டார்க்நெட்



24. சிறுவர்கள் மீதான பாலியல் துன்புறுத்தலும் டார்க்நெட்டும்

இணையத்தில் உள்ள ஒரு பிரபலமான வீடியோ அரட்டை வலைதளத்திற்குள் அந்த சிறுமி வருகிறாள். அவள் வீடியோவை வைத்து பார்க்கும்போது அவளுக்கு வயது 13 இருக்கலாம். அரட்டையை தொடங்கலாம் என நினைக்கும்போது பல்வேறு ஆண்கள் தங்களுடன் அரட்டை செய்யுமாறு அவளை அழைக்கிறார்கள். சில நிமிடங்களிலேயே 20 - 30 பயனாளர்கள் உலகம் முழுவதிலும் இருந்து அவளுடன் அரட்டை செய்கிறார்கள்.

ஆரம்ப அறிமுகங்களுக்குப் பின் அந்த ஆண்கள் மெல்ல இந்த சிறுமியை ஆட்டுவிக்க முயல்கிறார்கள். அன்பாகப் பேசுகிறார்கள். மெல்ல அந்தச் சிறுமி உடையைக் கழற்றச் சொல்லுகிறார்கள். தாங்கள் விரும்பியபடி எல்லாம் தங்கள் முன் செய்து காட்டினால் பணம் கொடுப்பதாக ஆசை வார்த்தை கூறுகிறார்கள். 
ஒரு சிறுமி என்றும் பாராமல் அவளுடன் ஆபாசமாகப் பேசுகிறார்கள்.
ஆனால், அந்தச் சிறுமி கணினியால் உருவாக்கப்பட்ட ஒரு விர்ச்சுவல் சிறுமி! அனிமேஷன். உண்மையானவள் அல்ல. அந்த டிஜிட்டல் சிறுமியின் பெயர் ஸ்வீட்டி.

மறுமுனையில் உண்மையில் சைபர் செக்யூரிட்டி நிபுணர்கள் இந்த ஆண்களின் அடையாளம் மற்றும் தகவல்களைச் சேகரிக்கத் தொடங்குகிறார்கள்.ஆன்லைன் உலகில் பெடோஃபைல் - அதாவது சிறுவர் மீதான பாலியல் துன்புறுத்தல் செய்யும் நபர்  எனப் புரிந்து கொள்ளலாம். இணையத்தில் வரும் சிறுவர் சிறுமியரை பாலியல் தேவைகளுக்காக துன்புறுத்தும் இத்தகைய மனிதர்களின் எண்ணிக்கை அதிகம். அவர்களைப் பொறுத்தவரையில் அந்த சிறுவர் சிறுமியர் தங்களின் பாலியல் தேவைக்கான இரைகள்.

இப்படி இவர்களிடம் சிக்கும் சிறுவர் சிறுமியர்கள் மனநலம் பாதிக்கப்பட்டு தங்கள் வாழ்க்கையை இழப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளன. இப்படியான பெடோஃபைல்களைத் தேடிக் கண்டுபிடித்து இணையத்திலிருந்து அவர்களை நீக்கச் செய்வது உலகில் சிறுவர் சிறுமியர் பாதுகாப்பிற்கு மிக முக்கியமான தேவை.ஆரம்பக் காலத்தில் சிறுவர் தொடர்பான பாலியல் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை நீங்கள் அவ்வளவு எளிதாக இணையத்தில் பார்க்க முடியாது.  டார்க்நெட்டில் தான் கிடைக்கும்.  

டார்க்நெட் என்றாலே ஒரு பக்கம் போதை, இன்னொரு பக்கம் சிறார் பாலியல் படங்கள் என்றாகிவிட்டிருந்தது. டார்க்நெட் கொடுத்த ஒரு மறைவு இத்தகைய படங்களை விற்கும் சைபர் கிரிமினல்களுக்கு பாதுகாப்பான இடமாக மாறிவிட்டது.ஆனால், இந்த ஸ்வீட்டி என்ற டிஜிட்டல் சிறுமியை உருவாக்கிய நெதர்லேண்ட் நாட்டைச் சேர்ந்த சிறுவர் பாதுகாப்பு அமைப்பான ‘டெராடே ஹோம்ஸ்’  வேறு மாதிரியாக சிந்தித்தது.

அவர்களின் திட்டம்தான் இந்த ஸ்வீட்டி என்ற டிஜிட்டல் சிறுமி.  உண்மையில் அவர்கள் ஆய்வு செய்து கண்டுபிடித்தது என்னவென்றால் சிறுவர் தொடர்பான பாலியல் தேடலைக் கொண்ட நபர்கள் டார்க்நெட்டில் மட்டும் இல்லை... சாதாரண இணையத்திலும்தான் இருக்கிறார்கள். அவர்களை அம்பலப்படுத்துவதுதான் இந்த திட்டத்தின் நோக்கம். தனியார் தொண்டு நிறுவனம் என்பதால் இவர்களால் பெரிய அளவு சட்ட நடவடிக்கைகள் எடுக்க முடியாது.

ஆனால், அந்தக் காலகட்டத்தில் சிறார் பாலியல் என்றாலே டார்க்நெட் என்கிற ஒரு பிம்பம் போலீஸ் மத்தியில் இருந்தது. இந்த ஆய்வின் மூலம் அதை சுக்கு நூறாக உடைத்ததுதான் இந்த அமைப்பின் முதல் வெற்றி. தங்களின் திட்டமாக உருவாக்கிய இந்த டிஜிட்டல் சிறுமியை சில நாட்கள் மட்டும் இணையத்தில் உலவ விட்டார்கள். இந்தச் சிறுமியுடன் தொடர்பு ஏற்படுத்தி தங்களின் பாலியல் தேவைகளைப் பூர்த்திசெய்ய முனைந்த பலரின் அடையாளம் மற்றும் அவர்களின் இணைய அடையாளங்களையும் அறுவடை செய்து இன்டர்போலிடம் ஒப்படைத்தார்கள். இன்டர்போல் நிறுவனமும் அந்த நபர்களைக் கைது செய்தது.

‘டெராடே ஹோம்ஸ்’ அமைப்பின் இந்தத் திட்டத்தின் மூலம் சாதாரண இணையத்திலும் பெடோஃபைல்கள் உலவிக்கொண்டு நம் பிள்ளைகளை பாலியல் ரீதியாகத் துன்புறுத்த வாய்ப்புகள் அதிகம் என்பதை உலகிற்குத் தெரியப்படுத்தினார்கள். இன்றளவும் இந்த அமைப்பு சிறுவர் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு விழிப்புணர்வுகளையும் திட்டங்களையும் உருவாக்கி செயல்படுத்தி வருகிறார்கள்.

ஆம். குற்றவாளிகள் டார்க்நெட்டில் மட்டுமே உலவுவதில்லை. நாம் பயன்படுத்தும் சாதாரண இணையத்திலும் அவர்கள் இருக்கிறார்கள். டார்க்நெட்டில்தான் நாம் ஏமாற்றப்
படுவோம்... சாதாரண இணையத்தில் நாம் ஏமாற மாட்டோம்... இங்கு சைபர் குற்றவாளிகள் இல்லை... என்ற நினைப்பை முதலில் நீக்குங்கள். அனைத்து விதங்களிலும் இணையம் என்பது பல்வேறு சிக்கல்களையும் சவால்களையும் கொண்ட ஓர் இடம்தான். வெளுத்தது எல்லாம் பால் என்று நினைப்பவராக நீங்கள் இருந்தால் இப்படியான சைபர் கிரிமினல்களின் நினைத்துப் பார்க்கமுடியாத அனைத்துவிதமான அபாயங்களிலும் நீங்கள் சிக்கிக்கொண்டு ஏமாற வாய்ப்புகள் அதிகம்.

சிறார் தொடர்பான பல்வேறு சிக்கல்கள் டார்க்நெட்டில் மட்டுமில்லை... நம் பிள்ளைகள் உலாவும் இந்த சாதாரண இணையத்திலும் இருக்கிறது. டார்க்நெட் பற்றி புரிந்துகொள்ள சாதாரண இணையத்தில் நடக்கும் சைபர் குற்றம் பற்றி நீங்கள் புரிந்து கொண்டாலே போதும். பிரச்னைகள் என்பது அனைத்து இடங்களிலும்தான் இருக்கின்றன. ஆனால், தொழில்நுட்பத்தின் மீது பழியைப் போட்டுவிட்டு நாம் இளைப்பாறவும் தப்பிக்கவும் முடியாது.

டார்க்நெட் என்பது வெறுமனே சிக்கல் பிரச்னைகள்... சைபர் கிரைம் தீர்க்க வேண்டிய விஷயம் என்று மட்டுமே சுருக்கி பார்ப்பது மிகவும் தவறு. அதன் சாதக பாதகங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.  டார்க்நெட் பிரச்னைகள் இருக்கும் இடம் என்றால் அங்கு ஏன் ஃபேஸ்புக் இயங்க வேண்டும்?  அதில் ஏன் உலகின் பிரபல பத்திரிகையான ‘நியூயார்க் டைம்ஸ்’ வலைதளம் வைத்துக்கொள்ள வேண்டும்?அதிர்ச்சியாக இருக்கிறதா..? வாருங்கள் டார்க்நெட்டின் இன்னொரு பக்கத்தைப் பற்றி இனி பார்ப்போம்.

(தொடரும்)

வினோத் ஆறுமுகம்