குப்தா பேப்பர்ஸ்... அலறும் பாஜக!
ஒன்றிரண்டு அல்ல. கடந்த 1997ம் ஆண்டு தொடங்கி 2016ல் நடந்த சுமார் 15 ஆயுத பேரங்களையும், இவற்றில் இடைத்தரகராக செயல்பட்ட சூசன் குப்தா என்பவர் எப்படி சட்டவிரோதமாக ஊழலில் ஈடுபட்டார் என்பதையும், இதில் தொடர்புடையவர்கள் குறித்தும் புலனாய்வு செய்து ஒரு நீண்ட கட்டுரையையே சமீபத்தில் வெளியிட்டிருக்கிறது தில்லியிலிருந்து வெளியாகும் ‘த கேரவன்’ இதழ்.
அதிர்ச்சியளிக்கும் அந்த நாற்பது பக்கக் கட்டுரையில் அகஸ்டாவெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஊழல் வழக்கிலிருந்து ரஃபேல் ஒப்பந்தம் வரை நடந்த முறைகேடுகளைச் சுட்டிக் காட்டியுள்ளது. இதில், இடைத்தரகர் சூசன் குப்தா எந்தளவுக்குப் பங்கு வகித்தார் என்பதையும் விலாவாரியாக விவரித்துள்ளது.ஏற்கனவே கடந்த ஆண்டு ஃபிரான்ஸ் செய்தி இணையதளமான மீடியாபார்ட் இந்த ஆயுதபேர ஊழல்கள் பற்றிய கட்டுரையை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இப்போது ‘கேரவன்’ இதழ், மோடி அரசு ரஃபேல் ஒப்பந்தத்தை காப்பாற்ற கடந்த இருபது ஆண்டுகளாக பாதுகாப்புத்துறையில் நடக்கும் ஊழல்களை எப்படி மூடி மறைக்கிறது என்பதைச் சுட்டிக் காட்டியுள்ளது.இந்த ஊழல் வழக்குகளை சிபிஐயும், அமலாக்கத்துறையும் சரியாகப் புலனாய்வு செய்யவில்லை எனக் குற்றம்சாட்டும் ‘கேரவன்’ இதழ், இதற்குக் காரணம் நரேந்திர மோடி அரசு இந்த பேரத்தின் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியிருப்பதுதான் என்கிறது.
இந்த ஒப்பந்தங்களுக்காக தேசிய கருவூலம் செலவு செய்த தொகை ரூ.1,818 பில்லியன். இதைத் தோராயமாக கடந்த காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் ரூ.833 பில்லியன் என்றும், இப்போதைய பாஜக ஆட்சியில் ரூ.985 பில்லியன் என்றும் கணக்கிட்டுள்ளது அந்த இதழ். இந்தியா கடந்த 1948ம் ஆண்டிலிருந்து போர் விமானங்களை இறக்குமதி செய்து வருகிறது. தொடர்ந்து பல ஆண்டுகளாக மேற்கத்திய நாடுகளிடமிருந்தே வாங்குகிறது. குறிப்பாக 1980கள் வரை சோவியத் யூனியனிடமிருந்து பெற்றது. ஆனால், இந்த நிலைமை 1999ல் நடந்த கார்கில் போருக்குப் பிறகு மாறியது. அப்போதுதான் அதிகப் போர்விமானங்களின் தேவை உணரப்பட்டது.
போர் முடிந்த ஓராண்டில் நாடாளுமன்ற நிலைக்குழு நாற்பது சதவீத போர் விமானங்கள் வழக்கற்று உள்ளதைக் கண்டறிந்தது. சோவியத் யூனியன் கலைக்கப்பட்ட பின்னர் பாதுகாப்புக்கான எந்த கொள்முதலும் அங்கே செய்யப்படவில்லை.
இந்நிலையில் வாஜ்பாய் அரசு பாதுகாப்பு உற்பத்திகளை தனியார் துறைக்கு திறந்துவிட்டது. 26 சதவீத வெளிநாட்டு நேரடி முதலீடு திட்டம் அதற்கு அனுமதித்தது. இதனால் அப்போது பாதுகாப்புக்கான போர் விமானங்கள் மற்றும் தளவாடங்களை இறக்குமதி செய்யும் இரண்டாவது பெரிய நாடாக உருவெடுத்தது இந்தியா. பொதுவாக சட்டபூர்வமான சர்வதேச வர்த்தகத்தில் சுமார் நாற்பது சதவீத ஊழல்கள் ஆயுத பேரங்களுடன் தொடர்புடையது என்கின்றனர் நிபுணர்கள். ஒவ்வொரு கொள்முதலிலும் இருக்கும் ரகசியமும், தொழில்நுட்ப சிக்கலும், செலவுகளும் இடைத்தரகர்களின் வர்த்தகத்திற்கு எளிதாக வழிவகுப்பதாகக் குறிப்பிடுகின்றனர்.
இதற்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல. இறக்குமதியில் இரண்டாவது பெரிய நாடாக உருவெடுத்தபின் இடைத்தரகர்களின் பங்குகளுக்கு மத்தியில்தான் போர் விமானங்களும், தளவாடங்களும் வாங்கப்படுகின்றன. இத்தகைய ஊழல்கள் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகளின் தலைமையிலான ‘லாபி’ நடவடிக்கைகளில் இருந்தே தொடங்குகின்றன.
எப்போது கான்டிராக்ட் முன்மொழிவு செய் யப்படுகிறதோ அப்போதிலிருந்தே இடைத்தரகர்களின் தலையீடுகளை நேரடியாகப் பார்க்க முடியும் என்கின்றனர் நிபுணர்கள்.
இந்த இடத்தில்தான் சூசன் குப்தா பங்கு நிரம்ப இருக்கிறது.
சூசன் குப்தா மட்டுமல்ல. அவரின் தாத்தா காலத்தில் இருந்தே பாதுகாப்புத் துறையின் இடைத்தரகு பணியில் செல்வாக்கு செலுத்தியதாகத் தகவல்களை அடுக்கும் ‘கேரவன்’இதழ், இவர்களுக்கு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், அரசியல்வாதிகள், அரசியல் செல்வாக்கு மிகுந்தவர்கள் உள்ளிட்டவர்களும் உதவியிருப்பதாகக் குறிப்பிடுகிறது. கடந்த 1999 முதல் 2004 வரையிலான வாஜ்பாய் அரசில், பாதுகாப்புத் துறை ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகள் நிரம்பி இருந்தன. அப்போது ‘தெஹல்கா’ புலனாய்வு பத்திரிகை ‘ஆபரேஷன் வெஸ்ட் எண்ட்’ என்கிற ஸ்டிங் ஆபரேஷன் வழியே பாதுகாப்பு ஒப்பந்தங்களில் நடக்கும் முறைகேடுகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தது.
இதன்பிறகு ‘அகஸ் டா வெ ஸ்ட்லேண்ட்’ சர்ச்சை பூதாகரமானது. 2002ம் ஆண்டு விவிஐபிகளுக்காக ஹெலிகாப்டர்கள் வாங்க முன்மொழிவு செய்யப்பட்டது. அதில், ஆறு ஆயிரம் மீட்டர் உயரம் பறக்கும் வகையிலான ஹெலிகாப்டர்கள் கோரப்பட்டன. இதனை ரஷ்யாவின் எம்ஐ - 127 மற்றும் பிரான்ஸின் இசி - 225 மட்டுமே பூர்த்தி செய்யமுடியும் என்றதாக இருந்தது. இந்நிலையில், தொழில்நுட்ப காரணங்களால் ரஷ்யா விலகிக்கொண்டது.
பிறகு விலை பேரங்கள், உயரம் சம்பந்தமான பேச்சுகள் எல்லாம் நடந்தன. இந்நிலையில், 4,500மீ உயரமாகக் குறைக்கப்பட்டது. பிறகு, இத்தாலியின் ‘அகஸ்டா வெஸ்ட்லேண்ட்’ நிறுவனத்திடம் பேசப்பட்டது. ஆனால், வாஜ்பாய் அரசு போனபிறகு கடந்த 2010ல்தான் அந்நிறுவனத்திடம் 12 ஏடபிள்யு101 ரக ஹெலிகாப்டர்கள் வாங்க ஒப்பந்தமானது.
‘சாப்பர்கேட்’ ஊழல் எனப்படும் இதில் ரூ.3,600 கோடி ஒப்பந்தத்தைப் பெற இந்நிறுவனம் இந்திய காங்கிரஸ் அரசியல்வாதிகள் மற்றும் ராணுவஅதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதன்பிறகு, 2014ல் இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. இதனால், தேசிய கருவூலத்திற்கு 2666 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக சிபிஐ குற்றம் சாட்டியது.
இந்நிலையில், இதில் இடைத்தரகராகக் குற்றம் சாட்டப்பட்ட கிறிஸ்டியன் ஜேம்ஸ் மைக்கேல் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதற்காக ஹெலிகாப்டர் தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து ரூ.225 கோடி பெற்றதாக 2016ம் ஆண்டு அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகையில் தாக்கல் செய்தது. இதிலும் சூசன் குப்தாவின் பங்கு இருப்பதாக தெரியவந்துள்ளது.
இதற்கிடையில்தான் 2007ம் ஆண்டு மன்மோகன்சிங் அரசு 126 பல்நோக்கு போர் விமானங்களை வாங்க டெண்டர் கோரியது. இறுதியில் ஃபிரான்சின் தஸ்ஸோ நிறுவனத்தின் ரஃபேல் விமானம் வாங்க முடிவானது.
இதில், 18 விமானங்கள் பறப்பதற்குத் தயார்நிலையிலும், மீதமுள்ள 108 விமானங்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் என்றும் ஒப்பந்தமானது. அதாவது, தஸ்ஸோ நிறுவனம் வழங்கும் தொழில்நுட்பத்துடன் ஹெச்ஏஎல் எனப்படும் ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனம் விமானங்களை உற்பத்தி செய்யும் என முடிவெடுக்கப்பட்டது. இது 2014ம் ஆண்டு கையெழுத்தானது.
ஆனால், 2014ல் ஆட்சி மாற்றம் ஏற்பட, பிரதமராகப் பொறுப்பேற்ற மோடி 2015ல் ஃபிரான்ஸ் சென்றதும் பழைய ஒப்பந்தங்கள் காலாவதியானதாக அறிவித்தார். பிறகு, புதிதாக 36 ரஃபேல் விமானங்கள் மட்டும் வாங்கப் போவதாகச் சொன்னார். 2016ல் ரஃபேல் போர் விமானம் ஒப்பந்தம் கையெழுத்தானது.
ஆனால், முந்தைய மன்மோகன்சிங் அரசு ஒரு விமானத்தை 560 கோடி ரூபாய்க்கு வாங்கவிருந்தது. ஆனால், மோடி அரசு ஒரு விமானத்திற்கு ரூ.1,670 கோடி கொடுத்தது. இதனால் சர்ச்சை கிளம்பியது. அதுமட்டுமில்லாமல் பழையமுறைப்படி இல்லாமல் எல்லா விமானங்களும் ஃபிரான்சில் தயாரிக்கப்படும் என்றானது. அடுத்ததாக ஹெச்ஏஎல்லுக்குப் பதிலாக தஸ்ஸோ நிறுவனத்துடன் சேர்ந்து சில தனியார் நிறுவனங்களும் பங்கெடுக்கும் என ஒப்பந்தத்தில் சொல்லப்பட்டது. அந்தத் தனியார் நிறுவனம் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டிபென்ஸ் என முடிவானது. ஆனால், ரிலையன்ஸ் அப்போதுதான் டிபென்ஸ் நிறுவனத்தை உருவாக்கியிருந்தது. அதுவும் பிரதமர் மோடி ஃபிரான்ஸ் செல்லும் சில நாட்களுக்குமுன்தான் உருவாக்கப்பட்டது.
இதனால், அனுபவம் உள்ள ஹெச்ஏஎல்லுக்கு கொடுக்காமல், எந்த அனுபவமும் இல்லாத ரிலையன்ஸுக்கு தந்தது தவறு என எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. அத்துடன் ஆயுதங்கள் வாங்கும் விஷயத்தில் நாடாளுமன்ற நிலைக்குழுவையோ, தொழில்நுட்பக்குழுவையோ பரிசீலனை செய்யவில்லை. தன்னிச்சையாக மோடி அறிவித்துள்ளார் எனவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
இந்நிலையில்தான் அப்போதைய ஃபிரான்ஸ் அதிபர் ஒல்லாந்தே, ரஃபேல் விவகாரத்தில் தஸ்ஸோ தனக்கு விருப்பமான நிறுவனத்தைத் தேர்ந்தெடுக்கலாம் என ஒப்பந்தத்தில் சொல்லப்பட்டது. ஆனால், மோடி அரசு ரிலையன்ஸ்தான் இருக்கவேண்டும் என வலியுறுத்தியது. எங்களுக்கு வேறுவாய்ப்புகள் இருக்கவில்லை என மீடியா ஒன்றிற்கு பேட்டியளித்தார். இது பலத்த சர்ச்சையை உருவாக்கியது.
59 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தில் ஊழல்கள் நடந்ததாக வழக்குகள் தொடரப்பட்டன. மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம் நிறைவில் வணிகரீதியாக எந்தச் சலுகையும் இல்லை எனத் தள்ளுபடி செய்தது. கடந்த ஆண்டுடன் 36 விமானங்களும் இந்தியாவிடம் வந்துவிட்டன. இதிலும் சூசன் குப்தா மற்றும் அதிகாரிகள், அரசியல்வாதிகளின் பங்கு இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
பொதுவாக இந்த பேரங்களின் வழியே வரும் பணம் எல்லாம் மொரிசியஸ் நாட்டிலுள்ள இன்டர்ஸ்டெல்லர் நிறுவனத்திற்கு மாற்றப்படுகிறது. அங்கிருந்தே மற்ற பரிவர்த்தனைகள் நடக்கின்றன. இதையும் ஆதாரங்களுடன் குறிப்பிட்டுள்ளது ‘கேரவன்’. இதிலும் சூசன் குப்தாமுக்கிய பங்குதாரராக இருக்கிறார்.இதனாலேயே எந்தஒருஆயத பேரம் நடந்தாலும் சரி அல்லது சூசன் குப்தா போன்றவர்கள் இல்லையென்றாலும் சரி இடைத்தரகர்களின் பங்கு இருந்துகொண்டேதான் இருக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.
பேராச்சி கண்ணன்
|