இன்ஸ்டா மாஃபியாக்களும்... ரீல்ஸ் ரீலர்களும்...
கதறும் தமிழ் சினிமாவும்!
‘இன்னைக்கு நாம எதார்த்தமா வந்திருக்கிற இடத்தைப் பார்த்தீங்கன்னா சென்னையிலே இருக்கற இந்த ஹோட்டல், இந்த பார்லர், இந்த நீச்சல் குளம், இந்த லிப்ஸ்டிக், இந்த டிரெஸ்...’ இப்படி கூவிக் கொண்டு ரீல்ஸ்களில் பெரும்பாலும் ரீல் விடும் இன்ஃபுளூயன்சர்களைத்தான் இப்போது தமிழ் சினிமா என்னும் பெரிய துறை நம்பத் தொடங்கியிருக்கிறது.
 இவர்கள் டுவிட்டர் மாஃபியாக்களைக் காட்டிலும் மோசமான கும்பல். சமீபத்தில் இவர்களுக்காகவே சில படங்களின் சிறப்புக் காட்சிகள் திரையிடப்பட்டுள்ளன. மட்டுமல்ல; நடிகர்களுடன் சந்திப்பு, உரையாடல்கள்... என அதையே புரமோஷன்களிலும் பயன்படுத்தி வருகிறார்கள். ஏதோ கடைகளில் என்னத்தையோ கொட்டித் தின்று நல்லா இருக்கு, அருமை, ஆஹா, ஓஹோ எனக் கூப்பிட்ட குரலுக்கு ஓடிப்போய் சாப்பிட்டு ‘வேற லெவல்’, ‘கூஸ்பம்ப்’ என ரிவ்யூ செய்யும் இந்த ரீலர்களுக்கு இன்னும் சினிமா துறையின் சூட்சுமம் புரியவில்லை. புரியும்போது வெடிக்கும் பெரும் புரட்சி.

டுவிட்டரில் வெறும் 260 வார்த்தைகளுக்கே இவ்வளவு பணம் புரள்கிறதா... என்னும் உண்மை நிலவரம் இவர்களுக்குப் பெரிதாகத் தெரியாது. தெரிய வரும்போது தயாரிப்புத் தரப்புகளுக்கு சோலி முடிஞ்சுடும்! டுவிட்டர் பண முதலைகளாவது இவ்வளவு வேண்டும் என கறாராகக் கேட்டு விடுவர். ஆனால், இன்ஸ்டாகிராம் இன்ஃபுளூயன்சர்கள் இதைக்காட்டிலும் ஆபத்தானவர்கள்.
டுவிட்டர் தளம் முழுக்க வார்த்தைகளையும், புகைப்படங்களையும் நம்பியே செயல்படுவதால் அங்கே நடிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்களுக்கு பெரிய அளவில் வேலை இல்லை. இங்கே இன்ஸ்டாகிராமில் அத்தனையும் ரீல்ஸ் மற்றும் வீடியோ மயம் என்பதால் இங்கே இருக்கும் இன்ஃபுளூயன்சர்கள் என்ன சொல்கிறார்களோ அதற்கு நடிகர்களும், நடிகைகளும் இதர பல கலைஞர்களும் ஆடித்தான் ஆகவேண்டும்.

இப்போது வரை தயாரிப்பாளர்கள் மட்டுமே சிக்கிச் சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கும் வலைத்தள மாஃபியாவில் இன்ஸ்டா உலகம் குதித்தால் நடிகர்களும் ‘ஆடுடா ராமா... ஆடுடா ராமா...’ என ஆடித்தான் ஆகவேண்டும். ‘என்கிட்ட மூணு லட்சம் ஃபாலோயர்ஸ் இருக்காங்க... உங்க அமைப்பு மூலமா கொடுக்கப் போகிற விருது லிஸ்ட்ல என்னையும் சேர்த்தா உங்களுக்கு புரமோஷன் கிடைக்கும்... எனக்கு ப்ராடக்ட் அனுப்பினா பாசிட்டிவா விமர்சனம் கொடுப்பேன்.
இல்லைன்னா நெகட்டிவ் விமர்சனம் கொடுத்து பிராண்டே இல்லாமல் செய்திடுவேன்... கடை திறப்புக்கு என்னையும் சேர்த்து கூப்பிடணும். அதுக்கு இவ்வளவு தாங்க, பரிகாரமா நான் உங்களுக்கு ஒரு ரீல்ஸ் வீடியோவும் ஸ்டோரியும் வைப்பேன்... ஒரு ரீல்ஸ் வீடியோவிற்கு ஐம்பதாயிரம் ரூபா. ஒரு பைசா குறைந்தாலும் ரீல்ஸ் வராது...’இதெல்லாம் இன்ஸ்டாகிராமின் பின்னணியில் இருக்கும் பிளாக் மார்க்கெட் பிஸினஸ் உரையாடல்கள்.
ரீல் ஒன்றுக்கு ஒரு லட்சம் வரையிலும் கூட சம்பாதிக்கும் திறமை படைத்தவர்கள் இன்ஸ்டாகிராமில் உள்ளனர். தனக்கு இருக்கும் அல்லது தன்னை நம்பி பின்தொடரும் மக்களையே மூலதனமாக்கி லாபம் சம்பாதிக்கும் மிகப் பெரும் மாஃபியா கும்பல் இந்த இன்ஸ்டா இன்ஃபுளூயன்சர்கள்.
புதிதாக வியாபாரங்கள் தொடங்கும் ஸ்டார்ட்டப் தொழிலாளிகள், குறைந்த முதலீட்டில் தொழில் ஆரம்பிக்கும் மிடில் கிளாஸ் மக்கள், தன்னார்வல அமைப்புகள், சமூக சேவை மையங்கள், சின்னச் சின்ன பொட்டிக் ஷோரூம்கள், சலூன்கள், ஃபேன்சி நகைக் கடைகள்... என இந்த இன்ஸ்டாகிராம் முதலைகள் எப்போது யார் கிடைப்பார்கள் என காத்துக் கிடக்கிறார்கள்.
குறைந்த முதலீட்டில் தொழில் ஆரம்பிக்கும் முதலாளிகளுக்கே இந்த நிலையெனில் கோடிகளில் பணம் புரளும் சினிமாக்காரர்கள் கிடைத்தால் இவர்கள் என்னவெல்லாம் செய்வார்கள்!
ஒரு 50MB சைஸ் செயலி... நாமெல்லாம் வெறும் ஒரு கணக்கைத் தொடங்கிவிட்டு வீடியோக்களை ஸ்வைப் மற்றும் லைக் செய்து, போதும் சாமி என நேரத்தைக் கடத்திக் கொண்டிருக்கிறோம்.
ஆனால், நம்மை வைத்துத்தான் இவர்கள் பணம் சம்பாதிக்கிறார்கள் என்பது நமக்கே தெரியாது. 2006ல் ஆரம்பித்து 16 வருடங்களுக்கு மேல் ஆகியும் கூட இன்னமும் டுவிட்டர், எளிய மக்களுக்கு புதிராகவே இருக்கிறது. எலைட் மக்கள்தான் இப்பொழுதும் டுவிட்டர்வாசிகள்.
ஆனால், இன்ஸ்டாகிராம் அப்படியில்லை. விடலைப்பசங்க முதல் வெற்றிலை இடிக்கும் மூதாட்டி வரை ரீல்ஸ் உலகம் பறந்து விரிந்து நேரத்தையும் நமது டேட்டாவையும் மென்று தின்று கொண்டிருக்கிறது. எனவேதான் இந்த புரமோஷனில் இப்போது சினிமாவும் தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறது. இன்ஸ்டாவில் பிரபலமாக என்ன வழி..? இன்ஸ்டாகிராமின் விற்பனைப் பொருள் தோல்தான். ஒன்று தோலைக் காட்ட வேண்டும் அல்லது தோல் சார்ந்த பொருட்களை விமர்சிக்க வேண்டும். இதன் காரணமாகவே அங்கே அரைகுறை ஆடையில் நடனமாடும் பெண்களும் ஆண்களும் கோலோச்சுகிறார்கள்.
இதற்கு பெரிய அளவில் மொழிப் புலமை தேவையில்லை; அறிவும்தான். தொடர்ந்து இரண்டு, மூன்று நாட்கள் ஆபாசமாக நடனமாடினால் போதும். ஃபாலோயர்ஸ் எண்ணிக்கை அதிகரித்துவிடும்.
தயாரிப்பு தரப்பில் என்ன சொல்கிறார்கள்?
ஒரு பெரிய தயாரிப்பு நிறுவனம் சென்ற வருடம் வெளியான தமிழ் சினிமாவின் மாபெரும் படைப்பான ஒரு படத்திற்கு முதன் முதலில் இன்ஸ்டாகிராம் இன்ஃபுளூயன்ஸர்களை வரவைத்து தங்கள் நிகழ்ச்சியில் தனி இடத்தில் அமர வைத்தனர்.இதில் என்ன சோகம் என்றால்... ஒவ்வொரு இன்ஃபுளூயன்ஸருக்கும் அவர்களின் பெயர் பொறிக்கப்பட்ட தனி அழைப்பிதழும் வழங்கப்பட்டதுதான்.இந்த மேதாவிகள்தான் இன்ஸ்டா ரீலர்களை தமிழ் சினிமா அப்பாடக்கர்களாக மாற்றிய புண்ணியவான்கள்.
அப்பொழுது பிடித்தது தமிழ்ச் சினிமாவிற்கு ஏழரைச் சனி. இப்பொழுது வரை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதுவும் சமீபகாலமாக இவர்களுக்கு படத்தின் ஸ்பெஷல் ஷோ, சம்பந்தப்பட்ட நடிகர், நடிகைகளுடன் சந்திப்புகள், அவர்களுடன் அமர்ந்து உண்பது... என குரங்காட்டம் உச்சத்தை எட்டியிருக்கிறது.பாலிவுட்டில் இது முன்பே தொடங்கிவிட்டது. பிள்ளையார் சுழி, அந்த ஒற்றை இன்ஸ்டாகிராம் பக்கம். அது, நிஹாரிகா.
இந்தியாவில் எப்பேர்ப்பட்ட படமாக இருப்பினும், அந்த படத்தில் என்ன கதையாக இருந்தாலும் சரி, எந்த நடிகர் நடித்திருந்தாலும் சரி, முதலில் நிஹாரிகாவின் கதவைத்தான் தட்டுகிறார்கள். 35 லட்சம் ஃபாலோயர்களுடன் மாஸ் காட்டி நிற்கும் நிஹாரிகாவின் பயணம் சற்றே நீளம். ஒரு வீடியோவிற்கு சுமார் ஐந்து முதல் இருபது லட்சம் வரை பெறுகிறார் என்கிறது பாலிவுட் புள்ளிவிபரம். இப்போது நம் தென்னிந்திய நடிகர்கள் துவங்கி தமிழ் நடிகர்கள் சிலரும்கூட இந்த நிஹாரிகா ஜோதியில் ஐக்கியமாகி இருக்கிறார்கள்.
பெரிய பாலிவுட் மேடைகள், சிவப்புக் கம்பளங்கள், விருது விழாக்கள் என எங்கும் நிஹாரிகா அங்கம் வகிக்கிறார். நிஹாரிகா மார்க் செய்யும் இடத்தில்தான் நடிகர்கள் நிற்க வேண்டும். அவர் என்ன கான்செப்ட் தருகிறாரோ அதை அப்படியே பின்பற்றி நடிக்க வேண்டும். இதுதான் டாஸ்க். இப்படித்தான் துவங்கியது இந்திய இன்ஸ்டாகிராம் இன்ஃபுளூயன்சர்களின் சினிமா பயணம். நடிகர்களும் இயக்குநர்களும் என்ன சொல்கிறார்கள்?
‘இவங்கதான் இன்ஃபுளூயன்சர்கள் என சுமார் பத்து, பதினைந்து நபர்களைக் கொண்டு வந்து அடைத்து விடுகிறார்கள். அவர்கள் விருப்பம் போல் பாடலை பாடச் சொல்லி ஆடச் சொல்லி எங்களைக் கட்டாயப்படுத்துகிறார்கள். படத்தில் ஹீரோயினுடன் அல்லது ஹீரோவுடன் எப்படி ரொமான்ஸ் காட்சிகளில் நடித்தோமோ அதை அப்படியே ரீ கிரியேட் செய்யச் சொல்கிறார்கள்.
இதெல்லாம் எதற்கு எனக் கேட்டால் அவர்கள் புரமோஷன் குழுக்களை கை காட்டுகிறார்கள். இதில் அதிகம் மாட்டிக்கொண்டு விழிப்பவர்கள் தெலுங்கு நடிகர்கள்தான். ஏதேனும் ஒரு ஹிட் பாடலுக்கு குறைந்தபட்சம் 20 நபர்களுடனாவது நடனமாடும் சூழலை உண்டாக்கி விட்டார்கள். நடிகர்கள் ஆடுகிறார்கள்... அவர்களுக்கு அது வேலை... சரி; இயக்குநர்களும் தொழில்நுட்பக் கலைஞர்களுமான நாங்களும் அப்படி ஆட வேண்டுமென்றால் எப்படி..? இது கூட பரவாயில்லை... ஒர்க்அவுட் செய்து அத்தனை உணவுக் கட்டுப்பாடுகளையும் கடைப்பிடித்து ஓடிக் கொண்டிருப்போம். ஒரே ஒரு ரீலில் பிரியாணி சாப்பிட வைக்கிறேன் அல்லது சமைத்துத் தருகிறேன், வீட்டிலிருந்து சாப்பாடு கொண்டு வந்தேன், ஆசையாக கொண்டு வந்தோம், இதை நீங்கள் சாப்பிட்டே தீர வேண்டும் என டயட்டை மீற வைக்கிறார்கள்.
அதிலும் காலை 11 மணிக்கு அல்லது மாலை 6 மணிக்கு பிரியாணியைக் கொட்டி சாப்பிடு என்றால் எப்படிச் சாப்பிடுவது..? இதெல்லாம் சொன்னாலும் புரிந்து கொள்ள மாட்டார்கள். ஒரே நாளில் நாலு விதமான பிரியாணிகள் சாப்பிட்டு நடிகர்களான நாங்கள் நாசமா போன சம்பவமெல்லாம் இருக்கு. ரீலுக்காக நாங்கள் சாப்பிடும் சாப்பாடு எங்களை அடுத்து ஒரு வாரத்திற்கு உடற்பயிற்சி அட்டவணை முதல் உணவு டயட் வரை அனைத்திலும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது...’ என புலம்புகிறார்கள்.
சமீபத்திய ரீல்கள்! சிறப்புக் காட்சிகள், நிகழ்ச்சிகள் என பிரத்தியேகமாக இவர்களுக்காக திரையிடப்பட்ட அல்லது நடத்தப்பட்ட நிகழ்ச்சிகள் முடிந்த பின் இந்த ரீலர்கள் என்ன செய்கிறார்கள்?
பெரும்பாலான ரீல்ஸ்களின் காட்சிகள் இவைதான்... வீட்டைப் பூட்டிவிட்டு படத்திற்குச் செல்வது முதல் அங்கே கொடுக்கப்படும் சமோசா மிக்சர் பாக்கெட்டுகள் வரை ஆங்கிள் ஆங்கிளாக வீடியோ... கடைசியாக சீட்டில் அமர்ந்து சிரித்து முறைத்து வெளியே வருவது... இதுதான் இன்ஃபுளூயன்ஸ் இன்ஸ்டா ரீல்ஸ்!
இவர்கள் சொல்லி எப்படி ஒரு படம் ஓடும்..? இதுகூடத் தெரியாமல் திரைப்பட நிறுவனங்களும் நடிகர்களும் இருக்கிறார்களே என்று நினைக்கும்போது சுவரில் முட்டிக் கொள்ளத்தான் தோன்றுகிறது! டுவிட்டரில் இருக்கும் கும்பல் இன்ஸ்டாவிற்கு வரும்போதும்; இன்ஸ்டாவில் இருக்கும் கும்பல் டுவிட்டரில் நடக்கும் பணப் பரிவர்த்தனைகளை அறிந்து தங்களுக்கும் இவ்வளவு தொகை வேண்டும் என டிமாண்ட் செய்யும்போதும்தான் இருக்கு கச்சேரி! அப்போது பல கோடிகளைத் தயாரிப்பாளர்கள் இந்த மாஃபியாக்களுக்கே தரும் நிலை ஏற்படும்.
இவையெல்லாம் ஏற்படாமல் இருக்க வேண்டுமென்றால் இப்பொழுதே தயாரிப்பு நிறுவனங்களும் நடிகர்களும் விழித்துக் கொள்ள வேண்டும். இல்லை யெனில் கோவணம் கூட மிஞ்சாது. மாஃபியாக்கள் அதையும் உருவி ரீல்ஸ் கன்டென்ட் ஆக்கி விடுவார்கள்!
ஷாலினி நியூட்டன்
|