1947 ஆகஸ்ட் 15ல் தொடங்கப்பட்ட தயாரிப்பு நிறுவனம்...
2வது தலைமுறையில் திவால்... 3வது தலைமுறையில் விஸ்வரூப வெற்றி... 4வது தலைமுறை இயக்குநராக அறிமுகம்!
உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான சினிமா தயாரிப்பு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் நீண்ட காலமாக தொடர்ந்து இயங்கும் நிறுவனங்களைப் பட்டியலிட்டால் ஐம்பது நிறுவனங்கள் கூட எஞ்சாது. அதுவும் இந்திய நிறுவனங்கள் என்றால் பத்து கூட தாண்டாது. இந்தப் பத்து நிறுவனங்களில் முதன்மையானது, ‘ராஜ்ஸ்ரீ புரொடக்ஷன்ஸ்’. இந்தியாவில் 75 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து இயங்கி வரும் சினிமா தயாரிப்பு நிறுவனம் இது. ‘மெயின் பியார் கியா’, ‘ஹம் ஆப்கே கெயின் கோன்’, ‘விவாஹ்’ உட்பட ஏராளமான பிளாக்பஸ்டர் இந்திப் படங்களைத் தயாரித்தது ‘ராஜ்ஸ்ரீ’தான்.
 இதுபோக பன்மொழிகளில் ஆயிரக்கணக்கான திரைப்படங்களை விநியோகம் செய்திருக்கிறது. தவிர, முக்கியமான தொலைக்காட்சித் தொடர்களையும், நிகழ்வுகளையும் தயாரித்திருக்கிறது . குடும்ப உறவுகள் மற்றும் குடும்பத்தின் மதிப்புகளை வலியுறுத்தும் கதைகளையே அதிகமாக தயாரித்திருக்கிறது இந்நிறுவனம். அதனால் ‘ராஜ்ஸ்ரீ’யின் தயாரிப்புகளுக்கு என்றே தனிப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். அத்துடன் ஆயிரக்கணக்கான குடும்பங்களைத் திரையரங்குகளுக்கு வரவைத்ததில் ‘ராஜ்ஸ்ரீ’க்கு முக்கியப்பங்கு இருக்கிறது.
 சமகாலத்தில் திரையரங்கம், தொலைக்காட்சி, கம்ப்யூட்டர், ஸ்மார்ட்போன், டேப்லெட் என ஐந்து வகையான திரைகளையும் ஆக்கிரமிப்பதுதான் ‘ராஜ்ஸ்ரீ’யின் நோக்கம். இதற்காக மிகுந்த முனைப்புடன் இயங்கி வருகிறது. இராஜஸ்தான் மாநிலத்தில் வீற்றிருக்கும் குச்சுமான் நகரில் வசித்துவந்த மார்வாரி ஜெயின் குடும்பத்தில், 1914ம் வருடம் பிறந்த தாராசந்த் பர்ஜாத்யாவால் உருவாக்கப்பட்டதுதான் ‘ராஜ்ஸ்ரீ புரொடக்ஷன்ஸ்’.கொல்கத்தாவில் உள்ள வித்யாசகர் கல்லூரியில் பட்டப்படிப்பு படிக்கும்போதே சினிமா மீது காதல் கொண்டுவிட்டார் தாராசந்த். திரைப்படத்துறையில் உள்ள அனைத்து நுணுக்கங்களையும், வியாபாரத் தந்திரங்களையும் கற்றுக்கொள்வதற்காக கடை நிலை ஊழியராக சினிமாத்துறையில் வேலைக்குச் சேர்ந்தார். அதுவும் சம்பளம் வாங்காமல். அப்போது அவரது வயது 19.
 இந்தியா சுதந்திரமடைந்த ஆகஸ்ட் 15, 1947ல் ‘ராஜ்ஸ்ரீ பிக்சர்ஸ் (பி) லிமிடெட்’ எனும் திரைப்பட விநியோக நிறுவனத்தை ஆரம்பித்தார் தாராசந்த். ‘சந்திரலேகா’, ‘சன்சார்’, ‘பஹார்’ உட்பட ஆயிரத்துக்கும் மேலான படங்களை விநியோகித்திருக்கிறது ‘ராஜ்ஸ்ரீ’. இந்தி மட்டுமல்லாமல் மற்ற மொழிப்படங்களையும் விநியோகித்ததால் இந்திய சினிமாத்துறை முழுவதும் அறிமுகமாகியிருந்தார் தாராசந்த். நேரடியாக திரைப்படத் தயாரிப்பில் இறங்குவதற்காக 1962ம் வருடம் ‘ராஜ்ஸ்ரீ புரொடக்ஷன்ஸ் (பி) லிமிடெட்’ எனும் நிறுவனத்தை ஆரம்பித்தார். இதன் முதல் தயாரிப்பான ‘ஆர்த்தி’ (1962) எனும் இந்திப்படம் இந்தியாவிலும், சர்வதேச அளவிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இதற்கடுத்த தயாரிப்பான ‘தோஸ்தி’ (1964) வசூலில் சக்கைப்போடு போட்டது. அத்துடன் நிறைய விருதுகளை அள்ளி, ‘ராஜ்ஸ்ரீ’யின் தயாரிப்பு என்றாலே நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கையை ரசிகர்களின் மத்தியில் ஏற்படுத்தியது. இதற்கிடையில் தாராசந்தின் மகன் ராஜ்குமார் பர்ஜாத்யா, கரக்பூரில் உள்ள ஐஐடியில் எஞ்சினியரிங் படிப்பில் சேர்ந்தார். தயாரிப்பு நிறுவனம் தொடங்கியபோது உடன் சேர்ந்து வேலை செய்ய மகனை அழைத்தார் தாராசந்த். அப்பாவின் வேண்டுகோளுக்கு இணங்க, படிப்பை பாதியிலே விட்டுவிட்டு ‘ராஜ்ஸ்ரீ புரொடக்ஷனி’ல் சேர்ந்தார் ராஜ்குமார்.
தந்தையுடன் சேர்ந்து ஏராளமான படங்களைத் தயாரித்தார் ராஜ்குமார். இவரது மகன்தான் பிரபல இயக்குநரான சூரஜ் பர்ஜாத்யா.எழுபதுகளில் ‘உப்ஹார்’, ‘பஹேலி’, ‘ஹனிமூன்’ உட்பட முப்பது படங்களைத் தயாரித்தது ‘ராஜ்ஸ்ரீ’. எண்பதுகளின் ஆரம்பத்தில் நன்றாக இருந்த இந்திய சினிமாத்துறை, இறுதியில் மந்தமானது. ‘ராஜ்ஸ்ரீ’யின் படங்களும் சரியாகப் போகவில்லை. கடனில் மூழ்கியது ‘ராஜ்ஸ்ரீ’. நிறுவனத்தை மூடும் நிலைக்குச் சென்றுவிட்டார் தாராசந்த். கடைசியாக ஒரு முயற்சி செய்து பார்ப்போம் என்று தன் பேரன் சூரஜ்ஜிடம் படம் இயக்க கேட்டார் தாராசந்த். அப்போது சூரஜ்ஜின் வயது 24தான்.
சூரஜ்ஜும் உற்சாகமாக களத்தில் இறங்கி, ‘மெயின் பியார் கியா’ (1989) எனும் படத்தை இயக்கினார். ஒரு கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகிய இந்தப் படம், 28 கோடி ரூபாயை அள்ளியது. ‘ராஜ்ஸ்ரீ’யும் காப்பாற்றப்பட்டது. இதற்கு அடுத்து ‘ராஜ்ஸ்ரீ’ தயாரித்த ‘ஹம் ஆப்கே கெயின் கோன்’ வசூலில் இமாலய சாதனை படைத்தது. சினிமாத்துறையில் யாராலும் அசைக்க முடியாத இடத்தைப் பிடித்துக்கொண்டது ‘ராஜ்ஸ்ரீ’.
சமீபத்தில் ‘ராஜ்ஸ்ரீ புரொடக்ஷன்ஸி’ன் 75வது ஆண்டு விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. தனது 59வது படத்தைத் தயாரித்து வருகிறது ‘ராஜ்ஸ்ரீ’. ‘டோனோ’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை சூரஜ்ஜின் மகனான அவ்னிஷ் இயக்குகிறார். இது அவ்னிஷ்க்கு முதல் படம். சன்னி தியோலின் இளைய மகனான ராஜ்வீர், அறிமுக நாயகனாக களமிறங்குகிறார்.தாராசந்தின் வம்சத்தில் வந்த நான்காவது தலைமுறையிலும் தொடர்கிறது ‘ராஜ்ஸ்ரீ’யின் திரைப்பயணம்.
த.சக்திவேல்
|