பொன்னியின் செல்வன் படத்துக்குப் போட்டியாக இதை எடுக்கவில்லை!
தெரிந்த முகங்கள் இல்லை; ஜாம்பவான் டெக்னீஷியன்கள் இல்லை; ஆனால், டிரைலர் வெளியான ஓரிரு நாளில் 6 மில்லியன் பார்வையாளர்களைச் சென்றடைந்துள்ளது ‘யாத்திசை’. பாண்டியர்களின் கதையாக உருவாகியுள்ள ‘யாத்திசை’ டிரைலர் கோடம்பாக்கத்தை அசைத்துப் பார்த்து, யார் இவர்கள் என கேட்க வைத்துள்ளது. ரிலீஸ் வேலைகளில் பிஸியாக இருந்த இயக்குநர் தரணி ராசேந்திரன் பரபரப்புக்கு சிறிது ஓய்வு கொடுத்து நிதானமாக பேச ஆரம்பித்தார்.‘பொன்னியின் செல்வன்’ படத்துக்கு டஃப் கொடுக்கத்தான் ‘யாத்திசை’ எடுத்தீர் களா?
 ‘பொன்னியின் செல்வனை’ மனசுல வெச்சு இந்தப் படத்த எடுக்கல. இந்தக் கதையின் தன்மை வேறு, ‘பொன்னியின் செல்வன்’ கதையின் தன்மை வேறு. அந்தப் படத்துடன் எங்கள் படத்தை கம்பேர் பண்ணுவது சரியாக இருக்காது.‘யாத்திசை’ என்றால் தெற்குத் திசை என்று பொருள். இது 7ம் நூற்றாண்டில் நடக்கும் கதை. அந்தக் காலகட்டத்தில்தான் களப்பிரர்கள் தமிழ்நாட்டிலிருந்து வெளியேறுகிறார்கள். தெற்குப் பகுதியில் பாண்டியர்கள் எழுச்சி அடைகிறார்கள்.
 பாண்டியர்களின் ராஜ்யத்தை விரிவாக்கம் செய்ததில் ரணவீர பாண்டியன் முக்கிய மானவராகத் திகழ்கிறார். அதே காலகட்டத்தில் பல்லவர்கள் எழுச்சி பெறுகிறார்கள் என்றாலும் அவர்கள் நிலப்பரப்பு குறைவு. சோழ தேசமும் பாண்டியர்களின் நிலப்பரப்புக்குள்தான் இருந்தது. வரலாற்றின்படி பாண்டியர்களின் நிலப்பரப்பு அதிகம். அது இடைக்காலப் பாண்டியர்களின் பொற்காலம்.பேரரசுகள் போரில் ஈடுபடுவது என்பது பெரிய அரசியல் கட்சிகள் தேர்தலில் ஈடுபடுவதுமாதிரி. பெரிய கட்சிகளுக்கு சிறிய கட்சிகள் ஆதரவு தருவதுபோல் பேரரசுக்கு சிற்றரகள், தொல்குடி, இனக்குழுக்கள் ஆதரவும் தரும்.
பேரரசு தோற்றுப்போனால் அந்த அரசுக்கு பாதிப்பு இருக்காது. உதவி செய்த சிற்றரசு, இனக்குழுக்கள் பாதிப்படையும். அப்படி பாண்டியர்களின் வெற்றிக்குப் பிறகு சோழர்கள் காட்டுக்குள் பதுங்கி விடுகிறார்கள். சேரனை நாடு கடத்துகிறார்கள். சோழர்களுக்குத் துணையாக இருந்த தொல்குடிகளான எயினர்கள் போரில் தோற்று வாழ்வாதாரத்தை இழந்து நாடோடி சமூகமாக வாழ்கிறார்கள். போர் கலாசாரத்தில் இது உலகம் முழுக்க உள்ள நடைமுறை என்றும் சொல்லலாம். இதுதான் ‘யாத்திசை’ கதையின் அடிப்படை.
நாடோடிகளான எயினர்கள் சமூகத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் ஒரு கட்டத்தில் எழுச்சி அடைய நினைக்கிறான். அப்போது பாண்டியர்களின் ஆட்சி நடக்கிறது. பலம் வாய்ந்த பாண்டியர்களை எவ்வித பலமும் இல்லாத இளைஞன் வீழ்த்தினானா இல்லையா என்பது படத்தின் புறப் பண்பு. இந்த விஷயத்தை வாழ்வியல் அடிப்படையில் எந்தளவுக்கு உண்மைத்தன்மையுடன் சொல்லமுடியுமோ அப்படிச் சொல்லியுள்ளோம்.
போர் நடக்கும்போது சம்பந்தமே இல்லாதவர்களும் பாதிப்படைவார்கள். உதாரணமாக, ரஷ்யா - உக்ரைன் போரில் சம்பந்தமே இல்லாத இந்திய மாணவர்கள் பாதிக்கப்பட்டதைப் போல் பாண்டியர்களின் போரால் தேவரடியார்கள் பாதிப்படைகிறார்கள். அது படத்தின் கிளைக் கதை. பாண்டியனும் அதிகாரத்தை தக்கவைக்கத்தான் போர் செய்கிறான். எயினர்கள் எழுச்சி அடைய காரணம், அதன் தலைவன் அதிகாரம் செலுத்தும் இடத்துக்குப் போக வேண்டும் என்பதற்காகத்தான்.
அதிகாரம்தான் நிலையானது என்பதை ‘யாத்திசை’ பேசும். அதை பண்பாடு, கலாசாரம், மொழி ஆகியவற்றில் எந்தளவுக்கு ரியாலிட்டியைக் கொண்டு வரமுடியுமோ அப்படி கொண்டு வந்துள்ளோம். இது பீரியாடிக் ஆக்ஷன் அட்வென்ச்சர் ஜானர்.
படத்துல ஒருத்தரும் தெரிஞ்ச முகங்களாக இல்லையே?
ஆமா. எங்கள் நாயகர்கள், நாயகிகள் உட்பட எல்லோருமே புதியவர்கள். நாங்கள் எல்லோரும் ஒரே பகுதியில் வசிக்கும் நண்பர்கள். அந்த நட்புதான் எங்களை ஒன்று சேர்த்தது. 5 வருடங்களாக இப்படியொரு படம் பண்ண வேண்டும் என்று டிராவல் பண்ணினோம். தயாரிப்பாளர் கணேஷ் சார் எங்கள் முயற்சி மீது நம்பிக்கை வைத்து படம் தயாரிக்க முன்வந்தார். கணேஷ் சார் எங்கள்மீது வைத்த நம்பிக்கையால்தான் இதில் தெரிந்த முகங்கள் உள்ளே வரவில்லை.
பழங்குடி தலைவனாக வரும் செயோன், பாண்டிய மன்னனாக வரும் சக்திமித்ரன் நாயகர்களாக நடித்துள்ளார்கள். தேவரடியார்களாக வரும் ராஜலட்சுமி, வைதேகி நாயகிகளாக நடித்துள்ளார்கள். இவர்களுடன் ‘விசாரணை’ படத்தோட ரைட்டர் சந்திரகுமார், குருசோமசுந்தரம், சுபத்ரா, செம்மலர் அன்னம் இருக்கிறார்கள்.
டிரைலர் பார்க்கும்போது தமிழுக்கே, தமிழ்ல சப் டைட்டிலா என்று கேட்கத் தோன்றுகிறதே..?
சங்க காலத் தமிழ் இப்போதிருக்கும் ஆடியன்ஸுக்கு கண்டிப்பா புரியாது. கதையை சங்கத் தமிழ் காலத்தில் நடக்கிற மாதிரி மறு உருவாக்கம் பண்ணியிருக்கிறோம். அதற்கு அடிப்படை மொழி. இப்போது நாம் பேசுவது மாதிரி நூறு வருஷத்துக்கு முன் பேசியிருப்போமா என்பது சந்தேகமே! இப்போது ஆங்கிலம் கலந்து பேசுகிறோம்.1500 வருடத்துக்கு முன் எப்படி பேசியிருப்பார்கள் என்பதுதான் கேள்வி. அதுக்காக மொழியை கொஞ்சம் ரீ-கிரியேஷன் பண்ணும்போது பிசினஸ் ஏரியாவில் பிரச்னை வந்தது. அதனால் காம்ப்ரமைஸ் பண்ணி 30 நிமிடம் மட்டும் சங்க காலத் தமிழிலும், மீதமுள்ள நேரம் நடைமுறையில் உள்ள மொழியிலும் வசனங்கள் இடம் பெறும்படி செய்திருக்கிறோம்.
ஆக, 30 நிமிடத்துக்குத்தான் சப்டைட்டில் போட்டிருக்கிறோம். சங்க காலத்தில் 9 என்ற எண்ணுக்கு ‘தொண்டு’ என்றும் சிங்கத்துக்கு ‘மடங்கள்’ என்றும் சொல்லியிருக்கிறார்கள். பீரியட் படம் எடுப்பதில் சவால்கள் இருக்குமே?எந்தவொரு படத்துக்கும் சிக்கல்கள் இருக்கத்தான் செய்யும். கதை எழுதும்போதே இது சவாலான வேலை என்று தெரிந்ததால் அப்போதிலிருந்தே தயாராக ஆரம்பிச்சோம்.
முன்திட்டமிடலால் எல்லாம் சாத்தியமானது. ஒவ்வொரு காட்சியையும் பலமுறை ரிகர்சல் பண்ணிய பிறகுதான் படப்பிடிப்புத்தளத்துக்குப் போனோம். செட்ல சில சமயம் பிரச்னைகள் வரும். படக்குழு கொடுத்த ஒத்துழைப்பால் எல்லாத்தையும் சமாளிக்க முடிந்தது. ‘பாகுபலி’யில் எல்லோரையும் அழகா காட்டினார்கள். அதுமாதிரி நீங்களும் தமிழர்களை அழகாகக் காட்டியிருக்கலாமே என்ற நெட்டிசன்களின் கேள்விகளுக்கு உங்கள் பதில்?
அது புரிதலில் உள்ள பிரச்னை. அந்தக் காலத்திலும் ஏற்றத்தாழ்வுகள் இருந்துள்ளது. நம் சமூகத்தில் இன்றும் டிரஸ் இல்லாதவர்கள் இருக்கிறார்கள். வாழ்வியல், பண்பாட்டுக் கூறுகளைப் பற்றிச் சொல்லும்போது இரண்டு தளத்தைப் பற்றியும் சொல்ல வேண்டும். இன்றைய காலகட்டத்திலும் சாதியை முன்வைத்து புறக்கணிப்படுகிற மக்கள் இருக்கிறார்கள். அவர்களும் தமிழர்கள்தான். அவர்களை வைத்து படம் எடுக்கும்போது ஏன் தமிழர்களை அப்படி காண்பித்தீர்கள் என்ற கேள்வி வரத்தான் செய்யும்.
அந்தக் காலத்தில் பாண்டிய சாம்ராஜ்யமும் இருந்தது, நாடோடி சமூகமும் இருந்தது. நாடோடி சமூகத்தைப் பார்த்துவிட்டு தமிழர்கள் அப்படித்தான் என்ற முடிவுக்கும் வரமுடியாது. அவர்களும் இருக்கிறார்கள். அப்படி, இருக்கிற உண்மையைத்தான் சொல்லியிருக்கிறேன்.பீரியட் படத்துல இசையின் தேவை அதிகமாச்சே...மியூசிக், சக்கரவர்த்தி. படத்துல ஒரு பாடல் மட்டுமே. பின்னணி இசையில் போர் சமயத்தில் பயன் படும் வல்லிசையை பயன்படுத்தியுள்ளோம். சில பாரம்பரிய வாத்தியக் கருவிகளும் இருக்கும். பழங்குடி மக்களின் குரல்களும் பின்னணி இசையில் சேர்த்திருக்கிறோம்.
ஒளிப்பதிவு அகிலேஷ் காத்தமுத்து. ரிகர்சல், ஸ்டோரி போர்டு என்று ஆயத்தமாக இருந்ததால் குழப்பமில்லாமல் லைட்டிங் பண்ணி பிரம்மாண்டமாக எடுத்துக் கொடுத்தார். கதையை நான் எப்படி ஆய்வு பண்ணி எழுதினேனோ, அதுமாதிரி ஒளிப்பதிவாளர் படத்துல வரும் நிலப்பரப்புக்கு ஏற்ற மாதிரி லைட்டிங், லென்ஸ்ல வித்தியாசம் காண்பிச்சு எடுத்தார்.
இந்தப் படம் பேசப்படுவதற்கு முக்கிய காரணம் தயாரிப்பாளர் கணேஷ் சார். அவருக்கு இது முதல் படம். ஆனா, எங்கள் மீது நம்பிக்கை வைத்து படம் தயாரிக்க முன்வந்தார். படத்தை வெளியிடும் சக்தி ஃபிலிம் சக்தி சாரும் படத்தைப் பார்த்துவிட்டு ஆர்வத்துடன் வெளியிட முன்வந்தார்.முதல் படமே வரலாற்றுப் படமாக எடுக்க என்ன காரணம்?
பத்தோடு பதினொன்றாக ஆகக் கூடாது என்பதற்காகத்தான். தனித்துவமா வித்தியாசமா பண்ணணும்னு முடிவு செய்தேன். வரலாற்று ஆராய்ச்சியாளர்களைச் சந்தித்து கதை ரெடி பண்ணினேன். அந்த வகையில் பண்டைய மக்களின் திருமணம், போர் முறைகள், போர் விதிகள், பாலை நில கடவுள் வழிபாடு, நவகண்ட சடங்கு எல்லாமே ரசிகர்களுக்கு புது அனுபவமாக இருக்கும்.
டைரக்ஷனை யாரிடம் கற்றுக் கொண்டீர்கள்?
படிக்கும்காலத்திலேயே கட் அடித்துவிட்டு சினிமா பார்ப்பேன். அப்படித்தான் சினிமா ஆர்வம் வந்துச்சு. அதுக்கேத்த மாதிரி என்னையும் தயார்படுத்திக்கொண்டேன். படிச்சது என்ஜினியரிங். ஆனா, வரலாறு மீது ஆர்வம் அதிகம். வரலாற்று ஆராய்ச்சியாளராக பல இடங்களுக்கு பயணம் செய்துள்ளேன். சினிமாவில் யாரிடமும் உதவியாளராக சேரவில்லை. சுயாதீனமாகத்தான் சினிமாவை கத்துக்கிட்டேன்.
எஸ்.ராஜா
|