நாளிதழின் இணைப்பிதழால் இந்திய விவசாயத்தில் புரட்சியை ஏற்படுத்தியவர் இவர்தான்!
இந்தியாவின் குறிப்பிடத்தக்க விவசாயிகளில் ஒருவராக வலம் வருகிறார், தியானேஸ்வர் போட்கே. இவரது இயற்கை விவசாய வழிமுறைகளும், வழிகாட்டலும் லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்க்கையில் வெளிச்சத்தைக் கொண்டு வந்திருக்கிறது. பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் விவசாயத்தில் இறங்கிய தியானேஸ்வரைச் சுற்றியிருப்பவர்கள் புரட்சி விவசாயி என்றே அழைக்கின்றனர்.

எழுபதுகளின் ஆரம்பத்தில் புனேவில் உள்ள ஹிஞ்சேவாடி எனும் ஊரில் வசித்து வந்த ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தார் தியானேஸ்வர் போட்கே.
இவருக்கு நான்கு சகோதரிகள். குடும்பத்துக்குச் சொந்தமாக 15 ஏக்கர் நிலம் இருந்தது. தண்ணீர் வசதியும் போதுமானதாக இருந்ததால் தியானேஸ்வரின் தந்தை கம்பு, கரும்பு, சோளத்தைப் பயிரிட்டிருந்தார்.
 1972ம் வருடம் தியானேஸ்வரின் தந்தை 20,000 ரூபாய் கடன் வாங்கியிருந்தார். அடுத்த பத்து வருடங்களில் வட்டியுடன் சேர்ந்து கடன் தொகை ஒரு லட்சத்தைத் தாண்டிவிட்டது. அதனால் ஐந்து ஏக்கர் நிலத்தை விற்று கடனை அடைத்தார் தியானேஸ்வரின் தந்தை. கடன் செலுத்தியது போக மீதியிருந்த பணத்தில் இரண்டு மகள்களுக்குத் திருமணம் செய்து வைத்தார். தனது சகோதரிகளுக்கு நடந்த திருமணம்தான் தியானேஸ்வரின் வாழ்க்கையில் முக்கிய திருப்புமுனை.
 ஆம்; புனேவில் வசித்து வந்த ஒரு வசதியான குடும்பத்தில் மருமகளானார் தியானேஸ்வரின் ஒரு சகோதரி. 1987ம் வருடம் தியானேஸ்வரின் மச்சானுடைய நண்பரின் அலுவலகத்தில் டைப்பிங் தெரிந்தவர் தேவையாக இருந்தது. தியானேஸ்வருக்கு டைப்பிங் தெரியும். ஹிஞ்சேவாடியிலிருந்து சைக்கிளில் 75 நிமிடம் பயணித்தால் அந்த அலுவலகத்தை அடைய முடியும். காலையில் 6 மணிக்கே தயாராகி வேலைக்குச் சென்று விடுவார் தியானேஸ்வர். இரவு 11 மணிக்குத்தான் வீடு திரும்புவார்.
இத்தனைக்கும் மாதச் சம்பளம் 200 ரூபாய்தான். ஆனால், அந்த வேலைக்கு நாள் தவறாமல் சரியான நேரத்துக்குச் சென்றுவிடுவார். இது அவருக்குள் ஒருவித ஒழுக்கத்தையும், அர்ப்பணிப்பையும் கொடுத்தது. அப்போது அவரது வயது 17.டைப்பிஸ்ட் வேலையில் இருந்தபோதே இண்டீரியர் டிசைனிங் வேலையையும் கற்றுக்கொண்டார். தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் மாதம் 1,500 ரூபாய் சம்பளத்துக்கு இண்டீரியர் டிசைனர் வேலை கிடைத்தது. மும்பை மற்றும் புனேவில் உள்ள பெரும்பாலான உணவகங்கள் மற்றும் பார்களில் இண்டீரியர் டிசைன் செய்திருக்கிறார். இதற்கிடையில் 1996ம் வருடம் தியானேஸ்வருக்கு திருமணம் நடந்தது. குடும்பத்தைக் கவனித்தல், மீதமிருக்கும் இரண்டு சகோதரிகளுக்குத் திருமணம் போன்றவற்றில் கவனம் செலுத்தியதால் இண்டீரியர் வேலையிலேயே தொடர்ந்தார். மாத வருமானம் 5 ஆயிரமாக உயர்ந்தது. கடன் வாங்கி சகோதரிகளுக்குத் திருமணம் செய்து வைத்தார். இரண்டு வருடங்களில் வாங்கிய கடனை அடைத்துவிட்டு, குறிப்பிட்ட தொகையைச் சேமிக்கத் தொடங்கினார்.
பொதுவாக நல்ல வருமானம் கிடைக்கும்போது எல்லோருமே வேலையில் இருக்க விரும்புவார்கள். ஆனால், தியானேஸ்வரரோ வேலையை விட்டுவிட்டு, சொந்தமாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற சிந்தனையில் மூழ்கினார். காரணம், கடன் அடைப்பதற்காக தந்தை விற்ற நிலம் போக, மீதம் 10 ஏக்கர் கைவசம் இருந்தது. அத்துடன் அவர் கையிலும் கொஞ்சம் பணம் இருந்தது.
‘‘ஒரு மாதத்துக்கான குடும்பச் செலவு 500 ரூபாயைத் தாண்டுவதில்லை. என்னால் ஒவ்வொரு மாதமும் 4,500 ரூபாய்க்கு மேல் சேமிக்க முடிந்தது.
கையில் பணம் இருந்ததால் நல்ல சம்பளம் கொடுத்த வேலையை விட்டுவிட்டு, புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன்...’’ என்கிற தியானேஸ்வருக்கு விவசாயத்தின் மீதான ஈடுபாட்டை அளித்தது ஒரு இணைப்பிதழ். ஆம்; தியானேஸ்வருக்கு நாளிதழ் படிக்கும் பழக்கம் இருந்தது.
அவர் வழக்கமாகப் படிக்கும் நாளிதழுடன் ஓர் இணைப்பிதழ் வரும். அதில் பிரகாஷ் பவார் என்ற விவசாயியைப் பற்றிப் படித்தார். 1997 - 98ம் வருடம் தன்னிடமிருந்த 5000 சதுர அடி நிலத்தை அடமானமாக வைத்து ஒரு தேசிய வங்கியில் 12 லட்ச ரூபாய் கடன் வாங்கியிருந்தார் பிரகாஷ். 12 மாதங்களில் கார்னேஷன் மலரை விவசாயம் செய்து வாங்கிய கடனை அடைத்திருக்கிறார் பிரகாஷ். இதைப் படித்ததுமே தானும் ஒரு விவசாயியாக மாற வேண்டும் என்று முடிவு செய்துவிட்டார் தியானேஸ்வர். உடனே வேலையை விட்டுவிட்டு, விவசாயத்தில் இறங்கினார். குடும்பத்தில் உள்ளவர்கள் மட்டுமல்ல, சுற்றியிருந்தவர்கள் எல்லோரும் தியானேஸ்வரை சாடினார்கள். ‘‘முட்டாள்தனமான முடிவு...’’ என்றனர். மட்டுமல்ல, அவருடைய தந்தை 20 ஆயிரம் கடன் வாங்கி, 5 ஏக்கர் நிலத்தை விற்று, கடனை அடைத்த கதையையும் தியானேஸ்வரிடம் சொல்லிக் காண்பித்தார்கள்.
‘‘என் அம்மாவைத் தவிர யாருமே என்னை புரிந்துகொள்ளவில்லை. கை நிறைய சம்பளம் கொடுத்த ஒரு வேலையை விட்டுவிட்டேன் என்றுதான் எல்லோருமே சொன்னார்கள். ஆனால், எனக்கு நான் என்ன செய்யப்போகிறேன் என்பது நன்றாகத் தெரிந்திருந்தது. மற்றவர்களால் என்னுடைய நோக்கத்தை புரிந்துகொள்ள முடியவில்லை. அம்மா மட்டுமே உந்துதலாக இருந்தார்கள்...’’ என்கிற தியானேஸ்வர் புரட்சிகர விவசாயியாக உயர்ந்தது தனிக்கதை.
மட்டுமல்ல, தியானேஸ்வருக்கு கார்னேஷன் மலர்களை விளைவிப்பது குறித்து எதுவும் தெரியாது. ஒரு வருடம் கார்னேஷன் விவசாயம் குறித்துக் கற்றார். சொட்டு நீர்ப்பாசனம், பசுமைக் குடில் தாவர வளர்ப்பு, பூச்சிகளிலிருந்து கார்னேஷன் மலர்களைப் பாதுகாப்பது என சகலத்தையும் கற்றுத் தேர்ந்தார். தனது 10 ஏக்கர் நிலத்தில் கார்னேஷன் மலர்களை விவசாயம் செய்ய வேண்டுமானால் 5 லட்ச ரூபாய் தேவைப்படும். பணத்துக்காக 1999ம் வருடம் புனேவில் இயங்கி வந்த கனரா வங்கியின் கதவைத் தட்டினார். வங்கி மேலாளரிடம் தன் திட்டம் குறித்துப் பேசி வங்கிக்கடனைப் பெற்றார்.
இந்தியாவிலும், ஐரோப்பாவிலும் கார்னேஷன் மலர்களுக்கு நல்ல சந்தை இருந்தது தியானேஸ்வருக்குத் தெரிந்திருந்தது. கார்னேஷன் விவசாயம் நன்றாகப் போனது. 14 மாதங்களுக்குப் பிறகு வங்கியின் கதவைத் தட்டினார். ஆனால், இந்த முறை தனது கடனை அடைப்பதற்காக. அதுவும் வட்டியுடன். விவசாயம் ஒரு பிசினஸ். ஒவ்வொரு விவசாயியும் பிசினஸ் மேனாக மாறவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் தியானேஸ்வர். ஒரு பக்கம் அவரது விவசாயம் ஏறுமுகத்தில் சென்றுகொண்டிருக்க, இன்னொரு பக்கம் மற்ற விவசாயிகள் கடனில் மூழ்கிக்கொண்டிருப்பதையும் கவனித்தார்.
தனது ஊரில் இருந்த விவசாயிகளை ஒருங்கிணைத்து, 2004ம் வருடம் அபினவ் விவசாயிகள் கிளப்பை உருவாக்கினார். புனேவில் உள்ள முல்சி தாலுகாவில் இயங்கி வரும் இந்த கிளப், விவசாய நடவடிக்கைகளுக்காக தேசிய விருதைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இன்று அபினவ் விவசாய கிளப்பின் இயற்கை விவசாய வழிமுறைகளை இந்தியாவில் உள்ள 1.56 லட்ச விவசாயிகள் பின்பற்றுகின்றனர். அதாவது மாட்டுச் சாணம் மற்றும் கோமியத்தை உரமாகவும்; வேப்பிலைச் சாறை பூச்சிக்கொல்லி மருந்தாகவும் பயன்படுத்துதல்தான் அபினவ் விவசாயிகள் கிளப்பின் வழிமுறை.
இதில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் பல்வேறு வகையான காய்கறிகளையும், மலர்களையும் விவசாயம் செய்து வருகின்றனர். அத்துடன் விளைச்சலை இடைத்தரகரின் உதவியின்றி நேரடியாக விநியோகம் செய்கின்றனர். இந்த கிளப்பில் இருக்கும் விவசாயிகள் தினமும் 1000 முதல் 2000 வரை வருமானம் ஈட்டுகின்றனர். சிலரது வருமானம் 5 ஆயிரத்தை தாண்டும். கொரோனா லாக்டவுனின் போது மும்பையிலும், புனேவிலும் வாழும் மக்களுக்காக இடைவிடாமல் காய்கறிகளை விநியோகித்தது அபினவ் விவசாயிகள் கிளப்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
த.சக்திவேல்
|