே இருக்க முடியாது. ஏனெனில், இப்போதும்கூட ஏழை, எளிய மக்களுக்கு மருத்துவ உதவிகளை செய்துவரும் மருத்துவமனை இது.சுமார் 70 ஆண்டுகளாக ஷெனாய் நகரின் அடையாளங்களில் ஒன்றாக விளங்கி வரும் இந்த மருத்துவமனையை உருவாக்கியவர் டாக்டர் ஹெச்.வி.ஹண்டே. இவர் வேறுயாருமல்ல. எம்ஜிஆர் அமைச்சரவையில் இரண்டுமுறை சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தவர். அந்தக் காலக்கட்டத்தில் மருத்துவத் துறையில் தனிமுத்திரையைப் பதித்து, பலராலும் பாராட்டப் பெற்றவர்.
சமீபத்தில் 97 வயதைத் தொட்டிருக்கிறார் டாக்டர் ஹண்டே. மருத்துவர், அரசியல்வாதி, எழுத்தாளர் எனப் பன்முகத் தன்மை கொண்ட அவரை ஒரு மாலைப்பொழுதில் சந்தித்தோம். ‘‘1950ல் இந்த ஷெனாய் நகர் பகுதியில் என்னுடைய மருத்துவ சேவையை ஆரம்பிச்சேன். அப்ப, எனக்கு 23 வயசு. இந்தத் தெருவின் கடைசிப் பகுதியில் சின்னதாக ஒரு கிளினிக் போட்டிருந்தேன். அவ்வளவுதான். அதுவே இன்னைக்கு கொஞ்சம் விரிவாக்கம் அடைஞ்சிருக்கு...’’ என மெலிதாகப் புன்னகைக்கிறார் டாக்டர் ஹண்டே.
‘‘இது சுதந்திரத்திற்கு முன்பு மெட்ராஸ் ராஜஸ்தானியாக இருந்தது. இதனுள் மலபார், தென் கர்நாடகா, ஆந்திராவுல 12 ஜில்லாக்கள், தமிழ்நாட்டுல 26 ஜில்லாக்கள்னு உண்டு. என்னுடைய அப்பா ஹெச்.எம். மாதப்ப ஹண்டே ஒரு மருத்துவர். அவர் அரசு பணியில் இருந்தார்.அதை மெட்ராஸ் மெடிக்கல் சர்வீஸ்னு சொல்வாங்க. டாக்டர் என்பதால் அப்பாவுக்கு பல இடங்களுக்கு மாறுதலாகும். அப்படியாக நாங்க கோவைக்கு வந்தோம். இங்க அப்பா ஆர்.எம்.ஓவாக இருந்தார். அவருடைய பேஷன்ட்களாக ஜிடி நாயுடு, ரத்தினசபாபதி முதலியார் உள்பட பலர் இருந்தாங்க. இந்த ரத்தினசபாபதி முதலியார் பெயரின் சுருக்கம்தான் ஆர்.எஸ்.புரம். நான் கோவையில் 1927ல் நவம்பர் 28ம் தேதி பிறந்தேன். என் முழுப்பெயர் ஹெச்.வெங்கடரமண ஹண்டே. இதன் பிறகும் அப்பாவுக்கு நிறைய இடங்களுக்கு டிரான்ஸ்ஃபர் ஆனது. அதனால, மாறுதலாகிப் போகும் ஊர்கள்ல என்னுடைய படிப்பு தொடர்ந்தது. முதல்ல அப்பாவை கோவையில் இருந்து கோழிக்கோடுக்கு மாறுதல் செய்தாங்க. அங்கிருந்து சிதம்பரம் வந்தார். பிறகு அங்கிருந்து ஸ்ரீபெரும்புதூர் போனார். அப்புறம், நெல்லூருக்கு போட்டாங்க. நெல்லூர்ல இருந்து பெனுகொண்டா போனார். அது புட்டபர்த்தி பக்கம் உள்ள ஊர்.
அங்க படிக்கிறப்ப புட்டபர்த்தி சாய்பாபா என் பள்ளித் தோழராக இருந்தார். அவர் என்னைவிட ஒரு வயது சீனியர். ஆனா, ஒரே வகுப்பு. பிறகு, அவர் இங்க வந்தப்ப நான் சந்திச்சுப் பேசியிருக்கேன்.அங்கிருந்து மறுபடியும் மங்களூர் போனோம். அங்கிருக்கும்போதுதான் 1942ம் ஆண்டு ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தில் கலந்துக்கிட்டேன். அப்ப நான் இன்டர்மீடி யட் படிச்சிட்டு இருந்தேன். பிறகு, சென்னை கீழ்ப்பாக்கத்துல மருத்துவம் படிச்சேன். 1950ல் இங்க ஆஸ்பத்திரியைத் தொடங்கினேன்.
இந்த ஷெனாய் நகர் பகுதியில் ஏழை, எளிய மக்கள் நிறைய இருந்தாங்க. அவங்களுக்கு ட்ரீட்மெண்ட் கொடுக்கும்போது ஒரு கண்டிஷன் வச்சிருந்தேன். எந்தக் காரணத்தைக் கொண்டும், எந்த நோயாளி வந்தாலும் காசு கேட்கறதில்லனு ஒரு கொள்கை. அதாவது இருக்கிறவங்க கொடுக்கட்டும். இல்லாதவங்க வருத்தப்பட வேண்டியதில்ல. நான்தான் உங்களுக்கு கடன் பட்டிருக்கேன். நீங்க சந்தோஷமாகப் போங்கனு சொல்லி அனுப்புவேன்.
ஒருநாளைக்குக் காலையில் நூறு பேர் வருவாங்க. மாலையில் நூறு பேர் வருவாங்க. இதனால, இந்தப் பகுதியில் நான் பிரபலமான மருத்துவராக இருந்தேன். நோயாளிகளும் என்மேல் பாசத்துடன் அன்புடன் இருந்தாங்க...’’ என்கிற டாக்டர் ஹண்டே தன்னுடைய அரசியல் வாழ்க்கை பற்றித் தொடர்ந்தார். ‘‘இப்படி இருந்தப்பதான் 1964ல் சென்னை மாநகரத்தின் பட்டதாரி தொகுதி - அதாவது எம்.எல்.சி தொகுதிக்கு போட்டியிடலாம்னு ஒரு எண்ணம் எழுந்தது. எனக்கு வக்கீல்கள், ஏஜி அலுவலகத்தினர், தலைமைச் செயலகத்தில் இருந்தவர்கள்னு பலரும் பேஷன்ட்களாக இருந்தனர். அதனால் நிறைய நம்பிக்கையும் இருந்தது.
நானும் வாக்காளர் பட்டியல் சேர்க்கைக்கான ஃபார்ம்களை நோயாளிகளின் மருந்துசீட்டுடன் தந்து, பலரிடம் கொடுத்து நிரப்பி கொண்டு வரும்படி கேட்டேன். அவங்களும் கொண்டு வந்த தந்தாங்க. இப்படியெல்லாம் பண்ணி எம்.எல்.சிக்கு சுயேட்சையாக நின்றேன்.அப்ப பேரறிஞர் அண்ணா, அறிவழகனை நிறுத்தினார். காமராஜர் ஒரு வக்கீலை நிறுத்தினார். அடுத்து ராஜாஜியின் சுதந்திரா கட்சி சார்பாக ஆர்.எம்.சேஷாத்திரினு ஒருவர் நின்றார்.
அந்தத் தேர்தல்ல எனக்கு 1950 ஓட்டுகள் கிடைச்சது. ஆர்.எம்.சேஷாத்திரிக்கு 548 ஓட்டுகளும், அறிவழகனுக்கு 400 பிளஸ் ஓட்டுகளும் கிடைத்தன. காமராஜர் நிறுத்திய வேட்பாளருக்கு 45 ஓட்டுகள்தான் வந்தது. அப்ப காமராஜருடன் இருந்த ஒருவர் என்னுடைய பேஷன்ட். அவர்கிட்ட, ‘யார் இந்த ஹண்டே. பெயரே புதுசா இருக்கே. எப்படி எல்லோரையும் தோற்கடிச்சார்’னு காமராசர் கேட்டிருக்கார்.
இவர், ‘அவருக்கு அங்க நிறைய பேஷன்ட்ஸ் இருக்காங்க’னு சொல்லியிருக்கார். அப்ப காமராஜர் அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருந்தார். இதன்பிறகு ராஜாஜிக்கு நான் அறிவுரை மாதிரியான கடிதம் எல்லாம் எழுதினேன். அவர் உடனே கூப்பிட்டு அனுப்பினார். போய் பார்த்தேன். அவர், ‘நீங்க அட்வைஸ் கொடுக்கிறதை பார்ட்டிக்கு வந்து கொடுங்க. நீங்க தனியாக என்ன பண்ணப்போறீங்க’னு கேட்டார். அதனால, சுதந்திரா கட்சியில் 1965ல் சேர்ந்தேன்.
1967ல் அண்ணாவும், ராஜாஜியும் கூட்டணி சேர்ந்தாங்க. அப்ப சுதந்திரா கட்சிக்கு சிட்டியில் ஒரு சீட்தான் கொடுத்தாங்க. அது சின்ன தொகுதியான பூங்கா நகர். அதுல சௌகார்பேட்டை பகுதியும் அடங்கும். அதனால ராஜாஜி மார்வாடி ஒருவரை நிறுத்துவதாக இருந்தார். அங்க தெலுங்கு பேசுகிறவங்கதான் நிறைய. இந்தி பேசுகிறவங்க குறைவு.இந்தத் தகவல் அண்ணாவுக்கு தெரிஞ்சது. உடனே அவர் ராஜாஜியிடம் ‘ஹண்டேயை அந்தத் தொகுதியில் நிறுத்துங்க’னு சொல்லியிருக்கார். என்னைப் பற்றி அண்ணாவுக்கு முன்பே தெரியும். அவருடன் நான் பேசிப் பழகியிருந்தேன்.
அதனால, ராஜாஜி எனக்கு போன் செய்தார். ‘அண்ணாதுரை, நீங்கதான் பெட்டர் கேன்டிடேட்னு சொல்றார். அவருக்கு மக்களின் நாடித்துடிப்பு நன்றாகத் தெரியும். நீங்க நிற்கணும்’னு சொன்னார். அந்தத் தேர்தல்ல ஜெயிச்சு முதன்முதலாக சட்டசபைக்கு போனேன்.எம்.எல்.ஏ.வாக இருந்தபோதும் நான் டாக்டர் பணியை தொடர்ந்து செய்திட்டேதான் இருந்தேன். பிறகு 1971ல் காங்கிரஸுடன் கூட்டணி ஆனது. அப்போதும் பூங்கா நகர் தொகுதியில் மறுபடியும் போட்டியிட்டு வென்றேன். ராஜாஜியின் மறைவிற்குப் பிறகு எம்ஜிஆரின் அதிமுகவில் இணைந்தேன். மறுபடியும் 1978ல் எம்.எல்.சி தேர்தல்ல வெற்றிபெற்று மேல்சபை உறுப்பினரானேன்.
அடுத்து, 1981ல் அண்ணா நகர் தொகுதியில் கலைஞரை எதிர்த்து போட்டியிட்டு தோற்றேன். எம்.எல்.சி மூலம் சுகாதாரத்துறை அமைச்சராக ஆனேன். 1984லும் மேல்சபை உறுப்பினராகி ரெண்டாவது முறையாக சுகாதாரத்துறை அமைச்சரானேன். அப்ப தமிழ்நாட்டை மருத்துவத் துறையில் முதன்மை மாநிலமாக கொண்டுவரப் பாடுபட்டேன். இதனாலேயே, டாக்டர் பி.சி.ராய் விருது எனக்குத் தந்தாங்க.
அப்புறம், 1984ல் எம்ஜிஆருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவரை நியூயார்க் நகரில் உள்ள புரூக்லின் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம். அதுக்காக விமானத்தை மருத்துவமனையாக வடிவமைத்து அழைச்சிட்டுப் போனோம். நல்ல நிலையில் திரும்பி வந்து மூன்றாவது முறையாக முதலமைச்சர் ஆனார். என்னை 1986ல் துணைப் பொதுச் செயலாளராகவும் அமர்த்தி அழகுபார்த்தார்.
எம்ஜிஆர் மறைவிற்குப் பிறகு நான் எழுத்தில் கவனம் செலுத்த ஆரம்பிச்சிட்டேன். கம்பரின் ராமாயணத்தை எட்டு ஆண்டுகளாக பாடுபட்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தேன். இந்நூலை 1997ல் வெளியிட்டேன். அப்ப, தமிழக முதல்வராக இருந்த கலைஞரை அழைக்கணும்னு நினைச்சேன்.ஆனா, அவர் இம்மாதிரியான நிகழ்வுக்கு வர்றதில்லனு அவருக்கு நெருக்கமான ஒருவர் சொன்னார்.
அதனால, அவருக்கு ஒரு கடிதம் மட்டும் எழுதி அனுப்பினேன். அன்று மாலையே என் வீட்டுக்கு ஒரு போலீஸ் அதிகாரி வந்தார். முதல்வர் கொடுக்கச் சொன்னதாக ஒரு கடிதம் கொடுத்தார். அதில், எனக்கு வாழ்த்துரை வழங்கியிருந்தார் கலைஞர். இதை புத்தக வெளியீட்டு நிகழ்வு அன்றே மேடையில் வாசித்தேன். இப்பவும் அதை பொக்கிஷமாகப் பாதுகாத்திட்டு வர்றேன். பிறகு, ‘ராஜாஜியின் வரலாறு’, ‘சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர்’, ‘புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மறுபிறவியெடுத்த வரலாறு’, ‘The Rise & Fall of Article 370’னு நிறைய புத்தகங்கள் எழுதினேன். புத்தக வாசிப்பு, எழுத்துனு இப்ப என் கவனத்தைச் செலுத்திட்டு இருக்கேன்...’’ என்கிறவரிடம் ஹண்டே மருத்துவமனை விரிவாக்கம் குறித்துக் கேட்டோம்.
‘‘முதல்ல 185 ரூபாய் வாடகைக் கட்டடத்துல இருந்துதான் இந்த மருத்துவமனை நடத்தினேன். அங்கிருக்கும்போது இது காலியிடமாக இருந்தது. மொத்தம் ஏழு கிரவுண்ட் இடம். இதுல ஐயப்பன் பூஜை ஆண்டுதோறும் நடத்திட்டு இருந்தாங்க. அப்ப ஒருத்தர், ‘நீங்க இந்த இடத்தை வாங்கி மருத்துவமனையை விரிவாக்கம் செய்றதாக இருந்தால் செய்யுங்க’னு சொன்னார்.
இது அப்ப ஒரு லட்சம் ரூபாேயா என்னவோதான். அப்படியாக வாங்கி 1984ல் இந்த மருத்துவமனை கட்டினேன். ஆனா, 1986க்குப் பிறகுதான் இங்கிருந்து மருத்துவ சேவைகள் செய்ய ஆரம்பிச்சோம். அது சிறிது சிறிதாக வளர்ந்து இன்னைக்கு விருட்சமாகி இருக்கு. எனக்கு உறுதுணையாக என் மனைவி சாந்தாவும் மகன்கள் கிருஷ்ண ஹண்டேவும், விஸ்வநாத ஹண்டேவும் இருக்கிறாங்க. மூத்தவர் கிருஷ்ண ஹண்டே எம்.எஸ். எஃப்.ஆர்.சி.எஸ் எல்லாம் முடிச்சிட்டு பிளாஸ்டிக் சர்ஜரியில் நிபுணராக இருக்கார். அப்புறம், இங்க சிறப்பு மருத்துவர்கள் நிறைய பேர் இருக்காங்க. ஒவ்வொருவரும் அவ்வளவு திறமையானவங்க. மருத்துவத் துறை நிரம்ப வளர்ச்சி அடைஞ்சிருக்கு. அதுக்கேற்ப நாங்களும் மாறியிருக்கோம்.
ஆனா, அன்று எப்படியோ அதேபோலதான் இப்பவும் எங்க மருத்துவ சேவைகள் தொடருது. மற்ற மருத்துவமனைகளை ஒப்பீடு செய்றப்ப இங்க குறைவான கட்டணம்தான். இதுதவிர, மருத்துவ முகாம்கள் வழியே மக்களுக்கு நிறைய சேவைகளும் செய்திட்டு வர்றோம். எனக்குப் பிறகும் இந்தச் சேவைகள் மக்களுக்குக் கிடைக்கும்...’’ நம்பிக்கையாய் சொல்கிறார் டாக்டர் ஹண்டே.
செய்தி: பேராச்சி கண்ணன்
படங்கள்: ஆ.வின்சென்ட் பால்
|