Gig தொழிலாளர்களை ஒன்றிய அரசு பாதுகாக்குமா..?
‘வாழ வக்கற்றவர்களுக்கு எல்லாம் இட்லிக் கடைதான் நம்ம ஊரில் தாசில் உத்தியோகம்...’ என்ற ஒரு பிரபல வசனம் ‘பராசக்தி’ படத்தில் வரும். இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு இந்நிலை இன்னும் மாறவில்லை என்பது சோகம். என்ன... இட்லிக்குப் பதிலாக கிக் ஒர்க் (gig work).
 அது என்ன கிக் ஒர்க்..?
கால் டாக்சி டிரைவர்கள், ஃபுட் டெலிவரி செய்யும் பாய்ஸ் முதல் நம் வீட்டு குப்பையை அகற்றும் அர்பன் கம்பெனி ஆட்கள் வரை கிக் ஒர்க்கர்ஸ்தான். கிக் என்றாலே ஒப்பந்த, டெம்பரரி, முறைசாரா, டிமாண்டுக்கு ஏற்ப கூலிக்கு மாரடிக்கும் தொழிலாளர்கள் என்றுதான் டிக்ஷனரி அர்த்தம் சொல்கிறது.  பொதுவாக ஒரு app மூலம் நுகர்வோருக்கு பலவகையான சேவைகளை ஆற்றுபவர்களைத்தான் கிக் ஒர்க்கர்ஸ் என்று அழைக்கிறார்கள். ஆனால், இந்திய சட்டம் அவர்களை தொழிலாளர்களாகவோ, தொழிலாளர் சட்டத்துக்குள்ளோ சேர்த்துக் கொள்வதில்லை. இதனால் மற்ற தொழிலாளர் போல குறைந்தபட்ச ஊதியம், தொழிலாளர் பாதுகாப்பு, உரிமைகள் மற்றும் இன்னபிற சமூக பாதுகாப்புகள் இந்த கிக் தொழிளார்களுக்கு இல்லை.  இதுதொடர்பாக பல்வேறு அமைப்புகள் பல ஆண்டுகளாக சட்டப் போராட்டம் நடத்தியும் இந்த கிக் தொழிலாளர் பற்றிய பிரச்னையை மத்திய அரசு கண்டுகொள்ளாவிட்டாலும் கடந்தவாரம் ராஜஸ்தான் அரசு இந்த கிக் தொழிலாளர்களைப் பாதுகாக்கும் பொருட்டு சட்டம் இயற்றியிருப்பது பல்வேறு தரப்பினரின் பார்வையை உயர்த்த வைத்திருக்கிறது. கிக் தொழிலாளர் தொடர்பான தேசிய அமைப்பான இண்டியன் ஃபெடரேஷன் ஆஃப் ஆப் பேஸ்ட் டிரான்ஸ்போர்ட் ஒர்க்கர்ஸின் தமிழ்நாடு பிரதிநிதியான ஜூட் மாத்யூ, கிக் தொழிலாளருக்கு இப்படி ஒரு பெயர் வைத்ததே ஒரு சதிதான் என்று ஆரம்பித்தார்.
‘‘இந்தியாவுல சுமார் ஒரு கோடிப் பேராவது இந்தத் தொழிலில் இருக்காங்க. இது வரும் ஆண்டுகளில் அதிகரிக்கும். இந்தத் தொழிலை பல வகையாக பிரிக்கலாம். உதாரணமா டாக்சி டிரைவர்கள், பைக் டிரைவர்கள், லாரி - டெம்போ டிரைவர்கள் என்று டிரான்ஸ்போர்ட்டுக்கு ஏற்றமாதிரி பிரிக்கலாம். தமிழ்நாட்டில் டாக்சி டிரைவர்கள் சுமார் 2 ½ லட்சம், பைக் டிரைவர்கள் சுமார் 2 ½ லட்சம் மற்றும் லாரி டிரைவர்கள் சுமார் ஒரு லட்சம் பேர் என்று இந்த தொழிலில் சுமார் 6 லட்சம் பேராவது இருக்கிறார்கள்.
இந்தத் தொழிலாளர்களை கிக் ஒர்க்கர்ஸ், அக்ரகேட்டர் (aggregator) எனும் இடைத்தரகர்கள், ஒப்பந்தக் கூலிகள், ஃப்ரீலேன்சர் தொழிலாளர்கள் என்றுதான் அழைக்கிறார்கள். இவர்களை ஒரு தொழிலாளியாகக் கருதாததால்தான் இந்த பெயர்களை எல்லாம் வைத்து அழைக்கிறார்கள். ஆனால், இரண்டு பேருமே செய்யும் தொழில் ஒன்றுதான். என்ன... ஒரே வித்தியாசம் கிக் ஒர்க்கர்ஸ்கள் app மூலம் சேவை ஆற்றுகிறார்கள்...’’ என்று அறிமுகம் கொடுக்கும் மாத்யூ கிக் தொழிலாளரின் பிரச்னைகள் பற்றி விளக்கினார்.
‘‘வழக்கமாக இந்திய தொழிலாளர்களுக்கு இருக்கும் சட்டப் பாதுகாப்பு இந்த கிக் தொழிலாளர்க்கு கொஞ்சம்கூட இல்லை. உதாரணமாக குறைந்தபட்ச சம்பளம், பணிப் பாதுகாப்பு, தொழிலாளர் உரிமை மற்றும் விபத்து மற்றும் வேலையின்போது ஏற்படும் மரணத்துக்கு இழப்பீடு எல்லாம் கிடையாது. பொதுவாக இந்த கிக் தொழிலில் இருக்கும் முதலாளிக்கும் தொழிலாளிக்கும் எந்த சம்பந்தமுமே இல்லாமல் இருக்கும். ஓலா, ஊபர் போன்ற டாக்சி கம்பெனிகளுக்கு சென்னையிலேயே அலுலகங்கள் இல்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.
இன்சென்டிவ் (incentive) எனும் ஊக்கத் தொகை, மாதக் கடைசியில் போனஸ் போன்ற கொக்கிகள் மூலம் இந்தத் தொழிலாளர்கள் தொடர்ச்சியாக சுரண்டப்படுகிறார்கள். மாதம் முழுக்க குறிப்பிட்ட நேரத்தில் நுகர்வோருக்கு சேவைகளை - டெலிவரி செய்யும் இந்தத் தொழிலாளர்கள், அந்த மாதத்தில் ஏதேனும் ஒருநாளில் செய்யும் ஒரு சிறு தவறுக்காக அந்த மாதத்துக்கான முழு ஊக்கத்தொகையையும், போனஸையும் இழக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.
இந்த ஊக்கத்தொகை, போனஸை பெறுவதற்காக குறித்த நேரத்தில் டெலிவரிக்காக வேகமெடுத்துச் செல்லும் கிக் தொழிலாளர்களில் பலர் விபத்துக்குள்ளாவதும் தொடர்ச்சியாக நடைபெறுவதை அன்றாடம் பார்க்கிறோம். ஆனால், இந்தப் பணிநேர விபத்துக்களையும் கம்பெனிகள் மறைத்துவிடுகின்றன. உதாரணமாக கிக் தொழிலாளர்களின் பணிக் காலத்தை ஆன் லைனிலிருந்தே தூக்கிவிடும் போக்கும் பல இடங்களில் நடைபெறுவதாக கேள்விப்படுகிறோம்.
அண்மையில் மும்பையில் இருந்து புனேவுக்கு ஒரு கிக் தொழிலாளி கார் ஓட்டிச் சென்றிருக்கிறார். புனே போய் கஸ்டமரை இறக்கியவர் அடுத்த கஸ்டமருக்காக காரில் வெயிட் பண்ணியிருக்கிறார். இந்த நேரத்தில் ஒன் வேயில் வந்த ஒரு லாரி, அந்த காரை மோத அந்த டிரைவர் அந்த இடத்திலேயே இறந்துவிட்டார். உடனே கம்பெனி அவர் டியூட்டி யில் இல்லாத மாதிரி காட்டியிருக்கிறது. ஆனால், விபத்துக்கு முன்பு அவர், தான் புனேவில் காரில் வெயிட் செய்வது போல் எடுத்த புகைப்படத்தை தன் மனைவிக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பியிருந்ததால் அவர் வேலையில்தான் பலியானார் என்று எங்களால் நிரூபிக்க முடிந்தது.
உடல் சார்ந்த பிரச்னைகள், தூக்கமின்மை பிரச்னைகள், வாரத்தில் 7 நாளும் வேலை, குடும்பத்துடன் நேரம் செலவழிக்க முடியாத நிலை, கடன் பிரச்னைகள், ஒரு நாளைக்கு 15 முதல் 20 மணி நேர வேலை போன்றவற்றால் தொடர்ச்சியாக இந்த கிக் தொழிலாளர்கள் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாக பல்வேறு இந்திய ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன...’’ என்று சொல்லும் மாத்யூ, இந்தியாவில் வேலையில்லா பிரச்னையை சமாளிக்கத்தான் கிக் தொழிலை அரசு கண்டுகொள்வதில்லை என்கிறார்.
‘‘முறைசாரா தொழிலாளர்களையும் அரசு ஒரு முறைக்குக் கொண்டு வருவது அவசியம்தானே..? கலைஞர் முதல்வராக இருந்தபோது பல முறைசாரா தொழிலாளர்களை இணைத்து ஒரு நலவாரியம் அமைத்தார். அதுமாதிரி ஒரு சட்டம் தேவைப்படுகிறது. மத்திய அரசும் இந்தத் தொழிலை முறைப்படுத்த 2019ம் ஆண்டு மோட்டார் வெஹிக்கிள் அக்ரகேட்டர் ஆக்ட் எனும் கிக் தொழிலாளர்களுக்கான ஒரு இடைத்தரகர் பாதுகாப்பு சட்டத்தைக் கொண்டுவந்தது.
உண்மையில் இந்த அடிப்படையில்தான் ராஜஸ்தான் அரசு இந்தியாவிலேயே முதல் மாநிலமாக இந்தச் சட்டத்தை கடந்தவாரம் அமல் படுத்தியிருக்கிறது.ஆனாலும் மத்திய அரசின் சட்டத்தின்படி எல்லா மாநிலங்களும் இதைப் பின்பற்றுமா என்பதே மில்லியன் டாலர் கேள்வி. உதாரணமாக இந்த ஆப் மூலம் நடக்கும் கிக் தொழிலில், முதலாளிகள்தான் இந்தியர்களாக இருப்பார்கள். ஆனால், 90% முதலீடு வெளிநாடுகளில் இருந்துதான் வரும்.
ஒரு கிக் தொழில் கம்பெனிக்கு யார் முதலீடு செய்கிறார்கள், எவ்வளவு முதலீடு செய்தார்கள், அந்த கம்பெனிக்கு வரும் லாபம் என்ன, தொழிலாளர்களுக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கிறார்கள், அரசுக்கு எவ்வளவு வரி செலுத்துகிறார்கள்... போன்ற தகவல்கள் யாருக்குமே தெரியாது. எடுத்துக்காட்டாக, ஒரு சேவைக்காக ஒரு நுகர்வோர் கால் செய்து புக் செய்துவிட்டு ஒருவேளை அந்த புக்கிங்கை கேன்சல் செய்தால் நம்மிடம் பணம் பிடிக்கிறார்கள் இல்லையா... இந்தப் பணமே பெரும் தொகையாக இருக்கும்.
இதுமாரியான ஒரு விஷயத்தால் டாக்சி கம்பெனிகள் ஒவ்வொன்றும் சுமார் 2000 கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாக அண்மையில் ஒரு குற்றச்சாட்டு ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டது. நுகர்வோரையும் கம்பெனிகளையும் காப்பாற்ற மிக எளிதாக கிக் தொழிலாளரை பலி கொடுக்க முடியும்.
இந்த அம்சம் இருப்பதால்தான் கிக் தொழிலாளர்களை தொழிலாளர் சட்டத்துக்குள் கொண்டுவர அரசு அலட்சியம் காட்டுகிறது.இப்போது ராஜஸ்தான் அரசு சட்டம் இயற்றியிருக்கிறது. இனிதான் விதிகளை உருவாக்கவேண்டும். கிக் தொழிலாளர்களுக்கான சமூக பாதுகாப்புக்காக 200 கோடி ரூபாயை ராஜஸ்தான் அரசு ஒதுக்கியிருப்பதாக சொல்லியிருக்கிறது. இந்த நிதிக்காக கம்பெனிகளிடம் இருந்தும் ஒரு சிறு தொகையை வசூலிக்கப் போவதாக சொல்லியிருக்கிறது.
விபத்து இன்சூரன்ஸ், ஆயுள் காப்பீடு, அடையாள அட்டை, பிள்ளைகளுக்கு கல்வி உதவி, பிராவிடண்ட் ஃபண்ட்... என்று இந்த நிதியில் செய்யப்போவதாக ராஜஸ்தான் அரசு குறிப்பிட்டுள்ளது.
ஆனால், அமல்படுத்த முடியுமா என்பது சந்தேகமே. ஏனெனில் முதலாளிகள் - பெரும் நிறுவனங்கள் இதற்கு ஒப்புக் கொள்வது கேள்விக்குறி. அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த முயற்சியை முறியடிக்கவே முயலுவார்கள்.
மத்திய அரசின் அக்ரகேட்டர் சட்டம், இந்த ஆன்லைனை ஓப்பன் சோர்சாக வைத்துக் கொள்ளவேண்டும் என்று ஒரு விதியை உருவாக்கியிருக்கிறது. இந்த விதியை ராஜஸ்தான் அரசால் பின்பற்ற முடியுமா என்றும் தெரியாது...’’ என்று சொல்லும் மாத்யூ, மாணவர்கள், இளைஞர்கள் அதிகம் ஈடுபடும் பைக் கிக் தொழிலையாவது கட்டுப்படுத்த டி போர்டு பைக்குகளை அரசு கொண்டுவரவேண்டும் என்கிறார்.
‘‘தன்னிடமுள்ள பைக்கை ஒரு மாணவன் எதற்கு பயன்படுத்துகிறான் என்று யாருக்கும் தெரியாது. கல்லூரிக்குச் செல்ல என வாங்கி, அதை பகுதி நேரமாக, தான் மேற்கொள்ளும் கிக் தொழிலுக்கும் - ஃபுட் டெலிவரி - பயன்படுத்தலாம்.எனவேதான், டி போர்டு பைக்குகளை அரசே அறிமுகம் செய்ய வேண்டும் என்கிறோம். அப்பொழுதுதான் கிக் தொழிலாளர்களுக்கும் பைக்குக்கும் சேஃப்டியாக இருக்கும். இதை ராஜஸ்தான், கர்நாடகா போன்ற மாநிலங்கள் ஏற்கனவே அறிமுகம் செய்திருக்கின்றன...’’ என்கிறார் ஜூட் மாத்யூ.
டி.ரஞ்சித்
|