1000 மேடைகள் கண்ட... 100க்கும் மேலான நாடக கலைஞர்கள் நடிப்பில் உருவாகியிருக்கும் படம்!
‘‘டீஸர், டிரெய்லரில் ஒண்ணு ரெண்டு ஃபிரேம் பார்த்தாலே இந்தப் படம் என்ன கதைக்களம்... எதை நோக்கி நகரப் போகிறதுன்னு நான் கண்டுபிடிச்சிடுவேன். என்னுடைய முதல் படம் மாதிரி தோணுது.
இந்த மாதிரி படத்தை ஓடிடியில் பார்ப்பது ரவுடித்தனம்...’’ எனப் பாராட்டுகிறார் இயக்குநர் மிஷ்கின்... படத்தின் பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிடுகிறார்... இப்படி பலவாறு ஈர்க்கிறது ‘வெள்ளிமலை’. சூப்பர்ப் கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் ராஜகோபால் இளங்கோவன் தயாரிப்பில் இயக்குநர் ஓம் விஜய் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் சூப்பர் குட் சுப்ரமணியம் நாயகனாக நடித்துள்ளார். ‘‘இந்த இடத்துக்கு வர 20 வருடங்கள் போராடியிருக்கேன்...’’ நிதானமாக அதேநேரம் இலக்கை அடைந்த நிறைவுடன் பேசத் தொடங்கினார் ஓம் விஜய். ‘‘எனக்கு சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம். வளர்ந்தது எல்லாமே மதுரையும் மதுரையின் பின்னணியிலும்தான். காவிரிக் கரை மேலே ஆழமான காதல். அதனால அங்கேயே மனைவி, இரண்டு குழந்தைகளுடன் செட்டில் ஆகிட்டேன்.
சினிமா, படங்களுக்கான கதைக்களம்னு பயணிக்க ஆரம்பிச்ச இடம்தான் மதுரை. ஆன்மீக நம்பிக்கை அதிகம். அதனாலயே தியானங்களுக்காகவும், மன அமைதிக்காகவும் அப்பப்ப தேனி, கம்பத்தைச் சுற்றி இருக்கற மேற்குத் தொடர்ச்சி மலைகள் பக்கம் சுத்திகிட்டே இருப்பேன். இப்பவும் அங்கே சித்தர்கள் சார்ந்த நிறைய கதைகளும், அமானுஷ்யமான சம்பவங்களும் நடந்துகிட்டு இருக்கு. அங்க போனா நாமே அதை உணர முடியும். அதை அடிப்படையாக வைத்து ஒரு கதை செய்யணும்னு நினைச்சேன்.
அப்படி உருவானதுதான் ‘வெள்ளிமலை’. போகர் சித்தர் சார்ந்த சில முக்கியமான குறிப்புகளையும் கூட படத்தில் நீங்கள் பார்க்கலாம்...’’ என்னும் ஓம் விஜய், முதன் முதலில் எழுதியது இதுவரை யாரும் பதிவு செய்யாத கிடா சண்டை குறித்த கதைதானாம்.‘‘‘ஆடுகளம்’ பட கோழிச் சண்டை, ஜல்லிக்கட்டு மாதிரி கிடா சண்டையும் மதுரை, மதுரை சுத்தி இருக்கற கிராமங்கள்ல ரொம்ப பிரபலம். சண்டைக் கிடா வளர்க்கறதிலும் நிறைய யுக்திகளும் நுணுக்கங்களும் இருக்கு. அது சார்ந்த ஒரு கதை செய்யணும்னுதான் ரொம்ப வருஷம் காத்திருந்தேன்.
இன்னைக்கு இண்டஸ்ட்ரில இருக்கற ரஜினி சார், கமல் சார், விஜய் சார், அஜித் சார்... இவங்க நாலு பேர் தவிர மத்த எல்லா ஹீரோக்களிடமும் நான் கதை சொல்லி இருக்கேன். ஆனா, நான் கதை சொன்ன நேரம்... அடுத்தடுத்து அவங்க பெரிய பெரிய படங்களில் ஒப்பந்தம் ஆகிடுவாங்க! அது என்ன ராசின்னு தெரியல!ஆனா, எதுவுமே இந்தந்த நேரத்தில் நடக்கணும்னு ஒரு விதி இருக்கு. அதை யாராலும் மாற்ற முடியாது. ஒருசில இயக்குநர்கள்கிட்ட அசிஸ்டெண்ட்டா வேலை செய்தேன். தமிழக அரசு விளம்பரங்கள், சில தனியார் விளம்பரப் படங்கள், நூற்றுக்கும் மேலான கதையாக்கங்களிலும் வேலை செய்திருக்கேன்.
நான் சொந்தமா ஒரு படம் செய்ய இப்பதான் காலம் கூடி வந்திருக்கு...’’ என, தன் கதை குறித்து சொன்ன ஓம் விஜய், படத்தின் கதை குறித்தும் நடிகர்கள் குறித்தும் மேலும் பகிர்ந்து கொண்டார்.‘‘பொதுவாகவே கைலாய மலையையும் ‘வெள்ளி மலை’ன்னுதான் சொல்லுவோம். அதேபோல சதுரகிரி, வெள்ளியங்கிரி மலைகளையும் ‘வெள்ளி மலை’ன்னுதான் சொல்லுவோம்.
ஆனா, மேற்குத் தொடர்ச்சி மலையிலே வருசநாட்டு பக்கத்துல ‘வெள்ளிமலை’ அப்படின்னு ஒரு பகுதியே இருக்கு. அங்க அருணகிரிநாதர் தங்கியிருக்கார்.
அந்த இடத்தில் இதுவரைக்கும் யாரும் படப்பிடிப்பு நடத்தினதில்ல. கீழ்வெள்ளிமலை, மேல்வெள்ளிமலைன்னு இரண்டு பகுதியா இருக்கும். கதைக்களம் அங்க நடக்கிறதால படத்துக்கு ‘வெள்ளி மலை’ அப்படிங்கற பெயர். ஒரு சித்த மருத்துவருடைய வாழ்வியல்தான் இந்தக் கதை. இப்ப இருக்கற காலகட்டத்திற்கு சித்த மருத்துவம் ரொம்ப முக்கியத்துவமா பட்டுச்சு. மேலும் கொரோனா காலத்துல சித்த மருத்துவம் எந்த மாதிரியான தாக்கத்தை உருவாக்குச்சு அப்படிங்கறதுக்கு ஒருசில சீன்கள் இந்தப் படத்தில் இருக்கும்.
கதாநாயகனாக சூப்பர்குட் சுப்பிரமணியம் நடிச்சிருக்கார். இந்த கேரக்டரில் பாரதிராஜா சார்தான் நடிக்க வேண்டியது. அந்த நேரம் அவருக்கு உடல்நிலை சரியில்லை. நூற்றுக்கும் மேலான கிராமப்புற நாடகக் கலைஞர்கள் நடிச்சிருக்காங்க. அத்தனை பேருமே ஆயிரம் மேடைகளில் நடிச்ச நடிகர்கள். மணி பெருமாள் ஒளிப்பதிவு, சதீஸ் சூர்யா எடிட்டர், இசை ரகுநந்தன். இவங்க எல்லாருமே பெரிய பெரிய படங்களில் வேலை செய்தவங்க.
படம் முழுக்க லைவா இருக்கணும்னு நிறைய மெனக்கெட்டு ரிஸ்க் எடுத்து மலைகள்ல படமாக்கியிருக்கோம். நம்ம ஊரு வாழ்வியல் சார்ந்த படங்கள் ரொம்ப குறைவா இருக்கு. அதெல்லாம் அடுத்த சந்ததிக்குச் சொல்லவேண்டிய கட்டாயமும் இருக்கு. அதிலும் தியேட்டரில் இந்தப் படங்கள் வரணும் அப்படிங்கறதுதான் என்னுடைய ஆசை...’’ எதிர்பார்ப்புகள் கண்களில் மின்ன சொல்கிறார் ஓம் விஜய்.
ஷாலினி நியூட்டன்
|