சிறுகதை - சதக்கத்துல் பித்ர்



ஜரீனா, கணவர் மற்றும் இரு குழந்தைகளின் புத்தாடைகளைச் சுமந்தபடி நின்றிருந்தாள். கணவர் ரஷ்மி ரூமி முதலில் குளித்துவிட்டு வந்தான்.“முப்பது நோன்பு நோற்றோம். அதன் பலனாக பெருநாள் வந்திருக்கிறது. உங்களுக்கு என் பெருநாள் வாழ்த்துகள்!”மனைவி கொடுத்த ஆடைகளை ரூமி அணிய ஆரம்பித்தான். “ஜரீனா... உனக்கும் என் பெருநாள் வாழ்த்துகள்!”மகள் மீராப், வயது 11, அவளுக்கும் வாழ்த்து கூறி புத்தாடைகளைக் கொடுத்தாள் ஜரீனா. பதில் வாழ்த்து கூறி ஆடைளைப் பெற்றுக் கொண்டாள் மீராப். இரண்டாவது படுக்கையறைக்குப் போய் ஆடைகளை மாற்ற ஆரம்பித்தாள் மீராப்.

கடைசியாக ஒன்பது வயது மகன் அமீர் வந்தான். வாழ்த்துடன் புத்தாடை கொடுத்தாள். பதில் வாழ்த்து கூறி புத்தாடை பெற்றான்.ஜரீனா குளித்து வர புத்தாடை வழங்கினான் ரஷ்மி ரூமி.சுவர்க் கடிகாரம் மணி அதிகாலை 4.30 என்றது.ரஷ்மி ரூமி உரக்க அறிவித்தான். “இப்போது நாம் மஹல்லாவில் இருக்கும் சில முஸ்லிம் ஏழைச் சகோதரர்களுக்கு சதக்கத்துல் பித்ர் வழங்கப் போகிறோம்!”“சதக்கத்துல் பித்ர் என்றால் என்ன அத்தா?”

“ஈகைப் பெருநாள் தர்மம் எனப் பொருள்!”
“எதற்காக  கொடுக்கப்படுகிறது?”“முப்பது நோன்புகள் நோற்றதில் ஏதேனும் தவறுகள் நேர்ந்திருந்தால் அதற்கான பரிகாரமே ஈகைப்பெருநாள் தர்மம்!”
“இதனை முஸ்லிம்கள் அனைவரும் செய்ய வேண்டுமா?”“பெருநாள் அன்று தன்னுடைய செலவு போக மீதம் பொருள், தானியம் இருப்பின் இந்த தானம் செய்யத் தகுதி வந்து விடுகிறது!”
“இது கட்டாயமா?”“ஆம் கட்டாயம்... தகுதியுள்ள ஒவ்வொருவரும் நிறைவேற்றியே ஆகவேண்டும்!”மகன் அமீர் குறுக்கே புகுந்தான். “அத்தா! முக்கியமான கிளைக்கேள்வி!”“என்ன?”

“இஸ்லாத்தில் எத்தனை வகையான தானதர்மங்கள் உள்ளன?”“இஸ்லாத்தில் ஒன்று ஜக்காத் - ஒருவரின் செல்வம் ஒரு குறிப்பிட்ட அளவை அடைந்து ஒரு ஹிஜ்ரி வருடம் பூர்த்தி ஆகிவிட்டால் அவர் மீது ஜக்காத் கடமை ஆகிவிடும்.

ஜக்காத் முஸ்லிம் சகோதரர்களுக்கு மட்டுமே தரவேண்டும். பெற்றோருக்கோ குழந்தைகளுக்கோ தரக்கூடாது. கடனை அடைக்கும் அளவுக்கு ஒருவருக்கு பொருளாதாரம் இல்லை என்றால் அவர் மீது ஜக்காத் கடமையில்லை. ஜக்காத் வருடாவருடம் கொடுக்க வேண்டும். வருமானத்தில் இரண்டரை சதவீதம்!”“அடுத்து?”

“இரண்டாவதாக நற்செயல்கள் எல்லாமே சதக்காதான். தர்மம் யாருக்கும் கொடுக்கலாம். எந்தப்பொருளையும் கொடுக்கலாம்... பேச்சுத்தமிழில் இதனை சதகாத்து என்பர்!”
“அடுத்து?”“ஹதியா - பொருள் பரிசு. ஏழைக்கு அல்லது பணக்கார முஸ்லிம் நண்பனுக்கு தரலாம். பள்ளிவாசல் கட்ட டொனேஷன் கொடுப்பது ஹதியா!”
“அடுத்து?”“நாம் முன்னாடி பேசின சதக்கத்துல் பித்ர்...”
“பெருநாள் தர்மம் எவ்வளவு கொடுக்கணும்?”

“பெருநாள் தர்மத்தை ஷவ்வால் மாதத்தின் தலைபிறை கண்டதிலிருந்து பெருநாள் தொழுகைக்கு செல்லும் வரையிலான இடைவெளியில் பெருநாள் தர்மம் கொடுக்கலாம். ஆண், பெண், பெரியவர், சிறியவர், அடிமை, சுதந்திரமானவர்... இவர்களின் தலைக்கு ஒரு ஸாவு கோதுமை அல்லது ஒரு ஸாவு பேரீச்சம் பழம் தானம் செய்யப்பட வேண்டும்!”
“ஸாவு என்பது எவ்வளவு கிராம்?”“இருகைஅளவு ஒரு முத்து. நான்கு இருகை அளவு ஒரு ஸாவு. கிராம் கணக்கில் சொல்ல வேண்டுமென்றால் இரண்டரை கிலோவிலிருந்து மூன்று கிலோ வரை!”“யாரார் சதக்கத்துல் பித்ர் தரத் தேவையில்லை?”

“ஷவ்வால் பிறையை அடையும் முன் மரணித்தவர், ஷவ்வால் தலைபிறை தென்பட்டபின் பிறந்த பிள்ளை, கர்ப்பிணி வயிற்றிலிருக்கும் பிள்ளை இவர்களுக்கு சதக்கத்துல் பித்ர் கட்டாயமில்லை!”

“அத்தா! மேலும் சில சந்தேகங்கள்!”“கேள்... கேள்!”“நாம் அதிகம் கோதுமையோ பேரீச்சம் பழமோ சாப்பாட்டில் பயன்படுத்தறதில்லை. அரிசிதான் நம் பிரதான உணவுப்
பொருள். கோதுமைக்கு பதில் அரிசியும் பேரீச்சம்பழத்துக்கு பதில் வாழைப்பழங்களும் பெருநாள் தர்மமாக வழங்க முடியுமா?”

“நம் மதத்தில் இரு வகையாக கருத்துகள் உள்ளன. கோதுமை, பேரீச்சம்பழம் மட்டும்தான் கொடுக்கவேண்டும் என்கின்றனர் சிலர். மாற்று உணவுப்பொருட்களைத் தரலாம் என்கின்றனர் சிலர்!”“பெருநாள் தர்மத்தை எங்கு போய் கொடுக்க வேண்டும்?”“அவரவர் வசிக்கும் பகுதியிலேயே விநியோகிக்க வேண்டும்!”“மூன்று கிலோ கோதுமை அல்லது பேரீச்சம்பழத்தின் மார்க்கெட் விலை கேட்டறிந்து அதனை பணமாகக் கொடுக்கலாமா?”“இதிலும் இரண்டு வித கருத்துகள் நிலவுகின்றன!”“ஜமாஅத் மஹல்லா மக்களிடம் சதக்கத்துல் பித்ருக்கான பணத்தை வசூலித்து முஸ்லிம் ஏழைகளுக்கு ஆடைகளாக வழங்கலாமா?”“ரொம்ப சிந்திக்ற மீராப்...”“அத்தா! நூறு சதவீத இஸ்லாமிய மக்கள் சதக்கத்துல் பித்ர் கொடுக்கிறாங்களா?”“ஐம்பதிலிருந்து அறுபது சதவீதம் பேர் கொடுக்கிறார்கள். பிறர் கொடுக்கிறார்களோ இல்லையோ நாம் கொடுப்போம்!”

“அத்தா! நாம் சதக்கத்துல் பித்ர் கொடுக்கிறோம். அதை தயக்கமில்லாம வாங்க முஸ்லிம் மக்கள் வரணும் இல்லையா? பிறரிடம் கை ஏந்த அவர்களின் தன்மானமும் சுயகௌரவமும் தடுக்குமே?”

“அவர்கள் நம் வீட்டுக்கு வரமாட்டார்கள். நாம்தான் அவர்களை அடையாளம் கண்டு அவர்களது இருப்பிடத்துக்கே சென்று பெருநாள் தர்மத்தை வழங்க வேண்டும்!”
“அவர்களை எப்படி அடையாளம் கண்டுகொள்வீர்கள்?”“ஜும்ஆ தொழுகைக்கு செல்லும்போது இமாமிடம் விசாரித்து தெரிந்துகொள்ள வேண்டியதுதான்!”
“நீங்கள் அப்படி தர்மம் கொடுப்பதற்கு தகுதியான நபர்களை ஏற்கனவே தேர்ந்தெடுத்து விட்டீர்களா அத்தா?”

“ஆம்... நான்கு குடும்பங்கள். கடுமையான வறுமை. புதுத்துணி எடுக்கவோ பெருநாளுக்கு சிறப்பு சமையல் செய்யவோ அவர்களிடம் பணமில்லை!”
“அவர்களுக்கு என்ன மாதிரியாக பெருநாள் தர்மம் செய்யப்போகிறீர்கள் அத்தா?”“பேரீச்சம்பழம் கிலோ 480ரூபாய். மூன்று கிலோவுக்கு 1440 ரூபாய் ஆகிறது. தரமான கோதுமை கிலோ 52 ரூபாய். மூன்று கிலோவுக்கு 156 ரூபாய் ஆகிறது. நம் வீட்டில் தாதா இருக்கிறார். வீட்டிலேயே தங்கி வேலை செய்யும் முஸ்லிம் பெண்மணி இருக்கிறார். மொத்தம் ஆறு தலைகள். பேரீச்சம் பழத்தை வைத்து கணக்கிட்டால் 1440 X 6 = 8640 ரூபாய் பணம் வருகிறது. இந்த பணத்தை நான்காக வகுத்தால் ரூ. 2160 வருகிறது. ஒவ்வொரு குடும்பத்துக்கும்
ரூ.2160 கொடுத்து விடலாமா என யோசித்தேன்!’’
“சரி...’’

“பெருநாள் அன்று இந்தப் பணத்தை அவர்களுக்கு கொடுப்பதால் உடனடி பயன் அவர்களுக்கு ஏதுமில்லை!’’“ஆமாம்!”“நான் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறேன். நான்கு குடும்பங்களுக்கும் தனித்தனி கிப்ட் பாக்ஸ். ஒவ்வொரு கிப்ட் பாக்ஸும் ஆறாயிரம் ரூபாய் மதிப்புடையது. ஒவ்வொரு பாக்ஸிலும் ஒரு கிலோ பிரியாணி அரிசி, ஒரு கிலோ ஆட்டுக்கறி, 250 கிராம் நெய் மற்றும் குடும்ப அங்கத்தினர்களுக்கு ஆயத்த ஆடைகள். மசாலா சாமான்களும் கால் கிலோ இனிப்பும் கூட அந்த பாக்ஸில் உண்டு!”“நீங்கள் செய்வது சதக்கத்துல் பித்ரே இல்லை!”

“பரவாயில்லம்மா. நான் செய்றது சதக்கத்துல் பித்ரும் சதகாவும் இணைந்த ஒரு நற்செயலாக இருக்கட்டும். சக முஸ்லிம்க்கு செய்யும் உதவியை ஷாபியாகவோ ஹனபி
யாகவோ நின்று விவாதிக்க விரும்பவில்லை. அடிப்படையில் நான் நன்மையை நாடும் மனிதாபிமானம் மிக்க முஸ்லிம், அவ்வளவுதான்!”கிப்ட் பாக்ஸ்களை எடுத்துக்கொண்டு பைக்கில் புறப்பட்டான் ரஷ்மி ரூமி. உடன் தொற்றிக்  கொண்டான் அமீர்.

“அஸ்ஸலாமு அலைக்கும் ஈத்முபாரக்... இந்த ரம்ஜானை நீங்கள் குடும்பத்துடன் சிறப்பாகக் கொண்டாட இறைவன் அருள் புரியட்டும்!’’“வஅலைக்கும் ஸலாம். அன்பான உதவிக்கு நன்றி சகோ...”அடுத்த  வீட்டுக்கு ரஷ்மி ரூமியின் பைக் சீறிப்பாய்ந்தது.  

 - ஆர்னிகா நாசர்