யார் இந்த டைலான் முல்வனே?



அமெரிக்காவைச் சேர்ந்த டைலான் முல்வனேவைப் பற்றித்தான் அங்கே ஹாட் டாக். நாடக நடிகை, நகைச்சுவையாளர், டிக்டாக் பிரபலம்... என பன்முகங்களைக் கொண்டவர் டைலான்.

ஆணாகப் பிறந்து, பெண்ணாக மாறி சாதனைகளைப் படைத்து வரும் திருநங்கை இவர்.
கடந்த வருடம் வெள்ளை மாளிகையில் வைத்து, அமெரிக்க அதிபர் ஜோ பைடனை நேர்காணல்
செய்தார். இந்த நேர்காணல் இணையத்தில் செம வைரலானது. சமீபத்தில் ‘பட் லைட்’ எனும் பீர் பிராண்ட், டைலானுடன் பார்ட்னர்ஷிப் செய்திருப்பது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.
இத்தனைக்கும் டைலானுக்கு வயது 26 தான்.

யார் இந்த டைலான் முல்வனே?

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்திலுள்ள சான் டியாகோ நகரில் 1996ம் வருடம் பிறந்தார் டைலான் முல்வனே. சான் டியாகோ நகரில் பிரபலமான ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர் இவர். தன் விருப்பப்படி எல்லாவற்றையும் செய்வதற்கான வசதிகளும், வாய்ப்புகளும் டைலானுக்கு இருந்தன. சின்சினாட்டி பல்கலைக்கழகத்தில் இசை நாடகத்துறையில் இளங்கலைப் பட்டத்தைப் பெற்றார்.

பத்தொன்பது வயதில் இசை நாடகத்தில் நடிக்க ஆரம்பித்தார். ‘த புக் ஆஃப் மோர்மோன்’ எனும் இசை நாடகத்தில் எல்டெர் ஒயிட் என்கிற கதாபாத்திரத்தில் நடிக்க, டைலானின் புகழ் பரவியது. இந்த நாடகம் அமெரிக்கா, மெக்சிகோ, கனடாவில் உள்ள முக்கிய நகரங்களில் எல்லாம் அரங்கேறியது. எல்லா இடங்களிலும் டைலானின் நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
இதற்குப் பிறகு சில இசை நாடகங்களில் நகைச்சுவையாக நடித்தார். 2020ம் வருடம் வரை இசை நாடகப் பார்வையாளர்களைத் தவிர்த்து, சாதாரண மக்களுக்கு டைலானின் பெயர் கூட அவ்வளவாகத் தெரியாது.

கொரோனா வந்தது. டைலானால் வீட்டைவிட்டு வெளியே எங்கேயும் செல்ல முடியவில்லை. அத்துடன் அவருக்கு எந்த வேலையும் இல்லை. பொழுதைப் போக்குவதற்காக டிக்டாக்கை பதிவிறக்கம் செய்து வீடியோக்களை பதிவேற்றினார். ஆரம்பத்தில் குழந்தைகளுக்கான ஒரு app என்றுதான் டிக்டாக்கை நினைத்திருந்ததார். அவரது ஆரம்ப கால டிக்டாக்குகள் அதிகபட்சமாக ஆயிரம் பார்வைகளைத் தாண்டவில்லை.

இன்னொரு பக்கம் அவர் கொஞ்சம் கொஞ்சமாக பெண்ணாக பாலின மாற்றமடைந்து கொண்டிருந்தார். இந்த பாலின மாற்றம் சார்ந்த அனுபவங்களை டிக்டாக் செய்து, பதிவேற்ற ஆரம்பித்தார். ‘ஒரு பெண்ணாக எனது முதல் நாள்’ என்ற டிக்டாக் வீடியோ பெரும் வைரலானது. மார்ச், 2022லிருந்து ‘டேஸ் ஆஃப் கேர்ள்ஹுட்’ எனும் தலைப்பில் தினமும் டிக்டாக்கில் வீடியோ ஒன்றை பதிவிட ஆரம்பித்தார்.  

பெண்ணாக உணர்ந்த நாளிலிருந்து பெண்ணாக மாறிய வரையிலான டைலானின் அனுபவங்கள்தான் இந்த வீடியோ தொகுப்பு.  100 கோடிக்கும் அதிகமான பார்வைகளை அள்ளியது, ‘டேஸ் ஆஃப் கேர்ள்ஹுட்’. அத்துடன் கடைக்கோடி மக்களிடமும் பிரபலமடைந்தார் டைலான் முல்வனே. இன்று டைலானை டிக்டாக்கில் 1.08 கோடிப்பேர் பின்தொடர்கின்றனர். அவரது டிக்டாக் வீடியோக்கள் 44 கோடிக்கும் அதிகமான லைக்குளை அள்ளியிருக்கின்றன.

சில நாட்களுக்கு முன்பு ‘பட் லைட்’ எனும் பீர் பிராண்ட், விற்பனையை அதிகரிப்பதற்காக டைலானுடன் கூட்டு சேர்ந்தது. பீர் கோப்பையின் முகப்பில் டைலானின் முகத்தை அச்சிட்டு விற்பனை செய்ய ஆரம்பித்தது ‘பட் லைட்’. இதற்கு ஒருசிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ‘பட் லைட்’டின் விற்பனை அதிகரித்திருந்தாலும் டைலானுக்கு ஒருவகையில் இது பின்னடைவு என்று விமர்சகர்கள் கருதுகின்றனர். இதற்கு முன்பு ‘நைக்’ நிறுவனம் பெண்களுக்கான விளையாட்டு உபகரணங்களுக்கு டைலானை மாடலாகத் தேர்வு செய்தபோதும் இதே மாதிரியான எதிர்ப்பு கிளம்பியது குறிப்பிடத்தக்கது.  

த.சக்திவேல்